வெள்ளி, 3 அக்டோபர், 2014

நீதி கிடைக்கும்! வாழ்வு தொலைந்திருக்கும்!


   
God sees the truth but waits லியோ டால்ஸ்டாயின் நெஞ்சைத் தொடும் கதை. செய்யாதக் கொலைக்காகச் சைபீரியச் சிறையில் 27 வருடங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி அந்த அக்சியொனொவ் கதை.  வருடகங்களுக்குப் பிறகு தான் செய்தக் கொலைக் குற்றத்திலிருந்துத் தப்ப ரத்தக் கறை படிந்தக் கத்தியை அக்சியொனொவின் பையில் மறைத்து வைத்து அக்சியொனொவைக் கொலையாளியாக்கி, அக்சியொனொவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்வை சீரழித்த மாக்கர் செமியோனிக் எனும் துரோகியை அடையாளம் கண்ட பின்னும், கைதியாய் சைபீரியச் சிறைக்கு வந்த மாக்கர் செமியோனிக் சிறையிலிருந்துச் தப்பிச் செல்ல சிறையினுள் குழி தோண்டுவதைக் கண்ட பின்னும், சிறை அதிகாரிகள், தப்பிச் செல்ல முயன்றது யார் என்று அக்சியொனொவிடமே கேட்ட பின்னும் தன் எதிரியைக் காட்டிக் கொடுத்து அவன் துன்புறுவதால் தனக்கு மன நிம்மதியோ இழந்த வாழ்வோ திரும்பக் கிடைக்கப் போவதில்லை என உணர்ந்த அக்சியொனொவ், தன்னால் சிறை அதிகாரிகளிடம் தப்பிக்க முயன்ற சிறைக்கைதி யாரென்று சொல்ல முடியாது என்று உறுதியாகக் கூறி கல்நெஞ்சக்காரனான அந்த மாக்கர் செமியோனிக்கின் கல்நெஞ்சை உருக்க வைக்கும் கதை. செய்யாதக் குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிக்கும் அக்சியொனொவை இனியேனும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் மன்றாடித் தான் செய்த கொலை மற்றும் குற்றங்களை ஒப்புக் கொண்டு, சிறை அதிகாரிகளுடன் அக்சியொனொவின் விடுதலை உத்தரவுடன் வரும் பொது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுச் சென்ற அக்சியொனொவைக் கண்டு குமுறி அழும் காட்சி, கதையை வாசிக்கும் எவரது மானதையும் ஒருபோதும் விட்டு நீங்காத ஒன்று.

இதற்குச் சமானமாக என்று சொல்ல முடியாது என்றாலும் நான் இச் சம்பவத்தை அறிந்த போது என் மனதில் இக்கதை தோன்றி மறைந்ததால், நான் இக்கதையை விவரித்தேன் அவ்வளவே!  . (அதனால்தான் இந்தக் கதை இரண்டாவது முறையாகக் குறிப்பிடப்படுகின்றது)

     திருச்சூர் இஞ்சினியரிங்க் கல்லூரியில் கெமிக்கல் எஞ்சினியரிங்க் பட்டம் பெற்ற பாலக்காடு யாக்கரையைச் சேர்ந்த சஜீவுக்கு, எஸ்பிஐ திருச்சியில் உள்ள ஒரு கிளையில் 2012 டிசம்பரில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.  பின் மேட்டூர் அணைக் கிளைக்கு இடம் மாற்றம் கிடைத்து அங்கு சென்றார்.  அவரது சக ஊழியரான ஷொர்ணூர் குளப்புள்ளியைச் சேர்ந்த அமிர்தகிருபா சி ஐ ஜெயதேவன் என்பவர், புதிதாய் வேலை மாற்றம் ஆகி வந்த  சஜீவனின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உபயோகித்து அவர் அறியாமல் 2013 மே 21 ஆம் தேதி 65 அல்ட்சம் ரூபாயைக் கவர்ந்திருக்கின்றார்.  செய்யாதக் குற்றத்திற்குப் பலியாடானதோ சஜீவும் அந்தக் கிளை மானேஜரும். பணம் கவர்ந்த பின் இடையிடையே அனுமதி பெறாமல் பணிக்கு வராதிருந்த ஜெய தேவனை எஸ்பிஐ வேலை நீக்கம் செய்த பின்புதான், இந்தப் பண மோசடி தெரிய வந்திருக்கின்றது. மேலும் சஜீவின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உபயோகிக்கப் பட்டதால் சஜீவ்தான் குற்றவாளி என்றும், இதற்கு உடந்தை என்று கூறி கிளை மேனஜரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

     இதனிடையே மகன் செய்யாதக் குற்றத்திற்குத் தண்டனை அனுபவிப்பதைத் தவிர்க்க சஜீவின் தந்தை எவ்வளவோ முயன்றும் பயனின்றி மனமுடைந்து சில மாதங்களுக்கு முன் இறந்தே போனார்.   தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க உதவி வேண்டி பல முறை ஜெயதேவனைக் காண சஜீவ் சென்றிருக்கிறார். ஜெயதேவன் உதவ மறுத்தது மட்டுமின்றி, இனிமேல் தன்னிடம் வந்து இதைப் பற்றிப் பேசவும் கூடாது என்று எச்சரித்தும் இருக்கின்றார். பிறகு எப்படியோ, காவல் துறைக்கு சஜீவும், கிளை மேலாளரும், பணம் கையாடல் செய்யவில்லை என்று தெரிய வந்திருக்கின்றது.  கையாடல் பற்றித் தெரிய வரும் முன் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஜெயதேவனின் ஆடம்பர வாழ்க்கை பற்றி அறிந்ததாலும் வழக்கை விசாரணை செய்து உண்மையானக் குற்றவாளியான ஜெயதேவனைக் கையோடு பிடித்துவிட்டார்கள்.  செய்யாதக் குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தது மட்டுமல்ல, மற்றவர்களின் ஏளனத்திற்கும், ஏசல்களுக்கும் இரையாகி இத்தனைக் காலம் வேதனையுடன் வாழ்ந்த, சஞ்சீவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.  ஆம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது உண்மையானது.  இதைப் போல் நம்மிடையே வாழும் குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் எத்தனை பேர் செய்யாதக் குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கின்றனரோ?  அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.  எத்தனைக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லும் சட்டம் இது போல் செய்யாதக் குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தவர்களுக்கு ஒரு பிராயச் சித்தமும் செய்வதில்லையே.
 
     சட்டத்தில் கண்டிப்பாக இனியேனும் இது போன்றவர்களுக்கு ஏதேனும் நஷ்ட ஈடு கிடைக்க வழி வகை செய்யும்விதமாக்ச் சட்டத்தைச் சீர்திருத்தி, அவர்களுக்கும் ஏதேனு நன்மை செய்ய வேண்டும்.  அப்போதுதான் சட்டத்தை ஓட்டை இல்லாத ஒன்றாக எல்லோரும் பாராட்டிப் போற்ற முடியும். 

படம்: கூகுள் 

37 கருத்துகள்:

  1. சஞ்சீவனின் நிலையறிந்து மனம் கனத்து விட்டது நண்பரே... இவரைப்போன்ற பலரும் உலகம் அறியாமல் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வார்களே அதனுள் மூழ்கியவர்கள் ஏராளம் இவரின் தந்தை மனம் உடைந்து இறந்து விட்டாரே இதற்க்கு யார் பொருப்பு இந்திய அரசியலமைப்பு எரிக்கப்படவேண்டிய ஒன்று இதை நான் சொல்லவில்லை அரசியலைமப்பு குழுவில் இடம் பெற்ற டாக்டர் திரு.அம்பேத்கர் சொன்னது. இனியெனும் சஞ்சீவனின் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே விளைய எல்லாம் வல்ல இறைவனிடம் வணங்குவோமாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறந்து வந்து, வலைத்தளத்தை ஊடுருவி அழகிய பின்னூட்டமும் இட்ட எங்கள் சகோதர நண்பர் கில்லர்ஜிக்கு மிக்க நன்றி! ஞானி ஸ்ரீபூவு ரட்ச்சிப்பாராக!!

      நீக்கு
  2. சமீபத்தில் கூட விசாரணைக் கைதிகள் ஆயிரம் பேர்களுக்கு மேல் விடுவிக்கப் பட்டது இந்த எண்ணம் கொண்ட நீதிபதிகளால் தான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ஜி! மிக்க நன்றி பகவான் ஜி!

      இரு ஜி க்களும் சுடச் சுட பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. ஓட்டை இல்லாத ஒன்றாகச் சட்டத்தை ஆக்க வேண்டுமா?
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே
    செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டே ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தாங்களும் அக்கருத்தை ஆமோதித்ததற்கு!

      நீக்கு
  5. பெரிய அளவில் இல்லாவிடினும் சிறிய அளவுகளில் நம் எல்லோருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும். பின்னர் உண்மை தெரிந்தாலும் அந்த சந்தோஷத்தைக் கூட பெரிய அளவு கொண்டாட முடியாமல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே அளவினதாகக் காணும் மனநிலை வந்து விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிகச் சரியே! எவ்வளவு ஒரு நல்ல கருத்து! சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது கூட இல்லை! சாதாரணமாக எல்லோருக்கும் நடக்கும் ஒன்றே! உண்மை தெரிந்தாலும் சந்தோஷத்தைக் கொண்டாட முடியாதுதான்! உயரியக் கருத்து நண்பரே! மிக்க நன்றி!

      நீக்கு
  6. சட்டம் எழுதப்பட்ட உடனே அதில் இருக்கும் சந்துபொந்துகளை கண்டுபிடிப்பதே சட்டம் படித்த வழக்கறிஞர்கள் தானே சகாஸ்:(( வேறென்ன சொல்ல< தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! வழக்கறிஞர்கள்தான்! அவர்களாவது அதைத் திருத்த எடுத்துரைத்து ஆவன செய்யலாமே!

      நீக்கு
  7. வணக்கம்
    “அண்ணா.

    அருமையான தலைப்பு தாங்கள் சொல்லிய கருத்துக்கள் உண்மைதான்... எத்தனையோ கைதிகளுக்கு இப்படி நடந்துள்ளது..... இழப்பீடு வழங்கவேண்டும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி.
    த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள திருமிகு. துளசிதரன் தில்லை அகத்து அய்யா அவர்களுக்கு,

    வணக்கம். ‘நீதி கிடைக்கும்! வாழ்வு தொலைந்திருக்கும்!’ ஒரு அருமையான பதிவை மிகவும் நேர்த்தியாகத் தந்திருக்கிறீர்கள்.
    ‘ தண்டனை அனுபவிக்கும் அக்சியொனொவை இனியேனும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் மன்றாடித் தான் செய்த கொலை மற்றும் குற்றங்களை ஒப்புக் கொண்டு, சிறை அதிகாரிகளுடன் அக்சியொனொவின் விடுதலை உத்தரவுடன் வரும் பொது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுச் சென்ற அக்சியொனொவைக் கண்டு குமுறி அழும் காட்சி‘
    -நெஞ்சத்தைத் தொடுகிறது. அதன் பிறகு அதைப் போல உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்ததை... அந்த வேதனை அனுபவித்தவர்களுத்தான் தெரியும். சட்டத்தில் கண்டிப்பாக இனியேனும் இது போன்றவர்களுக்கு ஏதேனும் நஷ்ட ஈடு கிடைக்க வழி வகை செய்யும்விதமாக்ச் சட்டத்தைச் சீர்திருத்தினாலும் கூட இந்த இழப்பை யாரால் ஈடு செய்ய முடியும்.

    நான் புதுக்கோட்டையில் தற்காலிகப் பணியில் புள்ளியியல் துறையில் பணியாற்றிய பொழுது நடந்த சம்பவம்...நண்பர் சொல்லக் கேட்டது...

    அங்கு வங்கியில் பணியாற்றி பெண் ஊழியர் ஒருவர்...ஒரு வாடிக்கையாளர் நூறு ரூபாய் வங்கியில் போடுகிறார். அவரின் கணக்கில் ‘பாஸ் புக்கில்’ வரவு வைத்து கொடுத்து விடுகிறார். இவர் அந்த நூறு ரூபாயைத் தன் அவசரத் தேவைக்காக எடுத்துக் கொண்டு நாளை அவர் கணக்கில் வரவு வைத்து விடலாம் என்று எண்ணி பணத்தை எடுத்து விட்டார்( சக நண்பர்களிடம் கேட்டிருக்கலாம்..கேட்க சங்கடப்பட்டு). இவரின் துரதிஷ்டம் அவர் அடுத்த நாளே பணம் எடுக்க வந்து விட்டார். வங்கிக் கணக்கில் பணம் இல்லை. ஆனால் இவர் பணம் போட்டு இருப்பதற்கு பாஸ் புக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. (அப்பொழுதெல்லாம் ஒரு சில வங்கிகளில் பணம் பெற்று அவர்களே லெட்சர்களில் வரவு வைப்பார்கள்) நூறு ரூபாய் மோசடி செய்ததற்காக நிரந்தர வங்கி வேலையிலிருந்து அந்தப் பெண்‘ டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.
    மற்றொரு நிகழ்வு...
    புதுக்கோட்டை, பாரத வங்கியில் சம்பளப் பட்டுவாடா செய்கின்ற பொழுது...
    20 ரூபாய் ஒரு கட்டு கொடுப்பதற்கு பதிலாக 50 ரூபாய் கட்டை கொடுத்து விட்டார் ஒரு பெண் ஊழியர். அவர் எழுதும் பண விவரம் பட்டியலில் 20 ரூபாய் கட்டு என்றே குறித்துக் கொண்டு கொடுத்து இருக்கிறார். அலுவலகத்தில் வந்து பார்த்தால் 3000ரூபாய் அதிகமாக இருக்கிறது. அப்படியே வைத்திருந்தால் அவர்களால் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆனால் நண்பர் அதை அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விட்டார். ‘ரொம்ப நன்றி சார்’ என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார். ‘சார் நீங்க திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் நான் தான் பணத்தைப் போட்டுக் கட்டியிருக்க வேண்டும்’ என்றார்.
    இன்னொரு சம்பவம் சில மாதங்களுக்கு பிறகு... சம்பளம் வாங்கிக் கொண்டு வருகின்ற பொழுது நூறு ரூபாய் கட்டில் ஒரு நோட்டு குறைகிறது. (அதிகமாக பணம் வாங்கும் பொழுது பண்க் கட்டுக்களைப் வங்கியிலேயே பிரித்து எண்ண மாட்டார்கள்...எண்ணிக்கொண்டு இருக்கவும் முடியாது) அதே பெண் ஊழியர் தான்... சென்று கேட்டால் ...கணக்கு முடித்து சரி பார்த்த பிறகு...நூறு ரூபாய் மீதி இருந்தால் தருகிறேன் என்கிறார். ஆனால் ...கணக்கு முடித்த பொழுது‘ மீதி பணம் இல்லை...
    சாரி சார்...‘
    நண்பரும் பொய் சொல்லவில்லை.என்று..அந்த பெண் ஊழியருக்கும் தெரியும்... அந்த பெண் ஊழியரும் பொய் சொல்லவில்லை...

    தாங்கள் உண்மைச் சம்பவத்தை சொன்ன பொழுது...எனக்கு நினைவுக்கு வந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
    எனது வலைப்பூவிற்கு வருகை தந்து தங்கள் கருத்துகளைச் பகிர்ந்து மகிழ்வூட்டுகிறீர்கள்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! ஒரு பதிவு எழுதும் அளவிற்கான சம்பவங்களை இங்கு அழகாக பின்ன்னூட்டமாகப் பகிர்ந்துள்ளீர்களே நண்பரே! மிக்க நன்றி! தாங்கள் இந்தச் சம்பவங்களை பகிர்ந்து கொண்டதற்கு!

      நீக்கு
  9. த.ம. 6 உண்மைச் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. நெட் அவ்வப்போது பணி செய்ய வில்லை ஆகையால் தொடர்ந்து தளங்கள் வர இயலவில்லை முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சகோதரி! எப்போது தங்களுக்கு பின்னூட்டம் இட முடிகின்றாதோ அப்போது இடுங்கள்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  10. குற்றம் செய்தவர்கள் பெயிலில் வந்து நிரபராதிகள் போல் வளைய வருவதும் குற்றமற்றவர்கள் குற்றம் ருசிப்பிக்கப் படாதபோதும் சிறையில் வாடுவதும் எங்கோ தவறு இருக்கிறத்ன்று காட்டுகிறது. ஒரு பெரிய அதிகாரியின் மகன் ஆள்மாறாட்டம் செய்து ஒரு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததும் மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்ததுமான செய்தி நினைவுக்கு வர்கிறது. அந்தக் கேஸ் என்னாயிற்று. நமக்குத்தான் மறதி வரமாச்சே. justice delayed is justice denied என்பதும் உண்மைதானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. justice delayed is justice denied // மிக மிகச் சரியே சார்! நீதி கிடைப்பது தாமதிப்பதும் நீதி கிடைக்காமல் போவது போலத்தான்! பல சமயங்களில் அது கிடைக்காமலேயே கூட இருந்திருக்கலாமோ என்றும் கூடத் தோன்றும். ஏன் இதற்கு மாற்றே இல்லையா?

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  11. நான் அறிவியல் துறை எடுத்ததால் இனிய ஆங்கில இலக்கியம் படிக்க இயலாமல் போனது எனது துரதிர்ஷ்டம் .
    டால்ஸ்டாய் கதை நினைவிருக்கு ஆனா உங்கள் எழுத்துக்களில் மிகவும் மனதை உருக்கியது .
    உண்மைகதை பாவம் சஞ்சீவன் :( தக்க தருணத்தில் கிடைக்காத நீதியும் உதவியும் காலந்தாழ்த்தி கிடைத்து என்ன பயன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்! நாங்கள் தொடர்கின்றோம் தங்களை!.

      கல்லூரியில்தான் இனிய ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று இல்லை சகோதரி! நாம் தனியாகவும் ஆர்வம் இருந்தால் புத்தகங்கள் வாசிக்கலாமே! உங்கள் விருப்பத்தைத் தொடருங்கள்!

      காலம் தாழ்ந்து கிடைக்கும் நீதி ஒருவரது சந்தோஷத்தைத்ட் தொலைத்துவிடுகின்றது என்பது நிதர்சனமான உண்மை!

      மிக்க நன்றி!

      நீக்கு
  12. நல்ல தலைப்பு சகோதரரே தவறாக நீதிவளங்கியா அரசு தானே பொறுப்பேற்கவேண்டும் இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெறமுடியாத நிலையில்.காலம் தாழ்ந்தாலும் நஷ்டஈடு வழங்குவது அவசியம் தான் அரசு நிச்சயம் ஆவன செய்யவேண்டும். அதுவும் தவறு மேலும் நடக்காமலும் தடுக்கவும் உதவும் இல்லையா சகோ அருமையான பதிவு
    நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. வாழ்த்துக்கள் சகோ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகொதரி இனியா! மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு! சட்டத்தில் மாற்றம் வருமா என்று பார்ப்போம்!

      நீக்கு
  13. உங்கள் தலைப்பு தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ஒரு பெரிய தொடர் எழுதி வரும் சமயத்திலும் கூட கருத்திட நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  14. சஜீவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது! தர்மம் வென்றதில் மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சுரேஷ்! சஜீவைப் போன்றோரின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது! தர்மம் வென்றது என்றாலும் அவருக்குப் போன வாழ்க்கைத் திரும்பக் கிடைக்காதே நண்பரே!

      நீக்கு
  15. ஆசானே!
    நான் பின்னூட்டமொன்று இட்டிருந்தேனே!
    முதல் முறையாக காக்காய் வந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. அதைச் சாப்பிடமுடியாமல் எங்குபோய் போட்டதோ தெரியவில்லை.
    ஆனாலும் சூதின் வாழ்வினைத் தமிழ்நாட்டில் கவ்விக்கவ்வியே பல்லுடைந்து போய் விட்டது அந்த தர்மத்திற்கு!
    ஏனென்று தெரியவில்லை,
    தர்மத்தின் வாழ்வுதனை“ என்று யாராவது சொல்லக் கேட்டாலே பாஞ்சாலி சபதத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுகிறது.
    கதை நெஞ்சு தொடுகிறது. நிஜம் நெஞ்சு கனக்கிறது.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் எங்கள் ஆசானே! ஹஹஹ ஓ! காக்காய் அதான் ப்ளாகர் காக்காய்....படுத்தும் தொல்லை...தாங்க முடியவில்லை. இப்படித்தான் நாங்கள் இடும் பின்னூட்டங்களும் தொலைந்து போகின்றன...

      பாஞ்சாலி சபதம் ம்ம்ம்ம் சரிதான் ஆசானே!

      ஆம் உண்மையே தங்கள் கருத்து! இப்படி நிறைய நிகழ்வுகள், நிஜங்கள் நெஞ்சைக் கனக்க வைக்கின்றன. தர்மம் வெல்லும் வெல்லும் என்று நாம் சொல்லித் த்ரிகின்றோம். ஆனால் தர்மம் வெல்லும் சமயம் வாழ்வும் தொலைந்து விடுகின்றதே! அதற்கு யார் பதில் சொல்லுவது?!

      மிக்க நன்றி ஆசானே! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  16. தாமதிக்கப்பட்ட நீதியைக்காணும்போதெல்லாம் கோபம்தான் வருகிறது என்ன செய்ய சகோ.

    ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி! ஆம்! ரொம்பவே!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  17. சஜீவின் நிலைமை மிகவும் கொடுமை. ஒரு பக்கம் செய்யாத குற்றத்துக்கு தண்டனை. மற்றொரு பக்கம் தந்தையின் இழப்பு. மிக கொடுமை.
    நீங்கள் சொல்வது போல், இன்னும் எத்தனை பேர் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்களோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! நண்பரே! அதுதான் இன்னும் கொடுமை! வாழ்வையும் தொலைத்துக் கொண்டு!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  18. மிக அருமையான இப்பதிவைத் தாமதமாகப் படிக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

    நெஞ்சுருக வைக்கும் டால்ஸ்டாயின் கதையை இக்கால நிகழ்வுடன் ஒப்பிட்டுத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் வியந்து பாராட்டத் தூண்டுகிறது.

    மனம் உவந்து பாராட்டுகிறேன்; தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை! அதனால் என்ன? அருமையான பின்னூட்டம் இட்டு விட்டீர்களே!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!

      நீக்கு