புதன், 13 ஏப்ரல், 2016

அனோஸ்மியா


உலகில் எத்தனயோ கோடி மக்கள் ஒரு வேளை உணவு கூட இன்றித் தவிக்கும் வேளையில், நம்மில் பலரும் உணவைக் குறை சொல்லிக் கொண்டும், வீணாக்கிக் கொண்டும் இருக்கின்றோம். உணவைச் சுவைத்து அனுபவித்து உண்ணுவது நல்லதுதான் என்றாலும் சுவைக்கு அடிமையாகி நாம் வீணாக்கும் உணவின் மணமே தெரியாமல் போனால்? சற்று யோசிப்போமே..

சாப்பிடுவது எதுவாக இருந்தாலும் (சைவம்), அதன் சுவையை, மணத்தை வைத்தே அதில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்து அதைச் செய்துவந்தவள். அது வரை அவள் சுவைத்து மகிழ்ந்திருந்த உணவுகள் எல்லாவற்றின் மணம், குணம், எல்லாம் தற்போது அவளது மூளையின் நினைவு ந்யூரான்களில் மட்டுமே.

நான்கு வருடங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றாள். எப்போதுமே இரு பக்கம் கால்கள் இட்டு அமர்பவள் (குதிரையில் அமர்வது போல) அன்று ஒரே பக்கமாக அமர்ந்திருந்தாலும் நன்றாகப் பிடித்துக் கொண்டும்தான் சென்றாள். ஒரு பெரிய வேகத்தடையில், நண்பர், வண்டியை ஏற்றி இறக்கும் போது அவள் கீழே விழுந்தாள். விழுந்தது மட்டுமே அறிவாள். சுவாசம் இருந்தது. நினைவில்லை. பின்பக்கத் தலையில் அடி. காயங்கள் எதுவுமில்லை. (பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியம்)

3 மணி நேரத்திற்குப் பிறகு சிறிதாக நினைவு வந்தபோது அரசு மருத்துவமனையில் படுத்திருந்ததும், சுற்றியும் வீட்டின் அருகில் இருக்கும் அனைவரும் அங்கு குழுமியிருந்ததும் நிழலாகத் தெரிந்தாலும், மீண்டும் கண் அயர்ந்துவிட்டாள்.

தலையை எக்ஸ்ரே, ஸ்கான் செய்து பார்த்ததில் எல்லாம் சரியாகவே இருந்தது. மருத்துவரின் கேள்விகளுக்குத் தெளிவாகவே தான் விழுந்தவிதம், விலாசம், தன்னுடன் இருந்த பெண் என்று எல்லாமும் சொல்ல முடிந்தது.

கழிவறைக்குச் சென்ற போது, “அட! பரவாயில்லையே! அரசு மருத்துவமனையில் கூட கழிவறை சுத்தமாக வாடை எதுவும் இல்லாமல் இருக்கிறதே!” என்று வியக்க, அவளுடன் இருந்த பெண்ணோ “இல்லையே தெரியுதே” என்று சொல்லி குழப்பமாகப் பார்த்தாள்.

சுய உணர்வுடன் இருந்தாள். ஆனால் எந்த உணவின் மணமும் தெரியவில்லை. அப்போதுதான் தெரிந்தது அல்ஃபேக்டரி நெர்வ் பாதிக்கப்பட்டிருப்பது. “அனோஸ்மியா”.


மணம் முகர்ந்து அறியும் சக்தியை இழந்துவிட்டாள். நல்லகாலம் அவளுக்குச் சுவை அறியும் திறன் (சுவை அரும்புகள்) பாதிக்கப்படவில்லை. சரி அப்படியென்றால்?

Olfactorynerve2.jpgHead olfactory nerve.jpg
olfactory nerve the first cranial nerve; it is purely sensory and is concerned with the sense of smell. 
நாம் சாப்பிடும் உணவின் மணம், நமக்கு முகர்ந்து அறியும் சக்தியினால்தான் தெரிகின்றதே அல்லாமல், அது நாவிலுள்ள சுவை அரும்புகளினால் அல்ல. என்றாலும் சுவையும், மணமும் நெருங்கிய தொடர்புடையதால், அனோஸ்மியா ஏற்பட்டவர்கள், பொதுவாக மருத்துவரிடம் சுவை/டேஸ்ட் தெரியவில்லை என்று சொல்லுவது வழக்கம். அது தவறாகக் கொள்ளப்படும். மணம்/ஸ்மெல்/ஃப்ளேவர் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுவை தெரியவில்லை என்றால், அறுசுவை – உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, துவர்ப்பு, கசப்பு – இந்தச் சுவைகளை அறிய உதவும் நாவின் சுவை அரும்புகளில் பிரச்சனை என்று கொள்ளப்படும். சில சமயம் இந்த அனோஸ்மியா அறுசுவையை இழக்கவும் காரணமாகக் கூடும்.


மணம் இழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு
. மூக்கில் இன்ஃப்ளமேஷன் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அது தற்காலிகமானது. வயதானவர்களுக்கும், நீரிழிவு நோய் http://engalblog.blogspot.com/2014/05/blog-post_28.html உள்ளவர்களுக்கும் கூட,  அனோஸ்மியா ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே இருக்க வாய்ப்புண்டு.

பேருந்தில் செல்லும் போது, கம்பியில் நம் தலை இடிக்க நேர்ந்தாலும் கூட, சில சமயம் அல்ஃபேக்டரி நெர்வுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் குழந்தைகளைக் கூட தலையில் குட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. 

.தீர்வு? மூக்கில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனால் என்றால் (ஸ்டெராய்ட்) மருந்துகள் உள்ளனவாம். ஆனால், தலையில் அடிபட்டதால் ஏற்படுவதற்கு சரியான தீர்வு இல்லை என்றும், சில சமயம் தானாகவும் சரியாகலாம் இல்லை என்றால் அப்படியேதான் இருக்கும் என்றும் மருத்துவர் சொன்னார்.

சில சமயம், கறிவேப்பிலையின் மணம் தெரியும். சிலவற்றின் மணம் எக்குத் தப்பாகவும் தெரியும். தேநீரில் பல சமயங்களில் சோப் ஏதோ கலந்தது போல இருக்கும். என்ன சோப் கலந்திருக்கிறது என்று வீட்டார் அவளைக் கலாய்ப்பது வழக்கம். வெங்காயம், பூண்டு போட்டிருந்தால் ஏதோ நாள்பட்டது போட்டிருப்பது போல், எப்போதாவது, கொஞ்சமாகத் தெரியும்.

அவளுக்கு மணமே தெரியவில்லை என்றாலும் கூட, சாப்பிடுவதில் ஆர்வம் சற்றும் குறையவில்லை. யாரேனும் ஏதேனும் புதியதாய்ச் செய்திருந்தால், உடன் அதைச் சாப்பிட்டுப் பார்த்து அதில் என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்று ருசித்துப் பார்த்து ஆராய முற்படுவதும், அதைச் செய்து பார்ப்பதும் தொடர்கின்றது. கடனே என்று சாப்பிடாமல் ரசித்து, ருசித்துச்?? சாப்பிடுவதால் தனக்கென்ற வாசமிக்க ஒர் அகராதியை உருவாக்கி ந்யூரானில் சேமித்து வைத்திருக்கிறாள்.

சாதகங்கள் - எந்த உணவையும், யார் செய்த உணவையும் குறை சொல்லாதவள், அப்படியே சொல்ல நேரிட்டாலும் அதை அந்த நபரிடம் தனியாக மனம் புண்படாத வகையில் சொல்லி வந்தவள், அனோஸ்மியாவிற்குப் பிறகு மனம் இன்னும் பக்குவப்பட்டிருக்கிறது. கூடியவரையிலும் பிறரைச் சார்ந்திராத வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்.

பாதகங்கள் - கெட்ட வாடை தெரியாது. (அதனால், கழிவறை சுத்தம் போன்றவற்றில் கவனம் இன்னும் கூடியிருக்கிறது +) குறிப்பாக சமையலறையில் எரிவாயு கசிந்தால்http://sivamgss.blogspot.in/2015/12/blog-post_23.html (சகோ கீதா சாம்பசிவத்தின் இந்தப் பதிவு எனக்கு இந்தப் பதிவு எழுதக் காரணம் என்றும் சொல்லலாம்)

மற்றவர்கள் அவளைப் பார்த்து இரக்கப்படுவதைச் சுத்தமாக விரும்பாததால், தனக்கு மணம் முகரும் சக்தி இல்லை என்பதைப் பற்றிச் சொல்லாமல் எப்போதும் போல் எல்லாவற்றையும் சுவைத்துக் கொண்டிருக்கின்றாள்.

தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே அடிபட்டதனாலோ, இல்லை வேறு காரணங்களினால் அனோஸ்மியா ஏற்பட்டாலும் சோர்ந்துவிடாமல் மனதை மகிழ்வாக, உற்சாகமாக வைத்துக் கொண்டுவிட்டால் வாழ்க்கையையே சுவைக்கலாம்!

--கீதா

படங்கள் இணையத்திலிருந்து


33 கருத்துகள்:

 1. நல்ல விளக்கமான பதிவு. இந்நிலையில் உள்ள என் நண்பரைப் பார்த்து நான் எழுதியிருந்த பதிவையும் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். நான் சகோ கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதியிருந்த ஒரு பதிவில் எரிவாயு கசிவதைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்ததும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது. பல நாட்கள் கிடப்பில் இருந்து இன்றுதான் வெளியிட்டேன். பதிவிற்கு இந்த அனோஸ்மியாவிற்குத் தமிழில் என்ன பெயர் என்று பார்த்த போது "எங்கள் ப்ளாக்" பதிவு பார்த்தேன். ஓ நாம் எழுதுவதற்கு முன்பே வந்திருக்கிறது அதுவும் நாங்கள் எழுதத் தொடங்கிய பிறகு...எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை...அதனால் நீரிழிவு நோயினால் என்று நீங்கள் சொல்லியிருந்ததால் அப்படியே அதையும் இங்கு கொடுத்துவிட்டேன்...

   இப்போது அப்பாவிற்கு அல்சிமர் என்று உங்கள் பதிவில் வாசித்ததும் அப்பாவிற்கும் இப்போது இதுதானே என்று மனம் வேதனையாகிவிட்டது...

   மிக்க நன்றி ஸ்ரீராம் .

   நீக்கு
 2. இப்படியெல்லாம் கூட பிரச்சினைகள்தோன்றுமோ
  அறியாத செய்தி சகோதரியாரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோன்றும் சகோ. பல இருக்கிறது சகோ ஒவ்வொன்றும் ஒருவிதம்..நாம் அறியாதவை பல. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 3. அருமையான பதிவின் மூலம்
  அன்பான அறிவுரை தந்தீர்கள்
  நன்றி சகோ நன்றி.....
  அறிவியலும் சார்ந்திருக்கிறது
  அருமை.!அருமை..!!அருமை...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அஜய்! அறிவுரை என்பதைவிட ஒரு விழிப்புணர்வு என்று சொல்லலாம். இப்படியும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று. மிக்க நன்றி அஜய் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 4. இவ்வாறான ஒரு நோயைப் பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. கடைசி பத்தியில் தாங்கள் கூறியுள்ள கருத்து ஒவ்வொரும் மனதில் கொள்ளவேண்டியது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா இதை நோய் என்று சொல்லுவதற்கில்லை. பாதிப்பு, குறைபாடு அவ்வளவே. எனக்குத் தெரிந்த சிலர் தற்காலிகமாக மூக்கில் ஏற்படும் சிறு பிரச்சனைகளால் மணம் இழந்த நிலையில் சோர்வுற்று உணவை வெறுத்து, உடல் நலிந்திருக்கின்றனர். அதை எல்லாம் மனதில் கொண்டுதான் எழுதினேன் ஐயா.

   மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 5. உங்கள் அனுபவத்தையே பதிவாக தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது இந்த சம்பவத்தை கூறினீர்கள். அதனால் எனக்கு மணம் தெரியாது என்று சொன்ன நினைவும் உண்டு.
  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உங்களையும் நண்பர்கள் கோவை ஆவி, திடம்கொண்டு போராடு சீனு ஆகியோரை சந்தித்துப் பின் ரயிலேரும்போது நடுவில் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று நீங்கள் வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்த புளி சாதத்தையும் தயிர் சாதத்தையும் கொடுத்தீர்களே! அதன் மணமும் சுவையும் அற்புதமாக இருந்தது. உண்மையில் அந்த பாதிப்பை வென்றுவிட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
  அருமையான பதிவு.
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செந்தில் தங்களின் விரிவான கருத்திற்கு. நீங்கள், நான் அன்று கொடுத்த சாப்பாட்டைப் பற்றி இப்படிச் சிலாகித்துச் சொல்லுவது தங்கள் அன்பைச் சொல்லுகின்றது. மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 6. காற்று போய்,வர மட்டுமே அவருக்கு மூக்கு உதவுகிறது :)

  பதிலளிநீக்கு
 7. >>> தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே அடிபட்டதனாலோ, இல்லை வேறு காரணங்களினால் அனோஸ்மியா ஏற்பட்டாலும் சோர்ந்துவிடாமல் மனதை மகிழ்வாக, உற்சாகமாக வைத்துக் கொண்டுவிட்டால் வாழ்க்கையையே சுவைக்கலாம்!..<<<

  அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைரவரிகள்..

  அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது வருத்தத்துக்குரியது.. என்றாலும்,
  மற்றவர்க்கொரு பாடமாக அமைந்து விட்டது..

  புதிய தகவலொன்று தங்களால் அறிந்து கொண்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 8. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு
 9. அந்த பெண்ணின் அனுபவம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வாய்...பதிவு தந்திருக்கிறீர்கள். எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. தன்னம்பிகை வாழ்க.

  பதிலளிநீக்கு
 10. மணம் உணரப்படாத போது மட்டும் அல்ல,
  சில வாடைகள், உதாரணமாக, காகிதம் பொசுங்கினால் போல் ,
  உணரப்பட்டாலும் உடனடியாக ஒரு
  நியுராலஜிஸ்ட் ஐ கன்சல்ட் செய்யவேண்டும்.

  ஈ ஈ ஜி எலக்ட்ரோ என்செபாலோ கிராம் எடுத்துப்பார்ப்பது நலம்.

  நீங்கள் சொல்லும் ஆல்பாக்டரி சென்ஸ் அதிகம் உள்ளது நாய்.மட்டுமே.

  சுமார் 5000 வித்தியாசமான வாடைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு.

  மனிதனுக்கு கிட்டத்தட்ட் ஒரு 400 முதல் 500 வாடைகள்.
  வயது ஆக இது குறையத்தான் செய்யும்.

  அதெல்லாம் இருக்கட்டும்.
  அந்த கேள்விக்கு பதில் என்னாச்சு ?
  பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா ?

  நிற்க.

  எல்லோருக்கும் சுப்பு தாத்தா வின் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
  www.subbuthatha72.blogspot.com
  www.Sury-healthiswealth.blogspot.com

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரை என்றே சொல்லலாம் முன்னோர்கள் சொல்லி வைத்த காரணங்களுக்கு பின் நிச்சயமாக ஒரு நல்ல விடயம் இருக்கும் என்பது உண்மையே..

  பதிலளிநீக்கு
 12. அனோஸ்மியா-என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 13. மிக சரியாக சொன்னிங்க கீதா..அம்மா எப்பவும் சொல்வாங்க குறிப்பா பெண் பிள்ளைகள் தலையில் குட்டகூடாது முதுகில் அடிக்ககூடாது என்று ..ஒரு பெண்ணுக்கு பள்ளியில் கூட பயிலும் மாணவி முதுகில் வேகமாக இரு கரங்களால அடித்ததால் நரம்பு பாதித்து கூன் போட்டாற்போல் நடப்பாளாம்
  .நரம்புகளில் சிறு அடியும் படாம கவனமா இருக்கணும் .பைக் அல்லது கார் இரண்டிலும் பின்னால் அமர்பவரும் தலை கவசம் /பெல்ட் போடணும் ..எனக்கு சம்மரில் nasal inflammation உண்டு allergic rhinitis வருடத்தில் தொடர்ந்து 8-10 வாரங்கள் அவதிப்படுவேன் ..அந்த நாட்களில் தெருவின் எந்த மூலையிலோவீட்டுக்குள் பொரிக்கும் அனியன் பஜ்ஜி ஸ்மெல் கூட irritate செய்யும் கண்ணையும் மூக்கையும் வெறிகொண்ட மாதிரி தேய்த்துகொள்வேன் .பிறகு ஓரிரு நாளில் ஒன்றுமே தெரியாது சைனஸ் துவங்கிடும் .அதுவும் சாதா நாளில் எனக்கு கியூடேக்ஸ் ரிமூவர் வாசனைக்கும் மயக்கம் வரும் .மோப்ப சக்தி கிட்டத்தட்ட ஒரு dog ஐ விட கொஞ்சம் குறைவுன்னு சொல்லலாம் ...பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம் .
  சிவியர் hay fever இந்த anosmia உண்டாக்ககூடும்னு டாக்டர் எனக்கு சொல்லியிருக்கார் .காரணம் நான் அந்த நேரத்தில் antihistamines எடுத்துக்கொள்வதில்லை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவிலும் இது பற்றி வாசித்திருக்கிறேன் ஏஞ்சல் உங்கள் பிரச்சனைகள் குறித்து எழுதியிருந்தீர்கள் இல்லையா? நீங்கள் சொல்லுவது போல் பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். -உங்கள் பிரச்சனையும் வினோதமானதுதான்...ஹே ஃபீவர் பற்றியும் அறிந்ததுண்டு ஏஞ்சல்....மருத்துவர் மூலமும், வீட்டில் இருக்கும் நாலுகால் செல்லங்களின் மருத்துவர் மூலமும்...

