திங்கள், 13 ஜூலை, 2015

கோழி முட்டை - சைவமா? அசைவமா?

Image result for கோழிப்பண்ணை

பின் குறிப்பு என்று சொல்லி, சென்ற இடுகையில் – காக்கா முட்டை - அந்தச் சிறுவர்கள் கேட்ட அடுத்த கேள்வி..

“அப்ப கோழி முட்டையச் சாப்பிட்டா குஞ்சு வராதுல்லக்கா...அப்ப அது மட்டும் சரியா?” இதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று அடுத்த பதிவில் எழுதுவதாகச் சொல்லி இருந்தேன் இல்லையா?  அந்தப் பதிவுதான் இது.

“எந்த வகுப்பு படிக்கிறீங்க ரெண்டு பேரும்?”

“இவன் ...முத்து 6 ம்ப்பு.....நான் 7 ம்ப்பு..”

“சரி...அப்ப சொல்லறேன்...நீங்க வீட்டுல வளர்க்கற கோழி முட்டை சாப்பிடுறீங்களா? இல்லை கடைல வாங்கி சாப்பிடுறீங்களா?”

“இவன் முத்து வீட்டுல வீட்டுக் கோழி முட்டை, அவன் வீட்டுல கோழி வளர்க்கறாங்க....எங்க வீட்டுல கடைலதான் வாங்குவோம்..”

“சரி, முத்து, உங்க வீட்டுல கோழி மட்டுமா இல்ல வீட்டுல சேவலும் இருக்கா?”

“இருக்குக்கா....நல்லா வெளாடும்...”

“வீட்டுல வளர்க்கும் போது சேவல் இருந்துச்சுனாலோ,  இல்ல கோழிங்க வெளில மேஞ்சு சேவலோட சுத்திச்சுனாலோ, வெளி சேவல் வீட்டுக்கு வந்துச்சுனாலோ, அந்தக் கோழிங்க போடற முட்டைல கோழிக் குஞ்சு வரும்..

 “ஆமாக்கா, எங்க வீட்டுக் கோழிங்க அடை காக்கும். சில முட்டைங்கள அம்மா எடுத்துரும்...சிலது குஞ்சு வரும்...”

“முத்து, குஞ்சு வருதோ இல்லையோ, கோழி முட்டை போட்டாலே, அடை காக்கும்....”

“ஏங்க்கா கோழி முட்டை போட்டாலே குஞ்சு வருமே...”

“அதான் இல்லை....கடைல வாங்கற கோழி முட்டைல கோழிக் குஞ்சு வராது.  ஏன்னா அந்த முட்டை எடுக்கற கோழிப் பண்ணைல, கோழிங்க மட்டும்தான் இருக்கும். சேவல் இருக்காது. அதானால கடைல வாங்கறதுல குஞ்சு வராது...புரிஞ்சுச்சா? எப்படினு நீங்க கேட்டிங்கனா...உங்க அறிவியல் புத்தகத்தக் கொண்டு வாங்க. அதுல உயிரியல்ல என்னெல்லாம் சொல்லிருக்காங்கனு பார்த்துட்டு சொல்லித்தரேன்.”

அவர்கள் யோசித்துக் கொண்டே சென்றார்கள். புரிந்திருக்காதுதான். நான் பாண்டிச்சேரியில் இருந்த போது என் வீட்டருகே கோழி வளர்த்தவர்களுக்கும் நான் இதைச் சொன்ன போது புதியதாக இருந்தது.

 இதை வாசிக்கும் உங்களுக்கு நான் இங்கு சொல்லும் விசயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனாலும் எழுதுகின்றேன். அப்படியும், இப்படியுமா ஒரு பதிவ தேத்திடலாம்னுதான். (துளசிக்கு ரொம்ப மகிழ்ச்சி! ஏன்னா நான் பதிவு எழுதணும்னா ரொம்ப மூட் வேணும். மிகவும் தாமதிப்பேன். இப்ப உடனே போடுவதில்தான்...)

கோழிக் குஞ்சுகள் பிறந்து 20 வாரங்களில் வயதிற்கு வந்து, இனப்பெருக்கம் செய்யத் தகுதி பெற்று, முதல் முட்டை இடும்.

இங்கு ஒன்று சொல்ல வேண்டும்.  கோழிகள் முட்டை இடுவதற்குச் சேவல் அவசியமில்லை.

