ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்

கனகதுர்கா கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் நாங்கள் வட்லமுடிக்கு வந்துவிட்டோம்.  மறுநாள் காலை வட்லமுடியிலிருந்து தெனாலி சென்று அங்கு ரயில்நிலையத்தின் அருகிலிருந்த உணவகத்தில் காலை உணவு உண்டுவிட்டு (அந்த உணவகத்தில் இருந்த புத்தர் சிலை, மயில் சிலையை எடுத்த படங்கள்தான் இதற்கு முந்தையப் பதிவில் கொடுத்திருந்தேன்). தெனாலியிலிருந்து விஜயவாடா சென்று, விஜயவாடா பேருந்து நிலையத்திலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் அமராவதியைச் சென்றடைந்தோம். பேருந்துகள் மங்களகிரி வழியாகவும் செல்லுகின்றன, ஊண்டவல்லி வழியாகவும் செல்லுகின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் பேருந்துகள் இருக்கின்றன.

நாங்கள் ஊண்டவல்லி வழி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பலகிராமங்களின் வழி செல்லுவதால் 1 ½ மணி நேரம் ஆகின்றது. நம் வண்டியில் செல்லுவதென்றால் 50 நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். அமராவதியிலிருந்து வரும் வழியில் ஊண்டவல்லி குகைகளைப் (இது விஜயவாடாவிலிருந்து 6 கிமீ தூரம்தான்.)பார்த்துவிட்டு வந்தோம்.  எனவே முதலில் அமராவதி.


செல்லும் வழியெல்லாம் சிறு சிறு கிராமங்கள், வயல்களில், காலிஃப்ளவர், முருங்கை, பஞ்சு, பயறு, சிறு தானியங்கள் என்று வளம் கொழிக்கின்றது. ஆனால், அமராவதி இப்போது ஆந்திராவின்/சீமாந்திராவின் தலைநகரமாகப் போவதால் இந்த ஊரும் அழிவின் ஆரம்பத்தில் என்று சொல்லலாம். எங்களுடன் பேருந்தில் வந்த அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னதைக் கேட்ட போது மனம் மிகவும் வருந்திவிட்டது. தலைநகரமாகவிருப்பதால், பல விளை நிலங்களை அரசு கையகப்படுத்திவிட்டதாம். விவசாயிகளுக்கு அதற்கான பணத்தைக் கொடுக்கவில்லையாம். ஆனால், அவரது கவலை அதுவல்ல. எல்லா விளைநிலங்களும் இப்படிப் போய்விட்டால் அந்த விவசாயிகள் இனி என்ன செய்வார்கள் என்றும், ஆந்திராவின் முதன்மையான வளம் மிக்க விவசாயம் இறக்கிறது என்றும் மிகவும் வருந்தினார்.

முந்தைய பதிவிற்குக் குண்டூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் மிக வருத்தத்துடன் இட்ட பின்னூட்டக் கருத்தை இங்கு தருகின்றேன். அவர் சொல்லியதையேதான் பேருந்தில் வந்தவரும் சொல்லி வருந்தினார்.

வணக்கம் திரு கீதா அவர்களே, எங்களுடைய ஊரை அழகாக காண்பித்ததற்கு, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சோகம் நிகழலாம் ஆந்திராவின் தலைநகர் தேடலில் விஜயவாட விற்கும் குண்டுருக்கு நடுவில் உள்ள அமராவதியை தேர்ந்தெடுத்தான் விளைவு சுமார் 55000 ஏக்கர் பச்சை பலேன்றுருக்க்ம் விலை நிலங்களை அரசு முற்றிலும் அழிதொழித்துள்ளது, இதுமட்டுமின்றி தலைநகருக்கு தேவையான மிகப்பெரிய விமானத்தளம் மற்றும் விளையாட்டுத்திடல் தொழிற்ச்சாலைகள் மற்றும் 45மாடி கட்டிடங்கள் 150க்கும் மேல் வர உள்ளது, இதற்க்கு தேவையான 30000 ஏக்கர் கையகபடுத்தும் வேளையில் அரசு இரங்கிஉல்லது நன்றி - சுரேந்திரன், குண்டூர்.

ஆம், பிரதமர் மோடி அதற்கு அடிக்கல்லும் நாட்டிவிட்டாரே!
படம் இணையத்திலிருந்து. ஆந்திராவின் புதிய தலைநகரம்...சிங்கப்பூரைப் போன்று என்று ஆந்திர முதல்வர் சொல்லியிருக்கிறார்.
சரி எனக்கு ஒரு சந்தேகம். ஏற்கனவே குண்டூரும், விஜயவாடாவும் நல்ல நிலையில் இருக்கும் போது இவற்றில் ஒன்றைத் தலைநகரமாகக் கொள்ளாமல் ஏன் அழகான, அமைதியான, வளமான இந்த ஊரைத் தலைநகரமாக்குகின்றார்கள்? சரி ஒரு வரலாற்றுத் தகவல். கி.பி. முதலாம் நூற்றாண்டுவரை அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்ததாம். அப்போது இது தன்யகட்டகா என்றும் தரணிக்கொட்டா என்றும் அழைக்கப்பட்டதாம்.  பின்னர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து, 1800 வரை கலாச்சாரத் தலைநகரமாக இருந்ததாம்.

அமராவதி, கிருஷ்ணா நதியின் கிழக்குக்கரையோரம் அமைந்துள்ள அழகான சிறிய ஊர். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையோரம் என்றும் சொல்லுகின்றார்கள். அது எனக்குச் சற்றுப் புரியவில்லை. சுவர்ணமுகி ஆறு கிருஷ்ணாவின் கிளை நதியாக இருக்குமோ? இங்கு புகழ்வாய்ந்த அமரேஸ்வரர்/அமரலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அதனால்தான் இந்த ஊர் அமராவதி என்ற பெயர் பெற்றது என்று சொல்லப்படுகின்றது. அமரேஷ்வரர் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அமராவதிக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் புத்தஸ்தூபி மற்றும் இரு அருங்காட்சியகங்கள்.

அமராவதியில்தான் புத்தர், காலச்சக்ரா எனும் போதனைகளை உபதேசம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் எலும்புத் துண்டை மண்ணில் புதைத்து அதன் மீதுதான் புத்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளதாம்.  இதுதான் இந்தியாவிலுள்ள புத்த ஸ்தூபிகளில் பெரிதாம். அசோகர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் வரலாறு சொல்லுகின்றது. பின்னர் புத்தமதம் அழியும் நேரத்தில் இந்த ஸ்தூபி மண்ணில் புதையுண்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த வெளிநாட்டு அறிஞர்களில் ஒருவரான “கோலின் மெக்கன்சி (Colin Mackenzie) என்பவர்தான் இந்த மஹாசைத்யா/மஹா ஸ்தூபியைக் கண்டுபிடித்துத் தோண்டி எடுத்துப் புதிப்பித்தார்.

இதுதான் நாங்கள் செல்ல முடியாத அருங்காட்சியகம்-வெள்ளி-விடுமுறை. அதனால் வெளியிலிருந்து எடுத்தப் புகைப்படம்

புத்த ஸ்தூபிக்கும், அருங்காட்சியகத்திற்கும் சென்றோம். ஒரு அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தின் எதிரிலேயே இருக்கின்றது. ஆந்திரா சுற்றுலாத்துறை வளாகத்திற்குள். அங்கிருந்து சற்று தூரத்தில் (நடக்கும் தூரம்தான்) ஸ்தூபியும், மற்றொரு அருங்காட்சியகமும் உள்ளது. நுழைவுக்கட்டணம் ரூ 5. இந்த அருங்காட்சியகத்தில்  நாணயங்கள், புத்தரின் விக்ரகங்கள், ஸ்தூபம் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் பார்க்க முடியவில்லை. நாங்கள் சென்ற தினம் டிசம்பர் 25, கிறித்துமஸ், வெள்ளிக்கிழமை. இந்த அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை மட்டும் மூடப்பட்டிருக்கும்.




செங்கற்களால் ஆன ஸ்தூபி இருக்கும் வளாகத்திற்குள் நுழைய ரூ 5 கட்டணம். பெரிய வளாகமாகவும், புல்தரைகளுடனும், பூங்காவுடனும் இருக்கின்றது.  நடுவில் ஸ்தூபி வட்ட வடிவில் இருக்கின்றது. இதைச் சுற்றி பிரதட்சிணம் செய்வதற்குப் பாதை உள்ளது.  நான்கு புறமும் வாயில்கள் இருந்திருக்கின்றது முன்பு.  இப்போது அவை இருந்ததற்கான அடையாளம் மட்டுமே. அங்கு ஒருவர் (ஆசிரியர்? கைடு?) ஸ்தூபி பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சில மாணவிகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.  நிறைய பெரிய நெல்லிக்காய் மரங்கள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. நாங்களும் பறித்துச் சாப்பிட்டோம். விடுவோமா என்ன?! இங்குப் புகைப்படங்கள் எடுத்தோம் மொபைலில். காமெரா என்றால் கட்டணம் உண்டு ரூ 20.

தியான நிலை புத்தர், தியானமண்டபம்-படம்-இணையத்திலிருந்து

இந்த ஸ்தூபி வளாகத்தின் அருகில் தியான நிலையில் இருக்கும் மிகப் பெரிய புத்தர் சிலையும், தியான மண்டபமும் உள்ளது. அதன் அருகில் ஆறு ஓடுகின்றது. அழகான வேலைப்படுகளுடன் இருக்கின்றது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியே இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மொபைலில் சரியாக வராததால் இங்கு இணையத்திலிருந்து......


சுற்றிய களைப்பா? கொஞ்சம் அமர்ந்துவிட்டு அடுத்து சுற்றுலாத்துறை வளாகத்திற்குள் இருந்த அருங்காட்சியகத்திற்குள் செல்வோம் சரியா. காத்திருப்பீர்கள்தானே?!.

-------கீதா



27 கருத்துகள்:

  1. சுற்றுலா பயணக்கட்டுரை + படத்தேர்வுகள் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் எங்களைத் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு. உங்களைப் போன்றோரின் ஊக்கமிகு வார்த்தைகள்தான் மனதிற்கு மிகவும் எனர்ஜட்டிக்காக உள்ளது. தவறுகள் இருந்தாலும் சுக்கிக்காட்டிடத் தயக்கம் வேண்டாம். எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சார்.

      மிக்க நன்றி

      நீக்கு
  2. ஆந்திராவின் தலைநகரை மேம்படுத்தவேண்டி, லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார். ஆமாம் சார் அன்று என்னுடன் பயணித்தவர் சொல்லிக் கொண்டு வந்த போது மிகவும் வருத்தாமாகத்தான் இருந்தது.

      நீக்கு
  3. நான் பார்க்க ஆசைப்பட்ட, இதுவரை பார்க்காத அமராவதிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புதிய தலைநகரம் என்று கூறி உருவாக்கப்படுவதெல்லாம் அரசியலே. இருப்பதைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் போதுமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உண்மையாக நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன் ஐயா. இவற்றை எல்லாம் பார்த்த போது. உங்களுக்கு நிறைய உதவியாக இருக்கும் என்றும் தோன்றியது. உங்கள் ஆராய்ச்சிக்கும் ஆர்வத்திற்கும் சேர்த்து. இன்னும் அடுத்த பதிவு காட்சியகம் பற்றி விரிவாக. மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  4. அழகிய இடங்கள் என்பதைப் படங்கள் பறைசாற்றுகின்றன. விளை நிலங்கள் அழிக்கப் படுவது வேதனை தரும் செய்தி.

    புத்தர் சிலையின் பிரம்மாண்டம் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அழகான இடங்கள்! புத்தர் ரொமபப் பெரியவர்! பிரம்மாண்டம்தான். மொபைலில் எடுக்க முடியவில்லை அதனால்தான் இணையத்திலிருந்து...

      மிக்க நன்றி

      நீக்கு
  5. தங்களால் அமராவதியைக் கண்டேன்
    நன்றி சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  6. 55,000 ஏக்கர் விளைநிலங்களா..?! படிக்கும்போதே மனம் பதறுகிறது. ஏன் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னதான் நகரை சிங்கப்பூராக்கினாலும் விளைநிலங்கள் இல்லையென்றால் மனிதன் உணவுக்கு எங்கே போவான்.

