புதன், 14 ஜனவரி, 2015

மதம் பிடித்த யானைக்கு மயக்க ஊசி போட்ட மருத்துவரைக் கொன்றது யானை மட்டுமல்ல, கூடி நின்ற மக்களும்தான்


     பத்தனம்திட்டை அருகே வாய்ப்பூரில் ஒரு கோயில் விழாவில் பங்கெடுத்த யானையை குளிப்பாட்ட ஆற்றுக்குக் கொண்டு சென்ற போது அதற்கு மதம் பிடித்ததை அறிந்த யானைப் பாகன், உடனே சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு அதைச் சங்கிலியால் கட்ட வேண்டிய அவசியத்தை அறிவித்திருக்கின்றார். முல்லப்பள்ளி ரீஜனல் அணிமல் ஹெல்த்  செண்டரில், கால்நடை மருத்துவரான டாக்டர் கோபகுமார், மயக்க மருந்து நிறைந்த சிரிஞ்ச் மற்றும் ஊசி பொருந்திய துப்பாக்கியுடன் யானை நின்றிருந்த ஆற்றிற்குச் சென்றிருக்கின்றார்.  அங்கோ  நூற்றுக்கணக்கான ஆட்கள் கையில் மொபைலுடன் யானை நின்றிருந்த பகுதியில் கூடி இருந்தனர்.  

      இரண்டு உதவியாளர்களுடன் சென்ற கோபகுமார் துப்பாக்கியில் பொருத்தியிருந்த மயக்க மருந்து ஊசியை, தூர நின்று இருந்து சுட்டு யானையின் உடலில் மருந்து ஏறச் செய்தும் இருக்கின்றார். சில சமயங்களில் யானை  மயங்க 10 முதல் 15 நிமிடங்கள் எடுக்குமாம்.  ஆனால், கூடி நின்ற ஆட்களின் கூச்சல்களும், சப்தத்தாலும்  கோபம் கொண்ட யானை உடனே ஓட ஆரம்பிக்க எல்லோரும் சிதறி ஓடியிருக்கின்றார்கள்.  யானை 2 கிலோமீட்டர் ஓடி, ஓரிடத்தில் நின்றிருக்கின்றது.  குறிப்பிட்ட நேரம் கடந்தும் யானை மயக்கமடையாத்தால் கோபக்குமார் மீண்டும் ஒரு டோஸ் மயக்க மருந்தை யானைக்குக் கொடுக்க முடிவு செய்து, மீண்டும் மயக்க மருந்து நிறைந்த சிரிஞ்ச் பொருத்தியத் துப்பாக்கியால்அதை  சுட்டு இருக்கின்றார்.  இரண்டாம் முறையாக ஊசி குத்தியதை ஏற்ற யானை உடனே திரும்பி சுட்ட மருத்துவரைப் பார்த்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கின்றது.

    

    ஆபத்தை உணர்ந்த கோபகுமார், தன் உயிரைக் காப்பாற்ற ஓடியிருக்கின்றார்.  துரதிரதிர்ஷ்டவசமாக, ஓடும் போது ஒரு வாய்க்காலின் வரப்பில் தட்டி விழ, அவர் எழும் முன் அருகே வந்த யானை, தந்தத்தால் அவரை மூன்று முறைக் குத்தி இருக்கின்றது.  கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு கற்களைக் கொண்டு யானை மீது எறிய அது அவர்களை விரட்டியிருக்கின்றது.  இதனிடையே கோபகுமார் தலை உயர்த்திப் பார்க்க, அவர் அருகே ஓடிய யானை, அவரை தன் முன்னங்காலால் உதைத்து எறிந்திருக்கின்றது.  உடனே, கோபக்குமாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  அவரது  மனைவி டாக்டர் பிந்துலட்சுமிக்கும், 11 ஆம் வகுப்பில் பயிலும் கோபிகாவுக்கும் அவர்களது எல்லாமான கோபக்குமார் இனி இல்லை என்பதை நினைக்கையில் மனம் கனக்கின்றது. 


