செவ்வாய், 20 ஜனவரி, 2015

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – சிக்மண்ட் ஃப்ராய்ட்

இணையத்திலிருந்து

         தினமும் உடலுக்குப் பயிற்சி அளிப்பது வாடிக்கைதான் என்றாலும், மனதிற்கு அளிப்பது இப்போதெல்லாம் வலைத்தளங்களின் மூலமும், எப்போதாவது இணையத்தில் உள்ள புத்தங்களின் மூலமும்தான். தினமும் மனதிற்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த காலம் உண்டு.  பல வருடங்களுக்கு முன். அதன் பின் (திருமணத்திற்குப் பின்) வாழ்க்கைச் சூழல் மாறியதால் வாசிப்பு குறைந்து, இல்லை என்றாகிப் போனது. இப்போது, நண்பருடன் வலைத்தளம் ஆரம்பித்த பிறகுதான் மீண்டும் எனது வாசிப்பு மெதுவாகத் தொடங்கியுள்ளது.  அதுவும் இணையத்தில்தான்.  தினமும் மனதிற்கும் பயிற்சி கொடுக்க ஆசைதான். ஆனால், இயலவில்லை.  இப்போது சென்னையில் புத்தகக் கண்காட்சி! இதற்கு முன், வருடந்தோறும் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்றதுண்டு குடும்பத்துடன். பல புத்தகங்கள் வீட்டிற்கு அணிவகுக்கும், ஆங்கிலத்தில் வேதங்களும், உபனிஷத்துகளும், தத்துவமும் பேசும் புத்தகங்கள், தொழில்நுட்பப் புத்தகங்கள் என்று. எனக்கும் அவற்றிற்கும் தூரம் அதிகம், நேர்துருவங்கள். (எதிர் எதிர் துருவங்கள் என்றால் கவரப்படும்.  நேர் துருவங்கள்தான் ரிப்பெல் செய்யும்!)

      இம்முறையும் செல்ல ஆசை இருந்தாலும், கொஞ்சம் யோசனையாகவே இருந்தது.  வேறு ஒன்றும் இல்லை, சென்றால் நிச்சயமாகக் கைப்பையின் வாய் பிளக்கும், என் உயரத்தின் கால் பகுதி அளவாவது தொடும்வரை புத்தகங்கள் அடுக்கப்படும் ஆதலால், அதற்கானச் சூழல் இல்லாததால் அந்த யோசனை.  கொஞ்சம் வருத்தம்தான். கவிஞர் முத்துநிலவன் ஐயா வருவதாக அறிவித்ததால், ஆவி, குடந்தையார், நான், ராயச் செல்லப்பா சார், வாத்தியார் எல்லோரும் சென்றோம்.  கவிஞரை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. துளசியும் அவருடன் தொலபேசினார். சகோதரி தென்றல் கீதா அவர்களையும் பார்த்ததும், ஆச்சரியமும், சந்தோஷமும். சகோதரி எங்களுக்குத் தனதுப் புத்தகமாகிய “ஒரு கோப்பை மனிதம்” தனது கையொப்புடன் அன்பளிப்பாகக் கொடுத்தார். நன்றி சகோதரி!  மிகவும் மகிழ்ச்சி! வாசிக்கின்றோம். சகோதரி க்ரேஸ் அவர்களின் தந்தையும் வந்திருந்தார். தளிர் சுரேஷும் வந்திருந்தார்.  சென்னையில் இருந்தாலும், இதுதான் அவரை முதல் தடவையாக நேரில் சந்தித்தேன். எனக்குத் தெரிந்த அளவில் - வேட்டி சட்டையில் இருப்பவர் நண்பர் தளிர் சுரேஷ், அவர் கையைப் பிடித்திருப்பவர் வாத்தியார் பாலகணேஷ், இருவரின் நடுவில் கண்ணாடி அணிந்திருப்பவர் நம் கவிஞர் முத்து நிலவன் ஐயா, வாத்தியாருக்கு அடுத்து கண்ணாடி அணிந்து இருப்பவர், பதிவர், குறும்பட இயக்குனர் குடந்தை ஆர்.வி. சரவணன், சிவப்பு டீஷர்டில் இருப்பவர், பதிவர், தற்போது ஒரு குறும்படம் இயக்கியிருக்கும் கோவை ஆவி, அடுத்து சகோதரி தென்றல் கீதா.  எல்லோரும் நண்பர்களே.

