சனி, 13 ஆகஸ்ட், 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 4

ஆற்றுப்படுகைகளில் விவசாயம் செய்து தானியங்களையும், பயறு வகைகளையும் விளைவிக்கும் முன் வேட்டையாடி மிருகங்களைக் கொன்றும், வனங்களிலிருந்து கிட்டும் காய் கனி கிழங்குகளையும் உண்டுதான் வாழ்ந்தான். அப்போதும் அவனுக்கு இறை உணர்வு இருந்தது.  அதன் பின் பூசைகளும், பூசாரிகளும் வந்த போது அவர்களும் மாறத் தொடங்கினர். அதற்கு உதாரணம் தான் கண்ணபர் (நாயனார்) தான் வேட்டையாடிய இறைச்சியை சிவலிங்கத்திற்கு முன் படைத்து, தன் வாயில் கொணர்ந்த தண்ணீரை லிங்கத்தில் துப்பி அபிஷேகம் செய்து  வணங்கியவர் கண்ணப்பர். இவ்வுலகிலுள்ள எல்லோரும் சைவ உணவு?! உண்டு வாழ்வது இயலாத காரியம்.

இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வாழைப்பழத்தின் தோலைத் தின்று, பழத்தைத் தூர எறிவது போன்ற ஒரு வகையான மூடத்தனமின்றி வேறென்ன.

திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா செய்தது போல் இந்தியா எங்கும் அப்பகுதிக்கு ஏற்றார் போல் ஏதாவது இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். கேரளாவில் எல்லா வருடமும் ஆடி மாதம் இராமயணமாதமாக்கி ஏதோவொரு மார்த்தாண்டன் வழி வந்த மன்னர் ஆணையிட்டு இருந்தார். அது இப்போது உயிர்பெற்று எழுந்து புத்தக நிலையத்தார்க்கும், அதைக் கோயில்களில் வாசிப்பவர்களுக்கும் நல்லதொரு வருமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் வீட்டில் குரானும், பைபிளும் இருப்பது போல் எல்லா இந்துக்களும் வீட்டில் இராமாயணம் அலங்கரிக்கிறது. எல்லா கோயில்களிலும் பாகவத ஸப்தாகம். அதில் தசாவதாரக் கதைகள் மட்டும். கேட்க வருவோர்கள் ஒரு கிருஷ்ண விக்ரகம் கொண்டு வந்து ஸ்ப்தாகம் முடியும் நாள் அவர்களுடைய வீட்டிற்குக் கொண்டு சென்று தினமும் பூசை செய்ய வேண்டும். இராமயணத்திலும் மட்டும் ஒதுங்கக் கூடிய ஒன்றல்ல, நம் முன்னோர்கள் போதித்த நம் ஆன்மீகத் தத்துவங்கள்.

எல்லா கோயில்களிலும் அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் (தெய்வத்தின் மனதிலுள்ளதை வெற்றிலைகளின் தோற்றத்திலிருந்தும், சோழியிட்டும் அறியும் முறை) வைத்து, வைத்த இடங்களில் எல்லாம் ஒரு கிருஷ்ணன் அல்லது இராமனைப் பிரசிஷ்டை செய்து அங்கு எல்லாவருடமும் “ஸப்தாகம்” நடத்துவது கேரளத்தில் வழக்கமாகியிருக்கிறது. ஸப்தாகத்தின் போது பிராமணர்களுக்கு உணவு, உடை, மற்றும் தட்சிணை கொடுத்து அவர்களை மகிழ்விப்பது, அவர்கள் உண்ட இலையைப் போட்டி போட்டு எடுத்துப் புண்ணியம் தேடுவோரின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே இருக்கிறது. (கர்நாடகத்தில் நடப்பது போல் விரைவில் எச்சில் இலையில் கிடந்து உருளும் மடேஸ்னானமும் கேரளத்தில் தொடங்க வாய்ப்புண்டு) இப்படி மனுஸ்ம்ருதியும், வைணவ விதிமுறைகள் மட்டும் தான் இந்துக்களின் ஆன்மீக முறை என்றாகிவிட்டது. இறந்தவர்களின் ஆத்மாக்களையும் வைணவத்தில் ஐக்கியமாக்கும் முயற்சி நடக்கத்தான் செய்கிறது. காலம் சென்ற பெற்றோர்களுக்கும், முன்னோர்களுக்கும் பலியிடச் செல்லும் போது (திவசம்) அவ்வாத்மாக்களை எல்லாம் நாராயண மந்திரம் சொல்லி வைகுண்டத்திற்குத்தான் கேரளத்தில் ஒட்டு மொத்தமாக அனுப்புகிறார்கள்.

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (1450-1950) மலையாள நாட்டில் பிராமணர்கள் நடமாடும் தெய்வங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். எந்த வீட்டிலும் நுழைந்து ஒரு புடவை கொடுத்து சம்மந்தம் செய்து குழந்தைகளைப் படைப்பார்கள். (ஜிஎம்பி சார் தனது வாழ்வின் விளிம்பில் இது பற்றி ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார்..) கேரளத்தில் பெரும்பான்மையினர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களைத் தழுவக் காரணங்கள் பல. அதில் இதுவும் ஒன்று. கேரளத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் மேற்சொன்ன கால அளவில் பிராமணர்களின் அபிப்ராயங்களுக்கு எதிர் அபிப்ராயம் யாரும் சொன்னதே கிடையாது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம். “ஷேக்ஸ்பியர் உண்மையிலேயே ஷேசுப்பையர் என்கிற பிராமணனாக்கும்” (இது எப்படி இருக்கு?!) கேரளத்தில் இராமனுக்கு மட்டுமல்ல, ஓரிரு இடங்களில் இலக்குமணன், பரதன் ஸ்த்ருக்னன் போன்றோர்களுக்கும் தனித்தனிக் கோயில்கள் கூட உண்டு. டாக்சிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அக்கோயில்களுக்கு (நாலம்பலங்களுக்கு) பக்தர்களிடமிருந்து நல்ல வருமானம்.

14 ஆம் நூற்றாண்டில், மத்வாச்சாரியரால் உருவான பிராமணர்களும்(கேரளத்தில்), வைணவமும் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இங்கு இருந்தது என்று வைணவர்கள் வரலாற்றில் எழுதச் செய்ததோடு நில்லாமல், சைவம் சில சைவ மத வெறியர்களான சோழமன்னர்கள் காலத்தில் மட்டும், அதுவும் தமிழகத்தில் மட்டும் இருந்த ஒன்றாக ஆக்கியும் விட்டார்கள். இதற்கு நல்ல ஒர் உதாரணம் இருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு எளிதாக, நேர்த்தியாக எல்லோர் மனதிலும் பதியும் வண்ணம் கமலஹாசன் தன் தசாவதாரத்தில் குலோத்துங்கச் சோழனையும், சைவர்களையும் சைவ சமயப் பைத்தியங்களாகக் காட்டியிருக்கிறார். தமிழகத்தில் சைவம் செழித்து நின்ற செட்டிநாட்டில் வாழ்ந்த வணிகர்களில் பலரையும் வடநாட்டில் உள்ளது போல் பூணூல் அணியச் செய்து அவர்களை வைசியர்களாக்கி சைவத்தைச் சிதைத்து வைணவ விதையை விதைத்துச் சாதி சம்பிரதாயத்தை வேரூன்றச் செய்து விட்டார்கள். ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இது போன்ற சம்பவங்களைப் போல் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு மதமும் 5000 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று சொன்ன பெட்டெரென்ட் ரஸலின் கணிப்பு உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கிறது. இவ்வுலகில் ஒன்று அழிந்து  மற்றொன்றிற்கு உணவாக வேண்டும்தானே. அப்படி சைவமும். இது இறைவன் சித்தம். இயற்கையின் நியதி. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழகத்திலுள்ள நம் முன்னோர்களின் தன்னிகரில்லா ஆன்மீக அறிவையும், வாழ்வு நெறியையும், விஞ்ஞான அறிவையும் பறைசாற்றும் இவ்வாலயங்கள் எல்லாம் கம்போடியா போன்ற கிழக்கு நாடுகளிலுள்ள பாழடைந்த சிவாலயங்களாகி விடுமோ என்ற வேதனையும் எழுகிறது.

மதத்தின் மற்றும் இறைவனின் மறைவில் நிலவும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பேசிய, எழுதிய குல்பர்ஜி, தபோல்கர், மௌலவி போன்றவர்களைக் கொன்று குவிக்கும் காலம் இது. பெருமாள் முருகன் போன்றவர்கள் நான் இனி எழுதமாட்டேன் என்று சில காலம் முடிவு எடுக்கச் செய்த காலம். இங்கு 16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த ஒரு சிற்றரசரின் சொற்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. மிளகுகளை எல்லாம் கொள்ளையடித்தும், மிளகுத் தோட்டங்களை அழித்தும் தாண்டவமாடிய போர்ச்சுக்கீசியர்களைப் பார்த்து, “நீங்கள் எதை எல்லாம் கொண்டு போனாலும் எங்கள் நாற்று வேலைகளைக் கொண்டு போக முடியாது” என்றாராம். நாற்று வேலை என்பது காலம் பொய்க்காமல் பெய்யும் மழை. “தென்னாட்டவரின் சிவனே போற்றி. என்நாட்டவரின் இறையே போற்றி” என்றல்லவா நம்முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இறைவனை யாரெல்லாம் அபகரித்து பெயர் மாற்றி, உடை மாற்றி, உரு மாற்றினாலும் மேற்சொன்ன “நாற்று வேலை”யெனும் இறை உணர்வும், இறை நம்பிக்கையும் நம்மை விட்டுப் போகாமல் நம்முடன் இருக்குமேயானால் அது நம்முள் இறையருள் எனும் பயிரை வளரச் செய்து நம் எல்லோரையும் அவரவரது மனதில் குடி கொள்ளும் இறைவனடி சேர்ப்பிக்கும் என்பது உறுதி.

(பின் குறிப்பு : எழுத்தை நம் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதும் நாம் “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரனை சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். அப்போது நாம் சில கருத்துகளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தத்தளிப்போம் தான். அது போல்தான் நான் சென்ற இடங்களில் எல்லாம் சாதாரண மக்கள் சொன்னதும், நான் அனுபவித்ததும் தான் இவை. பகிர்தல் மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. மன்னிக்க!)

அடுத்து, சமீபத்திய குறும்பட அனுபவங்கள் - கீதாவின் பதிவு. 


18 கருத்துகள்:

 1. விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்ன கமல் ஒரு வைணவர்தானே என்று சொல்வதும் தவறாகிவிடுமோ!

  பதிலளிநீக்கு
 2. கமல் சொன்னதால் பிரச்சினை வரவில்லை ,இல்லை என்றால் ரணகளமாக்கி இருப்பார்கள் :)

  பதிலளிநீக்கு
 3. விரிவான விளக்கமான பகிர்வு...
  அருமை... அருமை...

  பதிலளிநீக்கு
 4. நிறைய விஷயங்கள்.. அமைதியாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றது - மனம்..

  பதிலளிநீக்கு
 5. எனக்கு என்னவோ நீங்கள் மறைமுகமாக சைவத்துக்கு வக்காலத்துவாங்குகிறீர்களோ என்று தோன்றுகிறது எழுதிய செய்திகள் எல்லாமே மனிதன் மதங்களால் மதம் பெறுகிறான் என்பதையே குறிக்கிறது சைவமாவது வைணவமாவது எல்லாமே பிரிக்கும் சக்திகள் கொண்டவை எந்த மதமானாலும் சம்மதமே so long as they preach love. சைவர்கள் மட்டும் குறைந்தவர்களா எத்தனை சமணர்களைக் கழுவேற்றி இருப்பார்கள் ராமாயணம் மஹாபாரதம் எல்லாம் கதைகள், நல்ல சேதிகளைக் கதைகள் வாயிலாகக் கூறும் முயற்சி என்று அணுகினால் போதும் என்றே நினைக்கிறேன் நம் நாட்டில் மதங்கள் உய்ர்வு தாழ்வுக்கு அஸ்திவாரமிட உபயோகப் படுத்தப் படுகிறது அனுபவங்கள் நல்லெண்ணங்களுக்குத் துணை போகட்டும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. மிக ஆழமாக அதே சமயத்தில் இறை நம்பிக்கையின் பல பரிமாணங்களையும் அவை எவ்வாறு மாறி உள்ளன என்பது பற்றியும் பல கோணங்களில் போட்டு அலசி இருக்கிறீர்கள் . கம்பி மேல் நடந்து விழாமல் மறு முனை வரை வந்து விட்டீர்கள் .

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை
  தங்கள் தேடல் பெரிது
  சிறந்த கருத்துப் பகிர்வு
  ஈற்றில்
  அவையடக்கமாக
  முடித்தமைக்குப் பாராட்டுகள்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 8. மதங்கள் குறித்த விரிவான பதிவு சிறப்பு! முந்தைய பகுதிகளை விரைவில் படிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு தொடர். சைவம் - வைணவம் குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது நன்று.

  பதிலளிநீக்கு
 10. சகோ துளசி & கீதா,

  மனதிலுள்ளவைகளைப் பகிர்ந்துகொண்ட பிறகு ஓரளவு நிம்மதி கிடைத்திருக்கும்.

  குறும்பட அனுபவங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. இறைவழிபாடு என்பதானது தற்போது தாங்கள் கூறுவதுபோல பிறிதொரு கண்ணோட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. "இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" - இது அருமையான வரிகள். மலையாள பிராமணர்கள் (நம்பூதிரிகள்) பற்றி நீங்கள் எழுதியவைகளில் உண்மை இருக்கிறது.

  சைவம், வைணவத்தைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. இது heavy subject.

  பதிலளிநீக்கு
 13. இன்னும் விரிவாக அலசி இருக்கலாமோ? சைவம், வைணவம் குறித்த கருத்துகளில் இன்னும் ஆழமான பார்வை இல்லையோ என்று தோன்றுகிறது. அதோடு பூணூல் போட்டுக் கொள்வது, அதிலும் வைசியர்கள் போடுவது பின்னால் வந்தது இல்லை. வர்ணாசிரமக் காலத்திலிருந்தே உள்ளது தான். நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் தான் பூணூல் இல்லை. ஏனெனில் அவர்களின் பொறுப்பு அப்படி! அதிகமான பொறுப்புகளை ஏற்பவர்களால் உபநயனம், அனுஷ்டானங்கள் ஆகியவற்றைச் செய்யக் கஷ்டமாக இருக்கும் என்ற காரணத்தால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு. ஆனால் அவர்களிலும் தவம் செய்து பிரம்மனாக ஆனவர்கள் பலர் உண்டு. வால்மீகியே ஒரு சிறந்த உதாரணம்! வழக்கம் போலக் கடைசியில் எழுதி இருப்பதைத் தான் முதலில் படிச்சிருக்கேன். மற்றவற்றையும் படிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 14. ம்ம்ம்ம், உங்கள் தளத்தில் மெயில் ஆப்ஷன் கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு உங்கள் பதிவுகள் எதுவும் வரவில்லை. எங்கள் ப்ளாக் மூலமே வந்தேன். :)

  பதிலளிநீக்கு
 15. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். அப்போது நாம் சில கருத்துகளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தத்தளிப்போம் தான்

  பதிலளிநீக்கு
 16. We provide our customers with the most up to date listing of coupons and the best deals for 2000+ Indian e-commerce sites. Now, we are out to sweeten the deal by offering Cashback to our users on top of the Discounts!
  Best Deal Coupon Easy to Shop Save Your Money Super Deal Coupons Superdealcoupon

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா !

  என்மனதின் ஆழத்தில் இருக்கின்ற வலியெல்லாம்
  சொன்னவிடம் கண்டான்மா துடிதுடிக்கக் கண்ணுற்றேன்
  கன்னலெனக் காப்பியங்கள் காலமறாக் கோயில்கள்
  சின்மதிகள் கொண்டவரால் சிதைவடைதல் தான்தகுமோ ?

  மன்னவனோ பொன்பொருளில் மக்களுமோ நல்லிருளில்
  தின்னவழி இன்றிங்கே திசைமாறிப் போவதனால்
  இன்னுமோர் இறைபிறப்பு எடுத்திங்கே வந்தாலும்
  அன்னத்தில் விடம்வைத்தே அன்றோடு கொல்வார்கள் !

  தங்கள் பதிவுகள் கண்டு மக்கள் சிந்தித்தால் வருங்காலம் சிறப்பாகும் வாழ்த்துகள் ஐயா வாழ்க நலம் !

  தம +1


  பதிலளிநீக்கு