   சில அலர்ஜிகளுக்கு நிரந்தரமான தீர்வு இல்லை என்றும் அதற்கான அலோபதி மருந்துகள் நல்லதல்ல என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஹோமியோ, சித்தாவில் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் ஆத்தெண்டிக்காகத் தெரியவில்லை.

   மிக்க நன்றி ஏஞ்சல் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு..

   நீக்கு
 14. gluten free diet மூலம் இந்த அனோஸ்மியா குணமாகும்னு கேள்விப்பட்டேன்

  பதிலளிநீக்கு
 15. இந்தக்குறைப்பாடு இங்கும் சிலருக்குண்டு அது காலநிலைமாற்றத்தின் பாதிப்பு என்றும் சொல்லக்க்கேள்வி.புதிய பெயர் நோய் பற்றி அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 16. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. எவ்வளவு விஷயங்களைக் கோர்வையாக மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ருசி அறியும் நாக்கு, மணம் அறியும் மூக்கு என நம் உடலில் அனைத்து உறுப்புக்களும் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர முடிகிறது. தலையில் அடிபட்டால் அதனால் இதுபோல எவ்வளவு பாதிப்புகள். நினைக்கவே பயமாகத்தான் உள்ளது.

  //குறிப்பாக சமையலறையில் எரிவாயு கசிந்தால்....?????//

  அடடா, இதனால் மிகப்பெரிய ஆபத்தல்லவா வரக்கூடும்.

  பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள். - VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 17. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 18. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 19. ஒரே வார்த்தை ஹிட்டச்சியின் ஸ்லோகன் காப்பி அடித்ததுதான் INSPIRE THE NEXT

  பதிலளிநீக்கு
 20. பெயரைப் படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். படித்தபின் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். தேவையான தகவல். எல்லாவிடங்களிலும், எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நமது ஒவ்வொரு உறுப்பும் எத்தனை முக்கியத்துவமும், தனித்தன்மையும் வாய்ந்தவை என்று புரிகிறது.

  பதிலளிநீக்கு
 21. ஒரு கல் உப்போ, கொஞ்சம் கடுகோ, துளி காரமோ குறைந்தாலும் "நல்லாவே இல்லை" எனக் கூறி உணவை வீணடிக்கும் நம் சமூகத்துக்குக் கட்டாயம் தேவையான பதிவு.

  பூந்தளிரில் 'அனு கழகம்' என்று அறிவியலை விளையாட்டாய் விளக்கும் படக்கதைத் தொடர் ஒன்று அப்பொழுதெல்லாம் இதழ்தோறும் வெளிவரும். அதில்தான் முதன்முறையாகச் சுவையை அறிவதற்கு மூக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதை அறிந்து கொண்டேன். சளி பிடித்துக் கொண்டிருக்கும்பொழுதும், காய்ச்சல் நேரங்களிலும் உணவின் சுவை தெரியாமல் போக இதுவும் ஒரு முதன்மைக் காரணம். ஆனால், பெரும்பாலானோர் இந்த உண்மையை அறிவதில்லை.

  குழந்தைகளைத் தலையில் அடிக்கக்கூடாது என்பதற்கும் இதுதான் காரணம் என்பதை அறிந்து முன்னோர்களின் அறிவியல்திறனை வியக்கிறேன்.

  மணமே தெரியாவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையை இயல்பாகவும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்ளும் அந்தப் பெண்ணின் மனப்பாங்கு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அந்த முகம் தெரியாத சகோதரி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு