வியாழன், 8 அக்டோபர், 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இவ்வெழுத்தாளர்களுக்கு -2 !!

எழுத்தாளர்களில் நல்ல ஒரு சதவிகிதத்தினர் சமூகநலனை மனதிற் கொண்டு எழுதுபவர்களே. கலை, கலாச்சாரம், கல்வி, விளையாட்டு, அரசியல் அடாவடிகள், மூட நம்பிக்கைகள், சாதி மதக் கலவரங்கள் என்று சமூகத்தோடு தொடர்புடையவற்றைப் பற்றி அவர்கள் எழுதுவதுண்டு.  அவர்களது இனம், மொழி, மதம், அரசியல் தொழில் வாழ்க்கைச் சூழல், இறையுணர்வு போன்றவைகள் இடையிடையே அவர்களது கருத்துகளின் கழுத்தைப் பிடித்து இறுக்கும் என்றாலும், அவர்களது படைப்புகள் எல்லாம் பெரும்பாலும் மனிதம் போற்றுபவையாகவே இருக்கும். அதே நேரத்தில், எல்லாக் காலகட்டத்திலும் அதிகார வர்கத்திற்குப் பயந்தும், பணம் மற்றும் பதவிக்காக மட்டுமே எழுதும் எழுத்துத் தொழிலாளர்கள் இப்போது நம்மிடையே இருப்பது போல் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். 


அப்படி, எழுத்துத் தொழிலின் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்று, காற்றுள்ள போதே அதற்கேற்பத் தூற்றி, லட்சாதிபதியானவர்களில் ஒருவர்தான் அமிஷ் திரிபாதி.  சிவபெருமானைப் பற்றிய மூன்று புதினங்கள் எழுதி வெற்றி வாகை சூடிய அவர், இப்போது ராமனைப் பற்றிய “சயோன் ஆஃப் இக்ஷ்வாகு” (Scion of Ikshvaku) எனும் புத்தகத்தை வெளியிட்டு புரட்சியே செய்திருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, இதுவரை, இப்புத்தகத்தின் 25 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டிருக்கிறது.  ராமனுக்குப் பெருமை சேர்க்க கடிவாளமின்றி ஓடிய அவரதுக் கற்பனைக் குதிரை, ராவணனை தசரத சக்கரவர்த்திக்கு வரி வசூலிக்கும் ஒரு வைசிய வியாபாரியாக மாற்றியதை நினைக்கையில் மனதிற்கு மிகுந்த வலி ஏற்படுகிறது.  இந்தியாவில் ராம ராஜ்யம் கொண்டுவர இருப்பவர்களின் மனதைக் கவர இப்படியெல்லாம் எழுதுவது அவசியம் என்று நினைத்திருக்கலாம்.

Mohammed Akhlaq
முகமது அக்லாக்

ஆனால், உத்தரப்பிரதேசம் தாத்ரியில் பசுவின் இறைச்சி உண்டதால்  கொலையே செய்யப்பட்ட, பாவம் அந்த முகமது அக்லாக்கிற்கு (50வயது), ராம ராஜ்ஜியமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் தெரியாமல் போய்விட்டது. இதனிடையே நுழலும் தன் வாயால் கெடும் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு என்பவர், தாத்ரியில் நடந்த அந்தப் படுகொலை பற்றிப் பேசுகையில், தான் பசு இறைச்சிச் சாப்பிடுவது உண்டு என்றும், இனியும் சாப்பிடத்தான் செய்வேன் என்றும் சொல்லி புலி வால் பிடித்திருக்கிறார்.  பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் பசு இறைச்சி சாப்பிடும் அவரது கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள். 

டாக்டர் கே எஸ் பகவான்.

இப்படி உயிருக்கு அஞ்சாது தன் அபிப்ராயங்களைச் சொல்லுபவர்களுக்கிடையில், கட்ஜு போன்ற நீதிபதிகள் மட்டுமல்ல சில எழுத்தாளர்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கே எஸ் பகவான். அது போலவே இந்து மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, டாக்டர் கல்புர்கி போன்றவர்கள். இவர்களெல்லாம் பெரியார் சொன்னது போல் இறைவன் பெயரால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று சாதி பேசி, மனிதர்களிடையே காட்டப்படும் அநீதிகளுக்கும், அக்கரமங்களுக்கும் எதிரே குரல் கொடுத்தவர்கள்.

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் புண்ணியம் பெருவீர்கள், தோல்வியாதிகள் நீங்கும் என்றெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் சொல்லவே மாட்டார். அப்படி ஏதேனும் இறைவன் சொல்கிறார் என்றால் அது சுயநலவாதிகளான சில மனிதர்களால், அவர்களது நன்மைக்காக உருவாக்கப்பட்ட இறைவனாகத்தான் இருப்பார் என்ற உண்மையை கர்நாடக மக்களிடம் சொன்னவர்கள்தான் இவர்களெல்லாம்.

இமயம் முதல் குமரி வரை சாதி சம்பிரதாயம் பரவத் தொடங்கிய 12 ஆம் நூற்றாண்டிலேயே, அதை எதிர்த்துக் குரல் கொடுத்த பசவன்னா வாழ்ந்த கர்நாடகத்தில்தான், டாக்டர் கல்புர்கி, இது போன்ற கருத்துக்களைச் சொன்ன ஒரே காரணத்திற்காகக் கொல்லப்பட்டிருக்கிறார். பசவன்னாவின் படைப்புகளை 18 பாகங்களாக வெளியிட்டு அவரது கனவான சாதியில்லா சமூகம் வளர வேண்டும் என்று விரும்பிய டாக்டர் குல்பர்கி, பசவன்னாவை இழிவுபடுத்திவிட்டார் என்றுக் குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டது வியப்பளிக்கிறது. 

இப்படித்தானே, கொங்கு நாட்டவரின் வரலாற்றுச் சிறப்பை உலகறியச் செய்த பெருமாள் முருகன், “சாமிப் பிள்ளைகளைப்” பற்றிப் பேசியவுடன், அவர் கொங்கு வெள்ளாளர்களின் விரோதியானார். இப்படி, முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தகர்கள் கண்டிப்பாக இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிலவச் செய்துவிடுவார்கள் சந்தேகமே இல்லை.  சாதிகள் ஒழியாது!!! கட்சிகளாய் மாறிவிட்ட சாதிகளை இனி ஒழிக்கவே முடியாது. முன்பெல்லாம் சாதி சம்பிரதாயம் பாராட்டிய உயர் சாதியினரான பிராமணர்கள் மற்றும் ஷத்திரியர்கள் என்ற நிலை போய் இப்போது அது பிற்பட்டவர்களும் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். அப்போதுதானே, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல்தான் நாங்கள் என்று சொல்லித் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.  அப்படி நடக்கும் போது, அவர்களுக்கு மேல் முற்பட்டோர் என்ற ஒரு வர்கம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வது போல்தானே ஆகிறது.  ஏன் இப்படி நம் தலையில் நாமே மண் அள்ளிப் போட வேண்டும்? என்பதை எப்போது உணர்வார்களோ? 
bபசவன்னா

சாதியை ஒழிக்க முயன்ற பசவன்னாவின் சிஷ்ய கோடிகள் கர்நாடகத்தில் லிங்காயத்துகள் ஆனது போல், கேரளத்தில் சாதியை எதிர்த்த எழுத்தச்சனின் சிஷ்யர்கள் எழுத்தச்சன் எனும் சாதியினர் ஆகியிருக்கிறார்கள்.  “ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இறைவன்” என்று சொன்ன ஸ்ரீநாராயண குருவோ பிற்பட்டவர்களான ஈழவ சாதியினரின் குருவாக மட்டும் ஆக்கப்பட்டும் இருக்கிறார்.  ஒரு போதும் இந்து மதத்தில் சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்ததால் தானோ என்னவோ சாதிக்கு வித்திட்ட மனுஸ்மிருதியை எரித்த டாக்டர் அம்பேத்கர் லட்சக்கணக்கான தன் சிஷ்யர்களை எல்லாம் சாதி பேசாத, சாதி பாராத புத்த மதத்தவர் ஆக்கியேவிட்டார். 

இஸ்லாம் மதத்தில் உடலெடுத்திருக்கும் மத தீவிர வாதிகளின் இயக்கமான பொக்கோஹராம் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் போன்றவை போல் இந்தியாவிலும் உடலெடுத்திருக்கும் இந்துமத தீவிரவாதிகளின் இயக்கங்கள் டாக்டர் கல்புர்க்கிக்குப் பின், டாக்டர் கே எஸ் பகவானை கொல்லப்போவதாய் மிரட்டி இருக்கிறார்கள்.  இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவதோ 1982ல் சங்கராச்சாரியாரைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் தான்.  இதுவரை 18 பதிப்புகள் வெளியான அப்புத்தகம் இந்தி, ஆங்கிலம், தமிழ், மளையாளம், மராத்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இங்குதான் ராமராஜ்ஜியம் கொண்டுவர முயல்பவர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து போகிறேன்.  “தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே” (தியானித்து உன்னுள் உறையும் இறைவனைக் காண்க) எனும் சைவ சித்தாந்தத்திலிருந்து உயிர்பெற்ற “அத்வைத” தத்துவத்தை (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே) வட தேசத்தில் பரப்பிய சங்கரர் எப்படிச் சாதியை உருவாக்கியவராக மாற்றப்பட்டிருக்கிறார் பாருங்கள்.

வட இந்தியாவிலுள்ள மீம்சார் கோயிலில் 14 ஆம் நூற்றாண்டில் வேதங்களையும், புராணங்களையும் சம்ஸ்க்ருத மொழியில் மொழியாக்கம் செய்த போது எவ்வளவு சாமர்த்தியமாக நம் முன்னோர்கள் அருளிய தத்துவங்களுக்கு இடையே தங்களது இனத்திற்கு நன்மை பயக்க வேண்டியவைகளைத் திணித்திருக்கிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிசங்கராசாரியாரின் தத்துவங்களுக்கிடையேயும் சாதி சம்பிரதாயத்தை திணித்து விட்டார்களே! அவர்களது திறமையையும், சம யோஜித புத்தியையும் பாராட்டியே தீரவேண்டும்.!

புத்தகம் எழுதியதோடு நிறுத்திவிடாமல் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கே எஸ் பகவான் பகவத் கீதையைப் பற்றிப் பேசுகையில், 9 ஆம் அத்தியாயத்தில், 32 ஆம் ஸ்லோகத்தில், ஸ்ரீகிருஷ்ணன்,  “எல்லா பெண்களும், எல்லா சூத்திரர்களும், எல்லா வைசியர்களும், பாவம் செய்தவர்களே என்று சொல்லுவதாகவும், உண்மையிலேயே பதினாராயிரம் பெண்களுடன் வாழ்ந்த ஸ்ரீகிருஷ்ணன் தான் பாவி என்றும் சொல்லிவிட்டார். போதாதற்கு வால்மீகி அவர் எழுதிய ராமாயணத்தில் ஓரிடத்திலும் ராமனை இறைவனின் அவதாரம் என்று சொல்லவே இல்லை என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார். கூடவே ராமன் நாட்டை ஆண்டது 12 பிராமண ப்ரோகிதர்களின் உதவியோடு அவர்களது அறிவுரைப்படி என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படிச் சொன்ன அவரை எப்படிக் கொல்லாமல் விடுவது? சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்றீனுக்கும், இஸ்லாம் மத தீவிரவாதிகள் “பத்வா” அறிவித்து அவர்களைக் கொல்லக் காத்திருப்பது போல், 37ஆண்டுகள் மைசூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் பணியாற்றிய, ஏராளமான ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு நடத்திய, மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவரும், சமூக சீர்திருத்த வாதியுமான மனிதம் போற்றும் டாக்டர் கே எஸ் பகவானையும் கொல்லப்போவதாக இந்துமத தீவிரவாதிகள் மிரட்டியிருக்கிறார்கள்.  அச்சமின்றி நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கர்ஜிக்கும் இந் நக்கீரன் பகவானைப் பாராட்டுவோம்.

இப்படி எழுத்தாளர்களைக் கொன்றும், கொலை செய்வோம் என்று மிரட்டவும் செய்யும் எழுத்துச் சுதந்திரம் இல்லாத இந்நாட்டில் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற விருதுகள் வேண்டவே வேண்டாம் என்று 6 கன்னட எழுத்தாளர்கள் கன்னட சாகித்திய பரிஷத்திற்கு அவைகளை திரும்பக் கொடுத்தே விட்டார்கள்.  அதுபோலவே சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்களான உதய் ப்ரகாஷும், நயந்தாரா செகாலும், அசோக் வாஜ்பேயும் அவர்களது விருதுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இப்படி எழுத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதும், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களைக் கொல்லுவதும் தான் ராமராஜ்ஜியம் என்றால் அப்படிப்பட்ட ராமராஜ்ஜியம் இந்தியாவில் வராமல் இருப்பதே நன்று. கூடவே காவல் துறையின் பாதுகாப்புடன் வாழும் டாக்டர் கே எஸ் பகவானுக்கு மன நிலை பிறழ்ந்த மத தீவிரவாதிகளிடமிருந்து ஆபத்தேதும் வராதிருக்க வேண்டும்.

19 கருத்துகள்:

 1. வெளிப்படுத்தும் நல்ல கண்ணோட்டங்களே
  வெளியீட்டில் புரட்சியை ஏற்படுத்துகின்றன
  எடுத்துக்காட்டான படைப்பாளிகள்

  பதிலளிநீக்கு
 2. மதவாத உச்சம் இது இதானால் இலாபம் அடைவது ஒரு சிலர் என்றாலும் பிரிவினை அதிகமாகும்! அப்புறம் ராம ராஜ்ஜியம் கோவிந்தா தான் ஆனாலும் நாட்டினை கொதிநிலையில் வைக்க நினைக்கும் ஆட்சிபீடத்துக்கு இது ஒரு உந்து சக்தி!

  பதிலளிநீக்கு
 3. சாதிகள் கட்சிகள் ஆனதால் அழிக்க முடியாது....மன வேதனை தரும் விசயம்.
  அறியாத பல தகவல் அறிந்துகொண்டேன்
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 4. வன்முறையில் வேர்விடும் கலாசாரம் எங்கும், என்றும் நல்லதைச் செய்யாது. கூட்ட வன்முறை தலைவிரித்தாடத் தொடங்கும். இவை ஆரம்பத்திலேயே சரி செய்யப் படா விட்டால் எல்லோருக்கும் கெட்ட பெயர்.

  பதிலளிநீக்கு
 5. டாக்டர் கே எஸ் பகவான் அவர்களைப் போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 6. தமிழ் மணம் வாக்குப் பட்டையினைக் காணவில்லையே,

  பதிலளிநீக்கு
 7. நல்லதோர் கட்டுரை....

  அனைத்திலும் ஆதாயம் தேடும் காலமிது.

  பதிலளிநீக்கு
 8. மிக நேர்த்தியான பதிவு. சமீப காலத்தில் எழுத்துத்துறையில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டிர்கள்.மிக அருமை!
  த ம 5

  பதிலளிநீக்கு
 9. ரத்தத்திலேயே ஊறி இருக்கும் சாதி உணர்வுகளுக்கு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் மதவாத அரசியல் வாதிகளும் காற்றூதி வெறுப்பு நெருப்பை வளர்க்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 10. பகவான் அவர்களின் உயிர் காக்கப் பட வேண்டும் ,அவரின் விழிப்புணர்ச்சிப் பிரச்சாரம் தொடர வேண்டும் என்பதே ,இந்த பகவான்ஜியின் விருப்பமும் :)

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு அலசல் பதிவு மதவாதத்தால் பலன் ஒருசில அரசியல்வாதிகளுக்கே.... மக்களுக்கு அல்ல....
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 12. மன நிலை பிறழ்ந்த மதத் தீவிரவாதிகளால் -
  மனிதத்திற்கு எவ்வித ஆபத்தும் நேராதிருக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 13. ஏன் இப்படிச் சீரழிகிறது பாரதம். ராமபிரான் அசுரர்களைத்தானே கொன்றார். இவர்கள் மனிதர்களாய்யே அழித்துபவிடுவார்கள் போலிருக்கிறதே.

  பதிலளிநீக்கு
 14. தைரியமான எழுத்தாளர்கள்தான்! அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதியும் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்
  அண்ணா.

  சிறப்பான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள். த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 16. இதையும் வெளியிடுங்கள். முத்துநிலவன் புகழ் ஓங்குக!

  முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

  முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

  பதிலளிநீக்கு
 17. அமீஷின் பழக்கமே இதுதான்.முன்பு சிவா ட்ரயாலஜியில் சிவன்! இப்போது ராமன்!

  பதிலளிநீக்கு
 18. பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள்..அதே போல இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் இதன் புண்ணியத்தையும் அடைவார்கள்.......

  பதிலளிநீக்கு