புதன், 11 மார்ச், 2015

ஆலிஃப் – அறிவின் முதலெழுத்து – திரைவிமர்சனம்    

    நாயக, நாயகிகளுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களும், வியாபார நோக்குடன் பணத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களும், திரைப்பட விருது பெறும் நோக்குடன் எடுக்கப்படும் திரைப்படங்களும், வாரம் தோறும் வந்து போகும் போது இடையில் அத்தி பூத்தாற் போல் எப்போதாவதுதான் சமூகத்தின் பிரச்சினைகளை, முக்கியமாக பேசினால் பிரச்சினை வருமோ எனப் பலரும் தயங்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களும் வருகின்றன. டைரக்டர் கமலின் “செல்லுலாய்ட்”டுக்குப் பிறகு வெளிவந்த, அப்படிப்பட்டத் திரைப்படம் தான் “ஆலிஃப் – அறிவின் முதலெழுத்து.


      நபிகள் நாயகம் தான் அதிகமாக வெறுக்கும் ஒன்றாகக் கூறிய “தலாக்” சொல்லி விவாகரத்து செய்வதும், அதன் பின் விளைவுகளும் எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கின்றது என்பதுதான் ஆலிஃப்.  ஆலிஃப் எனும் சிறுவன் தன் அக்கா, தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டியுடன் வறுமையிலும், இடையிடையே கிடைக்கப் பெறும் சிறிய மகிழ்ச்சி தரும் சம்பவங்களுடன் வாழ்கிறான்.  ஆஸ்மா நோயால் அவதிப்படும் தாயை, தன் தந்தை விவாகரத்து செய்ததும் தளர்ந்து போகிறான்.  அவனது கொள்ளுத் தாத்தா மனித நேயம் மிக்க ஒரு மத பண்டிதர் மட்டுமல்ல, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணமுடையவராக வாழ்ந்தவர்.  எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட அவரது இழப்பு அக்குடும்பத்தை தளர்த்தி விடுகிறது.  ஆலிஃபின் பாட்டி பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தின் பசியைப் போக்குகிறார்.  இதனிடையில் தான் விவாகரத்து.

 Image result for alif malayalam movie

      விவாகரத்திற்குப் பின் ஒரு நாள், ஒரு மத பண்டிதரின் சொற்பொழிவைக் கேட்கச் சென்ற ஆலிஃபின் தாய், ஆண்கள் அவர்களது அதிகமான ஆசையைத் தீர்க்க ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை மணம் முடிக்கலாம் என்றதும், பெண்களும் அப்படிச் செய்யக் கூடாதா? எனக் கேட்க, மதம் பண்டிதருடன் வாக்குவாதம் செய்ய வேண்டி வருகிறது.  அது போன்ற சில விஷயங்கள் ஆண்களால் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை.  அவை புனித குரானில் சொல்லப்பட்டவை அல்ல என்று ஆலிஃபின் தாய் சொன்னதும், பண்டிதரும், பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினரும் அவரை வெளியேற்றி, அதன் பின் அக்குடும்பத்தை தள்ளி வைத்து, கடைகளிலிருந்து பலசரக்குப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் செய்து விடுகிறார்கள்.

Image result for alif malayalam movie

இதனிடையே பக்கத்து வீட்டில் நடந்த ஒரு நிக்காஹிற்கு அவர்களை மட்டும் அழைக்காமலிருக்க கொள்ளுப் பாட்டி, “கல்யாண வீட்டில் மட்டன் பிரியாணியாகத்தான் இருக்கும்” என்றதும், ஆலிஃப் யாருக்கும் தெரியாமல் அங்கு சென்று பிரியாணி வாங்கி சாப்பிடாமல், அதைக் கொள்ளுப்பாட்டிக்குக் கொண்டுவந்து கொடுக்கும் இடம் மனதைத் தொடுகிறது.  வரும் வழியில் ஏதோ முள் காலில் குத்தியது என்று சொல்லி ஆலிஃப் மயங்கி விழுகிறான்.  காலில் பாம்பு கடித்த வடுவைக் கண்டதும் அவனது பாட்டி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரழக்கின்றான்.  அவனது உடலை அடக்கம் செய்ய பள்ளி வாசல் நிர்வாகக் குழுவினர் முன் வராமல் இருந்ததால், ஆலிஃபின் பாட்டி, அவனை வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் குழி தோண்டி மத ஆசாரப்படி அடக்குகிறார்.  எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிவை புதிப்பிக்காதவர்களுக்கு மீண்டும் புதிப்பிக்க வாய்ப்பு வர, ஆலிஃபின் தாய் பதிவைப் புதுப்பித்துத் தன் நிலையைச் சொல்ல, அவர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்.  தன் சூழலை நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவினரிடம் சொல்ல, அவருக்கு வேலை கிடைக்கிறது.  அது பெரும்பாலும் நிரந்தரமான வேலையாக மாற வாய்ப்புள்ளதால், அவர்களது குடும்பம் பட்டினியிலிருந்து மீள்கிறது.

Image result for alif malayalam movie

ஆலிஃபின் அக்காவை பள்ளியில் சேர்த்து மீண்டும் படிக்கவைக்க ஆலிஃபின் தாய் முடிவு செய்கிறார்.  இதனிடையே வேறு மணம் புரிந்த அவரது கணவன், அம் மனைவியை “தலாக்” சொல்லி விவாகரத்து செய்து, மீண்டும் ஆலிஃபின் தாயை மணக்க முன்வர, ஆலிஃபின் தாய், “உங்கள் விருப்பம் போல் தோன்றும் போது மணம் முடிக்கவும், வேண்டாத போது விவாகரத்து செய்யவும் பெண்கள் என்ன ஆடு மாடுகளா? பெண்களான எங்களுக்கும் உள்ளமும் உணர்வும் உண்டு.  இப்பொதுதான் நான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  எனக்கு இனி உங்களை ஒரு போதும் வேண்டாம்.” என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி சுதந்திரமாக வாழத் தொடங்குகிறார்.எழுதி இயக்கி இருப்பவர் என். கே. முகம்மது கோயா.  தயாரித்தவர் பிஜு.  ரமேஷ் நாராயாணனின் இசை கேட்கும்படியாக உள்ளது.  எம் டி ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் அருமை.  ஆலிஃபின் தாயாக வரும் லெனா நன்றாக நடித்திருக்கிறார். அவரது தாயாக வரும் ஜீனத்துக்கு கிடைத்த நல்ல ஒரு கதாப்பாத்திரம். இதை மிகவும் பக்குவமாகக் கையாண்டு கைதட்டல் வாங்குகிறார் ஜீனத்து.  பழங்கால நாடக நடிகையான நிலம்பூர் ஆயிஷாவின் நடிப்பும் அருமை.  அவரது கணவனாக வரும் நெடுமுடி வேணு மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இஸ்லாமிய மத பண்டிதரான சேகன்னூர் மௌலவியை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறார். மத மதில்களுக்குள் நின்று கொண்டே இது போன்ற சீர்திருத்தங்கள் தேவை என வாதிடும் இது போன்ற திரைப்படங்களை, முகம்மது கோயா போன்ற இயக்குனர்கள் எடுத்து சமூகம் வித்தியாசமாக விமர்சன புத்தியுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். அப்போதுதான் கலையும், எழுத்தும் சமூக சீர்திருத்தத்திற்கு இன்றியமையாதவை என்பதை நிலை நாட்ட முடியும்.

படங்கள் - கூகுள்

33 கருத்துகள்:

 1. சிந்திக்க வைக்கும்
  சிறந்த எண்ணங்களின் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. முற்போக்கு சிந்தனையின் வெளிப்பாடே
  பார்போம் இதற்கு எந்த மாதிரி
  வரவேற்பு கிடைக்கிறதென்று. தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! ஆம் முற்போக்குச் சிந்தனைதான் பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் வரவேற்பு!

   நீக்கு
 3. நல்ல விமர்சனம் அய்யா!
  இது போன்ற படங்கள் பல்கி பெருக வேண்டும்!
  ஆனால் அது சாத்தியமா என்றால் ? அரிதாகவே படுகிறது
  இன்றையை சூழலில்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! பார்ப்போம்!

   நீக்கு
 4. தங்களின் விமரிசனம் - திரைப்படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Me too have the same feeling.

   What a film with an ideal Goal !! We hardly come across with such a film nowadays.

   Hats off to producer and director.

   subbu thatha.
   BTW, why not you produce a short film like this one ??

   நீக்கு
  2. மிக்க நன்றிஐயா! தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
  3. மிக்க நன்றி சுப்பு தாத்தா தங்களின் கருத்திற்கு! ம்ம்ம் பார்ப்போம் தாத்தா. முடிகின்றதா என்று!

   நீக்கு
 5. சீர்திருத்தங்கள் தேவை தான்... வரவேற்பு இருக்குமா...? என்பது சந்தேகம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் நம்பிக்கையுடன் காத்திருப்போம்...வேறு வழி?! மிக்க நன்றி டிடி!

   நீக்கு
 6. வித்தியாசமான படம் ............பார்க்க வேண்டும் ...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அண்ணா

  தங்களின் பார்வையில் விமர்சனத்தை சொல்லிய விதம் நன்று சீர்திருத்தம் வரும் என்பது சொல்ல முடியாது.. நிச்சயம் பார்க்கிறேன் படத்தை... பகிர்வுக்கு நன்றி த.ம 5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 8. அருமையான விமர்சனம் ஆவலைத்தூண்டுகிறது.
  தம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! பாருங்கள்! நல்ல படம்!

   நீக்கு
 9. பல மத சம்பிரதாயங்கள் எந்த மதமானாலும் உடைக்கத் தயக்கம் கொள்கிறார்கள் எனக்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் தெரியாது. ஆனால் இந்த தலாக் விஷயம் அடிக்கடி கேள்விப்படுவதுஇதே கருவை வேற்று மதத்தினர் கையாளவே தயங்குவார்கள் என்று நினைக்கிறேந்திரைப் படங்கள் பார்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சார்! எல்லா மதங்களிலுமே தயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால் சமூகப் பயம்தான்...எல்லாமே. ஆம் தலாக் சொன்னால் பிரிதல் ஆனால் மற்ற மதங்களில் அப்படி இல்லையே! அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்....மிக்க நன்றி சார்!

   நீக்கு
 10. ஒரு நல்ல திரைப்படத்துக்கு, நல்லொதொரு விமர்சனம்.
  வித்தியாசமான படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! ஆம் சமீபத்தில் வந்த படங்களில் இது வித்தியாசமான படம்தான்!

   நீக்கு
 11. ஒரு மாறுபட்ட கருத்தை முன் வைப்பதுபோல் இருக்கிறது தாங்கள் சொல்லும் கதை நல்லவேளை இதன் இயக்குனர் திரு. முகம்மது கோயா
  தமிழ் மணத்தில் திணிப்பதற்காக 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! மாறுபட்ட கருத்துதான். முற்போக்கான கருத்தும் தான்! மிக்க நன்றி திணித்ததற்கு நண்பரே!

   நீக்கு
 12. நல்லநோக்குடன் கதையை...படம் எடுத்து இருக்கிறார்கள். பார்க்க வேண்டும். விமர்சனம் ஆவலை அதிகப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 13. பகிர்விற்கு நன்றி சகோதரரே. மலையாளப் படம் என்பதால் பரவாயில்லையோ..தமிழ்நாட்டில் தடை விதித்திருப்பார்கள் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்! மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 14. இப்படிப்பட்ட புரட்சிகர சிந்தனைகள் மதவாதிகளுக்குப் பிடிக்காதே ,எப்படி இன்னும் கொடியைத் தூக்காமல் இருக்கிறார்கள் ?தமிழில் இப்படிப்பட்ட படங்களை நினைத்துகூட முடியாது :)
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ ஆம் ஜி! சரிதான். மிக்க நன்றி ஜி! தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 15. அன்புள்ள அய்யா,

  ஆலிஃப் – அறிவின் முதலெழுத்து – திரைவிமர்சனம் “தலாக்” சொல்லி விவாகரத்து செய்வதும், அதன் பின் விளைவுகளும் எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கின்றது என்பதை நன்றாக தங்களின் விமர்சனப்பார்வை படம் பிடித்துக் காட்டியது.

  நன்றி.
  த.ம. 9.

  பதிலளிநீக்கு