புதன், 15 ஜூலை, 2015

தூறல்கள்….

ஆசிரியரின் பேரன்களும், பேத்திகளும்

யதார்த்த வாழ்வியல்
தத்துவ மழையின் தூறல்கள்
என் மேல் பன்னீராய் தூவிட
நிமிர்ந்து கண்ணுற்றேன்
என் வாழ்க்கைப் பரிமாணத்தின்
குறுங்கோணங்கள்
மாறிடத் துடிக்கின்றன
விரி கோணமாய் !
   என்னடா இது தில்லைஅகத்திலிருந்து கவிதை? வியப்பு இல்லையா? வலை நண்பர்கள்/சகோதரிகள் பலரும் கவிதைகளில் கலக்கி வரும் போது அவர்களுக்கு நாங்கள் நிகராக வர இயலாதுதான். தூறல்கள் எனும் இப்புத்தகத்தை வாசித்ததும் மனதில் எழுந்த வரிகள். இது விமர்சனமல்ல. இப்புத்தகத்தில் முழுவதும், ஆழ்கடலில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்துகள் போன்ற தத்துவ முத்துகள்.  இந்தத் தத்துவ முத்துகளில் பல ஆலங்கட்டி மழை போல “ணங்க்” என்று தெறித்து விழுந்து, தலையில் குட்டி, “இதைக் கொஞ்சம் கவனி” என்று சொல்லுகின்றன.  அவற்றில் சிலவற்றை நாங்கள் இங்கு பகிர்கின்றோம்.

தத்துவம் என்றதும், ஏதோ புரியாத மொழி என்றோ, மத சம்பந்தப்பட்ட ஒன்று என்றோ,  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் மூளைக்கு எட்டாத ஒன்று என்றோ நினைத்து விட வேண்டாம். ஏனென்றால், மிக நுணுக்கமான சிந்தனையாளர்களுக்குக் கூட தத்துவங்கள் என்றால் ஒவ்வாமை உண்டு. ஆனால், இந்தப் புத்தகத்தில், வாழ்வியல், அனுபவ தத்துவங்களே. இதோ ஆசிரியது வார்த்தைகள்.

“வெவ்வேறு காலகட்டங்களில், சூழல்களில், பல்வேறு பாதிப்புகளில், மனதளவில்-என் குறுகிய எல்லைக்குட்பட்டு, நான் உணர்ந்த ஒரு சில, இங்கே உரத்த சிந்தனைகளாகி உங்கள் பார்வைக்கு வருகின்றன.  யாருக்கும் இவை அறிவுரையோ, உபதேசமோ, பிரச்சனைகளுக்குத் தீர்வோ நிச்சயமாக அல்ல – அந்தக் குல்லாய் எனக்குப் பொருந்தாது”

அவரது சமூகக் கவலையில் நம்மையும் பங்கேற்க வைக்கின்றார்.  அதில் “நான்” என்று அவர் சொல்லியிருப்பது, அந்த நான் அவரை மட்டும் குறிப்பது அல்ல அதை வாசிக்கும் நாமும்  அந்த “நான்” ல் நம்மைப் பொருத்திப் பார்ப்போம், பங்கேற்போம் என்ற நம்பிக்கையில். அதில் அவர் வெற்றியும் கண்டிருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.

“போய்விட்ட வாழ்க்கை திரும்ப வாழக் கிடைத்தால் எல்லோருமே வேறுவிதமாகத்தான் செயல்படுவார்கள்! ரொம்ப யதார்த்தமானது இது – “நடக்காது” என்று தெரிவதால்!” என்று ஆரம்பத்தில் சொல்லி, உண்மை இனிக்கட்டுமே என்கிறார். உண்மைதான் இல்லையா? ஆனால் உண்மை கசக்கின்றதோ?!

“கீழே விழுந்து விடுதல்” அடிக்கடி நடக்கின்றது. உடல் விழுவது இல்லை; மனம்! பயிற்சி போதாது!” எனும் அவரது வார்த்தைகள் நம் ஒவ்வொருவரது மனதிற்கும் சொல்வதாக இருக்கின்றது.

“அடுத்ததைப் பாருங்கள். பொறி! “பிளவு படாத ஒரே மனம் யாருக்காவது சாத்தியமாகி இருந்திருக்குமா? “மகான்கள்” என்கிறார்களே, அவர்கள் உட்பட?” யாராவது இதற்கு பதில் சொல்ல முடியுமா? முடியாது!

மனித உறவுகளைப் பற்றிப் பேசும் போது வார்த்தைகள் நச். “மனித உறவுகளிலேயே மிக உயர்வானது எது? “நீ யாரோ, நான் யரோ, நிலை தான். உறவுக்கும் பல தகுதிகள், அளவுகோல்கள் உண்டு. பணம், அந்தஸ்து, செல்வாக்கு இவற்றுக்கு அங்கே முக்கியத்துவம் அதிகம்.”

“புரிந்து கொள்வது” என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்வதே இயல்கிறது. ஒருவருக்குச் சரியெனப்படுவது இன்னொருவருக்குத் தவறாகவே படுகிறது.” இது நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறது. நமது புரிந்து கொளல் எந்த அளவு என்று! ஆம், “கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டால், ஒத்துப் போகாததோடு மட்டுமல்லாமல், பிணக்குகள், கோபம், வெறுப்பு எல்லாமே தலை தூக்கிவிடுகின்றன”.  நட்பு, மனித உறவு என்பது வேறு, கருத்து வேறுபாடு வேறு என்பதை நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைதானே!

     “குடும்ப வாழ்வில் தகுதி இழப்பு என்பது வாழ்வின் பல கட்டங்களில் நேர்கின்றது. உத்தியோகத்தில் “ரிட்டையர்மென்ட்” என்று அதற்குக் கௌரவமான பெயர் சூட்டியிருக்கின்றார்கள். சுய கௌரவம், தன் மதிப்பு என்பதெல்லாம் இப்போது கெட்ட வார்த்தைகள். முதுமைக்கு ஒரு நிரந்தர அடையாளம் உண்டு – “மழை எருமை” என்பது மிகப் பொருத்தமான உவமை."

      “உறவுகளும், நட்புகளும் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. உறவுகளை விட நட்புக்கு கூடுதல் சலுகை எப்போதும் உண்டு. இங்கே மன நெருக்கம் இயல்பாக இருக்க முடியும். ஆரோக்கியமற்ற சில எதிர்ப்பார்ப்புகள் எளிதாகக் கசப்பை உணர்த்துகின்றன. இதன் பாதிப்பு உறவில் அதிகம். ஆனால் நட்பில் பாதிப்பு அதிகம் இல்லை. என்றாலும் இரண்டும் தும்பும், வாலும் போல, ஏதேனும் ஒன்று வாழ்வில் தேவைப்படுகின்றது பற்றிக் கொள்ள” இதை வாசித்த போது, எங்களுக்கு ஒரு நல்ல வாசகம் முகநூலில் வாசித்தது நினைவுக்கு வந்தது.

“உறவினால் ஏற்படும் அன்பை விட அன்பினால் ஏற்படும் உறவு உன்னதமானது”

“மனிதத்துவம், நல்லொழுக்கம், அறநெறிச் சிந்தனைகள், ஆழ்ந்த கல்வி, தன்னடக்கம், வறுமையிற் செம்மை, வாய்மை, தன்னல மறுப்பு – இவை சமூக அந்தஸ்து பெறுவதில்லை.  இவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். இவர்கள் இருக்கும் இடம் தெரியாது. எல்லாமே அரசியலாய் இயங்கும் ஒரு சமூக மாற்றமே நாம் “முன்னேற்றம்” என்ற தவறான பெயரிட்டு அழைக்கும் இன்றைய நிலை” முன்னேற்றம் என்பதற்கான வார்த்தைகள் சாட்டையடி இல்லையா?!

“வாழ்வில் இலக்குகள் வேண்டும், சுயஅலசல் வேண்டும். நமக்கு நாமே ஒரு இலக்குமணக் கோடு இட்டுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிச் செல்பவர் அடுத்து “ராமனுக்கும் அக்னிப் பிரவேசம் தேவைப்படுகிறது. ஏனெனில் சலவைத் தொழிலாளர் புகார்கள் நிரந்தரமானவை, சலனப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்” என்று பெரிய உண்மையை இப்படிப் போகிற போக்கில் அநாயாசமாகச் சொல்லிச் செல்கின்றார்.

      நடிப்புச் சுதேசிகள் என்று எப்படிச் சொல்லுகின்றார் பாருங்கள் நமது மனதை அப்படியே சொல்லுவது போல.

ஆன்மீகம் ரொம்பத் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்ற வார்த்தையாகியிருக்கிறது. பேசுகிறவர்கள் தங்களின் போலித்தனங்களுக்கான ஜிகினா மேக்-அப்புடன் பொன் மொழிகளை உதிர்க்கிறார்கள். எரிச்சலாகிறது. கோவில், ஆண்டவன், ஒழுக்கம், ஈகோ – விளையாட நிறைய சொற்கள் இருக்கின்றன. ஏதாவது ஒன்றிரண்டு போதும்.  உதைபந்துதான்!

“முற்பிறவி-மறுபிறவி” என்றெல்லாம் பயமுறுத்தல்கள் நிறைய.  எவருக்கும் எதுவும் தெரியாது.  ஆனால் எல்லாம் தெரிந்தது போல பேசுவது சுற்றிலும் அன்றாட ஜோக். சொர்க்கம், நரகம் லிஸ்டில் பல “மெனுக்கள்” தயாராக வைத்திருக்கிறார்கள். எல்லாம் பகவான் செயல் என்பதற்கு மேல் அப்பீல் இல்லை! கழட்டிக் கொள்ள, பொறுப்பு ஏற்காமல் இருக்க! ரொம்ப சாதகமான பாதுகாப்புக் கருவி இந்த மனப்பான்மை. போட்டி வியாபாரிகள் பகுத்தறிவுக் கடை விரித்து வணிகம் நடத்துகிறார்கள்”

“விரதம் என்பது எதன் குறியீடு? மன வலிமைக்கான நிரூபணம் என்ற அளவுக்கு சரிதான். வேறு பயன்கள், விளைவுகள் என்ற கனவுகள் வேண்டியதில்லை. அவை பொய்த்துவிடும். அது ஒரு போலி மனப்பான்மைதானோ? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, எது ஒன்றைக் கண்டோ அஞ்சி, எதிலிருந்தோ விலக நான் இடையே விரிக்கும் கௌகரியமான திரைதானே?”

அப்பா, உங்களுக்கு எங்கள் பொக்கே! இந்த வரிகளுக்கு! நீங்கள் இருக்கும் முகவரிக்கு மானசீகமாக வந்தடையும்!

 “சுயம் எத்தனை பேரிடம் இருக்கிறது. யாராவது ஒருவரை “ரோல் மாடலா”க்க் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம்? தன்னம்பிக்கைக் குறைவா, தகுதிப் பிரக்ஞை இல்லாததா? “மூட்” என்பது ஒரு வியாதி. பல வேலைகள் முடிக்கப்படாமல் சோம்பிக் கிடப்பதற்கும் இதுவே காரணம். சுகம் காணும் மனோபாவம்”  நெற்றிப் பொட்டில் ஓங்கி ஒரு அடி கொடுத்தது போல் இருந்தது.

      “சாதனை என்பது சிகரம் தொடுவது அல்ல. சராசரிக்கும் கீழான குடும்பச் சூழலில் பற்பல இன்னல்களுக்கிடையே அடிபட்டு உதைபட்டு கல்விப் படிகளில் மேலே மேலே ஏறி அடுத்த போர்க்களம் நோக்கித் திரும்பும் பாமர மனிதனின் ஒவ்வொரு காலடியும் மகோன்னத வெற்றிதானே! அசாதாரணம் எதுவோ அதுவே வெற்றி என மனித மனம் எடைபோட்டே பழகியிருக்கிறது.”

எவரும், தான் விரும்புவதில் பற்று வைக்க எந்தத் தடையும் இருக்க முடியாது. அதே சமயம், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிற குறைந்தபட்ச பண்பாடு கூட வேண்டாமா?”

      தலைமுறை இடைவெளியைப் பற்றி இவர் என்ன அழகாகப் பொருத்தமாக மிகத் தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார் பாருங்கள்.

  “தலைமுறை இடைவெளி”யாமே? நிஜமா!? ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று உயர்வாக இருக்கும்.  அல்லது கருதப்படும். அதே சமயம் ஒன்றின் தொடர்ச்சிதான் இன்னொன்றாகவும் இருக்கும். இருக்க முடியும். பெயர் மாறக் கூடும், வடிவம் அதே.

“பேரன் பேத்தி முன்னேற்றம் தாத்தா பாட்டியை இயல்பாகப் பூரிக்க வைக்க வேண்டும்.  எல்லா இடத்திலுமா?  இல்லை.  சில இடங்களில், இவர்களால் புரிந்து கொள்ளப்படவும் இல்லை, ச்வீகரிப்பதும் இல்லை. அடையவேண்டிய பெருமிதத்தையும் தொலைத்துவிட்டு “இடைவெளி” என்று பொய் பேசுகிறோம்.” 

“தகவல் பரிமாற்ற இடைவெளி மிக அதிகமாக வளர்த்து வைத்திருப்பது நம் அண்மைக்கால சாதனை. பேசவே பலருக்கு அலுப்பு. சிலருக்குக் காசு கொடுக்க வேண்டும்.”

      “ஒவ்வொரு கணத்திலும் நொடியிலும் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் பிறந்து நகர்கிறது. உடனுக்குடன் அந்நேரத்தை அனுபவிக்கத் தெரிய வேண்டும். இதற்கு அந்தந்தக் கணத்தில் மட்டுமே வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.”

      இன்னும் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.  பல கேள்விகளும், கருத்துகளும் நம் சிந்தனையை மிகவும் தூண்டுவதாகவே உள்ளது. முதுமை மனசுக்கல்ல என்பதை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசித்துப்பாருங்கள்! அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். எதை விட, எதை எடுத்துக் கோர்த்து இங்கு தர என்ற மனக் குழப்பத்தில், ஒரு சில மட்டுமே இங்கு.  இன்னும் பல இருக்கின்றது, அதுவும் மிகவும் சுவாரஸ்யத்துடன். ஏற்கனவே இடுகை பெரிதாகிவிட்டது.  நமக்கோ சுருக்கித் தரத் தெரியாது. அதுவும் இப்புத்தகத்தை எப்படிச் சுருக்கித் தருவது என்ற தடுமாற்றம். என்றாலும் இறுதியாக ஒன்று..

      “பெட் காஃபியோடு அன்றைய தினசரியையும் பார்க்காவிட்டால் பலருக்கும் தலை சுக்கல் நூறாகி விடும். அதுவும் எம்மாதிரி செய்திகள் நம் தகவல் ஊடகங்களின் தர்ம கைங்கர்யம்?  கொலை, கற்பழிப்பு சாலை விபத்து, லஞ்சம், நடிகைகளின் வழுவழுப்பான மர்ம பிரதேச தரிசனம், ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் உளறல்கள், பொய்கள்.

   மனிதத்துவம் வெல்வதாக, மானுடம் ஜொலிப்பதாக எப்போதாவது சில சில செய்திகள் அத்திப் பூக்கும், தனி நபர்களின் சாதனைகளைப் படிக்கும் போது ஏற்படும் மன எழுச்சி சொற்பம் தான். ஒரே ஒரு பக்கம், அல்லது ஒன்றிரண்டு பத்திகளில் அவற்றைக் தேடித் தேடி வெளியிடும் நிருபர்களும், பத்திரிகைகளும் மகத்தான சேவை செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரே ஒரு பக்க அளவு இன்னும் நிறைய நிறைய பெருகினால், நாட்டில் சுபிட்சம் பொங்கும். எது இல்லாவிட்டாலும் படிக்கின்றவர் மனசாவது டெட்டால் போட்டுக் கழுவப்படும்.”

    அப்பா, உங்களது இந்தக் கனவு, உங்கள் அருமை மகன், எங்கள் நண்பர் ஸ்ரீராம் அவர்களால் அவர்களது தளமாகிய “எங்கள் ப்ளாகில்” சனிக்கிழமை தோரும் பாசிட்டிவ் செய்திகள் என்ற தலைப்பில் பல செய்திகளை நீங்கள் சொல்லி இருப்பது போல் தேடித் தேடி வெளியிட்டு, இந்த உலகம் முழுக்க அதை வாசிக்கும் எங்கள் எல்லோரது மனசையும் டெட்டால் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கின்றார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!! நீங்கள்  பார்த்து ரசித்துக் கொண்டிருப்பீர்கள்! மகிழ்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள்! இல்லையா!!?

  மிக மிக உயரிய கருத்துகளைக் கொண்ட, விரிவான சிந்தனைகளையும், கேள்விகளையும் முன்வைத்து, வாசிப்பவர்களின் சிந்தனைகளையும் தூண்டும் விதத்தில் மிகவும் சுவாரஸ்யமாகப் படைத்துள்ளார் ஆசிரியர். இவ்வளவு நேரம் இதை எழுதியவர் யாராக இருக்கும் என்று உங்களுக்கு ஏற்பட்ட புதிருக்கு, மேலே சொல்லப்பட்ட பத்தியில் விடை கிடைத்திருக்கும். ஆம் நம் நண்பர் “எங்கள் ப்ளாக்” ஸ்ரீராமின் தந்தை, ஹேமலதா பாலசுப்ரமணியம்.  என்னடா தந்தை என்கின்றனர்.  பெயரோ பெண்ணின் பெயராக இருக்கின்றதே என்று உங்களுக்கு வியப்பாக இருக்கிறதல்லவா. பாலசுப்ரமணியம் ஹேமலதா என்பதுதான் அவர் பெயர். (அதிலும் தனது மனைவியிம் பெயர்!)

ஆசிரியரின் மனைவி - நண்பர் ஸ்ரீராமின் தாயார்

மனைவியை நேசிக்கும் ஆண்களின் மத்தியில் இவர் உச்சியில் இருக்கின்றார்.  மனைவியின் மீது கொண்ட மட்டற்ற அன்பினால், மனைவியின் மறைவிற்குப் பின் மனைவி ஹேமலதா தன்னுள் கலந்து இருப்பதாக, மனைவிக்கு முன்னிடம் கொடுத்து தன் பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டிருக்கின்றார்.  இந்தப் புத்தகத்தையும் தன் மனைவிக்கே படையல் என்று சொல்லி,

என்னில் தானாக ஒன்றித்
தானே நானாக
இறுதி வரை இணைந்தும்
இன்றுள்ள நானாக என்னை
உருவாக்கி வளர்த்தலில்
பரிவு, பாசத்துடன்
முதற் பங்கேற்றும்.........

அவர்களின் திருவடித் தாமைரைக்கு சமர்ப்பித்துள்ளார்.  நண்பர் ஸ்ரீராம் தன் தந்தையைப் பற்றி மேற்சொன்னவற்றைச் சொல்லி தன் தாயின் நினைவுடன் தன் தந்தை வாழ்ந்து வருவதை விவரித்த போது மனது நெகிழ்ந்துவிட்டது. அப்படிப்பட்ட உயரிய தந்தைக்கு எங்கள் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருப்பவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள். அவரது அணிந்துரையை நாங்கள் எழுதி முடித்த பிறகுதான் வாசித்தோம்.  ஏனென்றால், அணிந்துரை வாசித்துவிட்டால், எங்கள் பார்வையில் கலப்பு ஏற்படுமோ என்ற எண்ணம்தான். ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த முத்துக்களில் சில அணிந்துரையிலும் சொல்லப்பட்டுள்ளதைக் கண்ட போது வியப்பாக இருந்தது!  ஆசிரியரின் முத்துக்களின் வீச்சை நினைத்து! 

ஆசிரியர் - நண்பர் ஸ்ரீராமின் தந்தை

இதை எழுதி முடித்துவிட்டு வலைத்தளத்தை மேய்ந்த போது ஓர் ஆச்சரியம்! சகோதரி தேனம்மை லக்ஷ்மணனின் கவிதை! அந்தக் கவிதை இந்தப் புத்தகத்திற்கு, நாங்கள் எழுதிய கவிதையை விட இன்னும் பொருத்தமாக இருக்குமோ என்று நினைத்து அதை இங்கே பகிர்ந்திருக்கின்றோம்.  நன்றி சகோதரி தேனம்மை!

நீரின் பயணம்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.
(சகோதரியின் இந்தக் கவிதை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

தூறல்கள் புத்தகம் : வெளியீடு: திருமதி. ஹேமலதா பாலசுப்ரமணியம்,
அறப்பணிச் சேவைகள்
14/12 A, மேல அனுமந்தராயன் கோயில் தெரு, மதுரை - 1
தொ. பே: 2346010, அலை பேசி: 9943782928

ஆசிரியர் மதுரையில் இருக்கின்றார்.

முதல் பதிப்பு 2009
விலை : ரூ 40

இந்தப் புத்தகம் விற்பதால் கிடைக்கும் தொகை, அறப்பணிச் சேவைகள்செய்யும் இவ்வமைப்பின் நிதியில் சேர்க்கப்படும்.

இவ்வமைப்பு 2002 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு ஏழை எளியோர்க்கு கல்வி, மருத்துவ உதவி, மிக வறிய நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு நிதி உதவி, முதியோர் இல்லங்கள், அனாதைக் குழந்தைகள் விடுதி, ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் சிலவற்றிற்கு எளிய வகையில் உதவி, வசதியற்றோர்க்கு உடை என்று விரிகின்றது பணிகள். எங்கள் பணிவான வணக்கங்களும், இச்சேவை இன்னும் விரிவடைய வாழ்த்துகளும்!!


40 கருத்துகள்:

  1. நன்றி. கண்கலங்கச் செய்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்! எத்தகைய அருமையான தந்தையை , எங்களையும் எங்கள் மானசீகத் தந்தையாக நினைக்க வைத்துவிட்டீர்கள்! நேரில் சந்தித்து அவரின் பாதம் தொட்டு வணங்கிட ஆசை. என்ன ஒரு விரிவான பார்வை இவ்வாழ்க்கையைக் குறித்து! சுய மரியாதையும், தன்மானமும் உள்ள ஒரு ஒப்பற்ற எளிமையான மாமனிதர். இன்றைய தலைமுறை வரை அவரது பார்வை விரிந்திருக்கிறதே! அசந்துவிட்டோம். பரந்த மனப்பான்மை! வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார். பல பட் பட்டென்று தெறித்து விழுகின்றன. இன்னும் நிறைய எழுத விழைந்தோம் அவரைப் பற்றி நாங்கள் இந்தப் புத்தகத்தின் வாயிலாக, ஒரு ஆசிரியராக. ஆனால் , அவரது மொழிகளை ஓரளவு எழுதி வந்த போது பார்த்தால் இப்போதைக்குப் பதிவு தளும்புவது போல் அவரது வார்த்தைகளே பலதும் பேசிவிட்டது போல் தோன்றியதால் இப்போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றோம். இம் மனிதர் வெளியில் தெரியப்பட வேண்டும்! நண்பராகிய உங்கள் தந்தை என்பதால் அல்ல. ஒரு மனிதராக, சிந்தனையாளராக, எழுத்தாளராக!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. என்னில் தானாக ஒன்றித்
    தானே நானாக
    இறுதி வரை இணைந்தும்
    இன்றுள்ள நானாக என்னை
    உருவாக்கி வளர்த்தலில்
    பரிவு, பாசத்துடன்
    முதற் பங்கேற்றும்.........

    பாசமென்பது இதுதானோ
    அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய
    நூல்களின் வரிசையில் முதலாவதாய்
    இணைத்துக் கொண்டேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். மட்டுமல்ல அதில் சேரும் நிதி பல நல்ல பணிகளுக்கு உதவுவதால் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். !

      நீக்கு
  3. நூல், வாசிப்பு, என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு உள்ளத்து உணர்வுகளை உள் வாங்கிக்கொண்டு அன்பின் வெளிப்பாட்டை பகிர்ந்த தங்களின் பதிவு மனதில் நின்றது. தாங்கள் கூறியது போல படிக்கவேண்டிய நூல். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் மேலான கருத்திற்கு! ஆம் ஐயா கீழே திரு அப்பாத்துரை அவர்கள் சொல்லி இருப்பது போல் பல முறை வாசிக்கலாம், படிக்கலாம்!

      நீக்கு
  4. அட...! நம்ம ஸ்ரீராம் சார்...

    "புரிந்து கொள்வது" பற்றி எவ்வளவு உண்மை... அதே போல் சுயம்...

    அவரது தந்தை தன் துணைவியின் மீதுள்ள அன்பை நினைத்து - கண்கள் கலங்கின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டிடி! நம்ம ஸ்ரீராம் சாரின் தந்தையேதான்...எங்களையும் மனதை நெகிழ வைத்தது...மிக்க நன்றி டிடி

      நீக்கு
  5. முன்பே இந்த நூலை வாசித்து இருந்தாலும் ,எழுதியவர் ,நம்ம ஸ்ரீ ராமின் தந்தை என்பது எனக்கு புதிய செய்தி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அப்படினா உங்கள் எல்லோருக்கும் ஒரு புதிய தகவலைத் தந்திருக்கின்றோம் என்று சொல்லுங்கள்! மிக்க நன்றி ஜி!

      நீக்கு
    2. பகவான்ஜி இதை எங்கு பெற்று வாசித்தார் என்பதை அறிய ஆவல்.

      நீக்கு
    3. பகவான் ஜிக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. வந்ததும் உங்களிடம் தெரிவிக்கின்றோம், நண்பரே!

      நீக்கு
    4. அன்பரே .,
      அந்த புத்தகத்தை , மதுரை மாவட்ட (சிம்மக்கல் )மத்திய நூலகத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் எடுத்து படித்தேன் .வெளியூர் சென்று வீட்டு இப்போதுதான் வந்தேன் பதில் சொல்ல தா மதமாகிவிட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !
      அன்புடன் ,
      பகவான்ஜி

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆம் சார் பலமுறை படிக்கலாம்...அத்தனையும் அருமையான வாசகங்கள்!

      நீக்கு
  7. வணக்கம்,
    தங்கள் விமர்சனம் அருமை,
    வார்த்தைகள் ஒவ்வொன்றும் மழைத்தளிகள் போல் பளீர்,,,,,,
    அன்பால் வரும் உறவு,
    அனைத்தும் அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆம் ! புத்தகம் முழுவதுமே பளீர், நறுக் என்ற வாசகங்கள். யதார்த்தம் தான் ...சில நம்மை அறைவது போல் இருக்கும். சிந்திக்கவும் வைப்பன...

      நீக்கு
  8. நான் ஒரு பயணப் புறப்பாட்டில் இருப்பதால் ஒரு அவசர வாசிப்பில் முதலில் தோன்றியது /
    “போய்விட்ட வாழ்க்கை திரும்ப வாழக் கிடைத்தால் எல்லோருமே வேறுவிதமாகத்தான் செயல்படுவார்கள்! ரொம்ப யதார்த்தமானது இது – “நடக்காது” என்று தெரிவதால்!” என்று ஆரம்பத்தில் சொல்லி, உண்மை இனிக்கட்டுமே என்கிறார். உண்மைதான் இல்லையா/ என்பதைப் படித்தேன் . என் ஒரு பதிவில் ஏதோ ஒரு சுய அலசலில் மீண்டும் இதே வாழ்க்கையை வாழக் கிடைத்தால் நிச்சயம் ஏற்பேன் என்று எழுதிய நினைவு. வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இருந்து விட்டால் ஏன் அப்படியே வாழக்கூடாது. இப்புத்தகம் ஒரு கட்டுரைத் தொகுப்பு போல் தெரிகிறது. மீண்டும் வாசிக்க வேண்டும். வாழ்க்கையை முழுதுமாக வாழ்ந்த மனிதரின் கருத்துக்கள் நிச்சயம் பல உண்மைகளைத் தாங்கி வருகிறது. மூல புத்தகம்வாசிக்க ஆவல் ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் மிக்க நன்றி சார். இந்தப் புத்தகத்தை நாளை துளசி உங்களைச் சந்திக்கும் போது உங்களுக்குத் தர வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். கீதா துளசிக்கு அனுப்பிக் கொடுத்து என்று..கீதாவால் நண்பர் ஸ்ரீராமின் வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆகிவிட்டது. உங்கள் சந்திப்பும் மூன்று நாட்களுக்கும் முன் முடிவானதால்...

      தங்கள் சுய அலசலில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

      ஆம் இது கட்டுரைத் தொகுப்புதான் ஆனால் அத்தனையும் நீங்கள் சொல்லி இருப்பது போல் உணமைகளைத் தாங்கித்தான் வருகின்றது...அருமையான புத்தகம் சார். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது போல, புத்தகம் சிறிய புத்தகம். விலையும் மிக மிகக் குறைவு. ஆனால் அதில் இருப்பதோ அத்தனையும் விலை மதிப்பற்றவை என்பது எங்களது பார்வை. சார்.

      மிக்க நன்றி சார்.

      நீக்கு
  9. ஆசானே,

    புத்தகத்திற்கான சிறந்த அணிந்துரையாக இந்தப் பதிவினைக் காண்கிறேன்.

    நூலின் முகம் என அணிந்துரையைக் குறிப்பதுண்டு.

    அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது இந்தப் பதிவு.

    முகம் பிடித்திருந்தால் அகம் காணத் தோன்றும்.

    தில்லையகம் காட்டும் நூலின் அகம் காணத் தோன்றுகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசானே தங்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒப்பற்ற வார்த்தைகளைப் பெற மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. அதை நாங்கள் உயர்வாகவும் கருதுகின்றோம் பாராட்டுப் பத்திரம் கிடைத்தது போன்று!

      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  10. ஸ்ரீராம் சாரின் தந்தை என்று அறிகையில் ஓர் மகிழ்ச்சி! மிகச்சிறப்பான விமர்சனம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! ஸ்ரீராம் சாரின் தந்தை என்பது மிகவும் மகிழ்வான ஒன்றுதான்....நன்றி நன்றி!

      நீக்கு
  11. நன்றி! ஆசிரியர் மதுரையில் இருப்பதால் வாங்கி படித்திட முயல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நீங்களும் மதுரைதான் இல்லையா. வாங்கி வாசிக்க முயற்சி செய்யவும் நணப்ரே! மிக்க நன்றி!

      நீக்கு
  12. திரு ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் தூறல்கள் நம்மை பல சிந்தனைகளில் நனைய வைக்கின்றன. நீங்கள் எழுதியிருக்கும் வரிகளை வாசித்து வியந்து கொண்டே வருகையில், இந்தப் பெரியவர் நம் ஸ்ரீராமின் தந்தை என்னும் செய்தி இவ்வரிகளை இன்னும் ஆழ்ந்து படிக்க வைத்தது. மறுபடி முதலிலிருந்து படித்தேன். மனைவியின் இழப்பை அவரது நினைவுகளிலேயே கரைந்து கரைந்து உணருகிராறோ? அதனாலேயே அவரது பெயரை வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
    ரொம்பவும் பிடித்த வரிகள்: 'கீழே விழுதல் அடிக்கடி நடக்கிறது; உடல் அல்ல; மனசு விழுதல்!'
    ' “மனித உறவுகளிலேயே மிக உயர்வானது எது? “நீ யாரோ, நான் யரோ, நிலை தான்'. இந்த நிலையை நம்மால் அடைய முடியுமா?
    ஸ்ரீராமின் எழுத்துக்களுக்கு அப்பாவின் ஜீன் காரணமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி மிக்க நன்றி! ஆழமான வரிகள் இல்லையா. முழு புத்தகமும் அப்படித்தான் சகோதரி. நாங்களே பல முறை வாசித்து குறித்துக் கொண்டுதான், எதை விட எதை எழுத என்று தெரியாமல் குழம்பி..எடுத்து .எழுதியவை....இன்னும் நிறைய இருக்கின்றன....

      ஆம் நீங்கள் சொல்லியது போல் அவர் தனது மனைவியின் இழப்பை அவரது நினைவுகளிலேயே கரைந்து கரைந்துதான் வாழ்ந்து வருகின்றார். அதனால் தான் அவரது பெயரையும் அவ்வாறு குறிப்பிடுகின்றார். திரு திருப்பூர் கிருஷ்ணன் கூட தனது அணிந்துரையில், ஆசிரியர் ராமஜெயம் என்று எழுதுவது போல் தனது கடிதத்தில் ஹேமஜெயம் என்றே எழுதுகின்றார் என்று குறிப்பிட்டிருந்தார். அதை திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை பற்றி எழுதிய பத்தியில் குறிப்பிட வேண்டும் என்று குறித்தும் வைத்திருந்து அது எப்படியோ விடுபட்டு விட்டது.

      ஆம் நண்பர் ஸ்ரீராமின் எழுத்துகளுக்கு அப்பாவின் ஜீன் தான் காரணம். இதை நாங்கள் முன்பே ஒரு முறை ஸ்ரீராம் தனது தந்தை ஒரு எழுத்தாளர் என்று குறிப்பிட்டிருந்த போது சொன்னதாக நினைவு. இப்போது அது நன்றாகவே உறுதியாகிவிட்டது இல்லையா...

      மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான, மேலான பின்னூட்டத்திற்கு...

      நீக்கு
  13. அருமையான அறிமுகம் தோழர்
    பிலிப் கார்ட் அல்லது அமேசானில் விற்கலாமே
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நண்பர் ஸ்ரீராமிடம் சொல்லுகின்றோம் உங்களின் கருத்தை..

      நீக்கு
  14. அருமையான விமரிசனம். புத்தகமும் இருக்கிறது. கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் விமரிசனம் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். ஶ்ரீராம் அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் என்பதால் எதுவும் பகிரவில்லை. இப்போது உங்கள் மூலம் அருமையான விமரிசனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. "பாஹே" என்ற பெயரில் எங்கள் ப்ளாகில் வரும் சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் ஶ்ரீராமின் தந்தையுடைய ஆக்கங்களே. "பாலசுப்பிரமணியம் ஹேமலதா" என்பதை "பாஹே" என்னும் பெயரில் எடுத்துக் கொண்டு எழுதி வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆம் சகோதரி நண்பர் ஸ்ரீராம் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் என்பதும் தெரியும். அவருக்கே தெரியாது நாங்கள் இதை எழுதப்போகின்றோம் என்று. அவரிடம் தந்தையின் ஃபோட்டோ கேட்டிருந்தோம். எதற்கு? அதுதான் புத்தகத்தின் பின் அட்டையில் இருக்கிறதே. விமர்சனம் எழுதப் போகிறீர்களா? என்று கேட்டிருந்தார். நாங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று...ஆனாலும் அவர் ஊகித்திருப்பார்.

      சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் அவரது தந்தையின் ஆக்கங்கள் என்பதையும் புரிந்து கொண்டோம். சகோதரி மிக்க மிக்க நன்றி!

      நீக்கு
  15. மனைவிக்கு முன்னிடம் கொடுத்து தன் பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டிருக்கின்றார்.//

    நூல் ஆசிரியர் அருமையான மனிதர் போற்றி வணங்கவேண்டிய உன்னதமனிதர். பாலசுப்ரமணியம் அவர்கள் ஸ்ரீராம் அப்பா என்று தெரிந்து கொண்டேன், நன்றி. ஸ்ரீராமுக்கும் தன் தாயின் மீது மிகவும் அன்பும், பாசமும் இருப்பதை தெரிந்து கொண்டேன் அவர் பதிவுகளின் மூலம்.
    ஸ்ரீராமின் அம்மா அவர்களும் உன்னதமான மனுஷியாக இருக்க வேண்டும், அவர்களுக்கும் என் வணக்கங்கள்.
    துறல்கள் புத்தகம் படிக்க வேண்டும் முழுமையாக என்பதை உங்கள் விமர்சனம் ஏற்படுத்துகிறது., நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆம் நண்பர் ஸ்ரீராமுக்கு அவரது அம்மா மேல் மிகவும் அன்பும் பாசமும் உண்டு அவரது பதிவுகள் பல அதைச் சொல்லும். நீங்கள் சொல்லியிருப்பது அனைத்துமே சரிதான்...மிக அருமையான மனிதர்தான் பாஹே அவர்கள்! மிக்க நன்றின் சகோதரி!

      நீக்கு
  16. தேனம்மையின் கவிதை அருமை, அதன் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு கணத்திலும் நொடியிலும் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் பிறந்து நகர்கிறது. உடனுக்குடன் அந்நேரத்தை அனுபவிக்கத் தெரிய வேண்டும். இதற்கு அந்தந்தக் கணத்தில் மட்டுமே வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.”//

    உண்மையான வார்த்தை. அந்தந்த கணங்கள் போனால் மீண்டும் வராது.

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு வரியும் படித்து,ரசித்து,உணர்ந்து ,உள்வாங்கிய மனத்தின் வெளிப்பாடு,நன்று.ஸ்ரீராம் குடும்பமே சிறந்த எழுத்தாளர் குடும்பம்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  19. தூறல் தான் எனறாலும் முற்றும் நனைந்தேன்! துடைக்க மனமில்லை!

    ஸ்ரீராம் குடும்பமே சிறந்த எழுத்தாளர் குடும்பம்! என்ற பித்தனையா வார்த்தைகள் முற்றும் உண்மை!

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் அண்ணாவின் தந்தையின் புத்தகத்தை மிக அழகாக தங்கள் கவிதையுடன் ஆரம்பித்து தேனக்காவின் கவிதையில் முடித்திருக்கிறீர்கள்...
    அருமையான விமர்சனப் பார்வை....

    பதிலளிநீக்கு
  21. சிலாகித்தும், பாராட்டியும், வாழ்த்தியும், பின்னூட்டமிட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான, மகிழ்வான, நெகிழ்ச்சியான நன்றிகள்.

    இந்த வாய்ப்புக்கு வழி வகுத்த சகோதரி கீதாவுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. இப்புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். சகோ ஶ்ரீராமின் தந்தை என இங்கு கண்டேன். மிக்க மகிழ்வாக இருக்கிறது. அறிமுகம் செய்து காட்டியமைக்கு நன்றி சகோ. தேனுவின் கவிதையையோடு முடித்து இருக்கிறீர்கள்.அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் கீதா..

    பதிலளிநீக்கு