    மீனாட்சிப் பதிப்பகத்தில், சுஜாதா அவர்களின் புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைப்பது அறிந்து குடந்தையார் சில புத்தகங்கள் வாங்கினார். 7 மணி ஆகிவிட்டதால் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டேன். பின்னர் இரு முறை செல்ல நேர்ந்தது. அரங்க அமைப்பு நன்றாக இருந்தது. ஹப்பா! எத்தனைப் பதிப்பகங்கள்!  எவ்வளவுப் புத்தகங்கள்! பிரமிப்பாக இருந்தது. எழுதுபவர்ககள் அதிகமாகியுள்ளனரோ?! குழந்தைகளுடன் பெற்றோர் வந்திருந்தனர். வாசிப்புக் கூடியுள்ளது என்பதை அறிய முடிந்தது. என்றாலும், பெரும்பாலான குழந்தைகள் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்பி வாங்கினர்.  பெற்றோரும் அவர்களை ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களையே நாடிச் செல்ல வைத்தனர்.  அதிலும் மிகவும் வருந்தத்தக்க ஓரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

ஒரு சிறு குழந்தை தமிழ் சித்திரக் கதைப் புத்தகத்தைக் கண்டு அதைக் கேட்க, உடனே அந்தக் குழந்தையின் தாய், “இந்தப் புக்லாம் வேண்டாம். இது தமிழ். உனக்கு இங்கிலிஷ்ல அதே புக் வாங்கித் தர்றேன்.  உனக்கு எத்தனை தடவை சொல்றது, தமிழ்ல பேசாத, இங்கிலிஷ்ல பேசுனு” என்று ஆங்கிலப் புத்தகங்கள், அமர்சித்திரக் கதைகள் விற்கும் ஸ்டாலிற்கு அழைத்துச் சென்றார். எனக்கு இதைப் பார்த்ததும், அந்தத் தாயிடம் நேரே சென்று குழந்தை வளர்ப்பு பற்றிச் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், நாகரீகம் கருதித் தவிர்த்தேன். தாய் மொழி கற்றால் பிற மொழிகள் கற்க முடியாது என்பது தவறான எண்ணம். தாய் மொழியில் அறிவு இருந்தால் பிற மொழிகளைக் கற்பது எளிது என்பது எங்கள் தாழ்மையான கருத்து. அச்சமயம், சீனு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல், எனக்கு, நண்பர் கார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன்) அவர்களின் மகன் ரக்ஷித் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ரக்ஷித், அப்பா சரவணன் வலைப்பூவில் எழுதுவதைப் பார்த்துத் தானும் கதைகள் எழுதுகின்றார்.  அதைப் பற்றி ரக்ஷித் என்னிடமும், துளசியிடமும், ஆவியின் குறும்படப்பிடிப்பின் இடைவெளியில் நிறைய பேசினார். (அவர் அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம்) பெற்றோர் எவ்வழி, குழந்தையும் அவ்வழி.

      பல நடுத்தர வயதுப் பெண்கள், தங்கள் கணவர்களின் நாவிற்கு சுவை சேர்க்கவும், இளம் வயது மகன், மகளைத் திருப்ப்திப்படுத்தவும், தங்கள் ஆரோக்கியம் என்று சொல்லியோ தெரியவில்லை, கணவரின் பர்சின் கனத்தைக் குறைக்க வேண்டி, சமையல் புத்தகங்களைத் தேடிச் சென்றனர்.  குறிப்பாக, இது நாள்வரை இல்லாத விதத்தில், தற்போது அதிகமாகப் பேசப்படும், பல மருத்துவர்கள் பரிந்துரைத்து சந்தையில் புகுந்து தங்களுக்கென்று தனி இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, ஜுர வேகத்தில், வியக்க வைக்கும் விலையில் விற்கப்படும், சிறுதானியங்களை உபயோகித்துச் செய்யப்படும் பதார்த்தங்களின் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களுக்கு ஏகக் கிராக்கி.  சிறுதானியங்களின் மவுசு கூடியுள்ளதைக் காண முடிந்தது.

      "நித்தி"க்கு (நித்தியானந்தா) எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும், அவரும் அங்கு ஒரு ஸ்டாலில் வழக்கமானச் சிரிப்பில் சிரித்துக் கொண்டிருந்தார்.  மக்களும் அவரது புத்தகங்களை வாங்கக் குழுமினர். ஆச்சரியம்தான். எத்தனை எத்தனை சாமியார்கள் எப்படிப்பட்டவர்களாகச் சமூகத்தில் வளைய வந்தாலும், நம் மக்களின் மதி மயக்கம் தெளிவதில்லை என்பது நிரூபணம் ஆவதைக் காண முடிந்தது. நித்தி சிரித்துக் கொண்டிருப்பதும் இவர்களால்தானோ? அங்கு வாங்க வந்தவர்களுக்கு, அவரது பெண் சீடர்கள் மிகவும் பய பக்தியுடனும், கர்ம சிரத்தையுடனும் புத்தகங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர். ஒரு வித விளம்பர யுக்திதான். இப்போது, நித்தியின் சிரிப்பு எனக்கு வேறு விதமாகத் தோன்றியது. வெற்றிச் சிரிப்பு?!?! இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை என்னை யாரும் நெருங்க முடியாது என்று?!

இணையத்திலிருந்து

      சர்ச்சை தொடங்கியதாலோ என்னமோ, “மாதொருபாகன்” என்று குரல்கள் அதிகமாகக் கேட்டது. “மாதொருபாகன் இங்கு” என்று டிஸ்கவரி பாலஸ் உட்பட பலர் அட்டை தொங்கவிட்டிருந்தார்கள். நேற்று, 18 ஆம் தேதி காலச்சுவடு பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில், சாரு நிவேதிதா வாசகர்களைச் சந்தித்து உரையாட வந்திருந்தார். மனுஷ்யப்புத்திரனும் உடன் இருந்தார். சாரு அவர்கள் இருக்கும் இடத்தில் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். நேற்றும் அதற்குக் குறை வைக்கவில்லை. நான் நிகழ்ச்சி ஆரம்பித்து சற்று தாமதித்துச் சென்றதால் அதற்கு முன் சாரு என்ன பேசினார் என்று தெரியவில்லை, ஆனால், வயதானவர் ஒருவர் திடீரென்று சாருவைப் பார்த்து “அதெப்படி நீ அதக் குப்பைனு சொல்லுவ (மாதொருபாகனை), அந்த எழுத்தாளர விமர்சிப்ப?  நீ எழுதறது மட்டும் ரொம்ப யோக்கியமா” என்றெல்லாம் வசை பாட, சாருவும் எழுந்து அந்த நபரைப் பார்த்து வசை பாட, அங்கு ஒரு தர்மசங்கடமான சூழல், முக்கியமாகப் பார்வையாளர்களுக்கு, ஏற்பட்டது.  எழுத்தாளர்கள், படித்தவர்களின் அரங்கம் போல் இல்லாமல், தெருவோரக் குழாயடிச் சண்டைக் களம் போல் மாறியது.
 
எனக்கு, இதுதான் முதல் முறை, இது போன்ற எழுத்தாளர்கள், வாசகர்களுடன் உரையாடும் நிகழ்வைக் காணுதல். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். நெடு நேரம் தொடர்ந்தது அந்த தவிர்க்கப்பட வேண்டிய, நாகரீகமற்ற சர்ச்சை.  காவல் துறையினர் வந்து சூழலை அமைதியாக்கினர்.  சாரு, பெருமாள் முருகனின் நாவலையும், தஸ்லிமா நஸ்ரினின் “லஜ்ஜாவை”யும் குப்பை என்று சொல்லி அதைப் பொது நிகழ்வில் அப்படிக் குற்றமாக விமர்சிப்பதில் தவறு இல்லை என்றும் சொல்வதைக் கேட்க நேர்ந்தது. “பெருமாளுக்குப் புக்கர் அவார்ட் கூட கிடைத்துவிடும்” என்றும் பேசினார். ஒரு எழுத்தை, எழுத்தாளரை விமர்சிப்பதில் தவறு இல்லை.  ஆனால், இப்படியும் கூட ஒரு எழுத்தாளர் தன் சக எழுத்தாளரை, பொது இடத்தில் விமர்சிப்பார்களா? என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் நீங்கவில்லை. சுஜாதாவையும் சொல்லத்தான் செய்தார். “சுஜாதா, “எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்” அப்படின்ற என் நாவல “கங்கையில், மிதக்கும் மஞ்சள் நிறமா மிதக்குமே” என்று மலம் என்று சொல்வது கூட ஒரு கெட்ட வார்த்தையாக அவருக்குத் தோன்றியது ஏன்னா அவர் கெட்ட வார்த்தை யூஸ் பண்ண மாட்டாரு..” அதுக்காக நான் அவர் வீடு தேடிப் போய் அடித்தேனா?”. எனக்கு விமர்சிப்பதில் கூட உரிமை இல்லையா” என்றெலாம் கேட்டார். பின்னர் வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விரைவில் முடித்துக் கொண்டார் தனது சந்திப்பை.  இன்று, 19 ஆம் தேதி எழுத்தாளர் ஞானி அவர்கள் வாசகர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. என்னால் செல்ல இயலவில்லை.

இணையத்திலிருந்து

“அறிவிற்கு உணவில்லாத போது வயிற்றிற்கும் சிறிது ஈயப்படும்” என்பதற்கு மாறாகப், புத்தகக் கண்காட்சி அரங்கின் வெளியில், ஐஸ்க்ரீம், ஜூஸ், ஸ்னாக்ஸ் கடைகள், சாப்பிட வாங்க உணவகம் என்று வாய்க்கும், வயிற்றிற்கும் போரடிக்காத உணவு வகைகள். ஊட்டி மசாலாப் பொருட்கள், பொடிகள், சில பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என்று ஒரு கடை.  அதற்கும், மற்ற சாப்பாடுக் கடைகளுக்கும், அரங்கத்தின் உள்ளே இருந்த அளவிற்கு நிகராகக் கூட்டம் மொய்த்தது. பெரும்பாலோர் கைகளில் பெரிய டெல்லி அப்பளத்தைக் காண முடிந்தது. மிகப் பெரிய மைதானம் என்பதால் இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த நல்ல வசதி, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

"போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களாஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் இங்கர்சால். எளிதாகச் சொல்லிவிட்டார். சொல்லுவது போல் புதுவாழ்வைத் தேடுகின்றேன் தான் ஆனால், புதிய புத்தகம் மாதொருபங்கனை வாங்கும் சூழல் இல்லை. அந்த வருத்தமும் நம் நண்பர் மது/கஸ்தூரிரங்கன் அவர்களால் தீர்ந்து போனது.  அவரது வலைத்தளத்தில் இந்தப் புத்தகத்தைப் பகிர்ந்திருந்தார்.  நன்றி தோழரே!.

“ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசருக்கு வழிகாட்டியாக முடியவில்லை. எப்போது முடியுமோ தெரியவில்லை!  என்றாலும்,

"ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்." ஆம்! முடித்து வைக்க முயற்சிக்கின்றேன்/ப்போம். இடையில் புத்தககப் பதிப்பகங்களுக்கோ, கடைகளுக்கோ சென்று.  இல்லையேல், அடுத்தப் புத்தகக் கண்காட்சியிலாவது! 

-கீதா

43 கருத்துகள்:

 1. "ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்."நச் என்று முடித்தீர்கள். அருமையான பதிவு. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி விசு நண்பரே! நான் அந்த வாசகத்தை எழுதிவிட்டு, நேற்று கூகுள் செய்த போது அந்த வாசகம் வந்தது....அய்யையோ நம்மள மாதிரி யாரோ சிந்திச்சுருக்காங்க ....காப்பி என்று சொல்லிடக் கூடாதே என்று பார்த்தால்.....நல்லகாலம் யார் அதைச் சொன்னது என்பது அதில் இல்லை. சரி...அப்படியே விட்டுவிட்டென்...அனானிமஸ் என்று இடுகையில் சொல்லி இருக்கலாமோ என்று கூட நினைத்தேன் ....

   நீக்கு
 2. அருமையான அனுபவப் பதிவு! படிக்கும்போது மகிழ்ச்சியும் பிரமிப்பும் ஏற்பட்டது!
  கூடவே நமக்கெல்லாம் இப்படிக் கேட்க மட்டுமே முடிகிறதே என்னும் ஆதங்கமும்
  மனதின் ஓரத்தில் ஏக்கமாய்ப் பெருமூச்சாய் வெளிவந்தது சகோதரரே!

  நல்ல பகிர்வு! படங்களும் சிறப்பு! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  த ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் ஆதங்கம் புரிகின்றது. தங்களைப் போன்றவர்களுக்காக, இணையத்தில் இது போன்ற புத்தகங்கள் கிடைக்க பதிப்பகங்களுடன் பேசிவருவதாக திரு திருமூர்த்தி ரங்கநாதன் அவர்கள் சொல்லியிருந்தார். வந்தால் தங்களைப் போன்றவர்களுக்கு நல்லதே. பார்ப்போம்....

   நீக்கு
 3. அனைத்து வயதினரும் கொண்டாடும் புத்தக திருவிழாவை 700 அரங்குகள் நிறைந்த
  புத்தக கண்காட்சி 2015- யினை, பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கப் பெறாத என் போன்றவர்களூக்கு எல்லாம் நல்லதொரு அருட்கொடை அய்யா! தங்களது,
  இந்த இனிமைதரும் பதிவு.
  ஸ்பாட் விசிட் செய்து நேரடி பதிவினை தந்தமைக்கு கடல் கடந்து வாழும் என்போன்றவர்களின் நெஞ்சார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்!
  தொடர்க!
  நன்றியுடன்,
  புதுவைவேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு. சகோதரி இளமதி அவர்களுக்கு அளித்த பதிலே.....

   பதிவர் சீனுவும் (திடங்க்கொண்டு போராடு) என்னை விட மிக அழகாகத் தொகுத்திருக்கின்றார். இலக்கியவாதி ஆதலால், அவர் புத்தகங்கள், பதிப்பகங்கள் பற்றியும் எழுதி உள்ளார். இலக்கிய நடையில்....நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 4. புத்தக கண்காட்சி அனுபவம் அருமை பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 5. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரை , நாகரிகமற்ற வார்த்தைகளால் விமர்சிப்பது தவறல்லவா.
  மாற்று கருத்து இருப்பின் எழுத்தின் வழியாகவே , தனது கருத்தினைச் சொல்லலாமே
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! அதுதான்! தமிழ் இலக்கிய உலகில் இது சர்வ சகஜம் என்பதும் தெரிய வருகின்றது. இது ஆரோக்கியமான சூழல் இல்லைதான்....

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. வணக்கம்
  அண்ணா.
  சமகால நிகழ்வுகளை மிக அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்..

  ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்." நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ஆஹா! செம ரவுண்டா இருக்கும் போலவே!! சூப்பர்!
  இதிலும் உங்க போட்டோ இல்லை:((
  சரி நேரில் வந்தே பாத்துகிறேன்:)

  இந்த சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை முதன்முதலில் அதிக மக்களிடம் கொண்டுசேர்த்த இரண்டு பேர் டாக்டர் சிவராமனும், வேளான்விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களும் தான். அதில் விகடனின் பங்கும் அளபரியாதது. மாதொருபாகன் படித்துவிட்டு கருத்திடுங்கள். உங்க கருத்தை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்...செம ரவுண்டு எல்லாம் இல்லை தோழி. வெகு சில மணி நேரங்களே மொத்தமாகவே 3 நாட்களில் 5 மணி நேரங்கள்தான். போதாது........தோழி, பொதுவாக எனக்கு என்னைப் புகைப்படம் எடுப்பதில், எடுத்துக் கொள்வதில் ஆர்வம் சுத்தமாகக் கிடையாது குறிப்பாகக் கல்லூரிக் காலத்திற்குப் பிறகு. வலையுலகில் அடியெடுத்து வைத்த பின்னும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், தற்போது வலை நண்பர்கள் பெருகி, அதுவும் மிகவும் அன்புடன் வேண்டும் போது என்னால் நோ சொல்ல இயலவில்லை.

   இந்த சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை முதன்முதலில் அதிக மக்களிடம் கொண்டுசேர்த்த இரண்டு பேர் டாக்டர் சிவராமனும், வேளான்விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களும் தான். அதில் விகடனின் பங்கும் அளப்பரியாதது// நிச்சயமாகச் சொல்லியே ஆக வேண்டும். பண்டைய காலத்தில் இந்தத் தானியங்கள்தான் திராவிடர்களின் வாழ்வியலில் முக்கியப் பங்கு வகித்தன. உலகமயமாக்கலில் அவை சந்தையில் அவ்வளவாக இல்லாமல் (கிராமங்களில் மட்டுமே இருந்து வந்தன...)அதன் முக்கியத்துவத்தை மக்கள் மறந்தனர் ஆச்சரியம்தான்!. நான் இந்தப் பாரம்பரிய தானியங்களை வருடங்களாக உபயோகித்து வருவதாலும், தற்போது ஊடகங்கள் அதைப் பற்றிப் பெரிதும் பேசி சந்தையில் அதன் விலையையும் அதிகப் படுத்தியிருப்பதால், நகரங்களில் வாழும் பணக்காரர்கள் மட்டுமே அதை உபயோகிக்க முடியும் என்ற நிலையிலும், நடுத்தரவர்க மக்களும், வறுமையில் இருக்கும் மக்களும் அதை உபயோகப்படுத்த முடியாமல் போகின்றதே என்றும், இது நாள் வரை உபயோகித்து வந்த என்னைப் போன்றவர்களும் அதை வாங்க முடியாத அளவு விலை எகிறிப் போகக் காரணமான மக்களின் மன நிலையைத்தான் சற்று கேலி செய்திருந்தேன்...ஆதங்கத்துடன்....

   இயற்கை வேளான்மை விஞ்ஞானி எங்களுக்கு நண்பராக இருந்ததும், எங்கள் நாத்தனாரின் வீட்டிற்கு வருகை தந்ததையும் மறக்க முடியாது. குடும்ப உறுப்பினர்கள் அவரது குழுவில் பங்கெடுக்கின்றனர்.

   மாதொருபாகன் வாசித்து விட்டுக் கண்டிப்பாகக் கருத்திடுவோம். துளசியும், நானும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்...கண்டிப்பாகக் கருத்துண்டு!...

   நீக்கு
  2. தோழி எனது புகைப்படம் பார்க்க வேண்டும் என்றால் சகோதரி தென்றல் கீதா அவர்களின் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.....

   நீக்கு
  3. அய்யா உங்கள் குடும்ப நண்பரா!! மிக்க மகிழ்ச்சி தோழி! நான் கீதா அக்காவின் ப்லாக் ல போட்டோஸ் பார்த்தேன். அவங்க பேரை குறிப்பிடாததால தெரியல! இப்போ போய் மறுபடி பார்த்துடுறேன்:)

   நீக்கு
 8. சுஜாதா சாருவின் எழுத்தை அப்படி விமர்சித்தாரா என்று நினைவில்லை. அவரைப் பற்றி என்பதால் அவருக்கு மறந்திருக்காது போலும்! சாரு நிகழ்ச்சியில் கலவரம் பற்றிய வீடியோ ஒன்றை நேற்று ப்ளஸ்ஸில் பார்த்தேன்.

  நண்பர்கள் சிரிக்கும் புகைப்படம் சூப்பர்.. உங்களைக் காணோமே அதில்?

  அனுபவங்களை நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்தக் காலத்தில் 1000 புத்தகங்களைப் படித்தவர்கள் நிறையவே தேறுவார்கள் என்று நினைக்கிறேன். எந்த வகைப் புத்தகங்கள் என்று சீசர் குறிப்பிடவில்லை அல்லவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன்னுடைய கணையாழி கடையாசிப் பக்கத்தில் அப்படிக் குறிப்பிட்டு இருப்பதாக படித்தேன் சார்...

