செவ்வாய், 20 அக்டோபர், 2015

வேட்டக்கொருமகன்

நம் பதிவர் நண்பர் வெங்கட்ஜி அவர்கள் தனது ஃப்ருட் சாலட் பகுதியில், கேரளாவில் பட்டாம்பி அருகில் பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் உடைப்பது பற்றிய காணொளி பகிர்ந்து ஒரு வேண்டுகோளும் வைத்திருந்தார். முழுவிவரங்களை துளசிதரன் ஜி முடிந்தால் பதிவிடலாமே! http://venkatnagaraj.blogspot.com/2015/09/145-12000.html

மிக்க நன்றி வெங்கட்ஜி.

கேரளாவின் வடக்குப் பகுதி, குறிப்பாக மலபார் பகுதியில் இறைவன் வேட்டக்கொருமகன் மிகவும் பிரபலம். இவ்விறைவனைப் பற்றிச் சில கதைகள் சொல்லப்படுகின்றது.  குறிப்பாக

காஞ்சிபுரம் சிவவேடன் - அருச்சுனன் மோதல் சிற்பம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, அருச்சுனன், சிவபெருமானின் பாசுபத அஸ்திரத்தைப் பெற வேண்டி, இமயமலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவமிருந்தான். பலவருடங்களாக அவன் செய்த தவத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான், அருச்சுனனின் வீரத்தையும், பக்தியையும் பரிசோதிக்க வேண்டி கிராதன் – வேட்டுவனாக அவன் முன் தோன்றினார். பார்வதியும் அவருடன் கிராதியாகத் தோன்றினார்.

Image result for kirathamoorthy

சிவன் அருச்சுனனின் தவத்தைக் கலைக்க வேண்டி ஒரு அசுரனைக் காட்டுப் பன்றியாகச் செய்கிறார்.  அருச்சுனன் அந்தப் பன்றியைக் கொல்வதற்கு அம்பு எய்கிறான்.  கிராதனும் எய்கிறான்.  பன்றி இறக்கவும், அருச்சுனனுக்கும், கிராதனுக்கும் விவாதம் எழுகின்றது.  யாருடைய அம்பு பன்றியை முதலில் குத்திக் கொன்றது என்று. விவாதம் சண்டையில் முடிகின்றது.  அருச்சுனனின் அம்புகள் கிராதனின் அம்புகளால் வீழ்த்தப்படுகின்றன. அருச்சுனனின் எல்லா ஆயுதங்களும் வீழ்ந்திட, நிராயுதபாணியான அருச்சுனன் சிவலிங்கத்தை நோக்கிப் பிரார்த்தித்து, மலர்களால் அருச்சிக்கின்றான்.  அவன் இடும் மலர்கள் எல்லாம் கிராத மூர்த்தியின் பாதங்களில் வீழவும், அருச்சுனன் ஆச்சரியம் அடைய, உணர்கின்றான், அந்தக் கிராதன் வேறுயாருமல்ல சிவபெருமான் என்று.

சிவனும், பார்வதியும் அருச்சுனன் முன் தோன்றி, சிவன் பாசுபத அஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருளுகின்றார். பின்னர் சிவனும், பார்வதியும் வேட்டுவராகவே காடுகளில் சிறிது காலம் இருந்ததாகவும், அப்படி வாழ்ந்த போது ஒரு குழந்தையை பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது. அவர்கள் அந்தக் குழந்தையை அப்படியே காட்டில் விட்டுச் சென்றதாகவும், வேடர்களின் தலைவனின் பராமரிப்பில் சிறந்த போர்வீரனாக அந்தக் குழந்தை வளர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

அந்தக் குழந்தை தனது அம்பு எய்தும் திறமையாலும், குறும்பினாலும் அசுரர்களுக்கு மட்டுமல்லாமல், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொந்தரவு கொடுத்துவந்தான். அதனால் தேவர்களும், ரிஷிகளும் பிரம்மாவிடம் முறையிட, அவர் சிவபெருமானை நோக்கிக் கைகாட்ட, அவரோ, அவன் சிறுவன். அப்படித்தான் விளையாட்டாக இருப்பான். வளர்ந்ததும் சரியாகிவிடுவான் என்றிட, அடுத்து இருக்கவே இருக்கிறார் விஷ்ணு அவரிடம் சென்று முறையிட்டிருக்கின்றார்கள்.
 
விஷ்ணு, அச்சிறுவன் முன் தோன்றி தங்கநிறத்தில் உள்ள உடைவாளைக் காட்ட அதற்கு அந்தச் சிறுவன் மயங்கி அதை வேண்ட, விஷ்ணு, இனி எவரையும் தன் குறும்புகளால் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்குப் பணிந்தால் அதைத் தருவதாக அச்சிறுவனிடம் சொல்லவும், அச்சிறுவன் கீழ்படிந்து அதைப் பெற்றுக் கொள்ள, சிவபெருமான் இனி அச்சிறுவன் அங்கிருந்தால் சரிவராது என்று நினைத்து, கேரளத்திற்குச் சென்று அந்த நிலத்தைக் காக்கச் சொல்லவும், சிறுவன் வெகுதூரம் கடந்து வந்து, அப்படிக் கேரளத்தை வந்தடையும் போது வட கேரளத்தில், முதலில் வந்தடைந்த பகுதிதான் பாலுச்ஸேரி. பின்னர் மற்றப் பகுதிகளுக்குச் சென்றதாகவும் கதை செல்கின்றது. அவர்தான் வேட்டக்கொருமகன் என்று அறியப்பட்டார்.

பரகுன்னத்து வேட்டக்கொருமகன்-  வேட்டக்கொரு மகன் கோட்டயம்

வேட்டக்கொருமகன் கோயில் - நிலம்பூர்

கேரளத்தில் பல இடங்களில் வேட்டக்கொருமகன் கோயில்கள் இருந்தாலும், பாலுச்ஸேரியில் உள்ள வேட்டக்கொருமகன் கோயில்தான் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இந்த இறைவனை மகிழ்விக்கக் கொண்டாடப்படும் ஒரு சடங்குதான் வேட்டக்கொருமகன் பாட்டு. இந்தப் பாட்டு ஒலிக்கும் போது பந்தீராயிரம் தேங்காயெறு விழா (பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் அந்தப்பாட்டின் ரிதத்திற்கு ஏற்ப ஒரே நேரத்தில் உடைக்கப்படும் விழா)

பந்தீராயிரம் தேங்காயெறு விழா

ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் கேரளாவிலுள்ள நம்பூதிரி குடும்பங்கள் இந்த விழாவை நடத்த ஆயத்தமாகின்றனர். இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமல்ல மிகவும் சவாலானதும் கூட. ஏனென்றால் கோயிலின் முதன்மை பூசாரிதான் ஒரே நேரத்தில் 12,000 தேங்காய்களை இருகைகளாலும் மாற்றி மாற்றி, வேட்டகொருமகன் ஜண்டை, தாள வாத்தியங்களில் வாசிக்கப்படும் பாட்டின் ரிதத்திற்கு ஏற்ப உடைக்க வேண்டும்.

இந்தப் பந்தீராயிரம் விழாவை நடத்தும் நம்பூதிரிகளில் மிகத் திறமை மிக்கவர், வடகேரளத்தைச் சேர்ந்த, 38 வயதுள்ள, நம்பூதிரி மனோஜ் குமார் கண்டமங்கலம் என்பவர். இவர் பல கோயில்களிலும், புகழ்வாய்ந்த நம்பூதிரி, அரசக் குடும்பங்களுக்காகவும் இந்த வேட்டக்கொருமகன் பாட்டு, பந்தீராயிரம் தேங்காயெறு நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். இவரது முதல் பந்தீராயிரம் தேங்காயெறு விழா, பாலுஸ்சேரியிலுள்ள, மிகவும் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பமாகிய ராமல்லூர் தெஞ்சீரி இல்லத்தில் 1996 ஆம் ஆண்டு நடந்துள்ளது.  அப்போது இவ்விழாவை நடத்த 4 மணி நேரம் 10நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் அனுபவத்தில் இன்னும் வேகமாகச் செய்ய முடிந்ததாகவும் கூறுகின்றார்.


வேட்டக்கொருமகன், கேரளத்தில் உள்ள சிரக்கல், நீலேஸ்வரம், கோட்டக்கல் அரச குடும்பங்களின் தேவதையாக வழிபடப்படுகின்றார்.  அப்படி, புகழ்பெற்ற கோட்டக்கல் கோயிலம் அரசக் குடும்பத்திற்காக பந்தீராயிரம் தேங்காயெறு விழாவை நம்பூதிரி மனோஜ் நடத்தினார்.  அவ்விழாவில் 12000 தேங்காய்களை உடைக்க 2 மணி நேரம் 13 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் அது லிம்கா புத்தகத்தில் பதியப்பட்டதாகவும், அதுவே இதுவரை தான் நிகழ்த்திய விழாவில் சிறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.  அதன் பிறகு நடத்திய விழாவும் 21/2 மணி நேரத்தைத் தாண்டியதில்லையாம். தனது 18 வருட அனுபவத்தில் இது வரை 75 பந்தீராயிரம் நடத்தியிருக்கின்றார்.

இவ்விழா கேரளத்தில் வேட்டைக்கொருமகன் இறைவனுக்கும், மற்ற தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஐயப்பனுக்கும் கொண்டாடப்படுவதாகச் சொல்லுகின்றார். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் (எங்கள் பகுதிக்கு வெகு அருகில்) வேட்டக்கொருமகன் கோயில் உள்ளது, தனியாரின் வசம். தமிழ்நாட்டில் பந்தீராயிரம் கொண்டாடப்படுகின்றது என்று நம்பூதிர் மனோஜ் சொன்னாலும், நான் பிறந்து வளர்ந்த தேனீ மாவட்டப்பகுதிகளில் வேட்டைக்காரன் கோயில்கள் இருந்தாலும், பந்தீராயிரம் பற்றி, இதுவரை கேள்விப்பட்டதில்லை.

வேட்டைக்கொருமகன் ஷத்திரியர்களின் இறைவனாக வணங்கப்பட்டதாகவும், பின்னர் வட கேரளத்தில் உள்ள நம்பூதிரிகள் மிகவும் நலிவடைந்த போது வேட்டக்கொருமகன் இறைவனை வழிபடத் தொடங்கினார்கள். அவ்வழக்கம் தொடர்ந்து, இப்பொதும் நம்பூதிரிகள் வழிபட்டுவருகின்றார்கள்.  

படங்கள், காணொளிகள்: நன்றி கூகுள்.

(பின் குறிப்பு. அடுத்த 4,5 நாட்களுக்கு இருவரும் இணையம் பக்கம் வர இயலாத் நிலை. மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம் )

47 கருத்துகள்:

 1. வணக்கம்
  அண்ணா

  வித்தியாசமான வழி பாடு பற்றிய விளக்கம் மிக அருமை உள்ளது அண்ணா பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பிரமிக்க வைக்கும் காணொளியும் கதையும் சகோதரரே!
  அரியதொரு விடயம் அறிந்தேன் தங்களின் பதிவால்!

  மிக்க நன்றியுடன் வாழ்த்துகள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 3. பரவாயில்லை, வெங்கட் பதிவு எழுத ஒரு சப்ஜெக்ட் கொடுத்துட்டார்!

  விவரங்கள் தெரிந்து கொண்டேன். கேரளக் கோவில்களின் பாணியே தனிதான். தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ ஆமாம் ஸ்ரீராம்! அவருக்கு நந்நி பறைஞ்னு ...

   மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

   நீக்கு
 4. விரிவான தகவல்கள்..... அப்பாடி பன்னிரெண்டாயிரம் தேங்காய்களை மூன்று மணி நேரத்திற்குள் உடைப்பது சாதனை தான். பார்க்கும்போதே நமக்கு கைகள் வலிப்பது போல இருக்கிறது....

  எனது பதிவினையும் குறிப்பிட்டு, பதிவில் கேட்டபடி தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வெங்கட் ஜி! நானும் நேரில் பார்த்ததில்லை. வியப்பாகத்தான் இருக்கின்றது. எங்கள் பக்கங்களில் பேசப்படுவதுதான். அந்த லிம்கா ரெக்கார்ட் மனோஜ் பற்றி பத்திரிகை மூலம் அறிந்தது சென்ற வருடம்...எப்படி நான் அப்போதே எழுதாமல் பேனேன் என்று தெரியவில்லை...தாங்கள் தான் இந்தப் பதிவு எழுதக் காரணம். மிக்க நன்றி வெங்கட் ஜி.

   நீக்கு
 5. விநோதமான கதை நண்பரே
  நன்றி
  இத்துனை தேங்காய்களையும் உடைத்த பிறகு என்ன செய்வார்கள் என்று தெரியவில்லையே நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையாரே வருகைக்கும் கருத்திற்கும்.

   பொதுவாக இந்தத் தேங்காய்கள் எல்லாம் ஏலம் விடப்படட்டுவிடும்

   நீக்கு
 6. 1986,87 வாக்கில், திரூர், திருச்சூர் அருகில் உள்ள ஒரு பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று இருந்தேன்.

  அங்கும் காலை 3 மணித் துவங்கி ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைக்கக் கண்டேன். தேக முட்டு, ஆரோக்ய முட்டு, வியாபார முட்டு, விவாக முட்டு என்று பலவிதமான பிரார்த்தனைகளுடன்.

  இன்னொரு இடம். திருவனந்தபுரத்தில் கிழக்கே கோட்டா என்னும் இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில்.

  விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு ஆயிரக்கணக்கில், இல்லை, லட்சக்கணக்கில் தேங்காய் உடைப்பார்கள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தாத்தா லட்சக்கணக்கில் உடைப்பார்கள். திருவனந்தபுர்த்தில் உள்ள பழ்வங்காஅடி பிள்ளையார் கோயிலில் தேங்காய்கள் உடைப்பது என்பது பிரசித்தம். ஆனால் அது ஒரே சமயத்தில் அல்ல. ஒவ்வொருவருவம் அவரவர் வேண்டுதலின் படி. ஜண்ட தாளத்திற்கு ஏற்ப அல்ல. இது ஒரு திருவிழாவாக ஒரே நேரத்தில் உடைப்பது. அதுவும் ஒருவரே உடைப்பது.

   மிக்க நன்றி தாத்தா...

   நீக்கு
 7. இதுவரை அறிந்திராத செய்தி. படங்களுடன் அருமையாகப் பகிர்ந்தவிதம் நன்று.

  பதிலளிநீக்கு
 8. 12000 தேகாய்க்கு நான்கு மணிநேரம் என்றால் ஒருமணி நேரத்தில் சுமார் 3000 தேங்காய்கள் அதாவது நிமிடத்துக்கு சுமார் ஐம்பது தேங்காய்கள் நம்புவது சிரமமாய் இருக்கிறதே இது வரை கேட்காத விஷயம்

  பதிலளிநீக்கு
 9. நிறைய விடயங்களுடன் தகவல் நன்று இந்த காணொளி ஏற்களவே தாங்கள் வெளியிட்டதுதானே... ரசித்தேன்
  பின்குறிப்பு நல்லாயிருக்கே... அதாவது நான் டிமிக்கி கொடுக்கப்போறேன் என்ற அறிவிப்பு ஸூப்பரப்பு
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்.

   ஹஹஹஹ் இது உங்கள் பின் குறிப்பிற்கு...

   நீக்கு
 10. இப்படியுமா நம்பிக்கை ?ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான அறிந்திராத தகவல்கள் ..வியப்பூட்டும் காணொளி ..இந்த தேங்காஎல்லாம் மக்களுக்கு அப்புறம் கொடுத்து விடுவார்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ வருகைக்கும் கருத்திற்கும்.

   பொதுவாக இந்தத் தேங்காய்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டுவிடும்...

   நீக்கு
 12. வழிபாடுகள் பலவிதம்! அதிலே இது ஒரு விதம்!

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  வேட்டக்கொருமகன் - கதை கேட்க நன்றாக இருக்கிறது. காணொளியில் தேங்காய் உடைப்பதை கண்டு வியந்தேன். உண்மையில் மிகுந்த பலசாலிதான் தேங்காய் உடைப்பவர். இசைக்கேற்றபடி உடைப்பதைப் பார்க்க... கூடிஇருப்போரும் பார்த்து மகிழ்வதைப் பார்த்து மகிழ்வதும் இன்பம்தானே! மனிதன் செயல்கள் விநோதமானவை.

  நன்றி.
  த.ம.9

  பதிலளிநீக்கு
 14. அறியாத தகவல்கள்! சிறப்பாக விளக்கி எழுதி இருந்தது உதவியாக இருந்தது! காணொளிகளும் படங்களும் இணைத்தது கூடுதல் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 15. வேட்டக்கொருமகன் அறியாத தகவல்கள்...
  விளக்கமாய் எழுதி இருக்கிறீர்கள்...
  அருமை துளசி சார்...

  பதிலளிநீக்கு
 16. வேட்டைக்கொருமகன் கதை சுவாரசியம். பகிர்ந்தமைக்கு நன்றி துளசி சகோ, கீத்ஸ் & வெங்கட் சகோ ( காரணகர்த்தா ) :) கேரளப் பகுதி விஷயங்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தேனம்மை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....ஆம் கேரளத்தில் இப்படிப் பல சம்பவிக்கின்றனதான்...

   நீக்கு
 17. நல்ல, சுவையான பதிவு!

  மகாபாரதத்தின் கிளைக் கதைகள் இன்னும் எவ்வளவுதாம் இருக்கின்றனவோ! உலகிலேயே மிகப் பெரிய காப்பியம் (epic) 'மகாபாரதம்'தான் என்பார்கள். ஆனால் அது, இந்தக் கிளைக் கதைகளையெல்லாம் சேர்த்தா, சேர்க்காமலா எனத் தெரியவில்லை. மனு-அறக் கருத்துக்கள், ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இடங்கள் ஆகியவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மகாபாரதம் ஒரு சுவையான கதை என்பதில் மாறுபாடில்லை (எனக்கு).

  வேட்டைக்கொரு மகன் அல்லது வேட்டைக்கார மகன் என்பது மருவி 'வேட்டக்கொருமகன்' என ஆகியிருக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் பன்னீராயிரம் எனும் சொல் வழக்கொழிந்து விட்ட நிலையில், அது 'பந்தீராயிரம்' என இன்னும் மலையாளத்தில் வழங்கி வருவதையும் அறிய முடிந்தது.

  இப்படிப்பட்ட செவிவழிக் கதைகளின் நிகழ்வுகளில் காணப்படும் சரி - தவறுகளைப் பொருட்படுத்தாமல் இவற்றைப் பதிவு செய்து வைக்க வேண்டியது இன்றியமையாதது. காரணம், எந்த வரலாற்றுக் கருவூலம் எங்கே, எதிலே மறைந்திருக்குமோ, சொல்ல முடியாது. அவ்வகையில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பதிவுக்காக நன்றி துளசி ஐயா!

  ஆனால், இப்படிப் பெற்ற பிள்ளையையே நடுக்காட்டில் விட்டுவிட்டுப் போன கடவுள்கள் தம்மை வந்து காப்பாற்றும் என நம்பி இன்னும் வழிபட்டுக் கொண்டிருக்கும் நம் மக்களை நினைத்தால்தான் இரக்கமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இபுஞா. மலையாளத்தில் வேட்டக்கொருமகன் - அதன் உச்சரிப்பும் - ஒரு, மகன்- வார்த்தைகள் இங்கு தமிழில் எழுதியிருந்தாலும் மலையாள உச்சரிப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அது போல் ஆம் பந்தீராயிரம்....நாங்கள் முதலில் பன்னீராயிரம் என்று தமிழில் எழுத நினைத்தோம். பின்னர் மலையாளத்தில் அப்படித்தானே சொல்லுகின்றோம் அப்படியே இருக்கட்டும் என்று பந்தீராயிரம் என்று எழுதிவிட்டோம்.

   மகாபாரதத்தின் கிளைக்கதைகள் பல நல்ல அறிவுரைகளைத் தாங்கி வருபவையே.

   செவி வழிக் கதைகள் பதியப்பட வேண்டியவையே நீங்கள் சொல்லுவது போல். தளிர் சுரேஷ் அவர்கள் கூட நிறைய செவி வழிக் கதைகளைப் பதிந்து வருகின்றார். அருமையான கதைகள் பாப்பாமலர் பகுதியில் அவர் பதிகின்றார்.

   மிக்க நன்றி நண்பரே! தங்களின் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு..

   நீக்கு
  2. தளிர் சுரேஷ் அவர்கள் சொந்தமாகவும் நன்றாகக் கதைகள் எழுதக்கூடியவர். இப்பொழுது செவிவழிக் கதைகள் பதிவும் தொடங்கி விட்டாரா? நல்லது. முன்பு நான் அவர் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், கூகுள்+ மூலம் தொடர்வதால் அவர் இடுகைகள் கண்ணில் படுவதேயில்லை. விரைவில் அவரையும் பிளாக்கர் செயலி மூலம் பின்தொடரத் தொடங்க வேண்டும்.

   நீக்கு
  3. மலையாளத்தில், தமிழைப் போல் அவ்வளவு எளிதில் சீக்கிரமாக வார்த்தைகள் வழக்கொழிந்து விடுவதில்லை. பெரும்பாலும் கற்றவர்களும் கேளத்தில் மலையாளத்தில்தான் பேசுகின்றார்கள். ஆனால், மலையாளத்தில் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழில் உள்ளது போல் இல்லை எனலாம். உதாரணத்திற்கு போலீஸ் எனும் வார்த்தைக்குத் தமிழில் காவல்காரார், காவல்துறை என்பது போல் மலையாளத்தில் சமாதானபாலகன் என்று ஒரு வார்த்தை இருந்தாலும் அதை யாரும் வழக்கில் சொல்லிக் கேட்டதில்லை. மேடைப்பேச்சிலும் கூட. போலீஸு என்றுதான் சொல்லுவது வழக்கம்.

   நீக்கு
  4. ஓ அப்படியா? கூடுதல் தகவல்களுக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 18. வேட்டக்கொருமகன்
  வழிபாடு பற்றிய தகவல் அருமை
  2011 இல் கேரளாவில் ஆலப்புலா வரை
  சென்றிருந்தாலும்
  இன்று தான் இத்தகவலை அறிந்தேன்!
  பயனுள்ள தகவல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். ஓ இனி அடுத்த முறை செல்ல நேரிட்டால் முயற்சி செய்யுங்கள். நானும் இதுவரை பார்த்ததில்லை இங்கு இருந்தாலும்...

   நீக்கு
 19. அறியாத தகவல் அருமையான விளக்கம். கேரளா மதவிடயத்தில் என்றும் பிரமிக்க வைக்கும் பூமி என்பேன். ஆனால் நாம்தான் ஆச்சாரங்களை அதிகம் பின்பற்றாமல் நெகிழ்ச்சிப்போக்கில் பயணிக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 20. வணக்கம் சகோ.

  இது குறித்த கல்வெட்டுச் சான்று ஒன்றைத் தேடிய அலுப்பில் இருநாட்கள் கழிந்தன.
  நாளை மறுநாள் மன்னார்க்காடு வருதாக ஒரு திட்டம் இருந்தது. சந்திக்கும் வாய்ப்பிருக்கும் எனக் கருதினேன். திட்டம் மாறியது.
  கல்வெட்டுகள் திருவதாங்கூர் சாசனத் தொகுதியில் இருப்பதாய் நினைவு. இரண்டு தொகுதிகள் காணவில்லை.
  கோயில்கள்,வழக்காறுகள் குறித்த பல தகவல்களை உள்ளடக்கியதாக அத்தொகுதிகள் உள்ளன.
  தங்களின் முனைப்பும் விவரிப்பும் தேங்காய்த் தகர்ப்பும்.............. கண்முன் தெறிக்கின்றன.

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ வணக்கம்.

   தங்கள் முயற்ச்சியை என்னவென்பது! தங்கள் தேடலும் வியக்க வைக்கின்றது சகோ. மிக்க நன்றி.

   அட! மன்னார்க்காடு வருவதாக இருந்தீர்களா...சந்திக்கும் வாய்ப்பு நழுவுகின்றதே...எப்போது தாங்கள் வரும் திட்டம் இருந்தாலும் சொல்லுங்கள் சகோ. நாம் சந்திப்போம்...ஆவலுடன் இருக்கிறேன்...(றோம் தான் ஆனால் இருவரும் வேறு வேறு இடங்களில் இருப்பதால்...)

   நாங்களும் முயற்சிக்கின்றோம்.

   மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான , ஆர்வமிக்க கருத்திற்கு.

   நீக்கு
 21. அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.

  வித்திதியாசமான ஒரு வழிபாட்டு முறைமையை விளக்கியமை சிறப்பு. 12,000 தேங்காய்களை உடைத்த நம்பூதிரிக்கு அடுத்து 12 நாட்களுக்கு தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தாலும் அவரின் புஜங்களின் வலி போகுமா?

  பகிர்வுக்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் என்ன செய்வார்களோ. ஒருவேளை கேரளத்தில் ஆயுர்வெத மசாஜ் புகழ்வாந்தது ஆயிற்றே அப்படிச் செய்து கொள்வார்களோ? அவர்களை நேரில் கண்டால் கேட்கலாம்...இதுவரை நிகழ்வைக் கண்டதில்லை நேரில்...நான் இருக்கும் பகுதி - நிலம்பூர் கோயில் இங்கு கொடுத்துள்ளோம். கோயில் தெரியும் ஆனால் நிகழ்வைப் பார்த்ததில்லை. இங்கு தேங்காயெறி சகஜமாக நடக்கும் என்பதால் பெரும்பாலும் பேசப்படுவதில்லை என்று தோன்றுகின்றது...

   மிக்க நன்றி கோ..

   நீக்கு
 22. பாசுபதாஸ்திரம் அளித்த கதை தெரியும் எனினும் வேட்டக்கொரு மகன் பற்றி இன்றே அறிந்தேன். பகிர்வுக்கும் அரிய செய்திகளைத் தந்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

  பதிலளிநீக்கு