    மற்றபடி அருமையான பயணக்கட்டுரை. மகாபுத்தரும் அருமை.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் செந்தில் சகோ! நீங்கள் நேரில் பார்க்க வேண்டும் விவசாய நிலங்களை. அசந்துவிடுவீர்கள். நீங்கள்தான் சமீபத்தில் ஆந்திராவில் விவசாயிகளைச் சந்தித்தீர்களே! ம்ம்ம் அவர்கள் அது பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ...

      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  7. பதில்கள்
    1. அழகிய விளக்கங்கள் நன்று விளை நிலங்களை காக்க வேண்டிய அரசே அழித்தால் யாரை குறை சொல்வது ? இதற்கு மோடி அடிக்கல் நாட்டினார் கேவலமான நிலையில்தான் இந்த இருக்கின்றது வீண் வாதமாக இந்தியா வல்லரசு என்று பீற்றிக்கொள்கிறோம்.

      நீக்கு
    2. வாங்க கில்லர்ஜி! வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வல்லரசு?! எந்த லோகத்துல இருக்கீங்க..??!! ஹஹஹ்

      நீக்கு
  8. பயணங்கள் தொடரட்டும் தோழர்

    புதிய தலைநகரின் படத்தில் சாலைகள் சிறிதாக இருகின்றவே

    நிகில் குறித்து சில செய்திகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கஸ்தூரி. அது ஜஸ்ட் மினியேச்சர் மாடல்தானே கஸ்தூரி...வருகின்றோம் தங்கள் பதிவிற்கு...மிக்க நன்றி

      நீக்கு
  9. தங்களின் சுய லாபத்திற்காக அரசியல்வாதிகள் விவசாய நிலங்களை அழிப்பது வேதனை! அழகான படங்களுடன் தகவல்களுடன் பயணக்கட்டுரை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அருமையான சுற்றுலாப் பதிவு
    சிறந்த தகவலாக
    அமராவதி பற்றியும்
    புத்தர் ஸ்தூபி பற்றியும்
    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. கடந்தவை,நடந்தவை,நடப்படை,நடக்ககூடியவைகளை பயணக்கட்டுரையில் இணைத்து சமுதாயத்துக்குரிய அக்கறையில் பல கேள்விகளோடு பதியும் உங்களுக்கு என் சல்யூட் கீதாமா. அரசியல் வாதிகள் நாளை என்பதை நினைப்பதில்லையோ என்னமோ? அல்லது கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என நினைக்கின்றார்களோ? உங்கள் ஆதங்கள் நியாயமே!

    அடுத்து தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பயணக்கட்டுரை...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் திரு கீதா அவர்களே, அமராவதியில் உள்ளது கிருஷ்ணா நதியே சொர்ணமுகி ஆறு என்பது நெல்லூரில் இருப்பது அவ்வளவே நன்றி சுரேந்திரன் குண்டூர்

    பதிலளிநீக்கு
  14. அழகான விளைநிலங்களை ... கெடுக்கிறார்கள்....அறிந்தே...என்ன சொல்வது...? பயணக்கட்டுரை அருமையாய் போகிறது கீதா...
    தம +1

    பதிலளிநீக்கு
  15. கிபி ஒன்றாம் ஆண்டு தலைநகரமாக இருந்த ஊர் இன்று வளமாக அழகாக இருக்கிறது..ஆனால் நாம் தலைநகரமாக்கி அழிக்கப் போகிறோமே!! :( இன்னும் சில ஆண்டுகள் கழித்து வரும் தலைமுறையினர் தூற்றுவார்கள்!!
    எவ்வளவு விளைநிலங்கள்!! சுற்றிலும் பாடம் கற்க நிறைய உதாரணங்கள் இருந்தாலும் அரசு ஏன் இப்படிச் செய்கிறது? வருத்தமாக இருக்கிறது கீதா..
    புத்தர் அழகு.

    பதிலளிநீக்கு