புதன், 20 மே, 2015

அந்நியன் கணக்கு

     கணக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!  அதென்ன அந்நியன் கணக்கு?  அது வேறு ஒன்றுமில்லை.  அந்நியன் படத்தில், (அந்த அம்பி அந்நியனாக மாறும் போது கேட்கும் கணக்கைப் போன்ற ஒன்றுதான் நான் இங்கு பகிர்ந்து கொள்வது.  சுஜாதா அவர்கள் தான் வசனம்.  எனவே அந்த வசனம் கூட சுஜாதாவின் வசனம்...ஸாரி கணக்காகத்தான் இருக்குமோ?! அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்தான் இப்படி எல்லாம் எழுதக் கூடியவர்!) 

 அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’           

என் சிறு வயதில், 5 பைசா, 10 பைசா, 20, 25 பைசா இருந்த காலத்தில் எல்லாம், பெட்டிக் கடைக்காரர் கூட நாம் 10 பைசா கொடுத்து 5 பைசாவிற்கு மிட்டாய் வாங்கினால் 5 பைசா மீதி தருவார். ஒரு பைசா கூட மீதி பெற்றது உண்டு. சில்லறைகள் புழங்கிய காலகட்டம் வரை.  இப்போது 50 பைசா வழக்கில் இருந்தாலும் கூட, அது மதிக்கப்படுவதில்லை.  ஏன் 1 ரூபாய்க்கே மதிப்பில்லை என்றாகிப் போனது.  பல கடைகளில் மீதம் 1 ருபாய், 2 ரூபாய் மீதி தரவேண்டும் என்றால் கூட தருவதில்லை.  சில சமயங்களில் 5 ருபாய் கூட தருவதில்லை.  அதற்குப் பதிலாக நமக்கு உபயோகமே இல்லாத, வேண்டாத பொருள் வாங்கச் சொல்லுவார்கள். ஐயையோ இல்லைங்க ஸாரி.... நம் மீது திணிக்கின்றார்கள்! அந்தப் பொருள் பெரும்பாலும் சாக்கலேட், மிட்டாய்கள்! இதைப் பற்றி நம் நண்பர் விசு அவர்கள் கூட மிகவும் நகைச் சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார் அவரது வலைத்தளத்தில்.

நான் அந்த மாதிரி மிட்டாய் கொடுத்தால் வாங்குவதில்லை.  நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மிட்டாய்களை.  நான் ஏற்கனவே என் உடம்பில் நிறைய மிட்டாய்கள் வைத்திருக்கின்றேன்.  உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்னிடமிருந்து என்று சொல்லிவிட்டு சில்லறை தரவேண்டும் என்று உறுதியாக இருப்பேன்.  அப்படித் தரவில்லை என்றால், தெரிந்த கடை என்றால், அப்புறம் வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவேன்.  அப்படி இல்லை என்றால் ஏதாவது வாங்கிய பொருளைக் குறைத்தால், விலை முழுமையாக வருமா என்று பார்த்துவிட்டு குறைத்து விடுவேன். அப்படியும் இல்லை என்றால் விட்டுவிடுவேன். வேறு வழி?! ஆனால், அவர்களுக்கு அதனால் ஒன்றும் மனசாட்சி அவர்களை வறுத்தெடுக்கப் போவதில்லை.  லாபம்தான் அவர்களுக்கு. அப்படிச் சில்லறைகளை நாம் விடுவது தவறு என்பதைச் சுட்டிக் காட்டி ஒரு அந்நியன் ஸ்டைல் கணக்கு ஒன்று எனது மின் அஞ்சலில் வந்தது. எனது மனதைப் பிரதிபலிப்பதாக.  அதைப் பாருங்கள் இங்கே அப்போது உங்களுக்கே புரியும்!  (இது வெளி நாடுகளில் நடப்பதில்லை! சரியாக நமக்குச் சில்லறை கிடைத்துவிடும். அதனை கில்லர் ஜி அவர்களிடமும் உறுதி செய்து கொண்டேன். இரண்டாவது நாம் இங்கு கார்டு தேய்த்தால் சரியான பில் தான் கழிக்கப்படும்.  ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்று பேங்கிற்கு அழ வேண்டுமே!

சரி இப்போது அந்த அந்நியன் கணக்கிற்கு வருகின்றேன்!  ஆங்கிலத்தில் வந்ததை எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றேன். நாம் ஏன் சில்லறைகளையும், ரூ 1 யும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து நிச்சயமாகப் பெறவேண்டும்.

நாள் ஒன்றிற்கு 500 பேர் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர்கள் ஒருவர் கூட மீதி ரூ 1 ஐ பொருட்படுத்தவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்

500 x  1 = Rs 500

365 நாட்களுக்கு  500 X 365 = Rs. 1, 82,500

இது ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கானது.  இப்படி 1500 சூப்பர் மார்க்கெட்டுகள் நமது நாட்டில் இருக்கின்றன.

Rs. 1, 82,500 x 1500 =  Rs. 273,750,000  ஐயோ இப்படி பெரிய, பார்க்காத நம்பர் எல்லாம் சொன்னா நமக்குப் புரியாதுங்கோ!  நாம அப்பாவிங்கோ!  அதனால் ஒரு சாமானியனுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் 27 கோடி ஒரு வருடத்திற்கு! இது சூப்பர் மார்க்கெட்டுகள் என்று சொல்லப்படுபவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.  இதில் மற்ற பெரிய கடைகளும் அடக்கம். உலகமயமாக்கலின் விளைவினால் முளைத்திருக்கும் பெரிய பெரிய துணிக்கடை ஷோரூம்கள், மால்கள் என்று சொல்லப்படுபவையும் இதில் அடக்கம்.

வேதனை என்னவென்றால் இதற்கு வரி கிடையாதாம்! (அமெரிக்க கணக்குப் பிள்ளை! உங்களுக்குப் புரிந்து இருக்குமே! கணக்குப் பிள்ளைகள் இதற்குப் பதில் சொல்லவும், முடிந்தால்!)  ஏனென்றால் விலைச் சீட்டு இந்த 1 ரூபாயைக் கணக்கில் கொள்ளாதாம். நுகர்வோர்கள் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு இந்த சில்லறை, 1 ருபாய் பெரியது அல்ல.  அதனால் தான் பெரும்பான்மையான பொருட்களின் விலை பேட்டா கணக்கு போல (ரூ,100.99) -49, -50, -69, -99, -999 ஒன்லி  என்றிருக்கின்றது! ஆனால், நான் பணக்காரி அல்ல.  சாதாரண சாமானிய மக்களில் அடக்கம்.  யாசிப்பவர்கள் கூட இப்போதெல்லாம் ரூ 1 ஐ ஏற்றுக் கொள்வதில்லை.  நம்மைத் திட்டுகின்றார்கள். சாதாரண பலசரக்குக் கடைகள், மொத்த வியாபாரக் கடைகள் இதில் வருவதில்லை.

நுகர்வோர்கள் ராஜாக்கள்! (Consumers are the king! consumer sovereignty) என்று பொருளாதாரத்தில் சொல்லப்படுவதுண்டு. அதாவது நுகர்வோர்களின் தேவைக்கேற்பதான் பொருட்களின் உற்பத்தியும், விலையும் நிர்ணயிக்கப்படும். இது மேலை நாடுகளுக்குப் பொருந்தும். நம் நாட்டிற்குப் பொருந்தாது. ( நுகர்வோர்களில் ஆண்களும், பெண்களும் தானே அடக்கம்? அது என்ன கிங்க்?  அப்போ க்வீன் இல்லையா? ம்ம் அந்தக் காலத்தில் பெண்கள், ராணிகள் வீட்டை விட்டுச் செல்லாமல், சமையலறையிலும், அந்தப்புரத்திலுமே இருந்ததால் ஆண்கள் தான் வெளியில் சென்று பொருட்கள் வாங்கியதால் கிங்க் என்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் தான் அதிகமான நுகர்வோர் பட்டியலில் வருகின்றார்கள்.  பெண்களால்தான், துணிக் கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், ஃபேஷன் கடைகள் எல்லாம் இப்படி அள்ளிக் குவிக்கின்றதாக ஒரு உபரித் தகவல் கிடைத்தது. அதனால் நுகர்வோர்கள் ராஜா/ராணி.  Consumers are the Kings and Queens!

இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும் நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்?  இல்லை என்றால் நம்மீது ஏதேனும் ஒரு மிட்டாயைத் திணிக்கின்றார்கள்?  அவர்கள் தருவதில்லை.  மதிப்பு என்பது இருவருக்கும் பொதுதானே! அப்போ இங்கு நுகர்வோர்களுக்கு உரிமை இல்லை என்றாகின்றதல்லவா. மதிப்பு இல்லாத அந்த 1 ரூபாயை நமது ரிசர்வ் வங்கி இன்னும் ஏன் புழக்கத்தில் வைத்துள்ளது? 1ரூபாய் மட்டுமல்ல. 2 ரூபாய் கூட.  ஏன் சில சமயங்களில் 5 ரூபாயும். அதுவும் சில்லறைத்தனமாக, கஞ்சத்தனமாக? 50 பைசா இன்னும் ஏன் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை? அதற்கு மதிப்பே இல்லாத போது  ஏனென்றால் 1 ரூபாயை இரண்டு 50 பைசாக்ககளாகக் கொடுத்தால் பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக நிர்ணயிக்கப்படுவதில்லை?  எங்கு ஊழல் தொடங்குகின்றது? நண்பர்களே!  இது அந்நியன் கணக்குதானே!  உங்களுக்குப் பதில் தெரிந்தால் என் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கு விடை கொடுங்களேன்!  நானும் எனது மிகச் சிறிய அறிவை விரிவாக்கிக் கொள்வேன்!
--கீதா

(பயணக் குறிப்புதான் தொடரும் என துளசி சொல்லி இருந்தார். ஆனால் வேலைப் பளு.  அதை இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்து....அதற்கு முன் இந்தப் பதிவு...) 

செவ்வாய், 12 மே, 2015

POET THE GREAT - எங்களது ஐந்தாவது குறும்படக் குழந்தை - அனுபவம் பகுதி 2

முதலில், இதற்கு முந்தைய முதல் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும், சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!  நாளை எல்லாவற்றிற்கும் தனித்தனியாகக் கருத்து இடுகின்றோம்.  நாளை முதல் வலைத்தள வருகை ஆரம்பம்.....

(நேற்றைய தொடர்ச்சி.....மறு நாள் காலை 6 மணிக்கு  நண்பர் விபினிடம் இருந்துதொலைபேசி அழைப்பு. கம்யூனிஸ்ட் கட்சித தொண்டர் ஆர்.விஜயன் வடக்கஞ்சேரியில் நேற்று  கொல்லப்பட்டதால், அன்று ஆலத்தூர் தாலுகாவில்   ஹர்த்தால்! நாங்கள் இருக்குமிடம் பாலக்காடு தாலுகா ...ஆனால் படப்பிடிப்பு நடக்குமிடம் ஆலத்தூர் தாலுகாவில் !.)   இனி தொடர்கின்றது....

நேபால் பூகம்பத்தை உடலாலும் மனதாலும் உணர்ந்தேன். சித்தூரில் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், 3ஆம் தேதி படப்பிடிப்பு நடத்திய,4 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடத்திற்குப் போக முடியாது. காலை மற்றும் மதிய உணவு தர வேண்டிய திரு கிருஷ்ணன் தன் கடைக்கு நடந்து வந்தால் உணவுப் பொருட்களைக் கொண்டு போகலாம் என்றார். வந்து கொண்டு வருகின்றோம் என்று என்ன தைரியத்தில் சொன்னேன் என்றே எனக்குப் புரியவில்லை. வருவது வரட்டுமென்று சோனி சார் தன் காரில் குடந்தையூராருடனும், ஆவி தன் பைக்கில் பாலகணேஷிடனும் படப்பிடிப்பு நடந்த இடத்திற்குச் செல்ல, நான் மேக்கப் மேன் மற்றும் காமேரா மேனுடன் சித்தூர் சென்றேன்.  7மணி முதல் அங்கு ராதாகிருஷ்ணன் சாரும், கோபாலகிருஷ்ணன் சாரும் காத்திருந்தார்கள்.  7.30 மணிக்குத் சோனி சாரின் ஃபோன். வழிமறியல் செய்தவர்களிடம் பேசி ஒரு வழியாக படப்பிடிப்பு நடந்த இடத்தை அடைந்தோம் என்றதும் அது வரை உயிரற்ற உடலுடன் திரிந்த எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. 

சித்தூர் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட சிறப்பாக எடுக்க முடிந்தது.  படப்பிடிப்பை முடித்து அடுத்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்லும் வழியில் 3 இடங்களில் வழிமறியல் செய்தவர்களிடம் கெஞ்சி, 10.45 ற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம்.  இதனிடையே பைக்கில் சென்று காலைச் சிற்றுண்டியை என் சகலை சோமனும், மகன் அருணும் கொண்டு வந்திருந்தார்கள்.  எத்தனை இட்லி எப்படிச் சாப்பிட்டேன் என்று எவ்வளவு மூளையைக் கசக்கிச் சிந்தித்தாலும், இப்போதும் நினைவுக்கு வர மறுக்கிறது.  இதற்கிடையில் கேமரா மேன் அஜித் முந்தைய நாள் நடனக் காட்சியை எடுத்த போது ஆலமரத்தடிக் கோவிலில், விளக்கு, பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்களை எடுத்த ஃபைலைக் காணவில்லை, எனவே அதை மீண்டும் எடுக்க வேண்டும் என்றதும் தலைச் சுற்றிக் கீழே உட்கார்ந்தே விட்டேன்.  உட்கார முடியாதே! உட்காரக் கூடாதே! கீதாவிடம் பேசி, முடியும் அளவில் அதை மீண்டும் அதே போன்று அமைக்கச் சொன்னேன்.  வழியில் கண்ணில் பட்டப் பூக்கடையில் இருந்து 20 முழம் பூவையும் வாங்கிச் சென்று ஓடினேன்.  பெர்முடா டைரக்டர் திவானின் உதவியுடன் கீதா மரத்தடிக் கோயிலை முதல் நாள் இருந்தது போல் உருவமைத்து விட்டார்! வாடிய பூக்களுக்கிடையே ஆங்காங்கே 20 முழப் பூவைச் செருகி அன்றைய படப்பிடிப்பைத் தொடங்கிய போது மணி 11.30.  இந்தக் காட்சிகள் முடிந்த பிறகு மதியச் சாப்பாடு.  அதன் பின்னும் அதன் தொடர் காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டது. 

அப்படி, அங்கு எடுக்க வேண்டியக் காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்த போது மாலை 5 மணி. கடைசிக் காட்சி எடுக்க வேண்டியது அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பழைய வீட்டில்.  5 மணிக்குப் பின் அவ்வளவு தூரம் சென்று அங்கு எல்லாவற்றையும் அமைத்து எடுப்பது சிரமம் என்பதால் பக்கத்திலேயே எங்கேனும் அதை வைத்துக் கொள்ள முடியுமா என்று சிந்திக்கத் தொடங்கினோம்.  ஒரு காடு போன்ற தோற்றமுள்ள இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும், மட்டுமல்ல சிறிது நேரத்தில் இருட்டாகும் போது மின்சார விளக்குககும் தேவை.  இடையே அருகே மின் விளக்குகளுக்குத் தேவையான மின்சாரம் எடுக்க ஒரு வீடும் அக்காட்டிற்கு அருகே வேண்டும் என்றதும், காவில்பகவதி கோயிலில் எழுத்தாளரான சுஜித் தன் வீட்டிற்குப் பின்புறம் காட்சிக்குத் தேவையான காடு இருப்பதாகவும், தன் வீட்டிலிருந்து, மின் விளக்குகளுக்குத் தேவையான மின்சாரம் எடுக்கலாம் என்றதும் அங்கு ஓடினோம். 

அருமையான் இடம்! ஏற்ற இடம் காட்டிய இறைவனுக்கும், சுஜித்திற்கும் நன்றி கூறி பம்பரமாய் சுழன்று 6 மணிக்கு முதல் வசனத்தைப் படம் பிடிக்கத் தொடங்கியதும், தூரத்தில் கேட்ட இடி என் நெஞ்சுள் விழுந்தது போல் இருந்தது.  எல்லோரும் பரிதாபகரமாக விழித்தோம்.  மழை தூரத் தொடங்கியது.  எல்லாவற்றையும் எடுத்து பக்கத்தில் உள்ள சுஜித்தின் வீட்டிற்கு ஓடினோம்.  ½ மணி நேரம் பெய்த மழை ஓய்ந்தது.  பின் மின் விளக்குகளை எல்லாம் உரிய இடத்தில் வைத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய போது 7 மணி.  குடந்தையூராருக்கு 8.30மணிக்கு இரயில்.  அவரும் பாலகணேஷும், என்னை மருத்துவமனை ஐசி யூனிட்டில் கிடப்பவரைப் பரிதாபகரமாய் பார்ப்பது போல் பார்த்து விட்டு, மனமில்லா மனதுடன் விடை பெற்றனர்.  அஜித்தின் காமேராவில் இடம் இல்லாததால் இடையிடையே எடுக்கப்படும் ஒவ்வொரு காட்சியையும் அவரது லேப்டாப்பில் பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் நீண்ட வசனம் பேச வேண்டிய அந்த இறுதிக் காட்சி நேரமில்லாததால் ஒரே ஆங்கிளில் தான் அதிகமும் எடுக்க முடிந்தது.  அப்படி எடுத்து முடித்த பின் சொல்லப்பட்ட பேக்கப் தான் அது. மணி இரவு 11. அதற்கு நன்றி சொல்ல வேண்டியது இறைவனுக்கும், இத்தனைச் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அதைப் படம் பிடிக்க உதவிய, அதன் பாகமாக மாறிய நம் நண்பர்களுக்கும் தான்.  கூடவே இதை வாசிக்கும் உங்களுக்கும் தான்.  உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் இல்லாதிருந்தால் இத்தகைய இக்கட்டான சூழலில் என்னால் அந்தப் பேக்கப் சொல்லி இருக்க முடியாது.  நன்றி! உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும்!

முற்றும்.  அடுத்து எங்கள் பயணக் குறிப்பை கீதா தொடர்வார்....


வியாழன், 7 மே, 2015

POET THE GREAT - எங்களது ஐந்தாவது குறும்படக் குழந்தை

       

          மே 4, திங்கள் இரவு 11.30 ற்கு பேக் அப் சொல்லும் போது,  சோர்ந்திருந்த, களைத்திருந்த எல்லோரது முகத்திலும்  சின்னதாக முளைத்த மகிழ்ச்சி, பின் வினாடிக்கு வினாடி பெரிதாகி, அடுத்த அரைமணி நேரம் கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும், அலசி, விவிமரிசித்து எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.  Poet the Great எனும் குறும்படம் இரண்டு வருடங்களுக்கு முன் என் மனதில் உருவானது, இதோ இப்போது உயிர் பெற்று விட்டது.  இனி இக்குழந்தை இவ்வுலகில் எங்கேனும், எப்படியேனும் வாழ்ந்து கொள்ளும்.


          நான்கு குறும்படங்கள் எடுத்ததனால், ஐந்தாவது குறும்படம் எளிதாக எடுத்துவிடலாம் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.எதிர் பார்க்கக் கூடாது .  ஒவ்வொரு குறும்படமும் ஒரு பிரசவம் போல்தான்.  இது ஐந்தாவது பிரசவம்.ஐந்தாவது குழந்தையும் 'மூக்கும் முழியுமாக' ஊனமின்றி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைதான் எப்போதும் !.முக்கியமாக அந்த இரவு   11.30 வரை.இனி  பிறந்த குழந்தையின்  தொப்புள் கொடி அறுத்து, நீராட்டி, பாலூட்டி, அதன் சிறுநீரில் நனைந்து, அதனைக் காணும் உற்றாரும், உறவினரும் நண்பர்களும்  சொல்லும் மனதுக்கு இதமான வார்த்தைகளைக் கேட்கும் வரை பிரார்த்தனை தொடர வேண்டிய ஒன்றுதான்.


          மார்ச் முதல் வாரம்தான் திரைக்கதை உருப்பெற்றது.  அதன் முன்பே கதா பாத்திரங்களைக் கையாள வேண்டியவர்களின் பட்டியல் தயாராகி இருந்தது.  Soni சார், நிலம்பூரில் கடந்த 30 வருடங்களாக "கிளாசில் காலேஜ்" எனும் தனியார் கல்லூரியைச சிறப்பாக நடத்திவரும் நண்பர் Poet The Great ஆக ,  கீரபாணியாக நம் ஆவி, மேய்யப்பனாக நம் குடந்தையூர் ஆர் வி சரவணன், மல்லையனாக நம் பால கணேஷ், கோணம்புள்ளி சித்தராக நம் ராயசெல்லப்பா, கோப்பசாமியாக நம் கவியாழி, கண் ணை யனாக  "கார்பெண்டர் த க்ரேட்டாக நடித்த நண்பர் பாலகிருஷ்ணன், நாகப்பனாக நண்பர் விபின், பழநியப்பனாக நண்பர் முகமத் அலி , வள்ளியாக கலாமண்டலம் பிலஹரி, எழுத்தாளராக நண்பர் கோபாலகிருஷ்ணன், துஞ்சன் மடத்துக் கண்காணிப்பாளராக  நண்பர் ராதாகிருஷ்ணன். சாரங்கபாணியாக  நான், காளியம்மாவாக(பாடி நடிக்கும் ) நம் கீதா என்று இப்படியாக முடிவாகி இருந்தது. எல்லோரும்சம்மதம் தெரிவித்து , படப்படிப்பு நடக்கவிருக்கும் மே 3,4, தேதிக்கு ஒருவாரம் முன்பு வரை படப்பிடிப்புக்கு வரத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்கள்.


          கேமரா மேனாக மாகாமுடி த க்ரேட் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் செய்த ரமேஷ் ஆனிக்கொடு வர உறுதியளித்திருந்தார். இடையில் துபாயிலிருந்து ஒரு மாத விடுமுறைக்கு வந்த அவரது மைத்துனரின் திருமண நிச்சயம் 3ஆம் தேதி என்று தீர்மானித்ததால், அவர் 3ம் தேதி வரவியலாது  என்றார். அதிர்ந்த நான் வேறு ஒரு நாளுக்குப்  படப்பிடிப்பை மாற்றுவது இயலாத காரியம் ஆனதால், என்மூன்று   குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அஜித்தைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன்.  இரண்டாம் தேதி கண்ணூரிலும், மூன்றாம் தேதி மாலை திருச்சூரிலிலும் படம் பிடிக்கப் போக வேண்டும், இருந்தாலும் 3 ஆம் தேதி படப்பிப்பிற்கு வேறு ஆளை ஏற்பாடு செய்து அங்கு வந்துவிடுகின்றேன் என்றதும் "அப்பாடா" என்று இருந்தது. இதனிடையே ராயச் செல்லப்பா தவிர்க்கமுடியாத சில காரணங்களால் தன்னால் 3, 4 தேதிகளில் வர இயலாது என்றதும், பதிலாக எழுத்தாளராக வரும் கோபாலகிருஷ்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்க முடிவு செய்தேன், அவரையும் சம்மதிக்க வைத்து, மேக்கப் மேனுடனும் பேசி, அவருக்கு வித்தியாசமான வேஷம் போட முடிவும் செய்தேன்.  உடனே வந்தது அஜித்தின் போன்.  "திருச்சூர் போக வேறு ஆள் கிடைக்கவில்லை.  எனவே 3ஆம் தேதி 2 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூர் போக வேண்டும் .  அன்று எடுக்க வேண்டியதை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம்"  என்றதும், மீண்டும் தளர்ந்துவிடேன். 3ஆம் தேதி எடுக்க வேண்டியக் காட்சிகளின் வரிசையை மாற்றி அக் காட்சிகளை 4 ஆம் தேதி எடுக்க முடிவு செய்தேன்.

மே 1 ஆம் தேதி, நண்பர் முகமது அலியின் போன்! "தன்னால் 3 ஆம் தேதி வர முடியாது" என்றார். அதிர்ந்து போனேன். வேறு யார் ? ஒரு வசனம்தான். பேச கதாபாத்திரம் வேண்டுமே! பாலகிருஷ்ணன் சார் தன மருமகன் ஆசிரியரான ராஜகோபாலனை  அந்தக் கதபாத்திரம் செய்ய அழைத்துவரச்சம்மதித்ததும் "அப்பாடா" என்று இருந்தது.  அன்று இரவு கீதாவின் போன் " கவியாழிக்கு டிக்கட் கன்பார்ம் ஆகவில்லை எனவே அவரால் வர இயலாது. மட்டுமல்ல திண்டுக்கல்தனபாலனுக்கும் 3ஆம் தேதி வர இயலாத சூழல் " என்றதும் தலை சுற்றி விழ வேண்டிய நிலைக்கு வந்த என் சூழல் மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.  எனக்கு உண்மையிலேயே விசுAwesome சொல்லும் பேய் அறைந்தது போலானேன்  என்பது இதுபோல் ஒரு சூழலாகத்தான் இருக்கும் என்று புரிந்தது ...என்ன செய்வது ?...யாரை பிடிப்பது?..Parol குறும்படத்தில் வில்லன் கதாபாத்திரம்செய்த அபிஜித்தை கூப்பிட்டேன் .ஓகே என்றதும் சமாதானம் .    கவியாழி அவர்களின் கதாபாத்திரத்தை அபிஜித்திற்கு கொடுக்கலாம்.  ஆனால், திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கதாபாத்திரத்தை யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட, கார்பெண்டர் த க்ரேட்டில் அரசனாக வந்த நண்பர் மாதவதாசிடம் கேட்க அவரும் சரி என்று சொல்லபோன உயிர் திரும்ப வந்ததுபோல்  இருந்தது .  நாளை (மே 3, 4 ) படப்பிடிப்பு என்று உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் பார்பர் கண்ணனின் முடிதிருத்தும் நிலையத்திற்குச் சென்று சாரங்கபாணிஆக மாற    மொட்டை அடித்துக் கொண்டேன். சனி இரவு, கீதா, ஆவி, குடந்தையார் வந்து சேர்ந்தனர்.  நிலம்பூரிலிருந்து நண்பர் சோனியும் வந்தார்.  பாலக்காடு கைரளி தங்கும் விடுதி யில்  அன்று எல்லோரும் தங்கினோம். மறுநாள்  காலை பாலகணேஷ் அவர்கள் 41/2 மணியளவில் வந்து சேர அவரை ஆவி அழைத்து வந்தார்.  (இங்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஒளிந்திருக்கின்றது. அதை ஆவியோ, பாலகணேஷோ வெளிபடுத்த வாய்ப்புண்டு.)

இந்தப் படத்தில் அமர்ந்திருக்கும் இளைஞர் திவான் அவர்கள் வளரும் இயக்குனர். 

          காலை 61/2 மணிக்கு மேக்கப்மேன் தாசேட்டனும் அவரது உதவியாளரும் படப்பிடிப்பு  நடக்கும் இடத்திற்கு  வந்து ஒவ்வொருவருக்கும் மேக்கப் போடத் தொடங்கினார்கள். மூன்ரு பேர்களை வைத்து முதல் காட்சி  8 மணிக்கு எடுத்தோம்.  அடுத்தக் காட்சி கொடும் வெயிலில் 12 மணி அளவில் எடுத்து முடித்தோம்.  மூன்றாவது  காட்சி... வள்ளியின் நடனம்.  குடந்தையூரார், பாலகணேஷ், ஆவி, சோனி, நான் உள்ளிட்ட எல்லோரும் உள்ள அந்தக்  காட்சி எடுக்க ஆரம்பித்ததோ  1 மணி அளவில்.


          2மணிக்குத்  திருச்சூர் போக வேண்டிய அவசரத்தில் காமெராமேன் அஜித்!...  கையில் வாளுடன் குடைந்தையூராரைக் குத்தக்  காத்திருக்கும் பாலகணேஷ் !....  எல்லோரும் டென்ஷனுடன்!...  மீண்டும் மீண்டும் டேக்குகள் எடுத்தும் காட்சிகள் ஒகே ஆகவில்லை...!  எப்படியோ ஓரளவு சமாளித்து ஒருசில  காட்சிகள் மட்டும்அவசரமாக  எடுத்தோம்.  2 மணிக்குக் காமெராவுடன் அஜித் திருச்சூர் ஓட,  நாங்கள்  வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லாததால் ,சமதானத்துடன் அங்கு அமர்ந்து மதிய உணவு உண்டோம்.  பின் எல்லோரும் ஓய்வெடுக்கப் போனோம்.  மறுநாள் நானும் மேக்கப் மேனும், காமெரா மேனும், இரண்டு நடிகர்களுடன்  அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்தூர் துஞ்சன் மடம் செல்ல வேண்டும்!.... முந்தைய நாள் எடுக்க வேண்டிய இரண்டு காட்சிகள் வேறு எடுக்க வேண்டும்!... மறு நாள் காலை 6 மணிக்கு  நண்பர் விபினிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. கம்யூனிஸ்ட் கட்சித தொண்டர் ஆர்.விஜயன் வடகஞ்சேரியில் நேற்று  கொல்லப்பட்டதா  ல்அன்று ஆலத்தூர் தாலுகாவில்   ஹர்த்தால்! நாங்கள் இருக்குமிடம் பாலக்காடு தாலுகா ...ஆனால் படப்பிடிப்பு நடக்குமிடம் ஆலத்தூர் தாலுகாவில் !.....எப்படி சமாளித்தோம்........தொடரும்......அடுத்த பகுதியில்.


(நாங்கள் இருவரும் சிறிது வேலைப் பளுவில் இருப்பதால் நன்பர்களின் வலைப்பக்கம் வர இயலவில்லை.  மே 11 ஆம் தேதிக்குப் பிறகு தங்கள்  வலைப்பக்கம் வந்துவிடுவோம். )