   நீக்கு
 9. எனக்கும் அந்த ஆச்சரியம் இருந்தது நண்பரே! சுஜாதா அப்படிச் சொல்லியிருந்திருப்பாரா என்று. சுஜாதாவைத் தேடித் தேடி வாசித்த காலம் உண்டு. மிகவும் பிடித்த எழுத்தாளர் என்பதால். இப்போதும் கூட பல புத்தகங்களைக் காண நேர்ந்தது கண்காட்சியில். சாரு நிகழ்வை எனது காமெராவில் வீடியோ எடுத்திருக்கின்றேன். ஆனால் வெளியிடவில்லை. ஏற்கனவே சர்ச்சைகள். நாமும் எதற்கு அதில் எண்ணைய் ஊற்ற வேண்டும் என்று துளசியும் நானும் பேசி வேண்டாம் என்று வெளியிடவில்லை.

  புகைப்படம் நான் எடுட்த்தவை...அதனால் நான் எப்படி அதில் இருக்க முடியும்!? அஹ்ஹஹஹ்ஹ சும்மா...... தென்றல் கீதா அவர்களின் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டப் புகைப்படத்தில் இருப்பேன்.

  ம்ம்ம் 1000 புத்தகங்கள் வாசித்தவர்கள் தேறுவார்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல்...எந்தவகை என்பது சீசர் குறிப்பிடாதது அவர் காலத்து எண்ண அலையிலாக இருக்குமோ....

  மிக்க நன்றி!! (எதற்கு என்று உங்களுக்குத் தெரியும் ..ஆம் திருத்திவிட்டேன். பல இடங்களில் பிழைகள் இருந்தன..ராத்திரி எழுதி முடிக்கத் தாமதம்...பின்னர் முழுவதுமாகத் திருத்தம் செய்ய முடியவில்லை 1 மணி நெருங்கியதால்....தமிழில் தட்டச்சு செய்யும் போது பல சமயங்களில் பிழைகள் நிறைய வருகின்றன...அதுவும் மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் கலந்து வரும் இடங்கள்...பாராட்டிற்கும் மிக்க நன்றி! நண்பரே!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் இந்த அனுபவம் அருமை.
  பதிவுலக நண்பர்களின் புகைப்படத்தில் அவர்களின் பெயரையும் எழுதியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


  "//“இந்தப் புக்லாம் வேண்டாம். இது தமிழ். உனக்கு இங்கிலிஷ்ல அதே புக் வாங்கித் தர்றேன். உனக்கு எத்தனை தடவை சொல்றது, தமிழ்ல பேசாத, இங்கிலிஷ்ல பேசுனு” என்று ஆங்கிலப் புத்தகங்கள், அமர்சித்திரக் கதைகள் விற்கும் ஸ்டாலிற்கு அழைத்துச் சென்றார். //"

  கடவுளே!, வெள்ளைக்காரனே நம்ம நாட்டை விட்டுட்டு போயிட்டான், ஆனா நாம் தான் இன்னும் அவனுடைய மொழி தான் சிறந்த மொழின்னு,அதை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கோம். ஒரு நல்ல தாயாக இருப்பவர், அந்த குழந்தை விரும்பி கேட்டதை (தமிழ் புத்தகத்தையும்) வாங்கிக்கொடுத்து, ஆங்கிலப் புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். உம். இதையெல்லாம் யார் சொல்லுவார்கள்...

  இதைப் படிக்கின்ற எனக்கே மனசு கொதிக்கிறது என்றால், அதைப் பக்கத்தில் இருந்து பார்த்த தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.

  "//ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்."//" - சூப்பர் பன்ச்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! பெயர்கள் குறிப்பிட்டு விட்டோம் நண்பரே!

   உங்கள் கருத்து மிகவும் சரியே! குழந்தைகள் நல்லதை விரும்பும் போது அதை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்....ஆம் எனக்கு மனது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது...நாளைய இளைஞனை நினைத்து...ஆம் ஆண் குழந்தை....

   நீக்கு
 11. // பெற்றோர் எவ்வழி, குழந்தையும் அவ்வழி // அதே அதே... உண்மை பன்ச்...!

  பதிலளிநீக்கு
 12. //ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…
  வாசகன் அதனை முடித்து வைக்கிறான்..//

  அருமை.. பாராட்டுகள்!..

  பதிலளிநீக்கு
 13. உங்கள் நன்றியினை டெல்லி தமிழ்ச் சங்க தூண்களில் ஒன்றான திரு.ஷாஜகானுக்குத்தான் தெரிவிக்கவேண்டும்.
  நன்றி ..
  பிரச்சனையின் காணொளியை நானும் பார்த்தேன்.
  குழந்தை வளர்ப்பு குறித்த கருத்து அருமை
  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக! தோழரே! திரு ஷாஜகான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! மாதொருபாகன் பகிர்ந்தமைக்கு!

   காணொளி நானும் எடுத்திருந்தேன். ஆனால் இங்கு வெளியிடவில்லை. இன்னும் எதற்கு தேவையில்லாத பிரச்சினை என்று. துளசியும் நானும் பேசிவிட்டுத்தான் அதை வெளியிடவில்லை.

   மிக்க நன்றி தோழரெ!

   நீக்கு
 14. நானும் செல்லத்தான் நினைக்கிறேன் ,ஆனால் முடியலே ..அடுத்த மாதம் மதுரையில் புத்தகக் கண்காட்சி தொடங்கி விடும் என்பதால் காத்திருக்கிறேன் !
  குழாயடி சண்டையை நானும் கேள்விபட்டேன் :)
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை! அங்கு புத்தகக் கண் காட்சியா.....எஞ்சாய் ஜி! ஆம் ஜி நான் அதை வீடியோவாக எடுத்திருந்தாலும் வெளியிடவில்லை. ஆனால் அவை இணையத்தில் இருக்கின்றன போலும்....

   நீக்கு
 15. இத்தனை பேர் கொண்ட சந்திப்பு நிகழ்ந்தததா.. ஏன் என்னிடம் யாருமே கூறவில்லை..

  சாருவின் அந்த கூட்டத்தை ஜஸ்ட் மிஸ் செய்தேன்.. அக்கூட்டம் ஆரம்பிக்க இருக்கும் போதுதான் அங்கிருந்து கிளம்பினேன்... காலையிலேயே வந்திருந்ததால் சுற்றி சுற்றி கால் வலிக்க ஆரம்பித்தது விட்டது... அதான் கிளம்பிவிட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீனு..சாரி ப்ரதர். நான் கவிஞரின் வலைத்தளத்திலிருந்து அறிந்து அதை குடந்தையாருக்கும், ஆவிக்கும் மெசேஜாக அனுப்பியிருந்தேன். இப்போதுதான் ஆவியிடம் பேசினேன்...அவர் , னாங்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கின்றோம் என்று நினைத்துவிட்டார் போலும்......சீனுவை சமாதானப்படுத்திவிடுங்கள் என்று சொல்லியுள்ளேன்..அஹஹ... இனி ஏதாவது இது போன்று இருந்தால் உங்களுக்கும் அனுப்பிவிட்டால் போச்சு.....மன்னித்துவிடுங்கள் சீனு...ப்ளீஸ்...

   நான் உள்ளே வருவதற்கு முன்னர் நீங்கள் சென்றிருக்கின்றீர்கள்.....நீங்கள் சிற்றியதில் ஆச்சரியம் இல்லை...இலக்கியவாதி...!!

   மிக்க நன்றி சீனு....

   நீக்கு
 16. நாங்களும் புத்தக கண்காட்சிக்கு சென்ற நிறைவு..சிறப்பான பதிவு ...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! முதல் வருகைக்கும் கருத்திற்கும். தொடர்கின்ரோம்!

   நீக்கு
 17. புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத ஆதங்கம் தங்கள் வாயிலாக தீர்ந்தது.

  "ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்." ஆம்!///

  அஹா... நச்சுன்னு சொன்னீங்க.

  பதிலளிநீக்கு
 18. வாழ்க தமிழ்.

  ஒருதாய் தனது குழந்தையை…
  //எத்தனை தடவை சொல்றது தமிழ்ல பேசாதேனு//
  இது கேட்க மிகவும் வேதனையாக இருந்தது தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும் இவர்களைப்போல் ஈனப்பிறவிகள் எதற்க்கு ? தமிழ் நாட்டில் வசிக்க வேண்டும் வேறு ஏதாவது ஆங்கில நாட்டு குடியுரிமை வாங்கிக்கொண்டு போக வேண்டியதுதானே... இன்றைய வாழ்க்கைக்கு ஆங்கிலம் முக்கியம் 80தை மறுக்க முடியாதுதான் அதற்காக தமிழை இழிவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம் இந்த வகையான மானங்கெட்ட ஜென்மங்களை கண்டால் நானெல்லாம் கண்டிப்பாக கேட்பேன்.

  இதேசூழல் எனக்கு ஒருமுறை துபாய் போயிருந்த போது பார்க்கில் ஏற்பட்டது அந்தப்பெண்மணியிடம் கேட்டு விட்டேன் அவளின் கணவனுக்கும் எனக்கும் வாய்த்தகறாறு வந்து விட்டது நண்பர்கள் தலையீட்டால் முற்றுப்பெற்றது அவர்கள் யாரென்றே எனக்குத்தெரியாது தமிழில் பேசியவர்கள் என்ற காரணத்திற்காக சண்டை போட்டேன் என்னால் இப்படி நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை அதனால்தான் நான் பலருக்கும் வேண்டாதவனாகி விடுகிறேன்.

  அபுதாபியில் ஒரு தெரிந்த குடும்பம் சென்னையை சேர்ந்தவர்கள் என்னை அவர்களது குழந்தைகளுக்கு அரபு எழுத படிக்க டியூசன் எடுக்கச் சொன்னார்கள் நான் சொன்னேன் நானே அறைகுறை அந்த அளவுக்கு பக்குவம் இல்லை அது தவறாகவே போய் விடும் வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு நான் தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன் எனக்கு பணமே தரவேண்டாம் என்றேன் அதற்க்கு அவர்கள் என்னிடம் சொன்னது தமிழை வைத்து நாக்கு வழிக்கவா ? என்றதும் எனக்கு கோபம் வந்து விட்டது நாக்கு வழிக்கிற தமிழை வைத்துதானே நீ ஆங்கிலம் படித்தே............. என்று கேட்க சண்டை வந்து இன்றுவரை அவர்களுடன் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

  இன்றைக்கும் தமிழ் நாட்டில் வாழும் தமிழன் இல்லாத நடிகனுக்காக தமிழனை அடிக்கின்றான் தமிழன்,
  தமிழன் இல்லாதவனுக்காக தீ குளிக்கிறான் தமிழன்
  இந்நிலை மாறும் வரை தமிழ் கீழ்நோக்கியே போய்க்கொண்டே இருக்கும்.

  தமிழ் மணம் - 8
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழை வைத்து நாக்கு வழிக்கவா ?// மிகவும் கேவலம்! உங்கள் தர்கம் நியாயமானதே. நண்பரே! உங்கள் தார்மீகக் கோபம் நியாயமானதே. "கற்றது தமிழ்" படம் தான் நினைவுக்கு வந்தது.

   சொல்கின்றவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் ஜி. தமிழை விரும்புபவர்கள் நாம் அதை மெச்சுவோம். அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவர்களை நாம் திருத்த முடியாது. நம் வழி தனி வழியாக இருக்கட்டுமே....திரு ராயச் செல்லப்பா அவர்களின் புதிய இடுகை பாருங்கள்....அருமையான ஒரு பகிர்வு. மறைந்த எழுத்தாளர் திருமதி லஷ்மி அவர்களின் சுயசரிதை பற்றியது.......

   மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு

   நீக்கு
 19. புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சென்னை புறநகரில் இருப்பதால் சென்னைக்கு அடிக்கடி வருவது இல்லை! சொந்த தங்கை வீட்டிற்கு கூட எப்போதாவதுதான் வருவேன்! என்னுடைய பணி அப்படி! அன்றும் உடனே புறப்பட வேண்டியதாகிவிட்டது . வீட்டிற்கு வர இரவு பத்துமணி ஆகிவிட்டது. செங்குன்றத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு வர இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து வசதி கிடையாது. உடல் நலமில்லாத குழந்தைகள் வீட்டில் இருந்ததால் உடனே புறப்பட வேண்டியதாகிவிட்டது. இன்னும் சற்று நேரம் நண்பர்களுடன் இருக்க இயலாமல் போகிவிட்டதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது. நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சுரேஷ் நண்பரே! தங்கள் கஷ்டம் நன்றாகத் தெரியும். நிச்சயமாக நான் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன். சிட்டுக்குள்ளேயே பல சமயங்களில் கடினமாக இருக்கின்றது...அதுவும் நீங்கள் வெகு தூரம்.....

   நீக்கு
 20. வணக்கம் சகோதரி. உங்களைப் புத்தகக் காட்சியில் பார்த்ததும், அங்கிருந்து அய்யாவுடன் பேசமுடிந்ததும் மறக்கவியலாத மகிழ்வான நிகழ்வுகள். நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். நான் வாங்கிய புத்தகங்கள் மூட்டையாகச் சேர்ந்துவிட்டதால் அன்னம்-அகரம் பதிப்பக நண்பர்கள் புத்தக விழா முடிந்து வரும்போது கொண்டுவருகிறோம் என்று சொன்னதால் இனிமேல்தான் போய் தஞ்சையில் வாங்கிவந்தபின் (வாங்கிய புத்தகங்களின் பட்டியலோடு) ஒரு பதிவு போட நினைத்திருக்கிறேன். உங்களின் இந்தப் பதிவில் -
  “தாய் மொழி கற்றால் பிற மொழிகள் கற்க முடியாது என்பது தவறான எண்ணம். தாய் மொழியில் அறிவு இருந்தால் பிற மொழிகளைக் கற்பது எளிது என்பது எங்கள் தாழ்மையான கருத்து.“ என்றது உண்மையில் உயர்வான கருத்து. பதிவும் அருமை நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களைச் சந்தித்ததும், துளசியுடன் தாங்கள் பேசியதும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும். பாராட்டிற்கும். உங்கள் பதிவையும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

   நீக்கு