     கூடி நின்றவர்கள், அவர்கள் அறியாமலேயே, யானை மயக்கம் அடையாமல் இருக்க ஒரு காரணம் ஆகி இருக்கிறார்கள்.  ஆட்களால் சூழப்பட்ட யானையின் கவனம் திசை திருப்பப்படுவதால், அது மயக்கமடைய பெரும்பாலும் அதிகமான மயக்க மருந்து வேண்டி வருமாம்.  மட்டுமல்ல சுடும்போது யானையின் உடலில் துளைத்து இறங்கும் ஊசியிலிருந்து மருந்து உடலில் செலுத்தப்பட, அப்போது நிகழும் வெடிச் சிதறல் மிக அவசியமாம். (explosion). அது நிகழ்ந்தால்தான் சிரிஞ்சில் உள்ள மருந்து யானையில் உடலினுள் ஏறும். இல்லையேல் மீண்டும் அடுத்த டோஸ் கொடுக்க வேண்டி இருக்கும்.  மட்டுமல்ல, மறைந்திருந்துதான் மருத்துவர் சுட வேண்டும். இல்லையேல் யானை சுடுபவரை நோக்கி ஓடிவந்து அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு அதிகமாம். 

     கோயில் விழாக்களில் யானையை உபயோகிப்பதைத் தடை செய்வது சிரமம்தான். ஆனால், கூடி நிற்பவர்களை போலீசாரின் உதவியால் அப்புறப்படுத்தி இருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாமோ? அது போல் சுடும் முன் ஒரு தற்காலிகத் தடுப்பை உருவாக்கி கோபக்குமார் சுட்டிருந்தால், யானை திரும்பும் போது சுட்டவரைக் காணாது இருக்க வாய்ப்புண்டு.  அப்படிச் செய்திருந்தால் அவ்விபத்தைத் தவிர்த்திருந்திருக்கலாமோ? இதை எல்லாம் விட யானைக்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் இருந்திருந்தால், இப்படி யானைக்கு மதம் பிடிப்பதையே தவிர்த்திருந்திருக்கலாமோ? மட்டுமல்ல மதம் பிடிக்க வாய்ப்புள்ள யானைகளுக்கு இப்போதெல்லாம் சில மருந்துகளின் உதவியால் மதம் பிடிப்பதைச் சிறிது நாட்கள் தள்ளி வைக்கின்ற வழக்கம் உண்டாம். பண ஆசை பிடித்த யானை முதலாளிகள் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாமோ?

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான விஷயங்கள் கோபக்குமாரின் மரணத்திற்குக் காரணமாகி இருக்கிறது. மட்டுமல்ல, இது போன்ற விபத்து இதற்கு முன்பும் நடந்திருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பு மண்ணுத்தி கால்நடைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரபாகரனும் இது போல் யானைக்கு மயக்க ஊசி போடும்போது யானையால் தாக்கப்பட்டு உயிர் இழந்திருக்கின்றார். இது போல் மீண்டும் ஒரு மருத்துவருக்கு இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகளை இனியேனும்  அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் செய்ய வேண்டும்.  பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தன் உயிரைக் கொடுத்த கோபக்குமாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினர் இப்பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.  படங்கள் கூகுளிலிருந்து எடுக்கப்பட்டவை

56 கருத்துகள்:

 1. இயற்கையை அதன் திசையை விட்டு திருப்பி
  தன் மனம்போன போக்கில் மாற்ற முயலும் மனிதர்களும்,
  எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதுடன் அதை பதிவு செய்து
  பகிர்வதை மட்டுமே நோக்கமாக்கி விட்ட நமது புதிய (face book , twitter , whats up) கலாச்சாரமும் அந்த யானை அறிந்திருக்காதே..?
  அந்த மருத்துவரின் இழப்பில் வேதனையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினரது கண்ணீரை யார் துடைப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ! தொடர்கின்றோம் தங்களையும்.

   ஆம் இயற்கையை நாம் திசை திருப்பி, சுயனலத்துடன் மக்கள் இருப்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள். மட்டுமல்ல தாங்கள் சொல்லியிருப்பது போல பதிவு செய்து பகிர்வதில் இருக்கும் ஆர்வம் மக்களின் கலாச்சாரம் மிகவும் மோசமாகி வருவதென்பது உண்மையே! மிக அற்புதமான் கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 2. ஐய்யா, எனக்கு என்னமோ நீங்கள் எய்தவன் இருக்க அம்பை நோய்கின்றீர்கள் என்று படுகிறது. யானை ஒரு மிருகம், அதை மனிதனாகிய நாம் அடக்கி வாச படுத்தி ஆண்டாலும் அது தன மிருக குணத்தை வெளிபடுத்தும்.
  இறந்த அந்த மருத்துவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம், அது மட்டும் இன்றி தலைவனை இழந்து தவிக்கும் அந்த குடும்பதிற்கும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைக்கு மதம் பிடிப்பது சரிதான். ஆனால் மக்கள் அந்த சமயத்தில் எப்படி என்ன செய்வது என்று தெரியாமல் அதற்கு இன்னும் இன்னல் விளைவிப்பதுதான். நாம்தானே காட்டை அழித்து வாழத் தொடங்கியுள்ளொம் அந்த யானைகளை நம் சுயநல்லத்திர்கு உஅப்யோகப் அப்டுத்துகின்ரோம். அரசு இது போன்று யானைகளை கோயில்களில் கொண்டுவருவதைத் தடுக்க வேண்டும்...இயறகையாக வாழ அனுமதிக்க வேண்டும்

   உங்கள் கருத்து மிகவும் சரியே நன்றி நண்பரே!

   நீக்கு
 3. அதிக மன வருத்தம் தரும் பதிவு
  நீங்கள் சொல்லிச் சென்ற விஷயங்கள்
  மிக மிகச் சிறியவைதான் ஆயினும்
  எத்தனை முக்கியமானவை என்பதை
  சம்பத்தப்பட்டவர்கள் அறிய வேண்டும்
  மிகக் குறிப்பாக பொது மக்கள்

  பதிலளிநீக்கு
 4. மனம் கனக்கிறது.

  குடும்ப தலைவனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். கோபகுமாரின் ஆன்மா இறைவன் மடியில் இனிதே இளைப்பாற உங்களோடு இணைந்து நானும் வேண்டுகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! பிரார்த்தனைகளைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!

   நீக்கு
 5. படிக்கப்படிக்க மிகவும் த்ரில்லிங்காக உள்ளது. பாவம் அந்த மருத்துவர் கோபக்குமார். பொதுமக்களான பிறருக்கு உதவவேண்டி தன் உயிரையே யானைக்கு பலியாக்கியுள்ளார். ஒவ்வொரு பணிகளிலும் எவ்வளவு ரிஸ்க் உள்ளது ! :(

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மிகவும் ரிஸ்கான பணியே! மிக்க நன்றி சார்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 6. கோபகுமாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. கோபகுமாரின் ஆன்மா சாந்தியடைய நானும் வேண்டுகின்றேன்..

  பதிலளிநீக்கு
 8. மருத்துவரின் குடும்பத்திற்கு எத்தனை பெரிய இழப்பு இது..... என்று தான் மக்கள் திருந்துவார்களோ. அரசும் சில கட்டுப்பாடுகளை எடுக்கத் தயங்கக் கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட் ஜி ! ஆம் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் இது போன்று யானைகள் கோயில்களில் வைத்துக் கொள்வதை.

   நீக்கு
 9. மருத்துவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.
  எவ்வளவு சொன்னாலும் நம்முடைய மக்களுக்கு பொது அறிவே இருப்பதில்லை.
  என்னைக்கேட்டால், அந்த யானை மருத்துவரை துவம்சம் செய்யாமல், கூடி நின்ற மக்களில் யாரையாவது ஒருத்தரை துவம்சம் செய்திருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் இது கூட நல்ல யோசனையாக உள்ளது யானைக்குச் சொல்லி விடலாமா நண்பரே! மக்களுக்கு விழிப்புணர்வு என்பது இல்லாததால் தானே இப்படி....என்ன செய்ய...மிக்க னன்றி!

   நீக்கு
 10. மருத்துவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 11. செய்தித் தாளில் படித்தபோது இருந்ததை விட இப்போது மனம் கனத்தை உணருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு! இந்தப் பதிவு அந்த உணர்வைத் தந்திருக்கின்றது என நினைக்கும் போது..

   நீக்கு
 12. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
  அரசாங்கமும், மக்களும் என்று தான் மாறுவார்களோ...?
  இது போல் கோவில் திருவிழாக்களில் யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்கிறது என்ற செய்தியை நாம் படிக்கிறோம்.
  நமக்கு மதம் விலகவில்லை அதானால் தொடர்ந்து அதனை நாம் கடைபிடிக்கிறோம் திருவிழாக்களில்...
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைக்கு மதம் பிடிப்பது வழக்கம்...ஆனால் மக்களுக்கு மதம் பிடிப்பதை என்னவென்று சொல்ல?!

   மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 13. மிகவும் கொடுமையான விஷயம். கோவில் விழாக்களில் யானைகள் வருகையை நிறுத்த முடியாது என்று நினைக்காமல் அதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இலங்குகளைக் கட்டுப்படுத்தி சித்ரவதை செய்வதை நிறுத்த வேண்டும்.

  நம் மக்களின் மனோபாவத்தையும் என்னவென்று சொல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! தங்க்ள் கருத்தைத்தான் நாங்களும் சொல்ல விழைகின்றோம். மக்கள் மாறுவார்களா? இயற்கையோடு ஒத்து வாழ முடியவில்லையே மக்களால்.....

   நீக்கு
 14. கோபக்குமாரை இழந்து அவரது குடும்பம் படும் வேதனை கடினமான ஒன்று! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ் தங்கள் கருத்திற்கு! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 15. பொதுவாகவே ஜாதி மதமின்றி சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் மிருகங்களுக்கு 5அறிவு என்றும், தனக்கு 6அறிவு என்று சொல்லிக்கொள்ளும் மதம் பிடித்த மானிட ஜடம் தனது சுயநலத்திற்க்காக பயன் படுத்த ஆரம்பித்ததே ஒரு குற்றமே இது தொடங்கி பல100 ஆண்டுகளாகி விட்டது இதை மறு பரிசீலனை செய்யவேண்டும் 80தே எமது கருத்து
  கோபகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் வேறு என்ன செய்யமுடியும்
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னீர்கள் பாருங்கள்...அந்த முதல் வரி! அது அது!!! யாருக்கு 5 அறிவு....6 அறிவு என்று சொல்லிக்கொள்ளும் நமக்குத்தான்.....அதுங்க எவ்வளவோ மேல்...நல்ல கருத்து நண்பரே!

   நீக்கு
 16. மிகவும் வருத்தமான விஷயம்...
  மனம் கனக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

   நீக்கு
 18. மருத்துவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.
  எப்பொழுதுஎல்லாம் போட்டோ எடுப்பது என்றவிவஸ்தையே இல்லாமல் போய்விட்டது மக்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூக வலைத்தளங்கள் படுத்தும் பாடு இந்த ஃபோட்டோ எடுத்துப் பகிர்வது என்பது.....மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 19. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

   நீக்கு
 20. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

   நீக்கு
 21. மதம் யானைக்கு வந்தாலும் மனிதனுக்கும் வந்தாலும் ஆபத்துதான் ,இப்போது நாட்டையே மதம் பிடித்துள்ளது ,எங்கு போய் முடியுமோ ?
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைக்கு வருவது இயல்புதானே...ஆனால் மனிதனுக்கு வந்தால்...அதுதானே ஆட்டிப்படைக்கின்றது....நன்றி ஜி தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 22. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

   நீக்கு
 23. ஜல்லிக்கட்டை தடை செய்கிறார்கள்; காளை துன்புருத்தப்படுகிறாது என்கிறார்கள்---அது சரியா தவறா என்ற கேள்விக்கு நான் செல்லவில்லை.

  கோவிலுக்கு யானை எதுக்கு? மதம் என்ற பெயரால் யானையை துன்புறுத்தவா?
  யானை மட்டும் துன்புறதா? இல்லை யானைப்பாகன் அதை வைத்து பிச்சை எடுக்கவா?

  ஜல்லிக்கட்டு துன்பம் ஒரு நாள்!
  யானைக்கு துன்பம் வருடம் முழுவதும்.

  இது சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜல்லிக்கட்டைத் தடை செய்திருப்பது சரிதானே நம்பள்கி! அதே போன்று கோயிலுக்கு யானை அவசியமே இல்லை! யானைப்பாகன் அதைப் பல சமயங்களில் கொடுமைப் படுத்தும் நிகழ்வும் இருக்கின்றதே! ஆமாம்....இப்படிச் செய்வதால் வருடம் முழுவதும் துன்பம்தான்

   தங்களின் கருத்து மிகச் சரியே! நம்பள்கி!

   மிக்க நன்றி நல்ல கருத்தை முன் வைத்தமைக்கு!

   நீக்கு
 24. வருத்தமா இருக்கு ..இந்த மிருகங்கள எதற்கு இப்படி வதைக்கணும் .பொது மக்களை கண்டு அதன் ஆவேசம் கூடியிருக்கும் ..பாவம் மருத்துவர்.அவற்றை அவற்றின் இருப்பிடத்தை மக்கள் விட்டு வைத்தார்களா ? மனிதன் திருந்தணும் இனியாவது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி! விலங்குகளை மிகவும் வதைக்கின்றோம் தான். மக்கள்தான் பல இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகிவிடுகின்றனர்....என்ன செய்ய...மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 25. வணக்கம்
  அவரின் ஆண்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறேன்...எல்லாம் காலம் செய்த விதி.... பகிர்வுக்கு நன்றி நல்ல கருத்தாடல் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 26. கோபக்குமார் கூட்டத்தினரால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது ..
  தம +

  பதிலளிநீக்கு