மனித இனத்தில் பெண்களுக்கு மாதம் தோறும் மாதவிடாய் அதாவது பெண் இன முட்டை வெளியாவது போல் கோழிகளுக்கும் வயது வந்தவுடன் தினமும் வரத் தொடங்கும். அதுதான் முட்டை. ஒரு பெண், ஆணுடன், இனப்பெருக்க விதிகளுக்கு உட்பட்டு, இணைய நேரும் போது குழந்தை உருவாகுவது போல், இந்தக் கோழிகளுடன் சேவல் இணைந்தால், சேவலின் விந்து கோழிகளின் (கர்ப்ப்பை என்று கிடையாது.  முட்டை இருக்கும் உறுப்பு.) முட்டை இருக்கும் உறுப்பில் 7 நாட்களுக்குத் தங்கும்.  அப்படித் தங்க நேரும் நேரத்தில், கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சுகளின் கரு தாங்கி வெளிவரும். 

பெரும்பான்மையான கோழிகள் தினமுமே முட்டை இடும். ஒரு சில ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடும்.  ஒரு சில இனங்கள் வாரத்தில் இரு முறை இல்லை ஒரு முறை இடும்.  ஒரு சில, முட்டையே இடாமலும் போகலாம், அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளால். 

கோழிகள் சேவலுடன் இணைந்து முட்டை இட்டாலும் சரி, இணையாமல் முட்டை இட்டாலும் சரி, தினமுமே இடக் கூடிய கோழிகள், ஒரு முட்டை இட்டதும் அடைகாக்கத் தொடங்கும். அடைகாக்கத் தொடங்கி விட்டால் முட்டை இடாது. இது கோழிப் பண்ணைகளில் அதாவாது அவை கூண்டிற்குள் இருப்பதால், இடம் குறைவு என்பதால் வெளியில் செல்ல முடியாது என்பதால்.  இது வீட்டுக் கோழிகளுக்குப் பொருந்தாது.

வியாபார ரீதியில், .பொதுவாக, ஹேச்சரி எனப்படுவதில் - கோழிகள் சேவலுடன் வளர்க்கப்பட்டு, குஞ்சு பொரிக்கப்படும். ப்ராய்லர் எனப்படுவதில் – கறிக்கு வளர்க்கப்படும் கோழிகள்/சேவல்கள், அதாவது ஹேச்சரியிலிருந்து பெறப்படும் குஞ்சுகள் 6-8 வாரங்கள் வளர்க்கப்பட்டுக் கறிக்கு அனுப்பப்படும். இது ப்ராய்லர் சிக்கன்.  ஹேச்சரியில் குஞ்சுகள் பொரிக்கும் இடங்களில், கோழிகள் தினமும் முட்டை இட வேண்டும் என்பதால் (அடைகாக்கத் தொடங்கிவிட்டால் முட்டை இடாதே!) சேவலுடன் இணைந்து பெறப்படும் ஃபெர்ட்டிலைஸ்டு முட்டைகளை அப்புறப்படுத்தி, கோழிகளை அடைகாக்க விடாமல், இன்குபேட்டரில் வைத்து, அதற்கென்று இருக்கும் குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தில் பொரிப்பார்கள்.  அதாவது குஞ்சுகள் வெளிவரும்.

 முட்டைகளுக்கு மட்டும் என்று கோழிப்பண்ணைகளில் கோழிகள் தனியாக வளர்க்கப்படுவதற்கு, முட்டைக் கோழிகள் என்று சொல்லப்படும். இதற்கும் ஹேச்சரியிலிருந்து கோழிக் குஞ்சுகள் மட்டுமே பெறப்படும்.  சில பண்ணைகளில் ஹேச்சரி, ப்ராய்லர் எலாமுமே இருக்கும். பொதுவாக, கோழிகள் இரண்டு வருடத்திற்குப் பிறகு, முட்டை இடுவது குறையத் தொடங்கிவிடும்.  ஒரு சில இனம் இதற்கு விதி விலக்கு. தொடர்ந்து முட்டையிடும். வயதான கோழிகள் கறிக்கு அனுப்பப்பட்டுவிடும். 

முட்டைகள் வியாபாரத்திற்காக மட்டும் என்றால், அப்படிப்பட்ட  கோழிப்பண்ணைகளில் சேவலை வைத்திருக்க மாட்டார்கள்.  மட்டுமல்ல, கோழிகள் முட்டை இட்டதும் முட்டைகளை அப்புறப்படுத்திச் சேகரித்து விடுவார்கள். அதற்கென்று தானியங்கி இயந்திரங்கள் உள்ளன. இல்லை என்றால் கோழிகள் முட்டையின் மீது உட்கார்ந்து அடைகாக்கத் தொடங்கிவிடும். பாவம் அதற்குத் தெரியாது அந்த முட்டையிலிருந்து குஞ்சு வராது என்று. ஒரு கோழி வருடம் முழுவதும் முட்டை இடும்.  தோராயமாக வருடத்திற்கு 310 முட்டைகள் இடும். (ஒருவேளை ஞாயிறு கோழிகளுக்கு விடுமுறையாக இருக்குமோ?!!!!)

இப்படி, முட்டை வியாபாரத்திற்காக, சேவல் இணையாமல் முட்டைகள் பெறப்படுவதால் தான் (Unfertilized egg) முட்டை சைவம் என்று சொல்லப்படுகிறது. சேவலுடன் இணையாமல் பெறப்படும் கோழிமுட்டை சைவமே!

கோழிகள் முட்டை இட வேண்டும் என்றால் நல்ல வெளிச்சமும், அதற்கு ஏற்ற வெப்பமும் வேண்டும்.  இருட்டிலோ,  சூரிய ஒளி குறைவாக இருந்தாலோ, மழை நேரத்திலோ கோழிகள் முட்டை இடுவதில்லை. அதனால் தான் முட்டைகளுக்காக மட்டும் கோழிகள் வளர்க்கப்படும் பண்ணைகளில், கோழிகளின் கூண்டில் செயற்கை முறையில் அதற்கு வேண்டிய ஒளியும், வெப்பமும் தரும் அளவில் குண்டு பல்புகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.

வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் கூட, வெளிச்சம், வெப்பம் குறைவான நாட்களில் குண்டு பல்பு கட்டித் தொங்க விடலாம். இதைச் செய்பவர்களும் உண்டு.  வீட்டுக் கோழிகளை வெளியில் மேய விடுவதால் சேவலுடன் இணைந்து விடும். தடுப்பது அரிது.  ஒரு முட்டை இட்டதுமே கோழி அடைக்காக்கத் தொடங்கினாலும், அது அவ்வப்போது உணவிற்காக எழுந்து செல்லும் போது, ஒவ்வொரு நாளும் முட்டை இடும் வாய்ப்பு உண்டு. அவை இடும் முட்டைகளை, வளர்ப்பவர்கள் தான் பார்த்துப் பார்த்து எடுத்து வைக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, தங்கள் முட்டைகள் ஃபெர்டிலைஸ்டு முட்டையா இல்லையா என்பது நன்றாகத் தெரியும். ஃபெர்ட்டிலைஸ்டு முட்டை என்றால், அவைகளை அடைகாக்க விடாமல் தடுப்பது மிகவும் கடினம். ஆனால், வீட்டுக் கோழிகளின் முட்டைகள் ஃபெர்டிலைஸ்ட் முட்டையா இல்லையா என்பது அதை வளர்ப்பவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அதை அப்புறப்படுத்திக் கோழிகளின் கண்ணில் படாமல், தங்கள் தேவைக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால், குஞ்சுகள் இறந்து விடும். இல்லை என்றால் அவற்றை கோழி அடைக்காக்க வழி செய்து பெட்டிகளிலோ, கூண்டுகளிலோ வைத்துவிட வேண்டும்.

பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் வெளியில் மேய்ந்து வருவதாலும், சேவலும் வீட்டில் வளர்க்கப்படுவதாலும், முட்டைகள் குஞ்சின் கரு தாங்கி (Fertilized egg) வருவதற்கான சாத்தியம் 99% உண்டு. எனவே தான் முட்டைகள் அசைவம் என்றும் சொல்லப்படுகிறது. ஃபெர்ட்டிலைஸ்டு முட்டைகள், அன்ஃபெர்ட்டிலைஸ்ட் முட்டைகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாததால், புரியாததால் பொதுவாக, முட்டை அசைவம் என்று சொல்லப்படுகிறது.

அப்படிப் பார்த்தால் பாலும் அசைவமே. அது மாட்டின் இரத்தத்திலிருந்து வருவதால். ஒரு சிலருக்கு, அசைவப் பிரியர்களானாலும் முட்டை ஒவ்வாமையினாலும், அதன் மணம் பிடிக்காமல் போனாலும் உண்ணுவதில்லை.  அதே போன்று சைவப் பிரியர்களும், முட்டை சைவம் என்று தெரிந்திருதாலும், சிறு வயது முதலே அதை உண்ணும் பழக்கம் இல்லாததாலும், அதன் மணம் பிடிக்காமல் போனாலும் சாப்பிடுவதில்லை.

பச்சை முட்டைகளைச் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. பச்சை முட்டைகளில், சால்மொனெல்லா எனும் பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளதால், அதனால் நோய் பரவ வாய்ப்புள்ளதால். (இந்த வகை பாக்டீரியா டைஃபாய்ட் பாக்டீரியா வகையைச் சார்ந்தது.)

Image result for backyard poultry in india

பொதுவாக, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் வெளியில் மேய்ந்து கண்டவற்றைத் தின்பதாலும், சாக்கடைகளில் உள்ள புழு, பூச்சிகளைத் தின்பதாலும், சத்துள்ள, கோழி தீவனம் அவ்வளவாகக் கிடைக்கப் பெறாததாலும், வீட்டில் பெறப்படும் முட்டைகளை விட கடையில் விற்கப்படும் முட்டைகள் அதற்கென்று கோழிகள் வளர்க்கப்பட்டுப் பெறப்படுவதால் நல்ல சத்துள்ள முட்டைகள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு வெளியில் மேய்ந்து, சாக்கடைக் கழிவுகளை உண்ணும் கோழிகளின் முட்டைகளும், கறியும் நோய் தாங்கி வரும் வாய்ப்புகள் அதிகம்.


ஆனால், அப்படி முட்டை வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளில் கூட வியாபாரத்திற்காகச் சில தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், கோழிப் பண்ணைகளில் கோழிகளை மிகவும் நெருக்கமாகக் கூண்டில் அடைத்து வளர்ப்பதாலும், அதனால் அவைகளுக்கு மன அழுத்தம் உண்டாவதாலும், சுகாதாரம் பேணப்படுவதில்லை என்பதாலும், அந்த முட்டைகளினாலும், கோழிக் கறியினாலும் நோய்கள் பரவவும், ஒவ்வாமை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும் நல்ல நிறுவனங்களும், பண்ணைகளும் இருக்கத்தான் செய்கின்றன.எனது மகன் கால்நடை மருத்துவனாக சொன்னதை இங்கு சொல்லுகின்றேன். வீட்டில் வளர்ப்பவர்கள் கொஞ்சம் கவனமாக, கருத்தோடு, கோழிகளைக் கண்டபடி மேய விடாமல், அதற்கானத் தீவனம் அளித்து, பெரிய, காற்றோட்டமான கூண்டுகள் வைத்து, நல்ல சத்துணவு, ஒளி, வெப்பம் இருந்து, கூண்டிற்குள் நெருக்கமாக அடைக்காமல், நோய் நொடி இல்லாமல், மன அழுத்தமும் இல்லாமல் (கோழிகளுக்கும் மன அழுத்தம் வரும். அதனால் அவற்றின் உடலில் மாற்றங்கள் ஏற்படும்) வளர்க்க வேண்டும். வளர்த்தால், முட்டைகளுக்கு மட்டும் கோழிகள் என்று தனியாகவும், குஞ்சுகள் பொரிப்பதற்கும், கறிக்கும் என்று கோழிகளுடன் சேவலும் என்று தனியாகவும் வளர்த்தால், நச்சுபயம் இல்லாத, நல்ல ஆரோக்கியமான முட்டைகளும், கறிக்கான கோழிகளும் கிடைக்கப் பெறலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் கோழிக்கு ஏதேனும் சிறிய உடல் நலக் கோளாறு வந்தாலும், உடனே, அந்தக் கோழியை அப்புறப்படுத்தி, தனியே வைத்திருந்து, கால்நடை மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் அச்சமயத்தில் முட்டைகள் இடாது. அந்தக் கோழி, நோயினால், இனி உபயோகம் இல்லை என்று சொல்லப்பட்டால், தயவு செய்து அதைக் கறிக்கு உபயோகப்படுத்தாதீர்கள். சிலர் உபயோகப்படுத்துகின்றனர். சிலர் அதையும் வியாபார நோக்குடன், கடையில் விற்கின்றார்கள். இப்படித்தான் கடைகளில், தரமானதுடன், தரமற்றவையும் கலந்து வருவதால் தான் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களும், வேறு சில நோய்களும் பரவுகின்றது. பொதுவாக, கோழிப்பண்ணைகளில் கால்நடை மருத்துவர் இருப்பார்.  இருக்க வேண்டும். சைவச் சாப்பாட்டுப் பொருள்களில் இருக்கும் கலப்படம், ஒவ்வாமை போன்று அசைவத்திலும் உண்டு.

இதை எல்லாம் அந்தப் பையன்களுக்கு, முக்கியமாக வீட்டில் கோழி வளர்க்கும் பையனுக்கு, முட்டை உற்பத்தி வியாபாரம், கோழிக்கறி வியாபாரம் நல்ல பணம் ஈட்டும் தொழில் என்று சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே, நான் அந்தச் சிறுவர்களிடம், சிறு குறிப்புடன் நிறுத்திக் கொண்டேன்.

சைவம், அசைவம் சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். இரண்டிலுமே சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்ததுதான் என்றாலும், இந்த இடுகையை வாசிக்கும் உங்களுக்கு கோழி முட்டை, கறியைப் பற்றிய தகவல்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.  முட்டை ஏன் சைவம் என்று ஒரு சாராராலும், அசைவம் என்று ஒரு சாராராலும் சொல்லப்படுகிறது என்ற குழப்பம் தீர்ந்திருக்கும் என்றும் நினைக்கின்றேன். 

---கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

48 கருத்துகள்:

 1. அறியாத பல தகவல்கள். தெளிவாக விளக்கியுள்ளீர்கள் தோழி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி தோழி தங்களின் கருத்திற்கு முதலில் வந்து இட்டமைக்கும்...

  பதிலளிநீக்கு
 3. சகோ துளசி & கீதா,

  "குழப்பம் தீர்ந்திருக்கும் என்றும் நினைக்கின்றேன்" ______________ எங்கங்க? ஏதோ நான்பாட்டுக்கு போயிட்டிருந்தேன். இப்போ 'பேசாம ஒரு கோழிப் பண்ணை ஆரம்பிச்சா என்ன ? ' என குழம்பும் அளவுக்கு ஏகப்பட்டத் தகவல்கள் !

  ஆர்வம் இருப்பின் நிச்சயம் உதவும். நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் ஆரம்பியுங்கள் சகோதரி முட்டை மட்டும் கொடுக்கும் கோழிப்பண்ணை....ந்ல்ல லாபம் ஈட்டும் தொழில்...ஹேச்சரியும் கூட நீங்களே வைத்து கோழிக் குஞ்சுகளை வைத்துக் கொண்டு சேவல் குஞ்சுகளை விற்று விடலாம்...முட்டை பிசினஸ் மட்டும் என்று....

   நீக்கு
 4. பல புதிய தகவல்கள். இனிமேல் எப்போது ஆப் பாயில் சாப்பிட்டாலும் ஆம்லெட் சாப்பிட்டாலும் தில்லையகத்து நினைவு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! அப்ப டெயிலி முட்டை போட்....ஸாரி....முட்டை ஆம்லெட் போட்டுருங்க...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 5. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! எங்க இருந்தாலும் வந்துருவேன்னு வந்து கருத்து சொல்வதற்கு....ஹஹஹ் எங்களைப் போல இல்லாம...

   நீக்கு
 6. >>> வீட்டில் பெறப்படும் முட்டைகளை விட கடையில் விற்கப்படும் முட்டைகள் அதற்கென்று கோழிகள் வளர்க்கப்பட்டுப் பெறப்படுவதால் நல்ல சத்துள்ள முட்டைகள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.<<<

  இது ஒரு பளபளப்பு தான்..

  நானும் பிராய்லர் கோழி வளர்ப்பதற்கான பயிற்சி பெற்றிருக்கின்றேன்.. பிராய்லர் கோழியினால் தான் சில வகையான நோய்கள் தாக்குகின்றன.. இன்றும் அது குறித்து பட்டிமன்றம் நிகழ்கின்றது..

  இன்று 2015ல் நகர்ப்புறங்களில் கோழி வளர்ப்பார் எவரும் இல்லை.. கிராமங்களிலும் ஒரு சாரார் அலுத்துப் போய் விட்டனர்.. எனவே தான் 24 மணி நேரமும் (!?) பிராய்லர் கொடி கட்டிப் பறக்கின்றது.. ஊன் உண்ணும் மக்களும் ஏதாவது கிடைத்தால் போதும் என்றாகி விட்டனர்..

  ஆனாலும் - பிராய்லர் நாட்டுக் கோழிகளுக்கு இணையாக முடியாது..

  அதன் அருமையை உணர்ந்ததால் தான் - பல பகுதிகளிலும் நாட்டுக் கோழி பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

  நல்லதொரு விவரமான பதிவினைக் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

  பாவம் கோழிகள் பிழைத்துப் போகட்டும் என விட்டு விட்டேன் - எல்லாவற்றையும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒரு பளபளப்பு தான்..// ஆம் ஐயா உண்மையே அதையும் சொல்லியிருக்கின்றோம் பதிவில். அங்கும் தில்லுமுல்லுக்க்கள் நடக்கின்றனவே....

   ப்ராய்லர் கோழிப் பயிற்சிபெற்றிருக்கின்றீர்களா...நல்லதாயிற்றே...கிராமப்புறங்களி அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் நல்ல பயன் பெறலாம் ஐயா. அவர்களுக்குக் கோழி வளர்ப்பதில் சரியான வழிகாட்டல் இல்லை. கோழிகள் கண்ட இடத்தில் மேய்வது, சேவலுடன் இணைந்து முட்டை என்று பல அதனால்தான் அவர்கள் நாளடைவில் சோர்ந்து விடுகின்றார்கள். முறையாகச் செய்தால் நல்லபலன் கிடைக்கும்...

   நீக்கு
 7. அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பல விவரங்கள் இப்போதுதான் தெரியும்.

  வியாபார நோக்கில் என்னதான் ரெடி செய்தாலும், நலல வேளையாய் இன்னமும் அதற்குக் கோழி தேவைப்பபடுகிறது இல்லை?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! ஆமாம்..கோழிகள் தேவைப்படுகின்றதுதான்...ஆனால் அதையும் முறையாக நல்ல முறையில் செய்யலாம் அவர்கள்....கிராமத்து மக்கள் இதை நல்ல முறையில் செய்தால் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்...

   நீக்கு
 8. கீத்து!!!! கையை கொடுங்க!!! அடேயப்பா!! இந்த முட்டைகுள்ள இவ்ளோ மேட்டர் இருக்கா????!!!!! கோழிகளுக்கும் மனநோயா!!! எங்க பாட்டி முட்டை பார்த்தே , இது பொறிக்கும், இது பொறிக்காது ன்னு சொல்லிடுவாங்க. அது இப்படி தான் போல! இனி முட்டை சாப்பிடும்போது குற்ற உணர்வு இல்லாம சாப்பிடலாம்:) நன்றி தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மைத்தூ....கோழிக்கு மட்டும் இல்ல ஆடும் மாடுக்கும் ஸ்ட்ரெஸ் உண்டு...அது பற்றி இன்னுரு பதிவு போட்டா போச்சு...ஒரு பதிவு தேத்திரலாம்ல....

   ஆமாம் அதே தான்...பாட்டிஸ் எல்லாம் கரெக்டா சொல்லுவாங்க...எதுக்குப்பா குற்ற உணர்வு....எஞ்சாய்!...

   நீக்கு
 9. மீண்டும் வந்து த ம வாக்களித்து விட்டேன். முதலில் வந்தபோது சப்மிட் செய்யப்பட்டிருக்கவில்லை!

  பதிலளிநீக்கு
 10. சைவ முட்டை பற்றி அறியாத செய்திகள்அறிந்து கொண்டேன் சகோதரியாரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 11. fertilized / unfertilized முட்டைகள் பற்றி தெரியும். அதைத் தெளிவாக விளக்கிவிட்டீர்கள் கீதா. நான் சொன்னபொழுது நம்பாத தோழிக்கு இப்பதிவைப் படிக்கச் சொல்ல வேண்டும்.
  த.ம.+1

  பதிலளிநீக்கு
 12. முட்டைக்குள்ளே எத்தனை கரு!

  பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சகோ.

  த.ம. 4

  பதிலளிநீக்கு
 13. அறியாத பல தகவல்களை அறிந்தேன்... நன்றி...

  ஆமாம் இந்த ஹார்மோன் இன்ஜெக்சன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?

  பதிலளிநீக்கு
 14. முட்டைக்குள் இவ்வளவு முத்துக்களா?
  கருத்து வேட்டையாடி முட்டை வைத்து விருந்து
  படைத்தமைக்கு நன்றி!
  அருமை!
  த ம 6
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 15. முட்டை பற்றி பல தகவல்கள் தந்துள்ளீர்கள். இது நான் ஏற்கனவே அறிந்தாலும் இவ்வளவு விபரமாக அறிந்திருக்கவில்லை நன்றி வாழ்த்துக்கள் தோழி ...!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஆசிரியரே,
  அறியாத தகவல்கள்,
  சைவ முட்டைக் கேள்விப்பட்டுள்ளேன்,
  அனைத்தும் அருமை,
  நன்றி,

  பதிலளிநீக்கு
 17. ஒரு வகுப்பே எடுத்து விட்டீர்கள். பல விஷயங்கள் தெரிய வந்தன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்

   நீக்கு
 18. சிலது அறிந்திருந்தாலும் பல அறியாத தகவல்கள்! விரிவாக விளக்கியமைக்கு நன்றி! முட்டை சைவமே என்றாலும் நான் உண்ண மாட்டேன். பால் கூட அருந்துவதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. காபி, டீயாக அருந்தவே பிடிக்கும். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ் நானும் அப்படித்தான் உண்ணுவதில்லை. சிறு வயது முதலே பழக்கமில்லை. வீட்டிலும் சேர்ப்பது கிடையாது. கேக்குகள் உட்பட...இது பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் கருத்துகளுக்கான பதிலாக ஒரு பதிவு....

   நீக்கு
 19. ஒத்துகிறேன்
  மருமகன் வெட் என்று ஒத்துகிறேன்...
  வழிகாட்டுப் தொழில் பதிவுமாறி கீதே...
  வாழ்த்துக்கள்
  சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்......தொழில் பதிவாகிவிட்டது இறுதியில்...சொல்ல வந்தது ஒரு சில மக்களுக்கு முட்டை , கோழி பற்றி புரியாமல் இருந்த தகவல்கள்...மட்டுமல்ல அதை கிராமத்து மக்கள் புரிந்து கொண்டு நல்ல முறையில், விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செய்தால் அவர்கள் நல்ல பயன் அடைவார்கள் என்பதால். வானம் பார்த்த வயல்கள் பல முறை பொய்த்துப் போகிறதே! அவர்களுக்கு இது உதவலாமோ என்ற ஒரு எண்ணத்திலும்...மிக்க நன்றி..

   நீங்கள் மருமகன் என்று சொன்னது மிகவும் பிடித்திருக்கிறது கஸ்தூரி. ஒரு அன்யோன்யம் சகோதர, சகோதரி பிணைப்பு...இதுதான் தமிழர் பண்பாடு!!! மனம் நெகிழ்ந்துவிட்டேன்...எங்கள் ஊரில் இப்படித்தான் நாங்கள் எங்கள் கிராமத்தில் ஒரு வரே எல்லோருக்கும் அண்ணன், அண்ணி, சித்தப்பா,பெரியப்பா என்று ...இந்த நகர வாழ்க்கை என் மகனுக்கு ஆன்டி, அங்கிள் என்றுதான் கற்றுக் கொடுத்தது. 5 வருட பாண்டிச்சேரி வாழ்க்கை அவனது நண்பர் நண்பிகள் என்னை அம்மா என்றும் அவனது தந்தையை அப்பா என்றும் அழைக்க அவனும் அவர்களது பெற்றோரை அழைக்கத் தொடங்க மனம் இனிமையானது.

   நீக்கு
 20. இதைப் படிக்கத் தொடங்கிய போதே சகோவின் எழுத்தென்று நினைத்தேன்.

  அப்பா எவ்வளவு தகவல்கள்.

  “ மகன் தாய்க்காற்றும் உதவி ” இருப்பதாக நினைக்கிறேன்.

  ஹ ஹ ஹா

  தொடர்கிறேன் சகோ.

  வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசானே! நிக்க நன்றி! ஆம்! ஆசானே மகனின் பங்கு உண்டு! தெரிந்திருந்தாலும் ஒரு சிலவற்றை மகனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டுதான் எழுதினேன்.

   மிக்க நன்றி ஆசானே! தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 21. முட்டை அசைவம் என்பதால் நான் அதை சாப்பிட மாட்டேன், ஒன்லி சிக்கன் தான்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹாஹ்ஹ்ஹ்...முட்டை அ "சைவம்" என்பதால் சாப்பிட மாட்டேன் என்று சொல்லுங்கள்....சரி சரி உங்களுக்கு முட்டை பிடிக்காது என்பதை இப்படிச் சொல்லிவிட்டீர்கள்...அதிலிருந்து வரும் சிக்கன்....சரி சரி...

   நீக்கு
 22. தோழி பற்றிய நல்ல தகவல் ...தப்பு தப்பு .கோழி பற்றிய நல்ல தகவல்கள்.கோழிப் புராணம் என்றே சொல்லலாம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ்ஹ் ஆமாம் கோழி புராணமேதான்....மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 23. ஒரு நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளவிதம் அருமை. அறிவியல் வளர்ச்சியில் இதுவும் ஒன்று என்று ஒரு புறம் கொண்டாலும், இவ்வாறாக இயற்கைக்கு மாறாக உருவாக்கப்படுபவை பல சிக்கல்களை உண்டாக்க வாய்ப்புண்டு. இயற்கைக்கு மாறான பிறப்பு தொடர்பான படியாக்கம் (க்ளோனிங்) என்ற நூலை நான் எழுதியபோது இவ்வாறான செய்திகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! நிச்சயமாக நீங்கள் சொல்லுவது மிகச் சரியே. அதனால் தான் நாட்டுப்புறங்களில் கோழி வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல முறையில் செய்யலாம், சிறிய ஊர்களும், குடும்பங்களும் நல்ல பயன் பெறும் ...இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது நம்மைத் திருப்பித் தாக்கும் தான்...க்ளோனிங்க் அறிவியலின் தோல்வி.

   நீக்கு
 24. அஹா இவ்ளோ விஷயம் இருக்கா கோழி முட்டையில.

  மிக விரிவான அலசல் கீதா. பயனுள்ள தகவல்கள். சைவம் அசைவம், ஒவ்வாமை, ஓபன் கூண்டில் ஏன் வளர்க்கிறார்கள் என்ற என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது :) முழுமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! சகோதரி! மிக்க நன்றி சகோதரி தங்களின் மேலான கருத்திற்கு!

   நீக்கு
 25. அடடா! கோழியைப்பற்றி இவ்வளவு செய்திகளா! பயன்மிகு பதிவு! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 26. கோழி முட்டை, கறியைப் பற்றிய தகவல்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். //
  ஹஹஹா அங்கதான் இருக்கு பிரச்சினையே மேடம்!
  வாசிப்பதர்க்கென மூட் இருக்கும்போது மீண்டும் வாசிக்கும்போது புரியும்போல அவ்வ்.

  பதிவு முழுக்க பல புதிய தகவல்கள்
  மேடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ் என்ன பிரச்சனை? புரியவில்லையா? ஹஹ்ஹ் நாங்க விளக்கமாகத்தான், எளிமையாகத்தான் சொல்லியிருக்கோம்னு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்....நிஜமாகவே புரியலையா இல்லை சும்மா கலாய்த்தலா..ஹஹஹஹ

   மிக்க நன்றி மகேஷ்!

   நீக்கு
 27. நூற்றுக் கணக்கில் வீட்டில் கோழி வளர்த்து தற்போது மகனின் ஆர்வத்தால் கொஞ்ச்ம் கோழிகளை நகரத்து வீட்டில் வளர்த்தாலும் இவையெல்லாம் அறியாத தகவல்கள்...
  பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே தங்கள் பதிவில் வாசித்திருக்கின்றோம் உங்கள் வீட்டில் கோழி வளர்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டதை. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 28. அடடா என்னவொரு அலசல். முட்டை சாப்பிடுவது இல்லை.என்றாலும் தகவல் அறிந்து கொள்ள வேண்டும் தான். சகோ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு