செவ்வாய், 3 நவம்பர், 2015

கிழக்குக் கடற்கரைச் சாலை

கீழ்வானத்தின்
நெற்றிப் பொட்டாய்
சிவப்புக் கதிரவன்
ஜன்னல் ஓரத்தில் நிலா
பேருந்து பயணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை நுரை தவழும்
நீலக்கடல்
மின்னிடும் வெண்ணிற
மணற்பாங்கு
கடலோரம் அடர்ந்த 
பச்சை நிறச்சவுக்குக் காடுகள்
கறுத்திட்ட கார்மேகம் மூடிய
வானவெளியில்
சாம்பல், வெண்ணிறத்தில்
பறவைகளின் அணிவகுப்பு
ஒற்றையாய், மின் கம்பிகளில்
கருங்குருவி
பச்சைக் கிளி
மீன் கொத்தி
வீடுகளின் கூரைகளில்
வரிசை மாறா காக்கைகள்
ஏர்பூட்டி உழுகின்ற மாடுகள்
உருமாறாதப் பச்சைநிற
வயல்வெளிகளுள்
கூட்டம் கூட்டமாய்
அழகு சேர்த்திடும்
கொக்குகள், நாரைகள்
மைனாக்கள்
மேய்வதற்குத் தயாராகும்
ஆட்டு மந்தை
மழை பெய்த உல்லாசத்தில்
மண்ணைக் கிளறிடும் கோழிகள்
இலைகளின் நீர்த்திவலைகள்
பன்னீர் தெளித்திட
பச்சை மரக்கிளைகளில்
காதல் பேசிடும் பறவைகள்
மாந்தோப்புகள் தென்னந்தோப்புகள்
தோட்டங்கள், காடுகள்
நடுவினில் ரகசியமாய்
இடையிடையே எட்டிப் பார்க்கும்
ஒற்றை வீடுகள்
நீரோடைகள், ஆறுகள்
உள்வாங்கிய கடல் நீர்
ஆங்காங்கே நீர்ப்பரப்புகள்
இயற்கைப் படகுகளாய்
கறுப்பு, வெள்ளை வாத்துகள்
நீர்க்கோழிகள்
உப்பளங்கள்
நேற்று பெய்த மழையினால்
செந்நிற ஓடைகள்
தேங்கிக் கிடக்கும் குட்டைகளில்
மூழ்கிச் சுகிக்கும்
யானை நிற எருமைகள்
இருபுற அழகின் நடுவில்
நெற்றியில் வகுடெடுத்ததாய்
பளிச்சிடும் தார்ச்சாலை
இயற்கையின் யொவனமான
கிழக்குக் கடற்கரைச் சாலை
மூப்பெய்துகிறது
அன்றைய உழைப்பிற்குத்
தயாராகிடும் மாந்தர்கள்
கழிவறை இல்லாத
வண்ணமற்ற வீடுகள்
சவுக்குக் காட்டிற்குள்
காலைக் கடனிற்காய்
தஞ்சம் புகும் பெரிசுகள்
நாட்டின் நாளைய
நட்சத்திரங்கள்
சுருங்கிவரும் ஆற்றுப் படுகையில்
மரங்களுக்குச் சொந்தமான இடங்களில்
இயற்கையின் உத்தரவின்றி
எழுந்திடும்
கட்டிடங்கள், பாலங்கள்
திடீர் எழுச்சியாய்
புதிய  கடவுளர்கள் கோயில்கள்
சுவர்களையும் கம்பங்களையும்
விட்டுவைக்காத அரசியல்வாதிகளின்
படங்கள் தாங்கிய
கொடிகள், அறிக்கைகள், பதாகைகள்
புதிதாய் முளைக்கின்ற
பயணவழி உணவகங்கள்
நெகிழிகள், கிண்ணங்கள்
தட்டுகள், குப்பைக் கூளங்கள்
இயற்கையின் யொவனமான
கிழக்குக் கடற்கரைச் சாலை
மெல்ல மெல்ல மூப்பெய்துகிறது
மரிக்கும் முன்னே பதிந்திட
புகைப்படமெடுத்தேன்
என் இருவிழிகளின் வழி.
சேமித்தேன்
என் அகப்பேழைக்குள்!

--கீதா

((புதுக்)கவிதை என்ற பெயரில் ஒரு சிறு முயற்சி. நேர்மையான தங்கள் கருத்துகளை முன்வைக்க வேண்டுகின்றேன்/றோம்.  என்னை/எங்களை மேம்படுத்திக் கொள்ள.) 


     

50 கருத்துகள்:

 1. கவிதை அருமை ஆனாலும் அங்கே சில இச்சைப்புலிகள் ஏற்றிய இச்சை வரலாறு மறக்கமுடியாது! எனக்கும் பிடித்தச்சாலை சில வருடங்கள் வந்து போகும் பாதை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் நேசன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். நீங்கள் சொல்லும் நிகழ்வுகள் இப்போது நடந்து வருகின்றதுதான்..

   நீக்கு
 2. ஆஹா, பிரமாதம்.. கவித கவித..

  இனி ஈசிஆர் செல்லும்போதெல்லாம் இது நினைவுக்கு வரும்.. அட்டகாஷ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! மிக்க நன்றி ஆவி! யப்பா காலையிலேயே உங்கள் வாயிலிருந்து..சாரி மனதிலிருந்து மொபைல் வழி வந்த "கவித கவித" அட்டகாஷ் பார்த்ததும்...ரொம்ப உற்சாகமாயிருச்சு...

   நீக்கு
 3. முதலாவதை ரொம்ப ரசித்தேன். நான் கூட இதே ஜன்னலோர நிலா பற்றி எழுதி ஃபேஸ்புக்கிலும், வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம். தங்களின் ரசனைக்கு. நான் ஃபேஸ்புக்கில் இல்லையே. உங்கள் லிங்க் தளத்து லிங்க் தந்தால் வாசிக்க முடியுமே..என்றுதான்...

   நீக்கு
 4. அருமை
  கடற்கரைச் சாலைக்கு கவி பாடிய கவிஞரே
  வாழ்க்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தை சகோ! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ரசித்ததற்கும்...

   நீக்கு
 5. சிறு முயற்சி அல்ல, பெரு முயற்சி. அருமை, தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்க ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 6. அன்புள்ள சகோதரி,

  ‘தேங்கிக் கிடக்கும் குட்டைகளில்
  மூழ்கிச் சுகிக்கும்
  யானை நிற எருமைகள்...


  மரிக்கும் முன்னே பதிந்திட
  புகைப்படமெடுத்தேன்
  என் இருவிழிகளின் வழி.
  சேமித்தேன்
  என் அகப்பேழைக்குள்!‘


  பயணத்தில் பார்த்த படங்களைப்
  புகைப்படங்களாய் புகையில்லாமல்
  பார்க்க வைத்து...
  வியக்க வைத்து...
  அழகாய் காண்பித்தீர்கள்!

  அருமை.

  பாராட்டும்... வாழ்த்தும்!

  த.ம.5  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மணவையாரே. தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்...

   நீக்கு
 7. கீதா மேடம்,
  ஆஹா ஆஹா...
  ஆபோஹி ராகத்திலே படித்துக்கொண்டே பாடினேன். .
  அற்புதமாக
  இயற்கையுடன்
  இரண்டறக்
  கலந்துவிட்டேன்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! தாத்தா ஆபோகியா!!!! நெக்குருகி.....விட்டேன் தாத்தா....(நெக்குருகி என்று ஏன் சொன்னேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே!!!!) பாடலாய் பதியப்பட்டு வருமா?!! வந்தால் பகிருங்கள் தாத்தா...

   ஒரு சிறு வேண்டுகோள்...என்னை மேடம் என்று சொல்ல வேண்டாமே...நான் உங்கள் மகள் வயதுதான்...(இப்படிச் சைக்கிள் காப்ல நான் ரொம்ப ஸ்வீட் 16 அப்படினு சொல்லிக்கறதுல ஒரு அற்ப சந்தோஷம்..ஹஹஹஹ்)

   உண்மையிலேயே, இந்த ஈசிஆர் பயணம் 2007 லிருந்து, 2012, பின்னர் 13 வரை தொடர்ந்து மாதா மாதம் நடந்து கொண்டிருந்த ஒன்று. அதன்பின்னும் அவ்வப்போது...தொடர்கின்றது. அதனால் ஈசிஆர் என் மனதில் அந்த இயற்கையுடன் பதிந்த ஒன்று. அழகான சாலை. இப்போது அதன் அழகும் இளமையும் சிறிது சிறிதாய் மங்கி வருகின்றது என்பது நேற்று பார்த்த் போது மனம் வருந்தி பேருந்திலேயே எழுதிய வரிகள்..

   மிக்க நன்றி தாத்தா...பாடிக் கொண்டே ரசித்து வாசித்ததற்கு.

   நீக்கு
 8. ECR ரோட்டில் ,தீம் பார்க் ,ரெஸ்ட் ஹவுஸ்கள் ஏராளமாய் முளைத்து, இயற்கை அழகே காணாமல் போகும் நிலையில் ,நீங்கள் அகப் பேழைக்குள் சேமித்தது அருமை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆமாம் ஜி.. அவைஎல்லாம் முன்னமேயே வந்து விட்டன. நல்ல காலம் வேறு புதிதாக வரவில்லை. ஆனால் ரெஸ்ட் ஹவுஸ்கள் முளைக்கின்றன...

   நீக்கு
 9. அடடா...அருமை...பயணவழிக்காட்சிகள் கண்முன்னே விரிகிறது....
  வரிகள் உங்கள் வாகனம் போலவே விரைந்து ஓடுகிறது..
  நல்ல கவிதைகள் என்பது
  படிப்பதற்கு எளிதாகவும்
  சுருக்கமாகவும்,
  எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத வகையில் இருப்பின் ஈர்ர்கும் என்பது என் எண்ணம்..
  உங்கள் கவிதை ஈர்க்கிறது....உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா...அழகியல் கவிதை புனையும் உங்களையும் இந்தக் கவிதை ஈர்த்ததற்கு. தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி

   நீக்கு
 10. வணக்கம்
  அண்ணா
  பயணத்தின் காட்சியை கவிதையாக வர்ணித்த விதம் சிறப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

   நீக்கு
 11. காட்சிகளை கவிதை வழியே அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கவிப்ரியன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 12. அன்பின் கீதா அருமை அருமை. புதுக்கவிதை உங்கள் முதல் முயற்சிபோல் தெரியவில்லை. பயணிக்கும் போது காணும் காட்சிகள் எல்லாம் மனதில் புகைப்படமாய் விரிய கூடவே கற்பனையும் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் விளைவாய் ஒரு அழகிய பதிவு. பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார். தங்களின் பாராட்டிற்கு.

   முதல் முயற்சி என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து எழுதுவதால். பள்ளி/கல்லூரி காலத்தில் மரபு கவிதைகள் எழுதியுள்ளேன். ஹைக்கூக்கள், அப்போதே புதுக்கவிதை என்று ஆனால் காலத்தின் சுழற்சியில் மறைந்து/மறந்தே போனது. மொழி ஆளுமையும் போய்விட்டது. வாசிப்பும் குறைந்தி இல்லாதாகிப் போனது. கிட்டத் தட்ட மழுங்கிய நிலை எனலாம். இப்போது மீட்டெடுக்கும் முயற்சியே. அதில் நான் இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன் சார்.

   கற்பனை என்று எதைச் சொல்ல என்று தெரியவில்லை. நான் பார்த்த காட்சிகள் அப்படியே சார்...ஒவ்வொன்றும் அப்படியே பார்க்கப் பார்க்க பேருந்தில் பயணிக்கும் போதே எழுதிக் கொண்டே வந்தேன். பின்னர் தொகுப்பு.

   மிக்க நன்றி சார்..

   நீக்கு
 13. நேர்மையான மனத்துடன் உண்மையாகவே கூறுகிறேன்; மிக மிக அருமையான கவிதை இது! தொடக்கத்தில் அழகழகாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையை வருணித்துக் கொண்டே வந்தீர்கள்; அதுவே படிக்க மிகவும் அருமையாய் இருந்தது. ஆனால், இடையில் அப்படியே ஒரு திருப்புத் திருப்பி இவையெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன என்று கூறிக் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மறுமுகத்தையும் தோலுரித்த விதம் நெற்றியடி! புதுவிதமான முயற்சி! தொடருங்கள்!

  ஆனால் தொடக்கத்தில், இந்தக் கவிதைக்குத் தொடர்பில்லாத ஒரு குட்டிக் கவிதையையும் வெளியிட்டிருக்கிறீர்களே! அதுதான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்துப் பயணத்தின்பொழுது ஏற்பட்ட அனுபவத்தைத்தான் கீழ்க்கண்ட கவிதையாய் எழுதியிருக்கிறேன் என நீங்கள் கூற வருவது புரிகிறது. ஆனால், அந்தத் தொடக்கக் கவிதை ஒரு தனிக் கவிதையாய் அந்தரத்தில் தொங்குவது பொருத்தமாக இல்லை. ஆனால், அந்தக் கவிதையும் அதனளவில் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ இபுஞா மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு. அதுவும் உங்களிடமிருந்து!

   அந்தக் குட்டிக் கவிதை, நேற்று பாண்டிச்சேரிக்குப் பேருந்தில் பயணிக்கும் போது முட்டுக்காடு, திருவிடந்தையைத் தாண்டும் போது தோன்றி உடன் எழுதினேன். அது தனிக் கவிதையே. அது பேருந்துப் பயணத்தோடு ஒன்றி வந்ததால் சேர்த்து எழுதியது போலத் தோன்றுகின்றது. முதலில் அதை வெளியிடாமல் இதை மட்டும் வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். பின்னர் அதையும் சேர்த்து கோடு இட்டுப் பிரித்துப் பதிந்துவிட்டேன்.

   பின்னர் அந்தப் பகுதியிலிருந்து கடற்கரை தெரிந்து கொண்டே இருக்கும் இடையிடையே. கிழக்குக் கடற்கரைச் சாலை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, பயணிக்க. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் அதை ரசித்து மனதில் பதித்துக் கொண்டே வருவேன். இப்போது அந்தச் சாலையில் பயணம் அருகி விட்டது. நேற்று எனது பயணத்தில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது என்றாலும் இயற்கையை அதுவும் மழைத் தூறலுடன் கூடிய அழகை மிகவும் ரசித்துக் கொண்டே சென்றேன். வரும் போதும். (எனக்கு ரயிலானாலும், பேருந்தானாலும் ஜன்னல் அருகே பயணிப்பதுதான் மிகவும் பிடிக்கும்) மழைத் தூறல் ஆங்காங்கே. இந்தக் காட்சிகள் எல்லாமே உண்மையானவை. பார்க்கப் பார்க்க எழுதிக் கொண்டே வந்தேன். பின்னர் மாற்றங்களையும்..மனம் வருந்தியது எழுதிய வரிகளைத் தொகுத்து வெளியிட்டேன்.

   மிக்க நன்றி சகோ.

   நீக்கு
  2. //பார்க்கப் பார்க்க எழுதிக் கொண்டே வந்தேன்// - அடேங்கப்பா! இருக்கிற நிலைமையை நீங்கள் கவிதையாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள் என்றுதான் எண்ணினேன். இப்படி நேரடி வர்ணனையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அருமை! அதே நேரம் மேற்படி மாற்றங்களை எண்ணி வருத்தம்!

   நீக்கு
 14. காட்சியை கவிதைப்படுத்தியவிதம் சிறப்பு! அருமை! தொடருங்கள்! முதல் கவிதை டாப்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ். தெரியும் நீங்கள் முதல் கவிதையைச் சொல்லுவீர்கள் என்று. உண்மையைச் சொல்லப் போனால் நான் அதை எழுதும் போது உங்கள் ஹைக்கூக்கள் நினைவுக்கு வந்தன.

   மிக்க நன்றி சுரேஷ்...

   நீக்கு
 15. இ.சி.ஆறில் இதுவரை பயணித்ததில்லை. அதிகபட்சம் மாமல்லபுரம் வரை போயிருக்கிறேன். தங்கள் கவிதையை படித்தப் பின் சைக்கிளில் சென்று வரவேண்டும் போல் தோன்றியது.
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செந்தில் சகோ !

   ஈசிஆர் பயணம் அழகாக இருக்கும். ஆஹா சைக்கிள் பயணாமா? அருமை..

   நீக்கு
 16. மனக்குழப்பம் தளம் மாறி வந்து விட்டோமோ... என்று மீண்டும் மீண்டும் எழுத்துக்கூட்டிப் படித்துப்பார்த்தேன் வில்லங்கத்தார் வில்லங்கத்தார் என்றே காண்பித்தது..

  உண்மையிலேயே நல்ல ரசனை கண்ட காட்சிகளை பிறரின் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு சவாலான விடயம் அதை வெகு அனாயசமாக செய்து விட்டீர்கள் மிகவும் நன்று வாழ்த்துகள் தொடரட்டும் இவ்வகையும்....
  தமிழ் மணம் 12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் மிக்க் னன்றி ஜி தங்கள் பாராட்டிற்கும்..தொடர நினைக்கின்றோம்..முடியுமா என்று தெரியவில்லை பார்ப்போம்

   நீக்கு
 17. பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னை பித்தன் சார்..தங்களின் வருகைக்கும்கருத்திற்கு..

   நீக்கு
 18. கவின்மிகு காட்சிகளுடன்
  கவிதைப் பயணம்.. அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 19. பா, சீர், தளை, அடி போன்றவற்றிற்குள்ளேயே அடங்கியிராமல் வந்த புதுக்கவிதை காலப்போக்கில் ஒன்றன் கீழ் ஒரு வரி எழுதினால் கவிதை என்றாகி விட்டிருந்தது. சமகாலத்தில் மூவரை எனக்குப் பிடிக்கும். கவிக்கோ, கவியரசு மற்றும் தபூ
  கவிக்கோவின் தாக்குதல், கவியரசின் நவீன சிந்தனை, தபூவின் மென்மை...
  இவர்களைப் போன்று ஒரு exclusiveness வரவழைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மலர்வண்ணன். உடனே பதில் கொடுக்க முடியவில்லை. ப்ளாகர் அசைய மாட்டேன் என்று நின்றதால். மனம் திறந்த கருத்திற்கு மிக்க நன்றி முதலில்.

   உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். பள்ளிக் காலத்தில் (இப்போது எனது வயது 51) மரபுக் கவிதை எழுதி பரிசு பெற்றவள், பாராட்டப் பெற்றவள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? அது கல்லூரி காலம் வரை, அதன் பின்னார் கொஞ்சமுமாய், மரபு, ஹைக்கூக்கள், புதுக் கவிதைகள் என்று எழுதி வந்தவள். பின்னர் இப்போதுதான் 28 வருடங்களுக்குப் பின்னர் என்று சொல்லலாம் ...மீட்டெடுக்கும் முயற்சி. அதனால் தான் முதல் முயற்சி என்று சொல்லியிருந்தேன்..ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதுபோல்

   மிக்க நன்றி மலர்...முயற்சி செய்கின்றேன்.

   நீக்கு
 20. கீத்து கார்ல ட்ராவல் பண்ணுணீங்களா டைம் மெசின் ல ட்ராவல் பண்ணுணீங்களா!!!! அப்பா! அழகான காட்சிகள் மெல்ல மறைந்து அவலக்காட்சிகள் கண் முன்னே! வாழ்த்துக்கள் கீத்து!! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையாகக் கண்கள் கண்ட காட்சிதான் அனைத்தும். கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் பேருந்தின் இடது புறம் சன்னலின் அருகே அமர்ந்து செல்ல, பாண்டிச்சேரி போகும் போது. வரும் போது மீண்டும் வலது புறம் அமர மிகவும் பிடிக்கும். கடலோரக் காட்சிகள்தான் மிகவும் அருமையாக இருக்கும். எதிர்புறமும் அழகாக இருந்தவைதான் ஆனால் அங்கு சாலையின் அருகில் கல்லூரிகள், உணவகங்கள், என்று..கொஞ்சம் உள்ளே சென்றால் மிக மிக அழகான காடுகள், நீர்நிலைகள் காணலாம். ஆனால் இவை அனைத்தும் உருமாறி வருகின்றது என்பது அதுவும் இயற்கையின் அனுமதி இல்லாமலேயே...வேதனையான விஷயம்...இந்த மாற்றங்களையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் இன்னும் எதிர்காலத்தில்? அந்த எண்ணம் தோன்றியதால் தான் மனதில் அந்தக் காட்சிகளைப் பதிய வைத்துக் கொள்ள விழைந்து பதிவு...

   நீக்கு
 21. கவிதை நன்று!ஆனாலும் ஒன்று! மரபுக் கவிதையோ புதுக் கவிதயோ எதுவானாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி புலவர் ஐயா. நிச்சயமாகத்தங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு முயற்சி செய்கின்றேன் ஐயா.

   தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 22. காட்சிகளைக் கவிதையாக்கி இங்கே உங்கள் கவிதை மூலம் காட்சிகளை நாங்களும் காணச் செய்துவிட்டீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டீர்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் இன்னும் சிறப்பாக கவியாக்கங்கள் உருவாகும். வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ கீதாமதிவாணன் அவர்களுக்கு. ஆம் 28 வருடங்களுக்குப் பிறகு மீட்டெடுக்கும் முதல் முயற்சி எனலாம். தொடர்ந்து எழுத முயற்சி செய்கின்றேன்.

   மிக்க நன்றி.

   நீக்கு
 23. வணக்கம் சகோ.

  கவிக்கு வேண்டிய நுட்பமான பார்வை கவிதையின் நெடுகிலும் இருக்கிறது.

  புலனல்லாதன புலனாக்கல்,

  படிப்பார்க்கு உவப்பூட்டி இன்பம் தருதல்.

  இவை இருக்கின்ற தரமான கவிதை!


  இது போன்ற படைப்புகளைத் தங்களிடம் இருந்து இனி எதிர்பார்க்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜு சகோ உண்மையைலேயே இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. கவிமன்னர் உங்களிடமிருந்து! மிக்க நன்றி சகோ.

   சகோ நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ...பள்ளி, கல்லூரி காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதி பரிசு பெற்றதுண்டு. ஹைக்கூக்கள் (ஹைக்கூ என்பது பள்ளிக் காலத்தில் தெரியாது..) புதுக் கவிதை கல்லூரியில் எழுதி பாராட்டும் பெற்றதுண்டு. அதன் பின்னர் காலத்தின் போக்கில் எல்லாம் மக்கிப் போய், இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீட்டெடுக்கும் ஒரு முயற்சி. எனவே முதல் முயற்சி என்று சொல்லியிருந்தேன்.

   உங்கள் எதிர்பார்ப்பிற்கு இணங்க முயற்சி செய்கின்றேன் சகோ.

   மிக்க மிக்க நன்றி...

   நீக்கு
 24. 'எமக்கு தொழில் கவிதை' என்று ஒருவன் சொல்லியிருந்தது கண்டு தயங்கி பின் முயன்று பின் கலங்கி பின் 'மிக கலங்கி' பின் கவன மற்றுப் போனேன். காரணமெ ண் சுற்றமும் 'நடப்பும்' தங்கள் முயற்சியை கண்டபின்'னே' அறிந்தேன். மனம் தெளிந்தேன்..

  இனியும் கவிதையை தொழிலாக கருதலாகாது. அது இயல்பானது.. என்றுனர்ந்தேன்.. இயல்பாக வெளிப்பட்ட கவிதைக்கும். இயற்றியவருக்கும்.. நன்றிகள் பல..

  படைத்தவருக்குமோர் வேண்டுதல்.. இனி சிரமம் பாராமல் தங்கள் முயற்சியை தொடர வேண்டுமென ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சிவம் தங்களின் கருத்திற்கு. முயற்சியைத் தொடர ஆசைதான் பார்ப்போம்

   நீக்கு