செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 3

நண்பர்கள் தனிமரம் நேசன், பகவான் ஜீ போன்றவர்களின் பின்னூட்டங்களும், முந்தைய பதிவில் சொல்லிய ஒரு சில சம்பவங்கள் மற்றும் கருத்துக்களைப் பற்றி சில விளக்கங்கள் சொல்லுவது நல்லது என்ற எண்ணமும்தான் இந்த மூன்றாம் பதிவு தோன்றக் காரணம். எனது அனுபவத்தின் போது சந்தித்த மனிதர்கள் சொன்னவற்றின் தொகுப்பு.

சீர்காழியில் சிவனுக்குச் சட்டநாதன் என்ற பெயரும் உண்டு. சட்டநாதனைக் காண படிகள் ஏறிச் செல்ல வேண்டும். சிவபக்தனான மகாபலியைக் கொன்ற விஷ்ணு செருக்குற்றுத் திரிய, சிவபக்தர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க சிவன் விஷ்ணுவைக் கொன்று அவர் தோலை உரித்துச் சட்டையாகத் தரித்துக் கொண்டாராம். சட்டை நாதர் நாளடைவில் சட்டநாதர் ஆனாராம். அதன் பின் இலக்குமி தேவியின் வேண்டுதலால் மனமுருகி விஷ்ணுவை உயிர்ப்பித்தாராம். இவ்வரலாறு (ஒரு கட்டுக்கதை அவ்வளவே) பல சிவத்தலங்களில்  மதில்களில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது.

நூற்றாண்டுகளாக, சைவ, வைணவச் சண்டை நம் முன்னோர்களிடையே இருந்திருக்கிறது. இது போன்ற கதைகள் சைவர்களும், வைணவர்களும் ஏராளமாக புராணங்களில் திணித்திருக்கிறார்கள். மட்டுமல்ல, சைவர்களும், சமண மதத்தவர்களும் சண்டை இட்டதாகப் பல ஆதாரங்கள் இருக்கிறது. அதே போல் சைவர்கள், பௌத்த மதத்தவரிடமும் சண்டையிட்டிருந்திருக்கிறார்களாம்.  ஆனால், இன்றும் சமண மதத்தினரும், பௌத்த மதத்தினரும் சச்சரவுகள் இல்லாமல் ஊன்றி வாழும் நம் நாட்டில் எப்படி சைவர்கள் மட்டும் வைணவ மதத்தவர்களிடம் சமரசமாகி இப்போதைய இந்துக்களானார்கள்? இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு முன் சில கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைத்தே தீர வேண்டும். திருமூலனும், சங்கராசாரியாரும் கண்டுணர்ந்த “உன்னுள் உறையும் இறைவன்” (ஜீவாத்மாவே பரமாத்மா) எனும் சைவமாம் அத்வைத தத்வமும், மத்வாச்சாரியார், இராமானுசர் கண்ட “ஜீவாத்மாவை பரமாத்மாவில் ஐக்கியமாக்குவதே மனித வாழ்வின் இலட்சியம்” எனும் த்வைதமாம் வைணவமும் ஒன்றுதானே? அப்படியிருக்க த்வைதத்திலிருந்துப் பிறந்த வைணவத்தில் நெற்றி, தோள், வயிறு, பாதம் போன்றவைகளிலிருந்து தோன்றியவர்கள்தான் முறையே பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மர்றும் சூத்திரர்கள் என்று சொல்லி அவர்களைப் பிரிக்கும் போது சைவமும் வைணவமும் ஒரு போதும் ஒன்றாக்க முடியாத தண்ணீரும் எண்ணையும் போல் ஆகிவிடவில்லையா?

இங்கு சைவர்களையும், வைணவர்களையும், முகலாயர்களும், ஆங்கிலேயர்களும்தான் இந்துக்களாக ஒன்றாக்கி உருமாற்றம் செய்தவர்கள். இப்படிச் சைவத்தையும் வைணவத்தையும் கலந்த போது அது “நீ வீட்டிலிருந்து அரிசி கொண்டு வா, நான் என் வீட்டிலிருந்து அதே அளவு உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் ஒன்றாகக் கலந்து நாம் அதை ஊதி ஊதித் தின்று இம்புறுவோம்” என்ற கதை போல் ஆகிவிடவில்லையா? இப்போது இந்து மதம் என்பது வைணவமே. சைவத்தை இப்படி உமியாய் ஊதித்தள்ளி வைணவமே இந்துமதம் என்று ஆக்கியது முறையா.

எல்லா மனிதர்களையும் சமமாய்க் காணாத மனிதர்களில் பல தட்டுகளாக்கும்  மதமாய் மாறிய இந்து மதத்தில், எல்லோரும் சமம் என்று பேசும் சைவத்தை எப்படிச் சேர்க்க முடியும்? அப்படியானால்? சைவத்தை வைணவம் விழுங்கிவிட்டு ஏப்பம் விட்டுவிட்டது என்பதுதானே உண்மை? அதனால்தானே சைவம் பேசுபவர்களை எல்லாம் அசுரர்களாகவும், நாகர்களாகவும், லிங்காயத்துகளாகவும், ஈழவர்களாகவும், ஆதிதிராவிடர்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் லிங்காயத்துகள் ஒழிய மற்றவர்களின் பெரும்பான்மையினர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தினராக ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் அதனால்தான்.

1922ல் திருவனந்தபுரத்தில் கிறித்தவமதம் மாறிய சாணாத்திப் பெண்கள் (நாடார்கள்) தங்கள் மார்பகங்களை மறைத்து நடந்த போது அவர்களை மேல்சாதியினர் கல்லெறிந்து விரட்டிய சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் பாகமாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளில் அதிகமாக கிறித்தவ மதத்தினர் உள்ளதற்குக் காரணம் அன்றைய சாதி சம்பிரதாயம்தான். காஷ்மீரில் இந்தியா சுதந்திரம் பெறும் முன் இந்துக்களாகப் பண்டிட்டுகள் மட்டும் எஞ்சியதும் ஏனையோரெல்லாம் இஸ்லாம் மதம் தழுவியதும் இச்சாதி சம்பிரதாயத்தால்தான். அப்படி காஷ்மீர் இன்றும் முடிவுகாண முடியா பிரச்சனையாய் நிற்க ஒரு காரணம் இச்சாதி சம்பிரதாயம்தான்.  நாகாலாந்தின் நாகர்கள் கிறித்தவமதம் தழுவியதும் அதனால்தான். 

ஆனால்,, 20 நூற்றாண்டின் முதற்பகுதியில் திராவிட நாட்டில் சாதி விஷம் ஏறியது முற்பட்டவர்களுக்கல்ல, பிற்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு. சைவம் மறந்த பிற்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்களுடன் மோதிக் கொண்டதும் இச்சாதி சம்பிரதாயத்தால்தான். அன்று இராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் இக்காரணத்தால் திராவிடர்கள் இஸ்லாம் மதம் தழுவ வேண்டியதானது.

சைவத்தில் இல்லாதிருந்த சாதி சைவர்கள் இந்துக்களானதும் அவர்கள் எல்லோரையும் தொர்றிக் கொண்ட தொற்று நோய். சாதியை ஒழிக்க திராவிட இயக்கம் தொடங்கிய ஈவேரா பெரியாரையே எல்லோரும் இப்போது ஈவே ராமசாமி நாயக்கர் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.  பெரியார் தொண்டர்களும் சாதி ஒழிப்பை மறந்து இறைவன் இல்லை என்பதிலும், பிராமணர்களை ஏசுவதிலும் முழு கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்போதைய நிலையில் சாதியை ஒழிப்பதோ, இந்து மதத்தில் கலந்து தனித்தன்மையை இழந்த சைவத்தை மீட்டுக் கொண்டுவருவதோ இயலாத காரியம். பட்ட மரம் பூக்காது. ஆனால் அதன் விதைகளில் ஏதேனும் ஒன்று எங்கேனும் விழுந்து முளைத்து வளர்ந்தால்தான் உண்டு.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும் சாதி பேசாத இலங்கைத் தமிழர்கள் உள்ள இடங்களில் சைவம் வளர வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது. இதற்கெல்லாம் காரணமான பிராமாணர்களில் பின் தலைமுறையினரை அவர்கள் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக பழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். தீவிரவாதத்தை வளர்க்கும் சிலருக்காக அவர்களது குடும்பத்தினரையும் எல்லா இஸ்லாமியர்களையும் குற்றம் சொல்வது போல்தான். 

நாம் நசுக்கிக் கொல்ல வேண்டியது சாதி மத நோயையும் அந்நோயை உண்டாக்கும் கிருமிகளையோ அல்லாமல், நோய் பாதித்த மனிதரையோ, நோய் பாதித்திருக்க வாய்ப்புண்டு என்று நாம் சந்தேகிக்கும் அவர்களது குடும்பத்தினரையோ அல்ல. நோய் பாதித்த மனிதரை அந்நோயிலிருந்து குணமாக்கி நம்முடன் ஒருவராக்கி வாழ வழி வகை செய்ய வெண்டும். நம் நாட்டின் இப்போதைய சூழலில் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிமையான மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது. 

அடுத்த பகுதியில் நிறைவுறுகிறது.....



18 கருத்துகள்:

  1. >>> நம் நாட்டின் இப்போதைய சூழலில் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிமையான மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது.. <<<

    நிறைவான கருத்து.. நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. அண்மையில் நண்பர் ஒருவரின் தளத்தில் படித்தேன் இந்துக்களிலேயே பிராம்மண இந்து மதம் என்றும் பிற்படுத்தப்பட்டோரின் இந்துமதம் இருக்க வேண்டும் என்கிறார் அவர். விளக்கமாகச் சொன்னால் நீஈஈண்டுவிடும்

    பதிலளிநீக்கு
  3. #மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது#
    இருந்த போதும்நிலைமை மாறி வருகிறது என்றே நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  4. காலங்கள் மாறினாலும் இதனை மாற்றமுடியாது போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தொடர் தோழர்...
    உங்கள் கருத்துக்கள் பலவற்றின் மூலம் உங்களை பார்க்க முடிகிறது

    பதிலளிநீக்கு
  6. நல்ல கனமான பதிவு. பழைய பின்னூட்டத்தை எடுத்துக் போட்டு பதிவை ஆரம்பித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. சாதியின் தாக்கம் நமது சமூகத்தில் மிதமிஞ்சிய நிலையில் உள்ளது. அதனை மாற்ற இப்போதைக்கு முடியாது என்றே படுகிறது. எங்கள் பகுதியில் கல்லூரி முடித்து வெளிவந்த மாணவர்கள் சிலர் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் முன்னேறி செல்கிறோமா, அல்லது பின்னேறுகிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  8. //பிராமாணர்களில் பின் தலைமுறையினரை அவர்கள் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக பழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். தீவிரவாதத்தை வளர்க்கும் சிலருக்காக அவர்களது குடும்பத்தினரையும் எல்லா இஸ்லாமியர்களையும் குற்றம் சொல்வது போல்தான்// - என் ஆயிரம் கைத்தட்டல்கள்!

    பதிலளிநீக்கு
  9. இந்நிலை மாற வேண்டும்
    இதற்குக் காலம் தான்
    பதில் சொல்ல வேண்டும்


    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  10. இதுதான் இந்தத் தளத்தில் என்னுடைய முதல் பின்னூட்டம்.

    "த்வைதத்திலிருந்துப் பிறந்த வைணவத்தில் நெற்றி, தோள், வயிறு, பாதம் போன்றவைகளிலிருந்து தோன்றியவர்கள்தான் முறையே பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மர்றும் சூத்திரர்கள் என்று சொல்லி" - இது விவாதத்திற்குரியது. நீங்கள் சொல்லும் விஷயம், வேதங்களின் ஒரு அங்கத்தில் வருவது. வேதத்தில் 'புருஷன்' என்று ஒரே ஒருவரைத்தான் குறிப்பிடுகிறது (அதாவது கடவுள்). அது யார் என்ற வேறுபாட்டால்தான் விளைந்தது சைவ, வைணவப் பிரிவுகள். நீங்கள் சொல்லியிருப்பதுபோல், வைணவம் சைவத்திலிருந்து வந்தது என்பதில் ஒரு அர்த்தமும் இருக்கிறது. சைவம், வைணவம், சாக்தம் போன்ற அறு சமயங்களின் அவியலே இந்துமதம். இதை ஒரு குறியீடாகத்தான் ஆங்கிலேயர்கள் சொன்னார்களே தவிர, இந்துமதம் என்ற ஒரு கான்செப்ட் கிடையாது.

    "சைவத்தை வைணவம் விழுங்கிவிட்டு ஏப்பம் விட்டுவிட்டது என்பதுதானே உண்மை" - இதுவும் சரியான நோக்காகத் தெரியவில்லை. சாதிப் பிரிவுகளுக்கும் சைவ வைணவத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை (இதன் அர்த்தம் சாதிப் பிரிவுகளுக்கும் இவற்றிற்கும் தொடர்பு இல்லை என்பதல்ல). சைவத்தையும், வைணவத்தையும் பின்பற்றியவர்கள் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். (சைவ மதத்தையும் வைணவத்தையும் பின்பற்றியவர்களில், பிராமணர்களும், மற்ற படி 'நிலைகளாகக் கருதப்பட்ட சாதியினரும் இருந்தனர். வைணவ ஆழ்வார்களில் எல்லா சாதியினரும் இருந்தனர்.)

    சைவர்களுக்கும் சமணத்திற்கும் சண்டை - இதுவும் பெரிய விஷயமல்ல. அரசன் தன்னுடைய பிரிவை (சைவம், சமணம், வைணவம் போன்றவை) ஆதரித்து, அதைப் பின்பற்ற ஆரம்பித்தால், அதனைக் கொண்டு மற்றப் பிரிவினர்களை அழித்தொழிக்கும் செயலே ஆதி காலத்திலிருந்து நடக்கிறது. வைணவ இலக்கியங்களிலும், சமணம்/பௌத்தம் பற்றிக் கடுமையான குறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன (உதாரணம். "வெறுப்பொடு சமணர், முண்டர், விதி இல் சாக்கியர்கள் .... . கண்டால் கூடுமே தலையை ஆங்கே அறுப்பதே கருமம் - இது வைணவ பக்தி இலக்கியத்தில் உள்ளது)

    இன்னொரு கான்ட்'ரவர்ஷியல் அப்சர்வேஷன் - சைவம் என்பதன் அர்த்தம் புலாலுண்ணாமை. இதனால்தான், உணவு விடுதிகளில், சைவம், அசைவம் என்ற பயன்பாடு இன்றும் இருக்கிறது. பௌத்த மதமும் புலாலுண்ணாமையைத்தான் முக்கியக் கொள்கையாகச் சொல்கிறது.

    இந்த சாதிப் பிரிவு, சைவ, வைணவ காலத்திற்கும் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். இத்தகைய பகிர்வுகள் நிறைய புரிதல்களையும், விவாதங்களயும் உண்டாக்கித் தெளிவு காண முயற்சிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      //இந்த சாதிப் பிரிவு, சைவ, வைணவ காலத்திற்கும் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். இத்தகைய பகிர்வுகள் நிறைய புரிதல்களையும், விவாதங்களயும் உண்டாக்கித் தெளிவு காண முயற்சிக்கும்.//

      நிச்சயமாக. இவை அனைத்தும் நான் சென்ற இடங்களில் சந்தித்த மக்கள் சொல்லக் கேட்டதும், எனது தனிப்பட்ட ஒரு சில அனுபவங்களுமே.

      உங்கள் கருத்துகளையும் கருத்தில் கொள்கின்றேன்.

      மிக்க மிக்க நன்றி சார்..

      நீக்கு
  11. நடு நிலையோடு ஆழமான பார்வையோடு
    ஜாதியின் அடிவேரை அசைத்தவிதம்
    மனம் கவர்ந்தது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து..

    பதிலளிநீக்கு
  12. ஜாதிப்பிரிவுக்கும் சைவ, வைணவத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. மன்னர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் ஒரே குடும்பத்தில் அண்ணன் சிவநேசனாகவும் தம்பி விஷ்ணு பக்தனாகவும் இருந்தது உண்டு. இது மாறியது ராமாநுஜர் காலத்திற்குப் பின்னர் தான் என்பது வரலாறு தெரிவிப்பது. இப்போதும் பஞ்சாபில் ஒரே குடும்பத்தில் சீக்கிய அண்ணனும், சீக்கிய மதத்தைச் சாராத உடன் பிறந்த தம்பியும் இருப்பது உண்டு. இது அவரவர் விருப்பம். இதற்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லை. காஷ்மீர் வீர சைவத்துக்கு முக்கியமாக பாசுபத சைவத்துக்குப் பெயர் பெற்றது. அங்கே உள்ள சக்தி பீடங்கள் இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. காஷ்மீர் சைவர்கள் உலகளவில் பிரபலமானவர்கள். அங்கே ஜாதி வித்தியாசத்தால் யாரும் மதம் மாறியதாகச் சரித்திரம் இல்லை. மதம் மாற்றப்பட்டதாகவே சொல்வார்கள். பல காஷ்மீர் பண்டிட்களையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதே போல் மதம் மாற்றப்பட்டவர்களும் சொல்லி இருக்கின்றனர். மதம் மாற்றப் பட்டவர்களில் பலரும் தங்கள் குடும்பப் பெயரை விட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  13. நாம் நசுக்கிக் கொல்ல வேண்டியது சாதி மத அந்நோயை உண்டாக்கும் சமூகத்தைதான் மாற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. சிறப்பானதொரு பதிவு! சைவ வைணவம் பற்றியும் ஜாதியம் பற்றியும் சிறப்பான அலசல்! நன்றி!

    பதிலளிநீக்கு