புதன், 1 ஜூலை, 2015

சுரேஷ் கோபி அருவிக்கரை மற்றும், பெருணையில்!....ஜெகதி ஸ்ரீகுமார் அருவித் துறையில்

      மலையாளக் கரையோரத்திலிருந்துக் கொஞ்சம் வம்பு.....

Image result for suresh gopi


      அரசியலும் திரை உலகும் இரண்டறக் கலந்திருக்கும் தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மட்டுமல்ல, அவை ஓரளவு கலந்திருக்கும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை எல்லோரும் ஆர்வமாக கவனிக்கவும், அவற்றைப் பற்றிப் பேசவும் செய்வதுண்டுதான். அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்களைப் பற்றித்தான் இப்பதிவு.

      தமிழகத்தில் இடைத் தேர்தல் நடந்த ஆர்.கே நகரில், இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர்(?!) வெற்றி பெறுவார் என்பது உறுதிதானே?!. கேரளத்தில் அருவிக்கரையில் போட்டியிட்ட, முன்னாள் கேரள சட்டமன்ற சபா நாயகர் அமரர் திரு கார்த்திகேயனின் மகனான, காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதன், 10,063 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.  அருவிக்கரை தேர்தலில், சமீபத்தில் பிஜேபி ஆதரவாளராக மாறிய சுரேஷ் கோபி, பிஜேபி வேட்பாளரான திரு ஓ ராஜகோபாலுக்கு (முன்னாள் மத்திய அமைச்சர்) ஆதரவாகப் பிரச்சாரம் செய்து 3 ஆம் இடத்திலுள்ள பிஜேபியின் ஓட்டை, கடந்த தேர்தலில் கிடைத்த 4000 த்திலிருந்து 33,991 ற்கு உயர்த்தியும் விட்டார்.

மந்நம் பத்மநாபன் சமாதி

      இதனிடையே தேர்தல் நாளன்று சுரேஷ் கோபி பிரச்சாரத்தை முடித்து, அவரது  பிறந்தநாளும் அதுவுமாக சங்கனாச்சேரி அருகே உள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற பின், பெருணையிலுள்ள என்எஸ்எஸ் தலைமையகத்திலுள்ள மந்நம் பத்மநாபனின் சமாதிக்குச் சென்று வணங்கவும் செய்தார்.  என்எஸ்எஸ் என்றதும், நேஷனல் செர்விஸ் ஸ்கீம் என்று தவறாக எண்ண வேண்டாம்.  நாயர் செர்விஸ் சொசைட்டி என்பதன் சுருக்கப் பெயர் தான் அது. கேரளாவில் 24% உள்ள முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் எனும் கட்சியும், 16% உள்ள கிறித்தவர்களுக்கு மாணி மற்றும் மறைந்த ஜேக்கப் போன்றவர்களின் பெயரில் கேரளா காங்கிரஸ் கட்சிகளும் உள்ளது போல் இந்துக்களுக்கு ஒரு கட்சி இல்லை. பெரும்பான்மையான நாயர்கள் காங்கிரஸிலும், பெரும்பான்மையான ஈழவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தான் இருக்கிறார்கள்.  

   இந்துக்களில் ஒரு சிறிய சதவிகிதத்தையேனும் பிடித்து தாங்கள் கேரளத்தில் வேரூன்ற பிஜேபி எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், நடிகரும், பொதுநல சேவகரும், ஜாதியில் நாயருமான, சுரேஷ் கோபியை, பிஜேபி ஆதரவாளராக்கியது.  கேரளத்தில், எஞ்சிய 60% இந்துக்களில் 28% மக்கள் பிற்பட்டோரான ஈழவர்களின் இயக்கமான எஸ்என்டிபி (SNDP) யின் செயலாளரான வெள்ளாப்பள்ளி நடேசன், “முதுகெலும்புள்ள ஈழவர்களே, ஒன்று சேருங்கள்!” என்று சொல்லி ஈழவர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெறுகிறாரோ என்ற சந்தேகத்திலும், கேரளத்திலுள்ள 18% முற்பட்டோர்களான நாயர்களை ஒன்று திரட்டி என்எஸ்எஸின் கீழ் கொண்டு வராவிட்டால் எல்லோரும் பிஜேபியில் சென்று விடுவார்களோ என்ற பயத்திலும் இருக்கும் என்எஸ்எஸ் செயலாளரான சுகுமாரன் நாயருக்கு சுரேஷ் கோபி பிஜேபியில் சேர்ந்ததே பிடிக்கவில்லை.

இதனிடையே சில நாட்களுக்கு முன் நடிகர் நாதிர்ஷா நடத்திய ஒரு நிகழ்ச்சியின் இடையே, திடீரென மேடை ஏறி வந்த சுரேஷ் கோபி பலரைக் கண்டு பேசியும், சுகுமாரன் நாயரை மட்டும் கண்டும், கவனியாமல் சென்ற ஆத்திரத்தில் இருக்கும் அவருக்கு, சுரேஷ் கோபி அவரது ஆளுமையிலுருக்கும் மந்நம் பத்மநாபனின் சமாதிக்கு வந்து வணங்கியது எப்படிப் பிடிக்கும்? அவர் என்எஸ்எஸ்ஸின் பட்ஜெட் பற்றிய விவாதத்திலிருந்ததால் சுரேஷ் கோபி வந்ததோ, வணங்கியதோ பற்றி அவருக்குத் தெரியவராமல் போயிருக்கிறது.  ஆனால், சுரேஷ் கோபி, யாரோ சொல்ல (அந்த யாரோ, சுகுமாரன் நாயரே சுரேஷ் கோபியைப் பழிவாங்க அனுப்பிய ஆள் என்று சிலருக்குச் சந்தேகம் வேறு!) சுகுமாரன் நாயரைக் காண, விவாதம் நடக்கும் ஹாலுக்கு நேராகச் சென்றிருக்கிறார்.  உடனே சுகுமாரன் நாயர் “ஏன் இங்கு வந்தாய்? ஐ டோன்ட் லைக். இங்கு வந்து ஷோ காட்ட வேண்டாம்” என்று சொல்லி விரட்டி இருக்கிறார்.

வெளியே வந்த சுரேஷ் கோபி கொந்தளித்திருக்கிறார்.  பிஜேபி ஆதரவாளர்கள் உடனே கொடும்பாவி எரித்து சுகுமாரன் நாயர்க்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.  இயக்குநர்களும், நாயர் குலத்தவர்களுமான ப்ரியதர்ஷன் மற்றும் மேஜர் ரவி போன்றோர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாகவும், மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல பிரமுகர்களும் அவருக்கு எதிராகவும் பேசி இருக்கிறார்கள்.  நடிகர்களின் இயக்கமான “அம்மா”, “சுரேஷ் கோபி எங்களிடம் அங்கு போவது பற்றி, போகும் முன் அவர் அறிவிக்காததால் நாங்கள் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை”, என்று சொல்லி நழுவியும் விட்டார்கள்.  திரைப்படங்களில் தீப்பொறி வசனங்கள் பேசியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “இதா போயி, இதா வந்நு” என்று சொல்லி கைதட்டல் வாங்கியும், ஏராளமான அநாதைகள் மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு உதவி புரிந்தும், பாரத் அவார்ட் வாங்கியும், எல்லோரது மனதிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சுரேஷ் கோபி ஆழம் தெரியாமல் அரசியலில் காலை விட்டுவிட்டார்.  இனி எல்லாம் விதி வசமே!!

அடுத்த சம்பவம், நகைச்சுவை என்றால் ஜெகதி ஸ்ரீகுமார்தான் என்று எல்லோராலும் சொல்ல வைத்த ஜெகதியைப் பற்றியது.  சில வருடங்களுக்கு முன் கோழிக்கோடு அருகே நடந்த ஒரு கார் விபத்திலிருந்து அதிசயமாக உயிர் தப்பினாலும் பழைய நிலைக்கு வர இயலாத நிலையில் இருப்பவர் ஜெகதி ஸ்ரீகுமார்.  அவரது மகள் (முதல் மனைவியின் மகள்) பூஞ்ஞார் எம்எல்ஏ வும், கேரள அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக உலாவரும் பி சி ஜார்ஜின் மகனை மணந்தவர்.  இரண்டு தினங்களுக்கு முன் பி சி ஜார்ஜ் பூஞ்ஞார் தொகுதியில் எல்லா பாடப் பிரிவிலும் A+ க்ரேட் வாங்கி வெற்றி பெற்ற 10, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா ஒன்றை அருவித்துறை செயின்ட் ஜார்ஜ் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்து அதில் ஜெகதி ஸ்ரீகுமாரை விபத்திற்குப் பிறகு முதன் முறையாகப் பங்கெடுத்து வைத்தும் இருக்கிறார்.

 
பேச இயலாத நிலையில் தந்தை தன் மகளை உலகிற்கு அறிமுகம் செய்தல்

விழாவின் போது, திடீரென, ஒரு இளம் பெண் மேடையில் தாவி ஏறி ஜெகதியின் கையைப் பிடித்திருக்கிறார்.  நிலை குலைந்த பி சி ஜார்ஜ் அப்பெண்ணை மேடையையினின்று  வெளியேற்ற முயன்றும் இருக்கிறார்.  சுற்றிலும் இருந்த கேமராக் கண்கள் உடனே மேடையை மொய்க்க ஆரம்பித்து விட்டன.  “நான் ஒரு பெண்.  என்னைப் பிடிக்க வேண்டாம்” என்று அப்பெண் சொல்லி இருக்கிறார்.  உடனே, பி சி ஜார்ஜ், “அது சரி, நீயா?  சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே?”, என்று சொல்லி அருகே ஒரு நாற்காலியைக் காலியாக்கச் செய்து, அங்கு அப்பெண் அமர உதவி, அங்கிருந்து விலகி விழாவைத் தொடரச் செய்திருக்கிறார். 10 நிமிடம் ஜெகதியின் அருகில் அமர்ந்து அவரது கையைப் பாசத்துடன் பிடித்துப் பேசியிருக்கிறார் அப்பெண்.  ஜெகதியின் முகத்தில் சின்னதாக ஒரு மகிழ்ச்சி படர்ந்ததை எல்லா காமேரா கண்களும் ஒற்றி எடுத்தன. அதன் பின் விடை பெற்று அப்பெண் எழுந்ததும், பேச இயலாத நிலையில் இருக்கும் ஜெகதி தன் உதடுகளைச் சிறிதாகக் குவித்து, முகத்தை அப் பெண்பால் நீட்டி அப்பெண்ணை முத்தமிட்டதையும், தொலைக்காட்சி சானல்கள் ஒற்றி எடுத்து உலகமே அந் நிகழ்ச்சியைக் காணச் செய்துவிட்டன.

      வந்த பெண்ணின் பெயர் ஸ்ரீலட்சுமி.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓ. சசிகலாவிற்கும், ஜெகதி ஸ்ரீகுமாருக்கும் பிறந்த மகள்.  சில கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பது சர்வ சாதாரணம்தானே! ஜெகதியின் விபத்திற்குப் பிறகு அவரிடமிருந்து முன்பு கிடைத்திருந்த அன்பும், பண உதவியும் கிடைக்கப் பெறாதது மட்டுமல்ல, கடந்த மூன்றாண்டுகளாக பல முறை முயன்றும், அவரைக் காணக் கூட முடியாமல் தவித்தவர்தான் ஸ்ரீலட்சுமி.  தக்க தருணம் வாய்த்ததும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எளிதாக பொது மேடையில் திடீரென நுழைந்து தன் தந்தைக்கு அருகே மேடையில் 10 நிமிடம் அமர்ந்து, பேசி,  அதை உலக மக்கள் அனைவரும் பார்க்கவும் செய்து, தானும் ஜெகதி ஸ்ரீகுமாரின் மகளே என்று நிரூபித்தே விட்டார் ஸ்ரீலட்சுமி. 


      இதனிடையே விபத்துக்குள்ளான ஜெகதிக்கு 6 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைத்ததாகவும் அதுதான் இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்றும் பேசப்படுகிறது. அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், “பேசும் சக்தி இழந்த ஜெகதியின் மகள்தான் நான்” என்று எல்லோரையும் நம்ப வைக்க பல முறை முயன்று தோல்வியைத் தழுவிய ஸ்ரீலட்சுமி, குத்துச் சண்டை க்ளைமேக்சில், எதிரிகளை ஒன்று முதல் பத்து எண்ணும் வரை அசைவின்றி விழுந்த இடத்தில் படுக்க வைப்பது போல், தன்னை ஜெகதியின் மகளாக அங்கீகரிக்காத பலரது வாயையும் அடைத்து 10 நிமிடம் பொது மேடையில் தன் தந்தை அருகே அமர்ந்து சென்ற செயல், அவர் ஒரு புரட்சிப் பெண் என்பதை பறைசாற்றத்தான் செய்கிறது.  இதற்குத்தான், Blood is thicker than water”  என்று சொல்லுகிறார்களோ?!  

படங்கள் : கூகுள்

15 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அரசியல் கட்டுரை
    மிகச் சரியாக கேரள அரசியல்
    நிலவரம் குறித்து அறிய உதவியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சுரேஷ் கோபி பற்றிய செய்தியை நாளிதழ்களில் படித்தேன். லட்சுமி தொடர்பான பகிர்வு உணர்வுபூர்வமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீலட்சுமி அவர்கள் ரொம்பவே வெவரம் தான்...!

    பதிலளிநீக்கு
  4. கேரள நிலவரத்தை தெரிந்து கொண்டேன் நன்றி! த.ம 3

    பதிலளிநீக்கு
  5. தம 4
    கேரள அரசியல் விபரத்தை தெரிந்து கொண்டேன் சகோ.நன்றி

    பதிலளிநீக்கு
  6. இந்த ஜகதி ஸ்ரீகுமார் மேல் தகாத நடவடிக்கைகாக ஒரு வழக்கு பதிவு செய்திருபது படித்ததாக நினைவு நிகழ்வுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீ லட்சுமி அவர்கள் செய்த தந்திரம் சூப்பர்! சுரேஷ் கோபியின் அரசியல் பிரவேசம் ஜெயிக்கிறதா பார்ப்போம்! சென்னை தொகுதி கே.ஆர் நகர் இல்லை! ஆர்,கே நகர். அதாவது ராதாகிருஷ்ணன் நகர். அம்மா ஒன்றரைலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  8. //“Blood is thicker than water” // or
    money is thicker than everything?
    அங்கும் நடிகர்கள் இறங்கியாச்சா?

    பதிலளிநீக்கு
  9. கேரள அரசியலைத் தங்களால் அறிந்தேன் நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. கேரள அரசியாலா! அங்கும் தொடங்கி விட்டதா!!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    அண்ணா.

    அறியமுடியாத தகவலை அறியக்கிடைத்தது.. விரிவான விளக்கம் பகிர்வுக்கு நன்றி.. த.ம9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. அப்பனின் ரத்தம் அப்படியே பிள்ளைக்கும் :)

    பதிலளிநீக்கு
  14. கேரள அரசியலிலும் சினிமா! :)))

    தகவல்களுக்கு நன்றி.

    த.ம. +1

    பதிலளிநீக்கு