திங்கள், 11 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம்3 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகதுர்கா கோயில்


ப்ரகாசம் அணை கிருஷ்ணா நதியின் மீது கட்டப்பட்ட மிகப் பெரிய அணை. மிக மிக அழகாக உள்ளது. இரவுக் காட்சியும் மிக அழகு. இதன் நீளம் 2 ½ கிமீ. இதன் மேல் சாலையும் இருக்கின்றது. இது 76 தூண்களைக் கொண்டுள்ளது. இதில் 70 தூண்கள் குண்டூர் மாவட்டத்திலும், 6 தூண்கள் கிருஷ்ணா மாவட்டத்திலும் இருக்கின்றது. அதாவது மாவட்ட எல்லைப் பிரிவு! இதன் மிகப் பெரிய வெற்றியே ஆந்திராவின் விவசாயத்தை வெற்றிகரமாக வைத்திருப்பதுதான். இந்த விவசாயத்தின் நிகழவிருக்கும் சோகக்கதை பின்னர் சொல்லுகின்றேன். இது மூன்று கால்வாய்களாக ஓடுகின்றது. இதன் நீர்தான் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் வருகின்றது. (இந்தப் பக்கின்ங்ஹாம் கால்வாய்தான் சென்னைக்கும் வருகின்றது கிருஷ்ணா, கோதாவரி நீரைச் சுமந்து கொண்டு. அப்படியிருக்க ஏன் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வரத் தனியாகக் கால்வாய் வெட்டிக் கொண்டு வந்தார்கள் என்றக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.)


இந்தப் ப்ரகாசம் அணையின் அருகில் படித்துறையும், நான்கு ஐந்து படிகள் வரை நீர் இருக்க படித்துறையைச் சுற்றி கம்பிகளால் ஆனத் தடுப்பும் இருக்கின்றது. அங்கு மக்கள் குளிக்கின்றார்கள். நீர் அதிகம் ஆகும் போது இன்னும் படிகள் மேல் நீர் ஏறலாம். அப்போது குளிக்க அனுமதிப்பார்களா தெரியவில்லை. இந்தப் படிகளின் மேல் நீளமாகக் குழாய்கள் கட்டி ஷவர்கள் போன்று நீர் விழுகின்றது. அதிலும் மக்கள் குளிக்கின்றார்கள். இந்தக் கரையில் தான் பவானித் தீவிற்குச் செல்ல படகுத் துறையும், பயணச் சீட்டு வாங்கும் கவுண்டரும் உள்ளது. இந்தப் படித்துறையிலிருந்து கனகதுர்கா கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் ஆரம்பமும். கோயிலிற்கு, பவானித் தீவிற்குச் சென்று விட்டு வருவோமா.
பவானித் தீவு என்பது கிருஷ்ணா நதியின் மறு கரையின் அருகில் இருக்கும் தீவு.  இது நதியின் நடுவில் இருக்கும் பெரிய தீவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. படகு காலை 8 மணியிலிருந்து, இரவு 9 மணி வரை என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் 9 மணி வரை இருப்பதில்லையாம். கூட்டத்தைப் பொருத்து போலும். படகில் சென்று வர ஒருவருக்கு ரூ 50. பவானித் தீவு குறிப்பாக சுற்றுலாவிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா சுற்றுலாத் துறையின் கீழ் வருகின்றது. படகில் செல்ல 15-20 நிமிடங்கள். பவானித் தீவில் நிறைய கம்பெனிகள் சில கான்ஃபெரன்ஸ் சந்திப்புகள் நிகழ்வுகள் நடத்துகின்றார்களாம். அதற்கான ஒரு கான்ஃபெரன்ஸ் ஹால் 60 பேர் அமர்வதற்கான இருக்கை வசதிகளுடன் இருக்கின்றது.


24 காட்டேஜுகள் இருக்கின்றன, இருபடுக்கைகள் கொண்டதாக. 4 மரத்தின் மீதான வீடுகள்-அப்படிச் சொல்லப்பட்டாலும் காட்டில் இருப்பது போன்ற மரத்தின் மீதான வீடுகள் போல் இல்லை. கீழிருந்து மரத்தினால் தூண்கள் வைத்து அதன் மேல் மரத்தினால் வீடு போன்ற ரூம்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இது மரத்தின் மேல் இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவ்வளவே. இவையும் இரு படுக்கைகள் கொண்டவையாக உள்ளன. நிறைய புள்வெளிகளும், மரங்களும், பூச்செடிகளுடனான பூங்கா போன்றும், நடைபாதைகளும் உள்ளன. நீச்சல் குளம் இருக்கின்றது. ஏரோபிக்ஸ்-கயிற்றின் மீது நடப்பது போன்ற சாகச விளையாட்டுகளுக்கான வசதிகள் இருக்கின்றன. 
இந்தத் தீவிலிருந்து படகுச் சவாரிகளும் இருக்கின்றன. எல்லாமே துட்டுதான். 
ஆந்திரா சுற்றுலாத் துறையின் உணவகம் இருக்கின்றது.  


அடுத்து கனகதுர்கா கோயில். மிக மிக அழகான கனகதுர்கையின் வாசம். மறுபெயர் பவானி என்பதால் கோயிலின் அருகில் மேலே சொன்னத் தீவு இருப்பதால் பவானி என்ற பெயர் பெற்றது. கனகதுர்கை கோயில் இந்த்ரகிலாத்ரி எனும் மலையின் மீது இருக்கின்றது. மலை பெரிதாக இல்லை என்றாலும் மரங்களுடன் அழகாக இருக்கின்றது. கோயிலிற்குப் படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம், மலை மீது வண்டிகளிலும் செல்லலாம், மலையடிவாரத்திலிருந்து பேருந்துகளும் இருக்கின்றன. நாங்கள் படிக்கட்டு வழியாகச் சென்றோம். படிக்கட்டுகள் சுமார் 200-250 இருக்கும்.
படம் இணையத்திலிருந்து.  உள்ளே மொபைல், காமேரா அனுமதியில்லை
பல கதைகள் சொல்லப்படுகின்றன. அர்ஜுனன் துர்கையை வேண்டி இந்தக் குன்றின் மீது தவம் செய்து பாசுபதாஸ்திரத்தப் பெற்றதாகவும் அதனால் அருச்சுனன் துர்கைக்குக் கோயில் எழுப்பியதாகவும் ஒரு கதை. துர்கை சுயம்புவாக வந்ததாகவும் அதானால் மிகவும் சக்தி வாய்ந்தவளாகவும் சொல்லப்படுகின்றது. ஆதிசங்கரர் இந்தக் கோயிலில் தரிசனம் செய்ததாகவும் ஸ்ரீசக்கரத்தை ஸ்தாபித்ததாகவும் சொல்லுகின்றார்கள்.

படிகள் ஏறியது பாறைப் பரப்பில் ஏற வேண்டும். அங்கு கார்கள், பேருந்துகள் நிறுத்துமிடம் இருக்கின்றது வலது புறத்தில். இடது புறமாக செருப்புகள் வைக்கும் இடம். பின்னர் கோயிலுக்குள் நுழைந்தால் திருப்பதிக் கோயில் போன்று கம்பிகளுக்கிடையில் நடந்து செல்ல வேண்டும். பல இடங்களில் வளைந்து வளைந்து சென்று படிக்கட்டுகள் இறங்கிச் சென்று ஏறி என்று இறுதியில் கனகதுர்கா சன்னிதிக்குச் சென்றடையலாம். தர்ம தரிசனம், ஸ்பெஷல் தர்சனம் என்றும் இருக்கின்றது.  நாங்கள் சென்ற போது கூட்டமே இல்லாததால், நாங்கள் ஸ்பெஷல் தர்சனம் செல்லவில்லை. துர்கை சன்னிதியின் எதிரே மரத்தின் அடியில் ஆஞ்சநேயர் சன்னிதி. கொடிமரம், நிறைய இடமும் இருக்கின்றது. அதற்கும் வெளியே வந்தால் திறந்தவெளி இருக்கின்றது. அங்கிருந்து விஜயவாடா அழகாகத் தெரிகின்றது.


துர்கை சன்னிதியின் இடது புறத்தில் நுழைந்தால் அங்கு பிரசாதம் கவுண்டர் உள்ளது லட்டு, புளியோதரை விற்கின்றார்கள். புளியோதரை ஒரு தொன்னை அளவு-150 கிராம் இருக்கலாம் ரூ 5 தான். அருகில் குடிநீர் வசதியும் இருக்கின்றது. அதற்கு அடுத்தாற் போல் நுழைந்து படிகள் ஏறினால் முருகன் சன்னிதியும், கீழே மல்லேஸ்வர சன்னிதியும் (சிவபெருமான்) தில்லைநாதனைப் போலவும்), பிள்ளையாரும் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு முறை சென்றால்தான் சரியாக எங்கு எந்த சன்னிதி என்று சரியாகச் சொல்ல முடியும். கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது. இப்போது மீண்டும் மனதில் நினைத்துச் சொல்ல. எல்லா சன்னிதிகளும் ஜகஜோதியாக அழகாக இருக்கின்றது. கோயில் பெரியதாக இரு மலைகளையும் சேர்த்து இருக்கின்றது. துர்கை அழகோ அழகு!!! நன்றாகத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படிகள் இறங்கி கீழே வந்தோம். படிகள் இருக்கும் இடத்திலும், கீழேயும் நிறைய கடைகள். துர்கையின் படங்கள், வளையல்கள், பிரசாதக் கூடைகள் என்று வித விதமாக.

கோயிலின் நேரம் திங்களிலிருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை காலை 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரையும், வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமையில் காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும், இந்த நாட்களில் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இந்தக் கோயிலிற்குள் அதாவது துர்கையைத் தரிசிக்க அனுமதியில்லை. (வேறு ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் வெங்கட்ஜி சொல்லலாம்.)


அடுத்து நாளை நாம் அமராவதிக்குச் சென்று புத்த அருங்காட்சியகத்தையும், அமராவதிக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஊண்டவல்லிக் குகைகளையும் பார்ப்போமா. (ஊண்டவல்லி என்றுதான் சொல்லுகின்றார்கள். நாங்கள் உண்டவல்லி என்று பேருந்து நிலையத்தில் சொன்ன போது அவர்களுக்குப் புரியவில்லை!) தொடர்கின்றேன். 


---கீதா


38 கருத்துகள்:

 1. அழகழகான படங்களுடன் புனிதப்பயணக்கட்டுரை மிக அருமையாக உள்ளது. மரத்தின் மீது வீடுகள் பார்க்க வியப்பாக உள்ளது. கீழிருந்து ஐந்தாம் படமும் எட்டாம் படமும் மிகவும் அற்புதமாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். இவை மரத்தின் மீது அல்ல மரத்தின் பக்கத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. காடுகளில் மரத்தின் மீதே வீடுகள் இருக்கின்றன. ட்ரீஹவுஸ் என்று. இங்குள்ளவை நவீனமானவை.

   நீக்கு
 2. அருமையான படங்களுடன் பயண விபரங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி தங்களின் வருகைக்கும்.கருத்திற்கும்

   நீக்கு
 3. அழகிய இடங்கள். அதானாலேயே அழகிய படங்கள். மரவீடுகளில் தங்கிப் பார்க்க ஆசை. ஆமாம், உங்கள் பயணம் எதைக் குறித்து? பக்கிங்க்ஹாம் கால்வாய் வழியாகவே நடந்து சென்று விட்டீர்களா? கோவில் சுற்றா? லொகேஷன் பார்க்கவா?

  அப்பாடி தமிழ்மணம் வந்து விட்டது. வாக்கிட்டு விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ ஸ்ரீராம் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம். பக்கிங்ஹாம் கால்வாய் வழி போக ஆசைதான் ஆனால் இடையில் நம்ம மக்கள் பல இடங்களில் நாசம் பண்ணி வைத்திருக்கின்றார்களே. அரசும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆந்திராவில் கொஞ்சமேனும் கண்டுகொள்கின்றார்கள்.

   மரவீடுகள் இந்தத் தீவில் மற்ற ரெசார்ட்டுகள் போல மேலே எழுப்பிக் கட்டியிருக்கின்றார்கள். வளைவாக ஏறுவதற்குப் படிகள் கட்டி. அவ்வளவே. உண்மையான மரவீட்டில் தங்க வேண்டும் என்றால் காடுகளில் உள்ள மரவீடுகளில் வன இலாகாவின் எக்கோ டூரைசம்- பசுமைவழிச் சுற்றுலா அனுமதி பெற்று தங்கலாம். அங்கு ஏணிகள் கயிற்றில் இருக்கும். நாம் ஏறியதும் அதைச்க் சுருட்டிக் கட்டிவிடுவார்கள் வனவிலங்குகள் ஏறிவிடாமல் இருக்க. அங்கு கட்டில் எல்லாம் இருக்காது. கரத்தின் நடுவில் போடப்பட்ட தளம் கூரை என்று மிக மிக இயற்கையாக இருக்கும். அதன் அனுபவம் வேறு. நம்முடன் இரண்டு கைடுகள் வருவார்கள். உணவு சிம்பிளாக எடுத்துக் கொண்டு, படுக்கை எடுத்துக் கொண்டு. அதில் கழிவறை எல்லாம் இருக்காது. இயற்கையுடன் தான். பவானித் தீவில் இது முழுக்க முழுக்க ஒரு ஹோட்டல் அறை போன்று மெத்தையுடன் இருக்கும். எனவே இங்குள்ளவற்றில் ஆர்வம் இல்லை. சுற்றுலா வருபவர்களைக் கவர்வதற்காக. நாங்கள் சும்மா சுற்றிப் பார்க்க மட்டுமே சென்றோம்.

   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 4. அழகான படங்கள்
  அற்புதமான விளக்கங்கள்
  நன்றி சகோதரியாரே
  தொடர்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 5. நல்ல பயணம்
  படங்கள் அருமை..
  அப்புறம் தம +
  பக்கிங்க்ஹாம் ஒருவேளை மாசடைந்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் பக்கிங்க்ஹாம் இங்குதான் ரொமபவே மாசு. அங்கு பரவாயில்லை நன்றாகவே இருக்கின்றது.

   நீக்கு
 6. அருமையான பயணத் தொடர்
  படங்களும் இடங்களும்
  நேரில் கண்டது போல
  அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 7. படங்கள் அனைத்தும் அழகு நல்லதொரு பயணத்துடன் வருகிறேன் பாலத்தின் தூண்களில்கூட இரண்டு மாவட்டங்கள் பங்கு இருப்பது ஒருவகையில் நன்மையே.. தொடர்கிறேன் நன்றி
  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 8. படங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டேன்!அதுதானே என்னால் முடியும்?அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

   நீக்கு
 9. வணக்கம்
  அண்ணா

  அனைத்து தகவலும் பிரமிக்கவைக்கிறது... படித்து மகிழ்ந்தேன் தேடலுக்கு நன்றி த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 10. பயணத் தொடரில் கலக்குறீங்க கீத்ஸ். கனகதுர்கா கொள்ளை கொள்கிறாள். இனியபுத்தாண்டு வாழ்த்துகள் கீத்ஸ் & துளசி சகோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தேனு சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 11. அத்தனையும் ரசித்தேன் கீதாமா!
  அந்த வீடுகள் காட்டின் நடுவே இருப்பதினை போல் இருப்பதை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது.

  பயணத்தொடர் படங்களோடு கலக்கல்
  தமிழ் மண வாக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நிஷா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 12. பதில்கள்
  1. மிக்க நன்றி மாதேவி தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

   நீக்கு
 13. பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 14. விஜயவாடா கனக துர்கா கோவிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும் என நிறைய நாள் ஆசை இருக்கிறது இப்போது உங்களுடன் வந்து தரிசித்து விட்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கலாம். தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போய் வாருங்கள் உமையாள் அவ்வளவு அழகு துர்கை. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 15. வணக்கம் திரு கீதா அவர்களே, எங்களுடைய ஊரை அழகாக காண்பித்ததற்கு, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சோகம் நிகழலாம் ஆந்திராவின் தலைநகர் தேடலில் விஜயவாட விற்கும் குண்டுருக்கு நடுவில் உள்ள அமராவதியை தேர்ந்தெடுத்தான் விளைவு சுமார் 55000 ஏக்கர் பச்சை பலேன்றுருக்க்ம் விலை நிலங்களை அரசு முற்றிலும் அழிதொழித்துள்ளது, இதுமட்டுமின்றி தலைநகருக்கு தேவையான மிகப்பெரிய விமானத்தளம் மற்றும் விளையாட்டுத்திடல் தொழிற்ச்சாலைகள் மற்றும் 45மாடி கட்டிடங்கள் 150க்கும் மேல் வர உள்ளது, இதற்க்கு தேவையான 30000 ஏக்கர் கையகபடுத்தும் வேளையில் அரசு இரங்கிஉல்லது நன்றி சுரேந்திரன், குண்டூர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சுரேந்திரன். நன்றி தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் நீங்கள் சொல்லுவது சரியே. எதனால் இப்படி குண்டூரும் விஜயவாடாவும் இருக்க இதைத் தேர்ந்தெடுத்தார்களோ. அதைப் பற்றி எனது அடுத்த பதிவில் குறிப்பிடுவதாக இருக்கின்றேன். நீங்கள் சொல்லியிருக்கும் இந்தத் தகவல் உட்பட நான் அன்று பேருந்தில் பயணிக்கும் போது ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். எனகு மனம் மிகவும் வருந்தியது ஏனென்றால் செல்லும் வழியெல்லாம் வயல்கள், காய்கறிகள் அருமை அருமை....மிக்க நன்றி தங்களின் விரிவான கருத்திற்கு.

   நீக்கு
  2. ஓ இதுதான் விசயமா? வேதனையாக இருக்கிறது..இன்றும் கூட இப்படிச் செய்தால் என்ன கொடுமை!

   நீக்கு
 16. அருமையான ஸ்தலம்! படங்கள் சிறப்பு! தகவல்களும் ஆவலைத் தூண்டுகின்றன! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 17. பயணத்தொடரா? முதலில் இருந்து படித்துவிட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. திரு சுரேந்திரனின் கருத்து மனதை வேதனைப்பட வைத்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்றால் பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை கனகதுர்காவைப் பார்க்க முடியாது என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது. அன்று தானே நிறைய பக்தர்கள் வருவார்கள்? அற்புதமான பயணம். இதுவரை போகாத இடம் வேறு. ஆகவே சுவாரசியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை ஏன் கேட்கின்றீர்கள். என்னுடன் பயணத்தில் பேசிக்கொண்டுவந்த அந்த ஊரைச் சேர்ந்த நபரும் அதைத்தான் சொல்லிக் கொண்டுவந்தார். வேதனையாக இருந்தது.
   ஆமாம் சகோ அந்த இரு நாட்களிலும். திருப்பதியில் கூட ஒரு தினம் அப்படி தரிசனம் சில மணி நேரங்கள் இல்லாமல் இருக்கும் இல்லையோ? அது போன்று இருக்கும்.

   முடிந்தால் சென்று வாருங்கள். நீங்கள் மிகவும் மகிழ்வீர்கள். மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்....

   நீக்கு
 19. பயணக் கட்டுரையும் படங்களும் மிக்க அழகு! 200-250 படிகள் ஏறி விட்டீர்களா!!! :)
  நிறைந்தோடும் நதி பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆந்திராவில் விவசாயம் காக்கிறார்கள் என்று நினைத்தேன்,,ஆனால் ஏதோ சோகம் சொல்கிறேன் என்று குண்டைப் போடுகிறீர்களே. ஹ்ம்ம் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு