வெள்ளி, 28 அக்டோபர், 2016

எதிர்காலத் தலைமுறைக்கு நாம் என்ன கொடுக்கிறோம்?

என்னங்க, எப்ப கடைக்குப் போகலாம்?” மனைவியின் குரல் சமையல் அறையில் இருந்து ஒலித்தது.

மகளுக்குப் பட்டுப்பாவாடை, பையனுக்கு ஜிப்பா, தனக்குப் பட்டுப்புடவை என்று துணிப் பட்டியலும், தங்கக் காதணி, கல் வைத்த அட்டிகை என்று நகைக்கடைப் பட்டியலும் தயார் ஆகிக்கொண்டு இருந்தன. தீபாவளிப் பண்டிகை வந்து கொண்டு இருக்கிறதே!!

கணவனும் ஒரு வாரமாக இன்று நாளை என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு தவிர்க்க முயற்சி செய்துதான் வருகிறான். பெரிய செலவு இல்லாமல் சிறியதாகச் செலவு செய்தால் போதாதா என்று. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் ரும். இருந்தாலும் முடியாது என்று சொல்ல முடியுமா? மனைவி, குழந்தைகள் தேவையைப் பூர்த்தி செய்வது தானே கணவனின் கடமை? “எப்படி” என்பது இல்லாமல் எப்படியாவது” என்பது தானே வழக்கமாக உள்ளது. நடுத்தர வர்கத்துக் குடும்பங்கள் படும் பாடு இது தான்

கணவனும், மனைவியும் தாங்கள் பெறும் ஊதியம் அனைத்தையும் நாளைய தேவைக்காக அசையா சொதுக்களாகவும், நகைகளாகவும் வாங்கிச் சேமிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இன்றய மகிழ்ச்சிக்காக வாழ மறந்து விடுகிறார்கள். இதே வழக்கமாகி, எப்படி, எங்கிருந்து சொத்து வந்து சேரும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சுற்றம், சொந்தம், அன்பு, பாசம் எல்லாம் இந்தத் தேடலில் மறைந்து விடுகிறது. படித்தவர்களும் இதில் அடக்கம்.

இப்படிப் பார்த்துப் பார்த்துச் சேர்த்து வைத்த சொத்தைச் சரி பார்த்து 60 வயதில் “அப்பாடா” என்று உட்காரும் போது அதை அவர்கள் அனுபவிக்க முடிவதில்லை. “இனிமேல் நமக்கு என்ன இருக்கிறது, எல்லாம் நம் குழந்தைகளுக்குத்தான்” என்று யோசித்து ஓய்வெடுக்கும் நிலையில், மருமகள், மகன் காதில் முணுமுணுப்பது கேட்கிறது.

உங்க அம்மாவிற்கு இந்த வயசில் எதற்கு இவ்வளவு நகை? இந்த வயதில் இந்த மினுக்கல் தேவையா?” தானும் நாளை ஒரு வயதான அம்மாவாக மாறப் போகிறோம் என்ற நிதர்சனமான உண்மையை உணராமல் வார்த்தைகள் சீறிப்பாயும்..

அம்மா, அப்பா சேர்த்து வைத்த சொத்து பிள்ளைகளுக்குதானே. அதற்கு எதற்கு, அவர்கள் காலம் முடியும் வரை காக்க வேண்டும். இப்போதே பிரிக்கச் சொல்லுங்கள்அப்பா, அம்மாவின் சொத்தோ அல்லது வழி வழியாக வரும் குடும்பச் சொத்தோ இருந்தால் எப்படிப் பங்கு போடலாம் என்பதில் தான் மகன், மருமகள்களின் எண்ணம் உள்ளது. இது பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம். மகள்களும் கூட இப்படிப் பேசுவதுண்டு, அதே நேரம், எல்லா மகன்களையும், மருமகள்களையும், அப்படிச் சொல்ல முடியாதுதான்.

பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளின் நன்மையை மட்டும்தான் நினைப்பார்கள். இப்போது இந்த நிலை மாறி, பெற்றோர்கள் எப்போது தன் சொத்து தன்னை விட்டு போய் விடுமோ, எப்போது நம் மரியாதை பறி போகுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

மனித நேயம், மனிதாபிமானம், அன்பிற்காக உறவு, உறவிற்காக அன்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. தன்னைப் பற்றி மட்டுமே மனதில் வைத்து வாழும் மக்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த நிலமை மனித வாழ்வில் ஒரு சுழற்சி தான். இன்று மகனாக இருப்பவன்  நாளை அப்பாவாக மாறுகிறான், இன்று மகளாக இருப்பவள் தான் நாளை மருமகளாகவும், அம்மாவாகவும், மாமியாராகவும் மாறுகிறாள்

தான் தன் பெரியோர்களை நடத்தும் விதம்தான் நாளை தனக்கு வந்து சேரும் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்று இவர்கள் கற்றுத் தருவதைதான் நாளை இவர்களின் மகன்களும், மகள்களும் பின்பற்றப் போகிறார்கள். அடுத்த தலைமுறையினருக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகியல் பொருட்களா இல்லை ஒரு மனிதனை உயர்த்தும் நல்ல குணங்களையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையுமா? அடுத்த தலைமுறையினருகு பெற்றோர் அல்லவா எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

ஒரு முறை, ஒருவர், ஒரு கருத்து சொன்னார். காப்பியின் ருசி அதன் தன்மயில் தான் இருக்கிறது. நாம் அதைச் சாதாரணக் குவளையில் குடித்தாலும் சரி ஆடம்பரக் குவளையில் குடித்தாலும் சரி, காப்பியின் தன்மையும், சுவையும் மாறப் போவது இல்லை. என்னதான் ஆடம்பரமானக் குவளையில் இருந்தாலும் காப்பி நன்றாக இல்லை என்றால் மக்கள் அதை ருசிக்கப் போவது இல்லை. அதே போல்தான் மனித வாழ்க்கையும். நாம் காப்பி போல. நம்மிடம் உள்ள சொத்துக்கள் குவளை போல. நமது நற்குணங்களால் நம்மை நாம் நல்ல தன்மை உள்ள காப்பியாக மாற்றிக்கொள்ள வேண்டும். வெறுமனே குவளையை மட்டும் ஆடம்பரமாக ஆக்குவதால் பயன் இல்லை. நா சுவைக்க நல்ல காப்பி தேவை. அது போல நம் வாழ்வு ருசிக்க நமக்கு நல்ல குணம் வேண்டும். சொத்து தானாக வரும். வரவில்லை என்றாலும் வாழ்க்கை ருசிக்கும்.

ஆகவே விழித்துக்கொள்வோம். நம் தலைமுறையினருக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், நல்ல சுற்றத்தை வளர்த்துக்கொள்ளும் அன்பையும் கற்றுக்கொடுப்போம். பொருள்முதல்வாத இச்சையை விட மனித நேயமும் மனிதாபிமானமும்தான் ஒரு மனிதனைக் கடைசி வரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். நேரம் கை நழுவிப் போகும் முன் விழித்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

(நாலுகால் செல்லங்களுக்கும் மதிப்புக் கொடுப்போம். சுற்றுச் சூழலையும் பாதுகாப்போம்)

--கீதா



21 கருத்துகள்:

 1. //தானும் நாளை ஒரு வயதான அம்மாவாக மாறப் போகிறோம் என்ற நிதர்சனமான உண்மையை உணராமல் வார்த்தைகள் சீறிப்பாயும்//

  அருமையான கருத்தை உள்ளடக்கிய தத்துவம் அற்புதம்
  தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள் 💐🎁

  பதிலளிநீக்கு
 3. எதிர்கால தலைமுறைக்கு சுயநலாமாக இருக்கத்தான் இந்த கால பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள் அதன் பலனை பெற்றோர்களே அனுபவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை

  பதிலளிநீக்கு
 4. என்ன, தீபாவளித் திருநாளில் ஒரே அட்வைஸ் மழை?!! ஆனால் தேவைதான் இது. அதே போல சில குடும்பப் பாரம்பர்ய வழக்கங்களை நாம் செய்யாமல் விடுவதன் மூலமும் அப்படி ஒரு வழக்கம் இருப்பதே நம் குழந்தைகளுக்குத் தெரியாமல் போய், அந்த வழக்கங்கள் மறைந்து விக்கின்றன. அவற்றையும், இப்படி எல்லாம் வழக்கங்கள் இருக்கின்றன என்று அடுத்த தலைமுறைகளுக்குத் தெரியவாவது நாமும் அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
 5. #நடுத்தர வர்கத்துக் குடும்பங்கள் படும் பாடு இது தான்#
  தீபாவளி தருவது தீரா வலி :).

  பதிலளிநீக்கு
 6. கருத்தான பதிவு .எது எப்படி இருந்தாலும் பெற்றவர்கள் படிப்பைக் கொடுக்கலாம் , நகை இவற்றில் பணம் போட்டுவைத்து என்பதில் எனக்கு உடன்பாடில்லை .
  மகளாக இருந்தாலாவது அம்மா நகை என்கிற உணர்வு இருக்கும் .மருமகளிடம் அது இருக்காது.அதனால் தான் நான் நிறைய ஊசி பசி மணிகள் போட்டுக்கொள்கிறேன் . இது என் தனிப்பட்ட எண்ணம் .பெற்றவர்கள்தானும் கொஞ்சம் அனுபவிக்கணும்.பழைய காலத்தில் போற இடத்தில் அட்ஜெஸ்ட் பண்ணிக்க என்று பெற்றவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள் .இப்பொழுது எல்லாம் பெற்றவர்களே நீ ஏன் அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 7. தில்லையகத்தின் ஆசிரியர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  "கையில் காசில்லாதவன் கணவன் ஆனாலும் கதவைச் சாத்தடி" காலம் எப்பவோ ஆரம்பிச்சிடுச்சு. காசு கையில் இருப்பது கொஞ்சம் தைரியம் கொடுக்கும். நிறைய வீடுகளில், பசங்க, அப்பா சொத்தை சீக்கிரமே பிரித்துத்தந்தால் தாமும் வீடோ, அல்லது ஆடம்பரமாக இருக்கவோ உபயோகப்படும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரே ஆனாலும், அடுத்தவர் காசு அது என்ற நினைப்புதான் நல்ல எண்ணம். இதுவே நல்ல பழக்கவழக்கம்.

  பதிலளிநீக்கு
 8. ji a thought provoking article
  all youngsters who have aged parents should reasd this article...and think for a while.

  பதிலளிநீக்கு
 9. ஏதோ சிறுகதை போல் இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தால் ஆதங்க வெளிப்பாடாய் இருக்கிறதே சற்றே தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. தீபாவளிக்கு நகைகளும் வாங்குவாங்களா என்ன? தலை தீபாவளியிலேயே வாங்குவது கடினம்! :) அந்தக் காலங்களில் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு அவங்க அவங்க வசதிப்படி தங்க, வைர மோதிரங்கள் போடுவாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். :) இப்போதெல்லாமும் அது நடக்குதானு தெரியலை. ஏனெனில் நம்ம வீட்டு மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் எதுவும் கேட்டு வாங்கிக்கலை! :) ஆனால் எல்லோரும் அப்படியே இருப்பாங்களா? ஆடம்பரமாகப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் பின்னர் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு அதன் தாக்கத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கணும். :( ஒரு புதுப்புடைவை கொஞ்சம் வழக்கமானதை விடச் சிறப்பானதாக வாங்கிக்கலாம். பிள்ளைகளுக்கும் அப்படியே செய்யலாம். மற்றபடி செலவைக் குறைக்க வேண்டும். கடைகளில் பக்ஷணம் வாங்குவதை விடக் குறைந்த செலவில் வீட்டில் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 11. நம்முடைய சடங்குகள், சம்பிரதாயங்கள் அவற்றின் காரண காரியங்களோடு எதிர்காலத் தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும்! அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இப்போதெல்லாம் அவற்றைக் கடைப்பிடிப்பது குறைந்தே வருகிறது! :(

  பதிலளிநீக்கு
 12. ஜியெம்பி ஐயா அவர்களின் கருத்தே என்னுடையதும்.

  தவிர, இந்தக் காலப் பிள்ளைகள், பெரியவர்களை மதிக்கச் சொன்னால் மதிப்பதெல்லாம் இல்லை. முதலில் அவர்கள் தம் பெற்றோர்களையே மதிப்பது கிடையாது. அப்புறம், அவர்களைப் பெற்றவர்களுக்கான மரியாதைக்கு எங்கிருந்து போவது?

  நாம் நம் பெற்றோர்களை மரியாதையாக நடத்தினால், நம் பிள்ளைகளும் அதைப் பார்த்து அவர்களையும் மதிப்பார்கள், நம்மையும் மதிப்பார்கள் எனபவையெல்லாம் பழைய கதை. இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. இந்தக் காலப் பிள்ளைகள் கணினி, கைப்பேசி போன்றவற்றைப் பெரியவர்களை விட வெகு எளிதாகக் கையாள்கிறார்கள். பெற்றவர்களே பலவற்றைப் (முதலில் இங்கு ‘சிலவற்றை’ என்று எழுதியிருந்தேன். பின்னர் மாற்றி விட்டேன்) பிள்ளைகளிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறார்கள். உடனே, தங்கள் குழந்தைகள் தகப்பன்சாமிகளாக மாறி விட்டதாக உச்சி முகரவும் செய்கிறார்கள். அப்பொழுதே அந்தப் பிஞ்சுகள் நெஞ்சில் திமிர் எனும் விதை விழுந்து விடுகிறது. போகப் போக அது வளரத்தான் செய்கிறதே தவிர, குறைவதில்லை. சுருங்கச் சொன்னால், இன்றைய பிள்ளைகள் தங்களுக்கு எல்லாமே தெரியும் எனும் மிதப்பில் திரிகிறார்கள். தளும்பித் தளும்பி வழியும் குறைகுடங்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனதிலிருந்து அகன்று ‘கல்லாதது உலகளவு’ எனும் எண்ணம் வரும் வரை அவர்களைத் திருத்த முடியாது. அத்தகைய எண்ணம் அவர்களிடம் ஏற்படும் வகையில் இன்றைய கல்விமுறை இல்லை. அறிவை மட்டுமே கற்றுத் தருவதாகவும், அறிவு மட்டுமே உயர்ந்தது என்கிற எண்ணத்தை ஊட்டுவதாகவும் இன்றைய கல்விமுறை உள்ளது. ஆகவே, பிள்ளைகளும் அறிவை மட்டுமே மதிக்கிறார்கள். அறிவில் உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்வதால் தங்களுக்குத் தெரிந்த சிலவற்றைத் தெரியாமல் இருக்கும் பெரியவர்களை அவர்கள் மதிப்பதில்லை.

  இந்தக் குடும்பச் சூழலும் கல்விச் சூழலும் மாறாத வரை மரியாதை எல்லாம் கிரியாதைதான்.

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. விதிவிலக்குகள் குறைந்து விட்டன.
  சுயநலம் தான் முன்னிற்கிறது எங்கும்.
  சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் குறைந்து வருகிறது.

  பதிலளிநீக்கு
 14. விதிவிலக்குகள் குறைந்து சுயநலமே முன்னிற்க ஆரம்பித்து விட்டது...

  தாங்கள் சொல்லியிருப்பது உண்மையோ உண்மை...

  இதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தின் நிலை...

  பதிலளிநீக்கு
 15. தலைமுறைகள் மாற்றம்..
  ரொம்ப ப்ராக்டிக்கல் என்று நினைத்து இழப்பது நிறைய..

  பதிலளிநீக்கு
 16. கதை போல ஆரம்பித்து கட்டுரையாக முடித்திருந்தாலும், நல்ல அவசியமான கருத்துக்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு