செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

பின்னூட்டங்களும், பதில் கருத்துகளும் - தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - முற்றும்

சென்ற இடுகையில் வந்த பின்னூட்டத்திற்கு இரு பதில்கள் பெரிதாக வந்ததால் பதிவாகிவிட்டது.

"இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" - இது அருமையான வரிகள். மலையாள பிராமணர்கள் (நம்பூதிரிகள்) பற்றி நீங்கள் எழுதியவைகளில் உண்மை இருக்கிறது.

சைவம், வைணவத்தைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. இது heavy subject.
நிச்சயமாக இது ஒரு ஹெவி சப்ஜெக்ட்தான். ஐயமில்லை.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றெனும் அத்வைதம் பரப்பிய, சிவசக்தி வழிபட்ட சங்கரர் பத்ரிநாத்தில் விஷ்ணு பகவானைப் பிரதிஷ்டை செய்தார் என்பது சங்கரர் தான் சாதி சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார் என்பது போல் பலரையும் போல் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஆனால், கீபல்சியன் ( தத்துவத்தை இப்புவியில் வாழும் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது உண்மையாகி விடுகிறதுதானே. சங்கரரையே (8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்) பிராமணராக ஏற்றுக் கொள்ளாத நிலையில் சைவ பிராமணர்களுக்கு வைணவ பிராமணர்கள் சம உரிமை வழங்குவார்களா? அது காஞ்சி மடத்திற்கு மற்ற நான்கு மடங்கள் கொடுக்கும் பதவி போலத்தான். 

அஷர்தாம் - இணையத்திலிருந்து

1907 ல் குஜராத்தில் உருவான வைணவ இயக்கம் (பிஏபிஎஸ்) 2005ல் டெல்லியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கிய அக்ஷ்ர்தாம் தான் அதற்கு ஒரு உதாரணம். இந்தக் கோயில் கலைநயம் மிக்க கட்டடக் கலை நுணுக்கத்துடன் ரசிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அக்ஷர்தாம் வைணவத்தின் வியக்கத்தக்க முன்னேற்றத்தைப் பறை சாற்றுகிறது. ஏறத்தாழ 1100 கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். உலகெங்கும் வைணவக் கோயில்கள் கட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். வைணவம் வளர்க்க இப்படி அயராது உழைக்கிறார்கள் வைணவர்கள் இனி சைவ பிராமணர்கள் என்று சொல்லுவதை விட கேரளத்தில் உள்ளோர் அழைப்பது போல் தமிழ் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. காரணம் காஞ்சி மடம் போல் சைவ பிராமணர்கள் தமிழகத்தில் மட்டும் வாழ்பவர்கள், வாழ வேண்டியவர்கள் என்று ஆக்கப்பட்டு விட்டார்கள் போல் தெரிகிறது. வைணவத்தில் உள்ள இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சமமாகக் கருத மறுக்கின்ற நிலை. இதில் காஞ்சி மடமும் சைவ பிராமணர்களும் இது போல் எத்தனைக் காலம் எதிர்நீச்சல் போட முடியுமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

5 குருடர்கள் யானையைக் காணச் சென்ற கதை போல்தான் ஒவ்வொரு மதமும் இறைவனைப் புரிந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகின்றது. அல்லது சரியாகப் புரிந்து கொண்டவர்கள் சொல்லியவைகளை சரியாகப் புரிந்து கொள்ளத் தெரியாமல் அரைகுறையாய் புரிந்துகொண்டு தடுமாறுகிறது. அந்தத் தடுமாற்றத்தின் இடையேதான் ஒவ்வொரு மதத்திலும் சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்களுக்குச் சாதகமானவைகளைத் ஏற்றி ஒவ்வொரு மதத்தையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மதமும் வழி மாறி பயணிக்கிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் மதத்தின் பின்னால் கண்மூடித்தனமாய் போகாமல், மனித நேயம் கலந்த பக்தியுடன் சஞ்சலம் இல்லாது நம்பிக்கையோடு, தேவைப்பட்டியலில் இறைவனடி சேரும் ஆசையையும் சேர்த்து நம் மனதில் காணும் இறைவனை நமக்குத் தெரிந்த மொழியில், நமக்குத் தெரிந்த விதத்தில் வேண்டினால், நமக்கும் கண்பார்வை கிடைக்கப்பெற்ற குருடர்களின் ஒருவனாகி அவ் யானையை முழுமையாகக் கண்டு அதிசயிக்கலாம். அவ் யானை மீதேறி அணுவைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்திய இறைவனின் திறனின் திறனாய் மாறி இறைவனடி பெறலாம்.

இன்னும் விரிவாக அலசி இருக்கலாமோ? சைவம், வைணவம் குறித்த கருத்துகளில் இன்னும் ஆழமான பார்வை இல்லையோ என்று தோன்றுகிறது. அதோடு பூணூல் போட்டுக் கொள்வது, அதிலும் வைசியர்கள் போடுவது பின்னால் வந்தது இல்லை. வர்ணாசிரமக் காலத்திலிருந்தே உள்ளது தான். நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் தான் பூணூல் இல்லை. ஏனெனில் அவர்களின் பொறுப்பு அப்படி! அதிகமான பொறுப்புகளை ஏற்பவர்களால் உபநயனம், அனுஷ்டானங்கள் ஆகியவற்றைச் செய்யக் கஷ்டமாக இருக்கும் என்ற காரணத்தால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு. ஆனால் அவர்களிலும் தவம் செய்து பிரம்மனாக ஆனவர்கள் பலர் உண்டு. வால்மீகியே ஒரு சிறந்த உதாரணம்!

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் அறிந்ததையும் முன் வைக்கிறேன். வரலாறு எப்போதும் அதை எழுதும் அதிகார வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடிதான் எழுதப்பட்டிருக்கின்றன. வைணவ மதம் தழுவிய கேரள அரசர் மார்த்தாண்ட வர்மா 1750ல், அதுவரை முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட எல்லா ஓலைச் சுவடிகளையும் சேகரித்துத் தீக்கிரையாக்கி, புதிதாக ஒரு கேரள வரலாற்றை எழுதியிருக்கிறார். அது மட்டும்தான் இப்போது கேரள வரலாறு. அது போல் விஜயநகர மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டவைதான் நாம் பின்பற்றும் நம் கையில் உள்ள வரலாற்று ஆதாரங்கள். இவ்விரு கால அளவிலும் அதன் பின்னும் தான் கூடுதலாக இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள். 1469ல் உலகிலுள்ள மதங்களில் 9 ஆம் இடம் வகிக்கும் சீக்கிய மதம் உருவானதும் இக்காலத்தில்தான். அக்பரின் தீன் இலாகிமதம் ஏட்டளவிலேனும் உருவானதும் 1582ல். இவை எல்லாம் மத்வாச்சாரியாரின் காலகட்டத்திற்குப் பின் தான் என்பதை வைத்துப் பார்க்கையில் அதன் முன் சாதிகள் உண்டாயிருக்க வழியில்லை என்று சொல்லப்படுவதை நானும் நம்புகின்றேன். அப்படியல்ல அதன் முன்பே சாதிகள் இருந்தது எனில் அச்சாதிகள் புத்த மதத்திலும் சமண மதத்திலும் இருக்க வேண்டுமே. புதிதாய் தோன்றிய சீக்கிய மதத்திலும் அது இந்து மதத்தில் உள்ளது போல் தொற்றிக் கொள்ளவில்லையே. இதிலிருந்து பிற மதங்கள் புதிதாய் உடலெடுத்த சாதி சம்பிராதாயத்தை ஏற்கவில்லை என்பதுதானே அர்த்தமாகிறது. க்ரேக்கர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களை ரத்தம், கபம், வாதம், பித்தம் போன்றவைகளின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என நம் சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் பிரித்தது போல் திரித்திருந்தார்களாம். ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப  வேலைகள் கொடுக்கத்தான் அப்படிப் பிரித்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கும் அதன் அடிப்படையில் சாதிகள் உண்டாகவில்லை. ஒரு மதத்திலும் இல்லாதிருந்த சாதி சம்பிரதாயம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தான் சைவ வைணவத்தை வந்தடைந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அது போல் அதை ஏற்காத மக்கள் பிற மதம் தேடியிருக்கலாம். சிலர் புது மதத்தையே நிறுவியிருக்கலாம்தானே. காஷ்மீரில் சாதி சம்பிராதயத்துடன் கட்டாய மத மாற்றமும் சைவ வைணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கலாம். 1947 ல் பிரிந்த பாகிஸ்தானில் இப்போதும் இந்துக்கள் அங்குமிங்குமாக வாழும் போது காஷ்மீரில் ஒரு கோயிலில் பூஜை செய்ய ஒரு முஸ்லிம் என்பது மனிதத்தை நிலை நிறுத்துவதுதானே. (இந்த மனிதர் பற்றியும், மனிதம் பற்றியும் ஒரு இடுகை எங்கள் தளத்தில் உண்டு) இந்துக்கள் பிற மதம் தேடிப் போகக் காரணமாகும் பலவற்றில் சாதி சம்பிரதாயம் ஒன்றாக வாய்ப்பில்லை என்று நாம் சொல்லவே முடியாது.

இந்திய கான்ஸ்டிடியூஷன் எழுதிய டாக்டர் அம்பேத்கார் “நான் இந்துவாக இறக்கமாட்டேன்!” என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களுடன் புத்தமதம் தழுவியது இந்தச் சாதி சம்பிரதாயத்தால்தானே? இப்போதும் தான் பெற்ற பிள்ளைகள் வேறு சாதிப் பிள்ளைகளை மணந்தால் கொல்லக் கூடத் தயங்காத மனம் பல பெற்றோர்களுக்கும் ஏற்படுவதும் அதனால்தானே. இப்படி சமூகத்தில் புற்று நோயாய் வளரும் சாதி சம்பிரதாயம் எனும் கிருமியை இறைவுணர்வுடன் நம் முன்னோர்கள் அது சைவர்களானாலும் சரி, வைணவர்களானாலும் சரி போற்றி வளர்த்திருந்தார்கள் என்பதை எந்தக் கோணத்திலுருந்துப் பார்த்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வளர்ந்த விஷக் கலை. அது நம் முன்னோர்கள் நம்மை ஏற்பித்திருக்கும் ஆன்மீகப் பயிரை மூடி நிற்கிறது. நிலை நிற்கப் போவது பயிரா களையா? முடிவு காலத்தின் கையில்!

இப்படி நம் கருத்துகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக் காரணம் நாம் எல்லோரும்,
எப்பொருள்  யார்யார்வாய்க்  கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப  தறிவு.

எனும் வள்ளுவன் வாக்கை வேதமாகக் கொள்பவர்கள் என்பதால்தானே. விடை காணவியலா புதிர் போன்றவைதான் இவை போன்ற விஷயங்கள் எனினும் நம் கருத்துகள் பரிமாற்றங்களின் மூலம் பல அறிய முடிகின்றது. என்னால் தெரிந்து கொள்ளவும் முடிகின்றது. மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்.

(இத்துடன் இதை முடித்துக் கொள்கின்றேன். இனி கீதாவின் பதிவுகள் சில காத்திருக்கின்றன..)

18 கருத்துகள்:

 1. எத்தனை வருடமானாலும் கரப்பு கொசு ஜாதி இவைகளை.........

  பதிலளிநீக்கு
 2. >>> 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வளர்ந்த விஷக் களை. அது நம் முன்னோர்கள் நம்மை ஏற்பித்திருக்கும் ஆன்மீகப் பயிரை மூடி நிற்கிறது. நிலை நிற்கப் போவது பயிரா?.. களையா?

  முடிவு காலத்தின் கையில்!.. <<<

  புதியனவாக கருத்துகள் தோன்றி வளரட்டும்!..

  பதிலளிநீக்கு
 3. உங்களது கருத்துப்பரிமாற்றங்கள் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நான் இதை பற்றி எல்லாம் அதிகம் அறிந்தவன் இல்லை. அறியும் ஆர்வம் இல்லாததாலேயே அறியவில்லை. உங்கள் ஆராய்ச்சி, நெல்லைத்தமிழன், கீதாக்கா பின்னூட்டங்கள் அறியத்தந்த தகவல்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 5. "சமூகத்தில் புற்று நோயாய் வளரும் சாதி சம்பிரதாயம் எனும் கிருமியை இறைவுணர்வுடன் நம் முன்னோர்கள் அது சைவர்களானாலும் சரி, வைணவர்களானாலும் சரி போற்றி வளர்த்திருந்தார்கள் என்பதை எந்தக் கோணத்திலுருந்துப் பார்த்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வளர்ந்த விஷக் கலை. அது நம் முன்னோர்கள் நம்மை ஏற்பித்திருக்கும் ஆன்மீகப் பயிரை மூடி நிற்கிறது. நிலை நிற்கப் போவது பயிரா களையா? முடிவு காலத்தின் கையில்!" என்ற அருமையான கருத்தை வரவேற்கிறேன்.

  தான் பெற்ற பிள்ளைகள் வேறு சாதிப் பிள்ளைகளை மணந்தால் கொல்லக் கூடத் தயங்காத மனம் பல பெற்றோர்களுக்கு ஏற்படுவதற்கு இன்றைய திரைப்படங்களும் காரணமே! இந்நிகழ்வைத் தடுக்க வழிகாட்டாமல் திரைப்படங்களும் இந்நிகழ்வைத் தூண்டும் கதைகளையே காண்பிக்கின்றன.

  பதிலளிநீக்கு
 6. #எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்ப தறிவு.#
  முத்தாய்ப்பாய் குறளைக் கூறி முடித்த விதம் அருமை !

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அற்புதமான விளக்கம் வழி பல தகவலை பெறமுடிந்தது... வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. //இப்படி சமூகத்தில் புற்று நோயாய் வளரும் சாதி சம்பிரதாயம் எனும் கிருமியை இறைவுணர்வுடன் நம் முன்னோர்கள் அது சைவர்களானாலும் சரி, வைணவர்களானாலும் சரி போற்றி வளர்த்திருந்தார்கள் என்பதை எந்தக் கோணத்திலுருந்துப் பார்த்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை// - அடி... அடி... அடி.. அப்படிப் போடுங்கள் வாத்தியாரே!

  பதிலளிநீக்கு
 9. அருமையான தொடர் தோழர்
  நேர்மையான பார்வை ..

  பதிலளிநீக்கு
 10. //இப்படி சமூகத்தில் புற்று நோயாய் வளரும் சாதி சம்பிரதாயம் எனும் கிருமியை இறைவுணர்வுடன் நம் முன்னோர்கள் அது சைவர்களானாலும் சரி, வைணவர்களானாலும் சரி போற்றி வளர்த்திருந்தார்கள் என்பதை எந்தக் கோணத்திலுருந்துப் பார்த்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை// - அருமை.......

  பதிலளிநீக்கு
 11. "சைவ பிராமணர்களுக்கு வைணவ பிராமணர்கள் சம உரிமை வழங்குவார்களா?" - இது சாதியைப் பொறுத்தது கிடையாது என்று நான் நம்புகிறேன். இது இறைக்கொள்கையைப் பொருத்தது. (த்வைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம்). வைணவர்கள் சைவ பீடத்தை அலங்கரிக்க முடியாது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் வைணவ பூசாரிகளைக் காணமுடியாது. (உங்கள் தகவலுக்கு.. நாச்சியார் கோவிலில், வடகலை வைணவர்கள் பாசுரம் சேவிக்க முடியாது. ஒப்பிலியப்பன் சன்னிதியில் தென் கலை வைணவர்கள் பாசுரம் சேவிக்க முடியாது. இது மனிதர்கள் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ளும் 'நான் உசத்தி.. என் கொள்கைகள் உசத்தி' என்ற எண்ணம்தான். இதற்கும் இறை உணர்வுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  "காஷ்மீரில் சாதி சம்பிராதயத்துடன் கட்டாய மத மாற்றமும் சைவ வைணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கலாம்" - காஷ்மீர் பல காலமாகவே கடுமையான சைவ நெறியில் உள்ளவர்கள் இருந்த (இப்போது குறைவான எண்ணிக்கையில் இருக்கும்) இருந்த இடம். அவர்களில் பலர் இறை அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று படித்துள்ளேன்.

  ஆதி சங்கரர் காலத்திலும் அதற்குப் பிறகும், பிராமணர்கள் என்பவர்கள் (வைணவர்கள் அல்லர்) சிவனையும், விஷ்ணுவையும், சக்தியையும் தொழுதே வந்துள்ளார்கள். அவர்களுக்கு விஷ்ணு அன்னியம் கிடையாது. ஆனால், வைணவர்களுக்கு சிவன் தொழப்படும் தெய்வமல்ல. நான் சைவ வைணவ வேறுபாட்டைமட்டும் சொல்கிறேன். இதனால்தான், வைணவர்கள், சிவன் கோவிலுக்குச் செல்லாமை என்ற கொள்கையைக்(தீவிர வைணவர்கள்) கடைபிடிக்கிறார்கள். இதுவும், 'ஆனை துரத்தினாலும் ஆனைக்கால் ie திருவானைக்கால் புகேன்' என்ற சொல்வழக்கு திருவரங்க வைணவர்களிடம் புழங்கியதும் எண்ணத்தக்கது.

  "சாதி சம்பிரதாயம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தான் சைவ வைணவத்தை வந்தடைந்தது" - இது சரியான கருத்தல்ல. சாதிகள் (வர்ணம்) சனாதன தர்மத்தில் பல நூற்றாண்டுகளாகவே இருந்திருக்கின்றன. (சிவன் புலையர் வேடத்தில் வந்தார் என்ற கதையும், பாணாழ்வாரை, அரங்கனின் அர்ச்சகர்கள் இழிவுபடுத்தியதால், அரங்கனே அவர்களை பாணாழ்வாரிடம் சென்று அவரைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு வருமாறு சொன்ன கதையும், "பலசதுப்பேதிமார்கள் இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்களாகில் தொழுமினீர்" என்ற 'நாலாயிர திவ்யப்பிரபந்தப் பாடலும், "வேதமோர் நான்கும் ஓதி தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும், நுமர்களைப் பழிப்பராகில்.... அவர்கள்தாம் புலையர்போலும்" என்ற பாடலும், 6ம் நூற்றாண்டுக்கு முன்பே சாதிகள் இருந்ததைத் தெளிவாகக் கூறுகின்றன (நாயன்மார்கள் வரலாற்றிலும் இது உண்டு). நீங்கள் சொல்லும் பலப் பல சாதிப் பாகுபாடுகள் (ஏழுமனைத் தெலுங்குச் செட்டி, வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர் இதுபோன்று ஏகப்பட்ட பிரிவாக ஒவ்வொரு சாதியும் கிளைகள் போன்று பரவியது) 14ம் நூற்றாண்டுக்குப் பின்பாக ஏற்பட்டிருக்கலாம். இராமானுஜர் (கி.பி 1000) தன் குருவாக தாழ்த்தப்பட்டவரை ஏற்றுக்கொண்டதை அவரது மனைவியே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை அவமதிக்கிறார். அப்படி என்றால், 10ம் நூற்றாண்டிலேயே சாதிப் பாகுபாடு இருந்ததை அறியலாம். அதை மறுத்து 'நியாயத்தைப் பேசியவர்களும் அப்போது இருந்திருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 12. விவரமான பின்னூட்டங்கள்...
  வாசிக்கத் தந்தீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. நெல்லைத் தமிழன், ஜாதிகள்(வர்ணம்) என்று குறிப்பிடுகிறார். ஜாதிகள் வேறு, வர்ணம் வேறு. வர்ணாசிரமத்தில் ஜாதி வேறுபாடெல்லாம் கிடையாது. செய்யும் தொழிலைப் பொறுத்து அவரவர் வர்ணம் மாறுபடும். தவங்கள் செய்து நான்காம் வர்ணத்தவர் கூட பிராமணனாக ஆக முடியும். ஜாதி என்பது ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள உட்கிளைகள். குலம் என்பதும் ஜாதியோடு சேர்ந்ததில்லை என்றே அறிந்திருக்கிறேன். இது குறித்து இங்கே பின்னூட்டங்களில் எழுத ஆரம்பித்தால் ரொம்பப் பெரிசா ஆயிடும். முடிந்தால் விளக்கமாக ஓர் பதிவு போடலாம். பார்ப்போம். இப்போச் சில நாட்களுக்கு முடியாது!

  பதிலளிநீக்கு
 14. ஆதி சங்கரர் காலம் குறித்தும் எனக்கு உங்களோடு கருத்து வேறுபாடு உண்டு. இதைக் குறித்து என் நண்பர் கிருஷ்ணகுமார் என்பவர் உங்கள் கருத்தை ஒட்டிய ஆதாரங்களைத் தமிழ் ஹிந்து தளத்தில் வைத்திருந்தார். என்றாலும் எனக்கென்னமோ ஆதிசங்கரர் காலம் குறித்த என்னுடைய பதிவு ஒன்றின் சுட்டி! http://sivamgss.blogspot.in/2011/09/1.html

  பதிலளிநீக்கு
 15. ஆதிசங்கரர் காலம் குறித்த கடபயாதி சங்க்யையின் குறிப்புகளும் விளக்கமும். உதவியது தெய்வத்தின் குரல்!
  http://sivamgss.blogspot.in/2011/09/2_23.html

  பதிலளிநீக்கு