செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அஹிம்சையின் அளவுகோல்???!!!

அஹிம்சாவாதி காந்தி பிறந்த மண் என்று போற்றப்படுகின்ற நம் நாட்டில் அஹிம்சை பின்பற்றப்படுகின்றதா? அஹிம்சையின் அளவு கோல் என்ன? இந்தக் கேள்விகளுக்கானக் காரணங்கள், நம் நாட்டில் நடந்த, நடக்கின்ற பல நிகழ்வுகளும், எனக்கு நேர்ந்தச் சில நிகழ்வுகளும்.

இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் மகனை அவனது கிளினிக்கில் விட்டு வருவதற்கு, டைடைல் பார்க் சிக்னலில், பழைய மகாபலிபுரச் சாலையில் வலது பக்கம் திரும்ப வேண்டி நின்று கொண்டிருந்தேன். பச்சையும் வந்தது. திரும்பும் போது பழைய மகாபலிபுரச் சாலையிலிருந்து ஒரு சைலோ வண்டி – கால் டாக்சி - வேகமாக வந்து அவனது வலதுபுறம் திருவான்மியூர் சாலையில் திரும்ப சொடக்கு போடும் நொடிதான், நான் சமாளித்துத் தப்பினேன்.

வண்டியை ஓட்டியவன் வண்டியை நிறுத்தி என்னைத் திட்டினான். என் மீது தவறு இல்லாததால் கோபம் வந்தது. நான் வண்டியை ஓரமாக நிறுத்தினேன் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. அவனுடன் நான் சண்டை போடத்தான் வண்டியை ஓரம் கட்டியிருக்கின்றேன் என்று நினைத்து அவனும் வண்டியை ஓதுக்கிவிட்டு மீண்டும் என்னிடம் வந்து, “வண்டி ஓட்டத் தெரியாம ஏம்மா நீயெல்லாம் ரோட்டுல வர????!!!!” என்று சண்டைக்கு வந்தான். என் கோபம் மீண்டும் தலைக்கேறியது. “யாருங்க மோத வந்தது ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம? நானா, நீங்களா” என்று நான் சத்தம் போட ஆரம்பித்தேன்.

விபத்து நடந்திருந்தால் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் ஒரு கால்நடை மருத்துவனும், நானும் எங்கேனும் ஓரு மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருப்போம். இல்லை எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். இதோ இப்போது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருந்திருப்பேனா?

மகனுக்கு கிளினிக்கிலிருந்து அழைப்பு. சாலை விபத்தில், ஒரு நாலுகால் செல்லம் அடிபட்டு வந்திருந்தது என்று. அந்த நாலுகால் பாவம். வண்டி ஓட்டுநரின் கத்தலைப் புறம்தள்ளி, வண்டியை எடுத்தான் மகன்.

சிக்னலில் நிற்கும் போது, வேகமாக வந்து வண்டியை பின்புறம் இடித்து நம்மைத் தடுமாற வைத்தலும் நடக்கிறது. சரி இரு சக்கர வாகனத்தை விடுங்கள். நாலு சக்கர வாகனத்தில் சென்ற போது சிக்னலில் பச்சை விழுந்ததும், முன்னால் ஏகப்பட்ட வண்டிகள் மெதுவாக நகர, நான் வண்டியை மெதுவாக நகர்த்திய போது, பின்னால் ஒரு சுமோ வண்டி - இதுவும் கால் டாக்சிதான் - வேகமாக வந்து, இடது புறமாக முந்திச் செல்ல விழைந்தபோது  என் வண்டியின் பின்புறம் இடிக்க, என் வண்டி அதிர்ந்தது, என் கால் க்ளச்சிலிருந்து விடுபட்டுவிட்டதால்.

நான் எப்போதுமே என் முன்னால் நிற்கும் வண்டியிலிருந்து இடைவெளி விட்டு நகர்வதால் நல்ல காலம் முன்னால் செல்லும் வண்டியின் மீது இடிக்கவில்லை. உடன் சமாளித்துவிட்டேன். அந்த வண்டிக்காரன் என்னைத் தாண்டி வண்டியின் இடது புறப்பக்கவாட்டுக் கண்ணாடியையும் தட்டி உடைத்துவிட்டுச் சென்றதும் மட்டுமின்றி என்னை முறைத்துவிட்டுத் திட்டினான். “சிக்னல் விழுந்து வண்டிய எடுக்காம...நீயெல்லாம் காரோட்ட வந்துட்ட”????!!!!! என்று சொல்லிவிட்டு நகர, வன்முறை?! எனக்கு வந்தக் கோபத்தில் அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது.

இப்படி இடிப்பவர்கள் “மன்னிப்பு” என்ற வார்த்தை தமிழில் இருப்பதைக் கூட மறந்து விட்டார்கள் போலும். ஒருவேளை காப்டனின் வசனம், “தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது அவர்கள் மனதில் பதிந்திருக்கும் போல!

என்னைப் பொருத்தவரை, இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. பலரும் மீறுகின்றனர். பலருக்கும் விபத்து தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், நம்மீது தவறே இல்லாத போது, நம்மையும் மீறிக் கோபப்பட வைக்கும் நிகழ்வுகள்.

சரி, இருசக்கரமும் வேண்டாம், நான்குசக்கரமும் வேண்டாம், நம் சொந்தக்காலில் நடக்கலாம் என்று நடைபாதையில் நடந்தால், அங்கும் வாகனங்கள். அசிங்கமான வார்த்தைகளைக் கேட்கும் சூழல்.

சிறிய வயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறைகள் அறியா பருவம் என்பதால் கடந்து சென்றுவிட்டன. பலவருடங்களுக்கு முன் சாலையோரம் நடந்து சென்ற போது, சைக்கிளில் கடந்து சென்ற ஒருவன் என்மீது தகாக இடத்தில் கைவைத்து.....நான் உடன் அவன் சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, அவன் கன்னத்தில் அறைந்தேன்.

அவன் என் வீட்டு வாசலில் குடித்துவிட்டு வந்து நின்று கொண்டுக் கத்தினான். நான் செய்தது வன்முறை என்று சொல்லப்பட்டது. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது போல் அந்நிகழ்விலும் நான் செய்திருக்க வேண்டுமா?
  
இப்படிப் பல பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், நிகழும் இது போன்றவையும் வன்முறைதானே! ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் வேறு விதமாக வன்முறைகள் நிகழத்தான் செய்கின்றன. குழந்தைத் தொழிலாளிகள் என்ற பெயரில். சமூகம் மட்டுமின்றி, பெற்றோரும் கூட குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறைகளைக் கையாளத்தான் செய்கின்றார்கள். ஆயுதம் எடுத்தலோ, அடித்தலோ மட்டுமே வன்முறையல்ல. வார்த்தைகளால் சுடுவதும் வன்முறைதான். Sorry cannot make a dead man alive. 

குற்றம் இழைத்தவர்களைக் காக்க வேண்டி, குற்றம் செய்யாதவர்களைச் சிறையில் அடைத்துக் குற்றம் செய்தது போல் ஜோடித்து ஒத்துக் கொள்ள வைக்க, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே  கையாளும் முறைகளும் வன்முறைதானே! என்கௌண்டர் என்று சொல்லிச் சுடுவதும், சர்வசாதரணமாகப் பட்டப்பகலில் நடக்கும் கொலைகளும் கூட வன்முறைதான்.

நேர்மையாக இருக்கும் பேராசிரியர், வகுப்பில் தவறு செய்த மாணவனைத் திருத்த முனைந்த போது, அந்த மாணவன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அதிகாரம் விளையாடி, அந்தப் பேராசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் பேராசிரியருக்கு அவர் நேர்மையாக இருப்பதால் நிகழ்ந்த விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட நாட்களே அதிகம்.

நாம் நம்மைக் காத்துக் கொள்ள சில கேடயங்களைக் கையாளும் நிலை ஏற்பட்டாலும், நேர்மையற்ற அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போகாமல் தவறுகளைத் தட்டிக் கேட்டாலும் நாம் வன்முறையாளர்கள்! முறையான சட்டத்தைப் பின்பற்றினாலும் நீதி கிடைக்காத சமூகத்தின் மீது கோபம் கொண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தவோ, நீதியோ கேட்டால் அந்நியர் அல்லது வன்முறையாளர் என்று சொல்லப்பட்டு மெய்யாகவே அந்நியர்களாகிப் போவதும் நடக்கத்தான் செய்கின்றது. அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போனால் நாம் அஹிம்சைவாதிகள்!

மேலே சொன்னவை ஒரு புறம் இருக்கட்டும். இயற்கை நமக்கு நன்மைதானே செய்கின்றது? அப்படியிருக்க நாம் இயற்கைக்கும் எதிராகத்தானே செயல்படுகின்றோம். நாம் நமது சுயநலத்திற்காக, அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, மனிதன் மட்டுமே இந்த உலகில் வாழும் உயிர்  என்று எண்ணிக் கொண்டு, சாலையோர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தல், பிற உயிரினங்களை வாழ விடாமல் செய்தல் என்பதும் கொலைக்குச் சமம்தானே? வன்முறைதானே!

எதிர்காலத்தில் உணவிற்கும், தண்ணீருக்கும், நல்ல காற்றிற்கும் வழியின்றி, உணவிற்காக, தண்ணீருக்காக மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் போர்க்களமாக்கியும், நம் சந்ததியினருக்கு சவக்குழிகளையும் தோண்டிக் கொண்டிருக்கின்றோமோ என்றும் தோன்றுகின்றது. இதுவும் வன்முறைதானே!

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளராக நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை பயங்கரவாதிகள் என்று உளறினார். 

தினமும் நமக்கு நடக்கும் பல சம்பவங்களும் வன்முறை, பயங்கரவாதம் என்பவற்றின் விளிம்பை ஒட்டித்தான் நடக்கின்றன. மேலே சொன்ன நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும்தான் இருக்கின்றோம். அப்படியிருக்க, குண்டு வெடிப்பும், துப்பாக்கியால் மனிதர்களைச் சுடுவதும் மட்டும்தான் பயங்கரவாதம், வன்முறை என்று, நாம் குறிப்பிட்ட மக்களை மட்டுமே தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று சொல்லி வருவது ஏனோ?

நாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம். அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன? நம் நாட்டில் இருக்கின்றதா? எங்கிருக்கின்றது?

---கீதா

(கீதா இந்த வாரம் முழுவதும் பிசி. கல்யாணங்கள், உறவுகாரர்கள் வருகை என்பதால் இணையம் பக்கம் வருவது சற்று கடினம். நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்.)


48 கருத்துகள்:

 1. மிக நல்ல பகிர்வு என்றாலும்...
  தங்கள் வண்டியை இடித்துவிட்டு சண்டைக்கு வந்த டிரைவர்...
  கார் கண்ணாடி உடைத்து வண்டி ஓட்டத் தெரியலையின்னு திட்டிய டிரைவர்...
  குடித்துவிட்டு ரகளை பண்ணியவன்... இப்படி எல்லாம் கடந்து பயணிக்கும் நேரத்தில் நாமும் கூட அகிம்சாவாதியாய் இருக்க முடிவதில்லை... வன்முறையை கையிலெடுக்கத்தான் வேண்டியிருக்கிறது கீதா மேடம்...

  நல்ல கட்டுரை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் குமார் பல சமயங்களில் கோபம் வெளிவரத்தான் செய்கின்றது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 2. அனைவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான அனுபவக்கட்டுரை. இதிலுள்ள பலவிஷயங்களும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெறும் உண்மைகள்தான்.

  //நாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம்.//

  நிதர்சனமான மறுக்க இயலாத உண்மை.

  //அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன? நம் நாட்டில் இருக்கின்றதா? எங்கிருக்கின்றது?//

  இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கக்கூடும். யாராலும் அதனை அவ்வளவு சுலபமாகக் கண்டு பிடிக்க இயலாது என நினைக்கத்தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 3. மனக்குமுறல் தெரிகிறது கீதா...நானும் இப்படி உணர்வதுண்டு. நல்ல வேளை நீங்கள் இருவரும் பத்திரமாக வந்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். இங்கு ட்ரம்ப் மட்டுமல்ல, பலரும் பொதுவாக ஒரு மதத்தினரை முத்திரை குத்துகின்றனர்..உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் வன்முறையும் காழ்ப்புணர்ச்சியும் பெருகுவது கண்டால் மனம் வேதனையில் துடிக்கிறது..
  அகிம்சையா? அப்படி என்றால்? சிந்திக்க வைக்கும் பதிவு கீதா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி க்ரேஸ்! நம்மூரிலும் தான் இருக்கின்றது குறிப்பிட்ட மதத்தவரை தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் என்று சொல்லுவது. உலகம் முழுவதும் இருப்பது உண்மைதான் க்ரேஸ். வீட்டிலிருந்து தொடங்குகின்றது.....சென்னையில் வெளியில் சென்றால் தினமுமே ஏதேனும் ஒரு விதத்தில் கோபம் வருகின்றது. குறிப்பாகச் சாலையில்...

   நீக்கு
 4. //இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. //
  நிச்சயமாக ! நித்தம் எத்தனை எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன சாலை விதி மீறலால் :(

  சில நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுப்பதில் அஹிம்சாவாதியாய் மாறிவிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை .


  அதுவும் பாலியல் வன்முறைகள் போன்ற விஷயத்தில் பயந்து அமைதியாய் சென்றால் அதயே அட்வான்டேஜ் ஆக எடுக்கக்கூடும் துஷ்டர்கள் .. இவ்வுலகில் பல அசிங்கங்களை சுமந்து திரியும் perverts உள்ளார்கள் .அத்தகைய சூழலில் நம் அமைதியே நம்மை ஊனப்படுத்திவிடும் ..ஆகவே சில நேரங்களில் நியாயமான காரணங்களுக்கு அஹிம்சாவதியாக மாற வேண்டியது அவசியம் ..

  ஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட வன்முறைதான் என்னைபொருத்தவரை ஆனால மேற்கூறிய perverts விஷயத்தில் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் .

  சிந்திக்க வைக்கும் பதிவு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட வன்முறைதான் என்னைபொருத்தவரை ஆனால மேற்கூறிய perverts விஷயத்தில் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் .// உண்மை உண்மை ஏஞ்சல். ஏளனப் பார்வை கூட வன்முறைதான். அது பிறரை எவ்வளவு துன்புறுத்தும். அருமையான கருத்துகலை முன்வைத்து விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சல்..

   நீக்கு
 5. சில நேரத்தில் சினம் கொண்டு எழுவதில் தப்பே இல்லை! அருமையான சிந்திக்கும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 6. உங்கள் படபடப்பு பதிவில் தெரிகிறது. அவர்கள் தவறை மறைக்க அவசரமாக நம் மீது பழியைப் போடுவார்கள். இது போன்ற தவறுகளில் நீளும் முதல் கை தப்பு செய்தவர்களுடையதாகத்தான் இருக்கும். அதை அவர்கள் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள்.

  இப்போதே இப்படி இருக்கிறதே, கலிகாலம்... இன்னும் ஐம்பது நூறு வருடங்களில் ஊர், உலகம் எப்படி இருக்கும்? நினைக்கவா பயமாக, கவலையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஸ்ரீராம். தவறு செய்பவர்கள்தான் முதலில் குதிப்பது. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் வந்தாலும் சமநிலையாகிவிடுமோ என்றும் தோன்றுகின்றது. என்றாலும் நாமெல்லாம் இருப்போமா என்றும் தெரியவில்லையே...

   மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 7. எழுத்தளவில் இந்த அளவாவது விவாதிக்கும் அளவு இருக்கிறது என்பதை நினைத்துப் பெருமைப்படுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் நேர்மறையான கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 8. நாம ஒழுங்கா போனாலும் விடமாட்டாங்க. தப்பா வந்தாலும் கத்தி பேசி சரி பண்ண பார்ப்பாங்க. நம்ம பொறுமை போய் அகிம்சாவாதியாகிடுவோம் தான்...கீதா.
  நல்லா இன்னும் 4 அடிபோட்டு இருக்கணும் போல...
  அன்றாடம் நடக்கிற நிதர்சன உண்மை...கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் நல்லா அடி போட்டிருக்கலாம்தான் ..ஆனாலும் நமது குணம் அப்படி இல்லையே...மிக்க நன்றி உமையாள் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..உண்மைதான் நீங்கள் சொல்லுவது...

   நீக்கு
 9. மக்களிடம் பொறுமையும் பொறுப்பும் இல்லாததால்தான் இப்படி நடக்கிறது. இன்றைய கால மக்கள் இப்படி இருப்பதற்கு யார் காரணம் பெற்றோர்களா? ஆசிரியர்களா? தலைவர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தமிழா கருத்திற்கு. உண்மைதான் மக்களுக்குக் கடுகளவு கூட பொறுமை இல்லை என்பது. இன்றைய கால மக்கள் இப்படி இருப்பதற்கு முதல் காரணம் பெற்றோர்கள். அதாவது 5 வயது வரை என்று வைத்துக் கொள்ளலாமா...அடுத்து ஆசிரியர்கள்/கல்வி...தலைவர்கள் என்று சொல்லுவதை விட ஆட்சி என்று சொல்லலாமா? கடுமையான சட்டங்கள் இல்லாத ஊழல் மிக்க ஆட்சி..

   நீக்கு
 10. தினமும் யாருக்காவது இந்த நிலைகள் நடந்து கொண்டே இருக்கிறது... அது நமக்கும் நடக்கும் போது நாம் கூட பொறுமையை இழக்க வேண்டியும் இருக்கிறது... ஆனால் ஒன்று, சத்தமாக பேசிவிட்டால் தவறு செய்தவர்கள் சரியாக சென்றதாகவும் அடங்கிப் போனால் நம் மீது தவறாகவும் தான் சொல்லும் சமூகமும் கூட... அதனால் இந்த மாதிரி நேரங்களில் நாமும் ரெண்டில் ஒன்று பார்த்துவிடுவது நல்லது... நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் ஜெயசீலன் நீங்கள் சொல்லுவது. ஆனால் பழக்க தோஷம் அப்படிச் சண்டை போட வருவது இல்லை. சென்னைக்கு வந்த பிறகு கொஞ்சம் பழகிக் கொண்டாலும் மென்மையாகவே சண்டை..மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 11. உடலில் வலு இருந்தால்தான் அஹிம்சை பின்பற்ற முடியும் வலுவில்லை என்றால் ஹிம்சையை வன்முறையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்று கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம் சரிதான் சார். சண்டை போட எல்லாம் தெம்பும், மனதும் இல்லை என்பதும் பொருந்துகிறது...நேரமும் இல்லை..ஆனால் கோபம் மட்டும் வருகின்றது...ஒரு அயற்சி ஏற்படத்தான் செய்கின்றது. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 12. வணக்கம் இன்றைய மக்களின் 90 சதவீத்த்திற்கும் மேலானவர்கள் இப்படித்தான் தவறை தவறு என்ற அடையாளம் தெரியாமல் வாழ்கின்றார்கள்

  இதற்கு அடிப்படை காரணம் யாருக்கும் இறை பயமில்லை அதே நேரம் கடவுளை வணங்குபவர்கள் அதிக சதவீதம் இருக்கின்றார்கள் இதற்குதான் நான் எமது பதிவுகளில் வலியுறுத்துவது இறை பயம் இல்லாத இறை வணக்கம் அவறியமற்றது நேரவிரயம் அந்த நேரத்தில் பொரி உருண்டை வியாபாரம் செய்தாலும் 2 ரூபாய் வருமானம் வரும்.

  ஒருக்கால் கடவுள் வணக்கத்தை சமூகத்துக்காக நடித்துக் கொண்டு வாழ்கின்றார்களோ என்னவோ அதேநேரம் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதே உண்மை

  மேலும் எனது சந்தேகம் தங்களுடன் சண்டைக்கு வந்தவர் வெசயகாந்’’தூ ரச்சிகரோ ?

  தமிழ் மணம் 44

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். உண்மைதான். கில்லர்ஜி இறைவனுக்கு ஏன் பயப்பட வேண்டும்? இறைபயம் என்பது தேவையற்றது. அன்பு ஒன்றே போதும். நம் மனசாட்சி அறிவுறுத்துபவற்றிற்குப் பயந்தால் போதும். இறைவணக்கம் என்பது இறை பயத்துடன் வருவது அல்ல. சரி சரி கருத்து திசை திரும்புகின்றது எனவே...ம்ம்ம் வெசயகாந்" தூ ரச்சிகாரர் இல்லை...வேறு.....யாராக இருந்தால் என்ன...ரூல்ஸ் ரூல்ஸ்தானே!!

   மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 13. இந்த நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. சில சமயம் சண்டையாகவும் சில சமயம் சமாதானமாகவும் மாறுவதுண்டு. ஆனாலும் வன்முறையாக தெரியும் போது எதிர்ப்பு காட்டுவதே நல்லது.
  நல்ல பதிவு!
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ! பலருக்கும்..நீங்கள் சொல்லுவது சரிதான். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

   நீக்கு
 14. முதலில் விபத்திலிருந்து தப்பியதற்காக உங்களுக்கும் உங்கள் மகனாருக்கும் என் வாழ்த்துக்கள் அம்மணி!

  நல்ல பதிவு! பதிவு என்பதை விட இது வன்முறைகளின் பட்டியல்! படித்து முடித்தவுடன் "யாருமே சரியில்ல!... யாருமே ஒழுங்கில்ல!..." எனப் புலம்பிக் கொண்டே தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ளும் அம்பியின் நினைவு மனம் மோதுகிறது.

  உங்களுக்கு நடந்த அந்த வன்முறைகள் கண்டிப்பாகக் குற்றங்கள்தாம். முதல் நிகழ்வின்பொழுது உங்கள் மகன் கூட இருந்திருக்கிறார். அவர் அறவழியைப் (அகிம்சையை) பின்பற்றியே நடந்திருக்கிறார். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. நீங்கள் கூறுவது போல் அந்த நாலுகால் உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஒன்றைத் தவிர. என்னைப் பொறுத்த வரை, இப்படி உயிருக்கு உலை வைக்கும் அளவுக்குத் தவறு செய்துவிட்டு அதற்கான பழியையும் நம் மீதே போடுபவர்களை அங்கேயே இழுத்துப் போட்டு மிதிக்க வேண்டும்! அப்பொழுதுதான் அடுத்த முறை அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தவறிச் செய்தாலும் ஒழுங்காக நடந்து கொள்வார்கள். மற்றபடி, அறவழியிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நாம் நேர்மையாகவும், வாய்மையாகவும் வாழ்வது ஒன்றுதான் அறவழியிலான நல்ல வாழ்க்கை முறை. மற்றவர்களை மன்னிப்பது என்பதெல்லாம் அவர்கள் மன்னிப்புக் கேட்டால்தாம். நாமாக மன்னித்து விட்டுப் போனால் வடிவேல் ஒரு படத்தில் சொல்வது போல் "நம்ம இளிச்சவாயன்றுவாய்ங்க"!

  அப்படியானால் காந்தியடிகள் ஏன் அப்படிச் சொன்னார் என்று கேட்டீர்களானால், காந்தியடிகள் கூறியதை நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்றுதான் கூறுவேன். காந்தியடிகள் அறவழியைக் கடைப்பிடிக்கச் சொன்னது வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் அதைக் கடைப்பிடிக்கச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அப்படியே இருந்தாலும் சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழ்ந்த அவருக்கு அஃது இயலக்கூடியதாக இருக்கலாமே தவிர, நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு அஃது இயலாது.

  இது பற்றி விரைவில் உங்களிடம் அளவளாவுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி இபுஞா.சரிதான் சகோ...பல சமயங்களில் அம்பியின் நினைவு வருகின்றதுதான். அஹிம்சை பல சமயங்களில் தோற்றுத்தான் போகின்றது. அடாவடிதான் பல சமயங்களில் கையாள வேண்டி உள்ளது. இல்லை என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் இளிச்சவாயனுங்கதான்...

   இதன் மற்றுமொரு பகுதி வரும். நீங்களும் விரைவில் அளவளாவுங்கள் சகோ. எதிர்ப்பார்க்கின்றோம்.

   மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான கருத்திற்கும் விளக்கத்திற்கும்.

   நீக்கு
 15. அன்புள்ள சகோதரி,

  தினம் தோறும் நடக்கும் விபத்துகள் - விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் - அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் உயிரை விடும் மனிதர்கள் - அரசின் அலட்சியங்கள் - சாலை விதிகளைக் கடைபிடிக்காத அல்லது அலட்சியப்படுத்தும் பகுத்தறிவு இல்லாத மாக்கள் - இந்த சமுதாயத்தில்தான் நாம் உயிர் வாழ வேண்டி இருக்கிறது.

  நன்றி.

  த.ம. 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும்வ் அருகைக்கும்

   நீக்கு

 16. எல்லா இடத்திலும் வன்முறைதான். தவறு இருப்பது தெரிந்தும் வீண்வாதம் செய்வதுதான் கடுப்பாகிறது. பதிவு முழுவதும் அந்த கோபம் தெறிக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சில நாட்களாவது ஆகும்.

  எனக்கும் இங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரே சிக்னலில் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் அதே நேரத்தில் சாலையைக் கடக்கும்போது ஓட்டுபவர் வலது பக்கம் பார்த்துக்கொண்டே இடது பக்கம் திரும்பியதால் பாதி சாலையைக் கடக்கும்போதே ஓட வேண்டிய சூழல். பதட்டமாக இருந்ததில் சில மாதங்கள் அந்தப்பக்கம் போவதையே தவிர்த்தேன். ஆனால் ஓட்டியவர் நிறுத்தி ஸாரி கேட்டது வேறுவிஷயம்.

  முக்கிய வேலைகளை முடித்து பொறுமையா வாங்கோ !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அங்கெல்லாம் சாரி கேட்பார்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நிலைமையே வேறாச்சே..

   வந்தாச்சு மீண்டும்

   நீக்கு
 17. வணக்கம்
  சமூக சூழலை மிக அழகாக படம்பித்து காட்டியுள்ளீர்கள் உண்மைத்தன்மை அதிகம் சொல்லப்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 18. மிகச்சரியான குமுறல்...எனக்கு விதிப்படி சென்னையில் வாழவேண்டும்..ஆனால் இந்த வாகனப்பிரச்சனைகளால் மட்டுமே அது பிடிப்பதில்லை...ஒரு முன்று கிலோமீட்டருக்காக இரண்டுமனிநேரம் செலவழித்து பயணிப்பது..கொடுமை..நீங்கள் சொல்வது போல் கால் டாக்சி ஓட்டுனர்கள் எமனின் ஏஜண்ட் ஆகவே வண்டி ஓட்டுகிறார்கள்.. மதிப்புமிகு காவல்துறை அதிகாரிகள் முட்டுசந்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள்...
  நீங்கள் கவனமாய் இருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்மைதான் செல்வா. அதுவும் இப்போது வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது...வெளியில் செல்வதென்றாலே நடுக்கமாக ஒபோக்குவரத்து நெரிசலில்...என்ன செய்ய...பலசமயங்களில் வெறுப்பாகத்தான் இருக்கின்றது. மிக்க நன்ரி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 19. பதில்கள்
  1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 20. தங்களைப் போன்றே..எனக்கு பல அனுபவங்கள்.எதிலும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை..அதனால்..நான வண்டி ஓட்டவதையே நிறுத்திவிட்டேன்..போதாக்குறைக்கு தலைக்கவசம் போட்டுத்தான் வண்டி ஒட்ட வேண்டும் என்பதால் வண்டி உருட்டுவதைக்கூட விட்டுவிட்டேன்.பக்கத்தில் என்றால் நடை..தூரம் என்றால் பஸ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் நல்ல முடிவுதான் தங்கள் முடிவு...நடக்கும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளுங்கள்...வண்டி ஓட்டுபவர்களுக்குக் கண்ணில் பவர் இல்லை....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 21. வன்முறை .....எங்கும் எதிலும் எப்பொழுதும்....மிகவும் துயரமாக இருக்கிறது ....

  முதலில் நீங்கள் பத்திரமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி ...

  போன வருடம் நானும் ,மகனும் (6 வயது ) பள்ளிலிருந்து சாலையை கடந்து நடந்து வரும் போது ....


  அதி அதி அதி வேகமாக வந்த பைக் எங்களை இடித்து .....பறந்து விட்டது ..நடு ரோட்டில் இருவரும் ..விழுந்து ...சில நிமிடங்கள் ...ஒன்றும் புரிய வில்லை...

  ஆனால் அருகில் இருந்தோர் உதவியுடன் வீ ட்டிர்க்கு வந்தோம் ...பைக் என்னை இடித்தால் மகன் தப்பினான் ....அடுத்த ஒரு மாதம் வலியால் என்னால் பல வேலை செய்ய இயலவில்லை ....அது கூட பரவாயில்லை ...

  மகனை இடித்திருந்தால் என்ற எண்ணமே பல நாள் என் தூக்கத்தை விரட்டியது ...

  ஆனால் எங்களை இடித்தவரும் விழுந்திருந்தால் ......அவரின் நிலைமை ....ஏன் இவர்கள் இப்படி என்று புரிய வில்லை ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனு நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வேதனையான ஒன்று தப்பித்தீர்களே வலியுடன். குழந்தையை நினைத்துப் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றது. நிங்கள் ஓட்டியவரின் நிலையிலிருந்தும் சிந்தித்திருப்பது உங்கள் நல்ல மனதைக் காட்டுகின்றது! நம்மூரில் இன்னும் போக்குவரத்து விதிமுறைகள் சட்டம் வலுவாக்கப்பட வேண்டும்...நாம் கவனமாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டிய நிலைமை. பார்த்துக் கொள்ளுங்கள் கவனமாக மிகமிகக் கவனமாக இருங்கள் அனு...

   நீக்கு
  2. மிகவும் நன்றி...உங்கள் அன்பிற்கு ....

   இப்பொழுது எல்லாம் இன்னும் கவனமாகவே கடக்கிறோம்..

   முன்பு சாலையை கடக்கும் போதே மனதில் ஒரு பயம் ஏற்படும் ....ஆனால் இப்பொழுது அது இல்லை ...இதுவும் கடந்து போகும் என்று சொல்லியே ..என் மனதில் இருந்து பயதே விரட்டினேன் ....

   நீக்கு
 22. வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சற்றும் பொறுமை இருப்பதில்லை. முன் செல்லுங்கள் வாகனங்களுக்காண இடைவெளியை பின்பற்றுவதில்லை முட்டிக் கொண்டுதான் நிற்பார்கள்.சற்று கூட பின் செல்ல முடியாது. வலப்புறமும் சாலையை ஆக்கிரமித்து எதிர்பக்கம் வரும் வாகனத்தையும் வரவிடாமல் செய்து ட்ராபிக் ஜாம் ஆக்கி விடுகிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வெகு தொலைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முரளிதரன் அதேதான் நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் தினமும் நடக்கின்றதுதான். வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலை ஆஹா இதைத்தான் நான் தினமும் நினைத்துக் கொள்வேன் ...மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 23. சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும். சென்ற 10 நாட்களாய் நேரமின்மையால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க முடியவில்லை. பொருத்துக் கொள்ளுங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு