செவ்வாய், 15 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 3



என் துக்கம் தீர அழுதுவிட்டு வருகின்றேன் என்றேன் இல்லையா. எத்தனை அழுதாலும் தீரப்போவதில்லை. சரி என் கதைக்கு வருகின்றேன். உங்களை நான் போரடிக்கின்றேனோ? இன்றோடு முடித்துக் கொண்டுவிடுகின்றேன். எனவே கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

முடங்கிக் கிடந்த என்னை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லுவார்கள்.  அறிக்கை விடுவார்கள். ஆனால், இது வரை முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதே உண்மை.  கோடிக்கணக்கில் பணம் கொட்டினார்கள்.

2004 ஆம் ஆண்டு எனது (இயற்கை) அன்னை தனது சுனாமி எனும் அவதாரத்தால் வெகுண்டு எழுந்தாள் இல்லையா? அப்போது கூட, என்னை ஒதுக்கி, யாரும் கொண்டாடவில்லை என்றாலும் கூட, நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் ஆந்திராவில் 310 கிமீ தூரத்திற்கு பெட்டா கஞ்சம்(Pedda Ganjam) எனும் பகுதியிலிருந்து சென்னை வரை, என் அன்னையைக் கூட எதிர்த்துப்  பல மீனவர்களையும், குறிப்பாக வடக்கு மண்டலில் உள்ள கிராமங்களையும், காப்பாற்றிய வீராங்கனை, ஹீரோயின் நான் தெரியுமா?

ஆனால், சென்னையில் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என் உடல் பாகத்தை நீங்கள்தான் நசுக்கி விட்டீர்களே. என் பெருமை அறிந்த டாக்டர் திரு இராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள், கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஆய்ந்து, சுனாமியில் நான் செய்த வீர சாகசத்தைப் பெருமைப்படுத்தி, எனது முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, என்னை வேதாரண்யம் வரை வளர்த்தால், நான் ஒரு பஃபர் சோன் (Buffer zone) ஆக்ச் செயல்பட்டு, எதிர்காலத்தில் தமிழ்நாடு பலவித இயற்கை ஆபத்திலிருந்து காக்கப்படும் என்று சொல்லிப் பெருமையைச் சொன்னார்.

நான் முன்பே சொன்னேன் இல்லையா தென்சென்னையில் நான் நல்ல வடிநீர்க்கால்வாய் என்று, தென்சென்னைப் புறநகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையின் கிழக்குப் பகுதியில் எனது பெரிய சகோதரிகளாகிய ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இதில் வரும் அதிக அளவு நீர், எனது சிறு சகோதரிகள் கால்வாய்கள் மூலம் பள்ளிக்கரணை கைவேலியை வந்து சேரும்.

ராஜிவ் காந்தி சாலை அருகே/பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் மடு பகுதியின் தென்புறத்தில் தனியார் சிலர், 40 அடி அகலத்துக்கு சிமென்ட் சாலைகள் போட்டு, நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடிகாலான ஒக்கியம் மடு பகுதியை, வன துறையிடம் ஒப்படைப்பதற்கு, பொதுப்பணி துறை தயங்கி வருகிறது. ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்துள்ள சாலையில், தனியார் கல்லூரி வாகனங்கள் நிற்கையில், அங்கு ஆக்கிரமிப்புக் கூடாது என்ற அறிவுப்பு வேறு வைத்துள்ளார்கள்.

      கைவேலியிலிருந்து என்னை வந்தடையும் நீர் என்னிலிருந்து சிறிது அடையாறுக்கும், மற்றொரு பகுதி முட்டுக்காடு வழியாகச் சென்று கடலில் சங்கமிக்கும்.  எவ்வளவு கன அடி தெரியுமா? வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால்? அந்தப் பகுதியில் நீங்கள் எல்லோரும் எங்கள் மேல் ஆக்ரமித்து உங்கள் சுயநலத் தேவையைப் பூர்த்தி செய்ததனால். நானும் பேணப்படவில்லை. வெள்ள நீர் கடலில் கலப்பது பாதிக்கப்பட்டது. பல அடைப்புகளினால், தடுப்புகளினால். உங்கள் வீடுகளில் நுழைந்தாள்.

      இதைத் தடுக்கவும், நான் உடனடியாக நீரை வெளியேற்றி உங்களுக்கு உதவவும், ஒக்கியம் மடுவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக கடலில் சென்றடைய குறுக்குவெட்டுக் கால்வாய் அமைத்து 4,500 கன அடி நீர் வெளியேறும் வகையில் 2008 ல் திட்டமிடப்பட்டது நான் முன்னரே சொன்னேன் அல்லவா, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அதன் கீழ், உங்கள் மத்திய அரசு 54 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அந்த வழியில் சில தனியார்கள், தீம்பார்க்கின் ஒரு பகுதி இருப்பதால், இந்தத் தனியார்களின் சுயநலத்தால், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தடை ஏற்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது இந்தச் சிறப்பானத் திட்டம். இதற்கு உங்கள் அதிகாரிகள் பலர் உடந்தைகள். இதைப் பற்றி விவரித்தால் நான் கொந்தளித்துவிடுவேன் என்பதால் விவரிக்கவில்லை.

      இதன் விரிவுதான் முன்னரே சொன்ன 100 கோடி 2014 ஆம் ஆண்டில்.  அதுவும் கைவிடப்பட்டது.  நன்றாகக் கவனமாகக் கேளுங்கள் மக்களே. 2008, 2014 களில் கோடிகள். இதற்கிடையில் 2010ல் நடந்ததைக் கேளுங்கள். ஒருவேளை, நான் பொய் சொல்லுகின்றேனோ என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள், அதற்காக உங்கள் அதிகாரிகள் விட்ட அறிக்கையை இதோ அப்படியே சுருக்கமாகச் சொல்லுகின்றேன். குறித்துக் கொள்ளுங்கள்.


“பொதுப் பணித்துறை சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை, சென்னை முழுவதும் உள்ள 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தும் பணிகள், 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும். நிறைவு பெறும்போது, பெரும் மழைக் காலங்களில், சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும்.” என்று என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இதனடிப்படையில் இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” இதில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்பதால்.

2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.” இதைக் கேட்டுச் சிரிக்கின்றீர்களா? அழுகின்றீர்களா? எனக்கு அழுகைதான் வருகின்றது.

தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன். 
2010 மத்திய அரசு 123 கோடி ஒதுக்கியுள்ளது, 2014 ல் முடிக்கும்படியாக என்று அதுவும் வெள்ள நீர் வடிவதற்கு. அடுத்து 2011 ல் 111.76  கோடி, 2010 ல் இதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டு 2012 செப்டெம்பரில் முடியும் என்று. இவை தவிர எனது வடக்குப் பகுதியான கால்வாய் பகுதியில் 14.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுத்தம் செய்ய.  ஆனால், நான் தான் ஏற்கனவே பல நோய்கள் பரப்பும் துர்பாக்கியவதியாக்கப்பட்டுள்ளேனே. அதில் இறங்கி சுத்தப்படுத்தவோ, கரை உயர்த்தி எழுப்பவோ முடியவில்லை உங்கள் மக்களினால். ஏனென்றால் நான், தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன்.  போதுமா? நீங்கள் சுயநல வாதிகள். இன்னும் கேளுங்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பள்ளிக்கரணையில் எனது மிகப் பெரிய இயற்கைச் சகோதரி சதுப்புநிலம் இருக்கின்றாள் என்று. மற்றும் மற்றொரு சகோதரி கொடுங்கையூர் ஏரி. இவர்களது நிலை என்ன தெரியுமா?  உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா? அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள?

நான் ஓடும் பாதையில், வெட்டுவாண்கேணி மகாத்மா காந்திநகர் பகுதியில் என்னை கழிவுப்பகுதியாகவே ஆக்கிவிட்டார்கள் செப்டிக் லாரிக்காரர்கள். தெரியுமா? என்ன ஒரு கேவலமான செயல் நீங்கள் மனிதர்கள் செய்வது. உங்கள் கழிவுகளை உங்கள் மேல் பூசிக்கொள்ளுவீர்களா. என்னை எந்த அளவிற்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் சொல்லுவதற்கு நிறையவே உள்ளது. இதற்கு முடிவில்லை.  தொடர்கதைதான்.  சுருக்கமாகச் சொன்னால் என்னை அந்த அளவிற்குப் பாழாக்கியுள்ளீர்கள்.

Image result for buckingham canal chennai

Image result for collector gajalakshmi
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் கஜலட்சுமி 

இன்று காலை என் தோழி கீதா சொன்னாள், “பக்கிங்ஹேம் உனக்கும் விடிவு காலம் வரலாம்” என்று.  காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி அவர் பகுதியில் இருக்கும் எனது சகோதரி அடையாறின் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்துத் தள்ள ஆணை பிறப்பித்து இடித்தாராம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இங்கு சென்னைக்கு வருவாரா அவர்? ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும்? எப்படிப் படகு விடுவார்கள்? கஜலட்சுமி கொஞ்சம் என்னையும் வந்து சீர் செய்யுங்களேன்!

இந்த லட்சணத்தில் ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் காக்கிநாடாவில் இருந்து பாண்டிச்சேரி வரை என்மீது பெரிய படகுகள் வியாபாரத்திற்காகவும், உல்லாசத்திற்கும் செல்லுமாம்.  அதற்கான பணிகள் இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சோழிங்க நல்லூர் பகுதியில் என் மீது என் அழுக்கை அகற்றும் படலம் ஆரம்பித்து அதற்கும் கோடிகள் இறக்கியிருக்கின்றார்களாம். அதற்குள் என் அன்னைதான் ஒரு ஆட்டம் போட்டுவிட்டாளே! உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்களில் நல்ல உள்ளங்கள் பலர் உதவியதை நினைத்து மகிழ்கின்றேன். 

மக்களே! ஒன்று மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். பேரிடர் பேரிடர் என்று உங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்லுகின்றீர்களே. என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது? யோசியுங்கள். திருந்துங்கள்.  விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன? சரியானத் திட்டம் இல்லாததால் எங்கள் உயிர்கள் பல இறந்தனவே. பலர் நிர்கதியாகியுள்ளனரே. உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாமா” என்று கேளுங்கள்.


எங்களை நீங்கள் காப்பாற்றவில்லை என்றால், எங்கள் அன்னை அகோரத் தாண்டவம் ஆடும் சமயம் நாங்களும் அவளுடன் சேர்ந்து கோரத்தாண்டவம் ஆட வேண்டி வரும். எங்களைத் தடுக்க முடியாது உங்களால். உங்களைக் காப்பாற்ற இயலாது. எங்களால் உங்களுக்கு அழிவு நிச்சயம்.  இது எச்சரிக்கை! 

பின்குறிப்பு: உபரித்தகவல்  RecallPingale: Why a Chennai IAS officer’s story is going viral


  Image result for dr vijay pingale

இவர் டாக்டர் விஜய் பிங்களே. சென்னைக் கார்ப்பரேஷன் இணைகமிஷனர். நேர்மையான அதிகாரி, சென்னை சாலைகள், பாலங்கள் முறைகேடாக கப்பட்டுள்ளன, மழைநீர் வடியும் நிலையில் இல்லை என்பதை சொல்லி அதைக் கட்டிய கான்ட்ராக்டர்களின் பெயரை அறிவித்து, அவர்களைச் சரிசெய்யச் சொல்லி, இல்லை என்றால் ரூ 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, மேலிடத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் , 3 நாட்களில் மாற்றப்பட்டார். - நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

படங்கள்” இணையம்


---கீதா



39 கருத்துகள்:

  1. படிக்கப்படிக்க ஒவ்வொன்றும் மிகக்கொடுமையாகத்தான் உள்ளது. மிகச்சிறப்பாக அலசி இந்தக்கட்டுரையை எழுதியுள்ளீர்கள். படங்களும் மிகச்சிறப்பாக இணைத்துள்ளீர்கள்.

    இனியாவது ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் தயவுதாட்சிண்யம் ஏதும் இன்றி நியாயமான முறையில் போர்க்கால அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டு, சென்னையை வருமுன் காத்தால் மிகவும் நல்லது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார். நீங்கள் எல்லோரையும் பாராட்டி ஊக்கம் அளிப்பவர். அந்த லிஸ்டில் நாங்களும் அடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி கருத்திற்கும்.

      நீக்கு
  2. வரலாறை சுயசரிதையாக அழகாக தெளிவாக அனைவருக்கும் புரியும் படி ஆவணப்படுத்தும் முயற்சிக்கு என் பாராட்டுகள்.ஆள்வோரும் மக்களும் இனியேனும் உணரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்.

      நீக்கு
  3. பக்கிங்க்ஹாம் கால்வாய் சுத்தப் படுத்துதல், கூவம் ஆறு சீற்படுத்துதால் எல்லாம் அரசியல்வியாதிகளுக்கு அட்சயப் பாத்திரம் மாதிரி. வருடா வருடம் கமிஷன் அடிக்க நல்ல சோர்ஸ்! அதை மழை சுத்தப் படுத்தித் தூக்கி எறிந்திருக்கிறது. ஆனால் நம் மக்களே மறுபடியும் அதில் கழிவுகளைக் கொட்டி அசிங்கப் படுத்த ஆரம்பித்து விடுவார்களே...

    2013 இல் சொல்லப் பட்டிருக்கும் அந்த அறிக்கை எவ்வளவு பெரிய பொய்!

    நிறைய விவரங்கள் சேகரித்து அதை அழகான நடையில் பகிர்ந்துள்ளீர்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். உண்மைதான் நீங்கள் சொல்லுவது. பொய்தான் இந்த வருடம்கூட ஜூலை என்று நினைவு அதைப் பற்றி வருடம் குறிப்பிடாமல் இறுதியில் சொல்லியிருக்கின்றேன். அதாவது உல்லாச, வியாபார ரீதியான படகுகள் காக்கிநாடாவிலிருந்து பாண்டிச்சேரிவரை இந்தக் கால்வாயில் என்று மத்திய அரசு....சரி விடுங்கள்...உண்மையானால் நல்லது

      நீக்கு
  4. 3 நாட்களில் மாற்றப்பட்டார்.

    அதன் பிறகும் 3நாட்கள்இருப்பதே வெற்றிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. அருமையான கட்டுரை. ஏராளமான தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளீர்கள். படிக்க பிரமிப்பாக உள்ளது. அரசியல்வாதிகள் மாறினாலே ஆக்கிரமிப்பு இல்லாமல் போய்விடும். அவர்களின் அனுமதியில்லாமல் ஒரு குடிசைக் கூட போட முடியாது. நல்ல அதிகாரிகள் உடனே மாற்றப்படுகிறார்கள். இத்தனை பாதிப்புக்குப் பின்னும் அரசு இன்னும் மாறவில்லை என்றால் இதை எங்கேபோய் சொல்ல..!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கு. உண்மைதான். அந்தக் குடிசைகள் தானே இவர்களது ஓட்டுவங்கி என்று அவர்களின் அறியாமையை உபயோகித்துக் கொள்கின்றார்கள்...

      நீக்கு
  6. மிக அருமையான தகவல் பெட்டகமாய் இருக்கிறது உங்கள் முயற்சி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்...

      நீக்கு
  7. எவன் செத்தால் எனக்கென்ன ,எனக்கு ,என் பை நிறைந்தால் போதும் என
    நினைப்பவர்கள் இருக்கும் வரை மக்களுக்கு விமோசனமே கிடையாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு..தமிழகத்திற்கு விமோசனம்???!!! மக்கள் கையில்..

      நீக்கு
  8. மிக அருமையான கட்டுரை ....

    பல தகவல்களை வழங்கி நாம் செய்த தவறுகளை கூறினீ ர்கள் ....ஆனால் இதை சரி செய்வது எப்போது.... எப்படி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...எப்படி? பதில் மக்கள் கையில்தான்...அதாவது நம் கையில்தான்..

      நீக்கு
  9. எவ்வளவு தகவல்கள், அனைத்தும் படிக்க படிக்க, இவையெல்லாம் என்று மாறும்,

    நேர்மையாக பணி செய்பவர்களுக்கு இது தான்,,,

    நல்ல பகிர்வு சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. உறங்குபவனை எழுப்பலாம். உறங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா. இத்தனை தகவல்களைச் சேகரித்து எழுதி இருக்கிறீர்களிதுவே பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தெரியாதா. எனக்கு ஒரு சந்தேகம் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவழிந்தது என்று சி ஏ ஜி தணிக்கை ஏதும் இல்லையா. நல்ல முயற்சி பூகோள பாடம் படித்தது போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான். எல்லாம் தெரிந்தும் செய்பவர்களை என்ன சொல்லுவது? அவர்களைக் குற்றவாளிகளாக்கலாம்தானே அப்போது இந்தச் சென்னை வெள்ள உயிரிழப்புகளுக்கும் சேதத்திற்கும்? மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  11. ஒரு க(த)ங்கையைப் பற்றிய வரலாறு அறிந்தேன் தங்களால் நன்றி விரிவாக எழுதத்தான் நினைக்கின்றேன் இருப்பினும் மனதில் சிறிய நம்பிக்கை மக்கள் மனம் மாறுவார்கள் என்று.
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஹஹஹ் மக்கள் மனம் மாறுவார்கள்??!! சரி நானும் நம்புகின்றேன். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நம் ஊரில் லா என்ஃபோர்ஸ்மென்ட் வராதவரை மக்கள் திருந்த வாய்ப்பில்லை என்பது எனது உறுதியான எண்ணம். அதாவது இது இப்போதைய மக்கள் பற்றியது....அடுத்த தலைமுறை பற்றி அல்ல...ஆனால் அடுத்த தலைமுறை மாற இப்போதைய பெற்றோர்கள் அவர்களை அறிவுறுத்த வேண்டும் சிவிக் சென்ஸ் குறித்து இது பள்ளியில் கிடைக்காத ஒன்று.

      நீக்கு
  12. பக்கிங்காம் கால்வாய் என்று பெயரைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு விரிவாக எந்தத் தகவலும் இதுவரை அறிந்ததே இல்லை.. நீர்வழிப் பாதைகளுக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகளைப் போட்டிருக்கிறோம்.. எவ்வளவு அநியாயங்களை இழைத்திருக்கிறோம். இப்போது அதன் பலனை அனுபவிக்கிறோம். இனியாவது திருந்துவோமா... அழிவிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனில் ஆறாம் அறிவு இருந்துதான் என்ன லாபம்? ஆதங்கம்தான் மேலோங்குகிறது. அருமையானதொரு கட்டுரை.. பயனுள்ள பல தகவல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். அரசும் பொதுமக்களும் புரிந்துகொண்டு செயலாற்றினால்தான் வளமான நம் எதிர்காலத்துக்கு உத்திரவாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாமதிவாணன் சகோ. நிச்சயமாக நீர்வழிப் பாதைகளை நாம் காப்பாற்றியிருந்தால் எல்லா நீர்நிலைகளையும் செந்தில் சகோ தனது தளத்தில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் சொல்லும் நீர்மேலாண்மை குறித்து நாம் சிந்தித்துச் செய்லப்பட்டிருந்தால் தமிழகம் நீருக்குப் பஞ்சமின்றின், வெள்ளச் சேதமும் இன்றி, அதனால் உயிரிழப்புகளும் இன்றி பொருளாதாரரீதியாகவும் மேம்பட்டிருக்கும் என்பதும் எனது உறுதியான எண்ணம்.

      மிக்க நன்றி சகோதரி தங்களின் விரிவான கருத்திற்கு..

      நீக்கு
  13. செய்வதெல்லாம் ஆட்சி பொருப்பில் உள்ளவர்களும்பணக்கார சீமான் சீமாட்டிகளும்..பாதிக்கப்படுவது பாடுபட்டு உழைத்து வாழும் மக்களா...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  14. சிறப்பான கட்டுரை. எத்தனை துயரங்கள்.... அத்தனையும் மனிதர்களாலும் அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்பட்டவை எனும்போது இன்னும் அதிக துக்கம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  15. மக்களுக்கு இவர்களும் நல்லவை செய்ய மாட்டார்கள்;
    செய்பவர்களையும் விடமாட்டார்கள்.
    விஜய் பிங்க்ளே, கஜலட்சுமி போன்ற அதிகாரிகள் அவசியத் தேவை
    நம(து மக்களு)க்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன்தான் நான். ஆனால், பக்கிங்காம் கால்வாய் பற்றி இவ்வளவு விவரங்கள் எனக்குத் தெரியாது!!

    நீங்கள் கூகுள்+இல், 'நீர்வழிச் சாலைகள் அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது' என்று ஓரிரு முறை பதிந்திருந்ததைப் பார்த்தபொழுதும் எனக்கு இந்த அளவுக்கு விதயம் புரிபடவில்லை. ஆக, நடந்த மொத்தப் பேரழிவுக்கும் காரணம் அரசும் ஆட்சியாளர்களும்தாம் இல்லையா? அப்படியிருக்க, நாமோ ஏதோ இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும்தாம் தவறிழைத்தது போலவும், இயற்கைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது போலவும், இன்னும் பலவாறாகவும் தவறாகக் கற்பிதம் கொண்டுள்ளோம்!

    இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பக்கிங்காம் கால்வாயைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று 2001 முதல் நடுவணரசு பேசி வருவதாகத் தொடரின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்தப் பாகத்திலும் 2001 மற்றும் அதற்குப் பிறகான திட்டங்களைப் பற்றித்தான் எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறேன் எனும் பெயரில் பல ஆண்டுகளாக நம் ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இது அண்ணா காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இது பற்றிய விரிவான தகவல்களை http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113507 எனும் முகவரியிலுள்ள விகடன் கட்டுரையில் நீங்கள் காணலாம். இது மேலும் சில தகவல்களை உங்களுக்குத் தருவதற்காக மட்டும்தானே தவிர, கட்டுரையைக் குறை கூற அன்று. காரணம், கூவத்தின் வரலாற்றையே அக்கு வேறு ஆணி வேறாக எழுதிய அந்தக் கட்டுரையில் கூட நடந்த பேரழிவுக்குக் கூவத்தின் இன்றைய சீரழிவு நிலை எந்தளவுக்கு முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பது பற்றித் துளிக் கூடக் குறிப்பிடப்படவில்லை. விகடன் மட்டுமில்லை, இதுவரை எந்த இதழிலும் இப்படியொரு கோணம் இது விதயத்தில் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் பின்னிப் பிரித்து விட்டீர்கள்!

    இனி இதுபோல் மீண்டும் மீண்டும் பெருமழையும் வெள்ளமும் வர வாய்ப்பிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கும் நிலையில், உங்கள் கூற்றுப்படி பார்த்தால் இப்பொழுது நாம் கூவத்தைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதைப் படிக்கும் அன்பர்கள் யாராவது உடனே கூவத்தைத் தூய்மைப்படுத்துமாறு மாநில - நடுவண் அரசுகளுக்கு ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தால் கண்டிப்பாக மாற்றம் வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா. தங்களின் விரிவானக் கருத்திற்கு. தங்களின் பாராட்டிற்கும். பார்த்தீர்களா இன்று பெட்டிக் கடையில் தொங்கிய தாளில் இருந்தச் செய்தியை? நண்பர் ஒருவர் சொன்னார். ஒருவர் பொதுநலவழக்குத் தொடுத்திருந்தாராம். அடையார் கூவம் நதிளின் ஆக்ரமிப்புகளை உடனே நீக்கிட நம் உயர்நீதிமன்றமும் ஆணை இட்டுள்ளதாம். உடனே நீக்கும் படி. இந்தக் கால்வாய்க்கும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஏனென்றால் இந்த இரு ஆறுகளுடனும் பக்கிங்ஹேம் இணைந்துள்ளது. மட்டுமல்ல எனக்குப் புரியாத ஒன்று...சரி அது பற்றி பதிவில் எழுதுகின்றேன்.

      அந்தக் கட்டுரையைப் (விகடன்) பார்க்கின்றோம்.

      மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான கருத்திற்கு.

      நீக்கு
  17. சிறப்பான தகவல்கள்... உணர வேண்டிய கருத்துகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டிடி ஆம்! உணரும் நேரம் வந்துவிட்டது. உணர்வார்களா...

      நீக்கு
  18. பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  19. இந்த கால்வாயைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. உங்களின் இந்த தொடர் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
    "//என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது? யோசியுங்கள். திருந்துங்கள். விழித்தெழுங்கள். //"

    - நன்றாக யோசிக்க வைத்துவிட்டீர்கள். மக்கள் இனி திருந்துவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கன் வாங்க! மிக்க நன்றி. ஆமாம் நாம் யோசிக்க வேண்டிய விசயம் இல்லையா அது....மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  20. வணக்கம்

    இலாப நோக்கத்துக்காக சிலர்செய்த வேலையால் தமிழகத்தில் இந்த நிலை.. அதுவும் சென்னை இனியாவது உணர வேண்டும்... அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு