சனி, 25 அக்டோபர், 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... வந்ததே...வந்ததே.. - 2 !


.  (இந்தப் பதிவு நம் பதிவர் விழாவில் சிறப்புரை ஆற்ற இருக்கும் பேராசிரியர் திரு த.கு சுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய, துளசியின் நினைவு ஆதலால்...இன்று பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதால்... அதிசய ராகம்.......அபஸ்வரமாகியதே திங்கள் அன்று பதிவிடப்படும்.)
      அக்டோபர் 26, 2014, ஞாயிறு, மதுரையில், கீதா நடன கோபால நாயகி மந்திரில் நடக்க இருக்கும், மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் விழாவைப் பற்றியும் அதில் கலந்து கொள்ள இருக்கும் நம் வலை அன்பர்கள் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் பதிவுகளும், அழைப்புகளும் விட்டுக் கொண்டிருக்க, நான் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதே என்ற என்/எங்கள் ஆற்றாமையை, ( கீதா கலந்து கொள்வதாக இருந்து தவிர்க்க முடியாத காரணங்களினால் இறுதியில் தனது பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாலும்) நம் விழாவைச் சிறப்பித்துச் சிறப்புரை ஆற்ற இருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு தா.கு சுப்புரமணியம் அவர்களுடனான எனது நினைவுகளைப் பகிர்ந்து தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு.  தமிழ் வாசி பிரகாஷ் அவர்கள் அனுப்பிய நிகழ்ச்சி நிரலில் நம் விழாவைச் சிறப்பித்துச் சிறப்புரை ஆற்ற மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு தா.கு சுப்புரமணியம் வருகிறார் என்பதைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி ஒரு புறம், கூடவே இந்த இனிய விழாவிற்குப் போக முடியாமல் தடுத்த சூழல்களை எண்ணி மிகுந்த வருத்தம் மறுபுறம்.  

   
இடப்புறத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்தான் பேராசிரியர்

இந்தக் காணொளிச் சுட்டியில் பேராசிரியரைக் காணலாம்.

1980-83 வருடங்களில் மதுரைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற எனக்கு, தமிழ் கற்பிக்கப் பேராசிரியர் தா. கு சுப்பிரமணியம் அவர்கள் வரவில்லை என்றாலும், 1980-81 ல் மதுரைக் கல்லூரி தேசிய சாரணர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சுப்பிரமணியம் சாருடன் வைரவநத்தம் எனும் கிராமத்தில் 10 நாட்கள் நடத்தப்பட்ட முகாமில் அவருடன் தங்கி சேவை செய்த இனிய நாட்களின் நினைவுகள் இப்போதும் என் மனதில் கற்கண்டாய் இனிக்கின்றது.  அந்த 10 நாள் உறவு என் வாழ்வில் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றம் உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஒன்றுதான் என்பதை இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு மட்டுமல்ல இதை வாசித்து முடிக்கும் போது உங்கள் எல்லோருக்கும் உண்டாகும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. 


மதுரைக் கல்லூரி

ஒரு போதும் மேடை ஏறிப் பேசாத நான், வகுப்பில் ஆசிரியர்கள் ஏதேனும் வாசிக்கச் சொன்னால், கைகள் நடுங்க ஒரே மூச்சில் மற்றவர்களுக்குப் புரியாத விதத்தில் வாசிக்கும் பழக்கமுடைய நான், முகாமின்  முதல் நாள் மாலை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது தா. கு. சுப்பிரமணியன் சாரின் குரல் ஒலிபெருக்கியில், “இன்றைய மாணவர்களின் மாலை அரங்கிற்குத் தலைமை வகிப்பது துளசிதரன்” என்று அறிவிக்க, நடுங்கிப் போன நான்,  ஓடினேன் சாரிடம்.  கெஞ்சினேன்.  பலனில்லை.  விடவில்ல. மீண்டும் அழாத குறையாக முறையிட்டேன்.  “உன்னால் எப்படிச் செய்ய முடியுமோ அப்படிச் செய்” என்று சொல்லி, மைக்கைக் கையில் தர, அன்று என்ன பேசினேன் என்றோ, எப்பொழுது அந்த மாணவர் அரங்கு முடிந்தது என்றோ தெரியவில்லை. அதன் பின் ஒவ்வொருநாளும் மாலை தலைமை தாங்கிய நண்பர் எல்லோரும் சிறப்பாகச் செய்ததைக் கண்ட நான் அன்று தீர்மானித்தேன், மேடையில் பேச வேண்டும். பயமின்றி, நடுக்கமின்றி எளிதாகப் பேச வேண்டும். 

அடுத்த வருடம் நண்பன் சீனிவசன், கல்லூரிப் பேரவைச் செயலாளராகப் போட்டியிட, நானும் நண்பர்களும் தேர்தல் பிரச்சாரம் எனும் பெயரில் முதலில் கல்லூரி விடுதியிலும், பின் கல்லூரியிலும் சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டிப் பேசினோம்.  ஒரு சின்ன முன்னேற்றம் என்றாலும் போதாது என்று உணர்ந்த நான், சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டபின் கல்லூரியில் ஒரு நாடகம் எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்தேன் – “ஒரு கலியுலக மசலா கண்ணோட்டம்”. சிறு வயதில், இளங்கன்று பயமறியாது என்பதால் ஓரிரு நாடகத்தில் நடித்திருக்கின்றேன் என்றாலும், இளைஞனாகக் கல்லூரியில் நாடகத்தில் நடித்த போதும், அதற்கான முன்னுரை வழங்கிய போதும் தான், மேடையில் பயமின்றிப் பேச முடிந்தது. நான் சொல்லியே ஆக வேண்டியவைகளை மட்டும் மனதில் கொண்டு பேசி என் பயத்தையும், நடுக்கத்தையும் அன்று போக்கினேன்.  அப்படி எனக்கு மேடை ஏறிப் பேசியே ஆகவேண்டும் என்ற  ஒரு இலட்சியத்தை என் மனதில் விதைத்துச் சென்ற வித்தகர்தான் மதிப்பிற்குரிய பேராசிரியர் தா. கு. சுப்பிரமணியன் அவர்கள். 

10 நாட்கள் நடந்த முகாமில் ஒரு நாள் அவர் பேசும் போது, தான், அப்போதுதான் முதன் முறையாகத் தன் குடும்பத்தாரை விட்டு விலகி வாழ்வதாகவும், அவரதுத் தம்பியைப் பிரிந்து இருக்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் சொல்லி முடித்ததும் தேம்பி அழ ஆரம்பித்தார்.  இப்போதும், ஆழமான அன்பு, குடும்பப் பாசம் என்றால் அதற்கு உதாரணமாக என் மனதில் தோன்றி மறைவது என்னவோ பேராசிரியர் தா. கு. சுப்பிரமணியன் அவர்களின் முகமும் வார்த்தைகளும்தான்.  இத்தனை வருடங்கள் கடந்தும், குடும்பத்தாரின் பிரிவை எண்ணி அது போல் வருந்திய ஒருவரை என்னால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

1982 ல், நான் இறுதியாண்டு பயின்ற போது, நண்பர் சீனிவாசன் 1981 ல் கல்லூரிப் பேரவைச் செயளாளராக ஆனது போல், எனக்கும் பேரவைத் தலைவராக ஆசைவர (வெளியில் சொன்னதென்னவோ நண்பர்களின் ஆசைக்காக என்று), பேரவைத் தேர்தலில் போட்டியிட்டேன்.  நண்பர்களான, கனகரத்தினம், ஜெயபால், ரமெஷ், வீரபத்திரன், லட்சுமணன், குமரேசன், கனகவேல் போன்றோர் சுவரொட்டிக்கு நல்ல ஈர்ப்பு மிக்க வாசகம் எழுதச் சிந்தித்தபோது நான் அவர்களை அழைத்துக் கொண்டு பேராசிரியர் த. கு சுப்பிரமணியம் அவர்களிடம் சென்று கேட்க, உடனே அவர் “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்-தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதித் தர அதை நாங்கள் சுவரொட்டியில் சேர்த்து அச்சடித்து ஒட்டினோம்.  அவர் வாக்குப் பொய்யாகவில்லை.

1981 ல் சீனிவாசன் போட்டியிட்டுத் தோற்கடித்த ஆனந்தன் எனும்  பொருளாதாரவியல் மாணவர் ஏனோ படிப்பை நிறுத்தியது எல்லொருக்கும் கவலையைத் தந்தது.  அதற்கு ஒரு காரணம், ஆனந்தனின் தோல்வி என்றும், அதற்குக் காரணம் சீனிவாசனும் அவரது நண்பர்களும்தான் என எல்லோரும் நம்பினார்கள். குறிப்பாக பொருளாதாரத் துறை தலைமைப் பேராசிரியரும் மாணாவர்களும். அதற்கு அடுத்த வருடம், பேரவைத் தலைவராகப் போட்டியிட்டது பொருளாதாரத் துறையைச் சேர்ந்த ராஜனும், ஆங்கில இலக்கியத் துறையைச் சேர்ந்த நானும்.  தலைமைப் பேராசிரியர் பொருளாதாரத் துறை மாணவர்கள் ராஜனுக்கு வாக்களிப்பது மட்டுமின்றி வெற்றிப் பெற உதவ வேண்டும் என்றும் உறுதியாகக் கூற விடுதியில் இருந்த நண்பர்களான நந்தகோபன், பிரதாபன் போன்றோர்கள் கூட எனக்கு எதிராக பிரசாரத்திலும் இறங்கி விட்டார்கள்.  அதில் பிரதாபன் என்னுடன் எனக்காக வாக்குக் கேட்க வரும்போதெல்லாம், நாங்கள் முன்னே நடக்க கொஞ்சம் பின் தங்கி, “நான் துளசி கூட வருவேன் ஆனா ஓட்டு ராஜனுக்கு. நீங்களும், ராஜனுக்கு ஓட்டு போடணும்” என்று சொல்லிச் சென்றதை, ஒரு நண்பன் சொன்னதும் அதிர்ந்து விட்டேன்.  எவரையும் கண்ணை மூடி நம்பக் கூடாது என்ற படிப்பினை கிடைத்த நாள் அது. 

1982 ஜூலை 23 தேர்தல் நாள். ரம்சான் ஆனதால், வாக்களிக்க வேண்டிய 1469 பேரில் வாக்களிக்க 250 பேர் வரவே இல்லை.  ராஜனுக்கு 576 வாக்குகளும், எனக்கு 552 வாக்குகளும்.  24 வாக்குகள் அதிகம் பெற்ற ராஜன் பேரவைத் தலைவர் ஆனார்.  ஆசிரியரின் வாக்கு பலித்தது.  தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வியது. (கொலையாளியே கூட தான் தான் தர்மம், தான் செய்ததும் தர்மம் என்றுதானே சொல்வது வழக்கம்.  அது போல் தேர்தலில் தோற்ற நானும் அப்படிச் சொல்வதில் தப்பில்லையே!).  ஆனால், இந்த தர்மம் (?!) மறுபடியும் எப்போது வெல்லும்? சந்தேகத்துடன் காத்திருந்தேன். காலச்சக்கரம் உருண்டது.
 
1994ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி மூலம் வழி பெற்ற பி.எட் சான்றிதழுடன் உயர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் நேர்முகத் தேர்வுக்குப் போன என்னிடம்,  ரெகுலர் பி.எட் இல்லாமல் ஆசிரியராக முடியாது என்றதும், கேரளா பல்கலைக் கழகத்தின் அடூர் பி.எட் செண்டருக்கு ஓடினேன்.  என் மாணவர்கள் ஓரிருவருடன் (நான் க்ளாசிக் கல்லூரியில் கற்பித்த இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவர்கள்)  என் 32 வாது வயதில் மீண்டும் மாணவனானேன்.  அப்போதுதான், இந்த வயதான தர்மம் மறுபடியும் வென்றது.  அடூர் பி.எட் கல்லூரியில் போட்டியின்றி நான் மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  ஆம்!  ஆசிரியர் வாக்குப் பொய்யாகவில்லை!  பொய்யாகாது என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது!  சந்தேகத்திற்கே இடமில்லை அது ஒரு அருள் வாக்குத்தான்.

அது போல், தமிழகத்திலிருந்து கேரளம் வந்த எனக்கு, “ஓம் ஸ்ரீ கணபதயே” க்குப் பதிலாக, “ஹரி ஸ்ரீ கணபதயே நம” என்றும் “ஓம் நமோ பார்வத”யே என்பதற்குப் பதிலாக, “அம்மே நாராயணா”  “தேவி நாராயாணா” என்றும் சொல்லச் செய்தும், குளித்து தேவாரமும், திருவாசகமும் பாடி வாழ்ந்த மலையாளி மக்களை ராமாயாணமும், பாகவதமும் மட்டும் பாடச் செய்தும், முருகக் கடவுளின் ஆலயங்கள் பலதையும், உன்னிக் க்ருஷ்ணன் ஷேத்திரங்களாக மாற்றியும் சைவ மதத்தை வேரோடு வெட்டிச் சாய்த்து அங்கு வைணவ மதத்தை வளர வைக்க முயலும் அக்ரமத்தைக் கண்டு மனம் குமுரத்தான் முடிந்தது.  இருப்பினும் எனக்கு நம்பிக்கை நட்சத்திரமாக என் மதிப்பிற்குரிய ஆசிரியர் தா.கு. சுப்பிரமணியன் தந்த அந்த வரிகள் என்னுள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது.  அதை மனதில் கொண்டு சைவ நெறிக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை உலகறியச் செய்ய இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கின்றேன்.  (மஹாமுடி த க்ரேட், கார்பெண்டர் த க்ரேட்)

இவ்வருடம், முன்றாம் குறும்படம் “பொயட் தெ க்ரேட்” எனும் குறும்படம் எடுக்க இருக்கின்றேன்.  எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.  “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்-தர்மம் மறுபடியும் வெல்லும்”.  எனக்கு எழுதவும், குறும்படங்கள் எடுக்கவும் தூண்டு கோலாய் நிற்கும் இவ்வருள் வாக்கை வழங்கிய என் மதிப்பிற்குரிய பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் அவர்களின் நன்மைக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். எத்தனையோ மாணவர்களின் மனதில் மிளிரும் (நம் மதுரைத் தமிழன் உட்பட) ஏராளமான பட்டிமன்றங்களிலும், மேடைகளிலும் தமிழ் அமிழ்து பொழிந்து தமிழ் வளர்க்கும் இப்பேராசிரியரின் நன்மைக்கு நீங்களும் வேண்டிக் கொள்ளுங்களேன்!28 கருத்துகள்:

 1. இனிமையான, சுவாரஸ்யமான அனுபவங்கள். பேரவைத் தேர்தலில் எல்லாம் போட்டியிட்டு வென்றிருக்கிறீர்கள். நல்ல அனுபவங்கள். பேராசிரியர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும், பிரார்த்தனைகளுக்கும்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி தேவகோட்டையாரே! என்ன மதுரைப் பதிவர் விழாவை எஞ்சாய் செய்தீர்களா?!!! நாங்கள் தான் மிஸ் பண்ணும்படி ஆகிவிட்டது!

   நீக்கு
 3. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
  http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! சந்திப்புக்குத்தான் போகவில்லையே! நண்பரே! மிக்க நன்றி!

   நீக்கு
 4. பேராசிரியர் தா. கு. சுப்ரமணியன் அவர்களைப் பற்றிய நினைவலைகள் நல்ல சுவாரஸ்யம் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ஏன் எழுத்வுஅதில்லை!? இப்போது?! எழுதலாமே நண்பரே!

   நீக்கு
 5. தங்களின் அனுபவங்களை நினைவலைகளாக வெளியிட்டது
  படிக்கும் எங்களுக்கும் ஒரு வழிகாட்டுதல் போலவே அமைந்துள்ளது.
  தங்களின் பேராசிரியருக்கும் என் வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ அவர் எனது ஆசிரியர் ஒரு செமஸ்டர் எனக்கு பாடம் எடுத்தவர்...

   நீக்கு
  2. இரண்டாவது போட்டோவில் எனது வகுப்பறையை மறைத்து எடுத்து வெளியிட்டதற்கு எனது கண்டனம்

   நீக்கு
  3. சகோதரி அருணா! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
  4. மதுரைத் தமிழா! ஹாஹஹஹ யப்பா போட்டிக்கு இல்லைப்பா....உங்களுக்குப் பாடம் எடுத்தவர்....நான் 10 நாட்கள் தங்கியதும் பின்னர் அவருடன் பழகியதும்.....பரவயில்லை.....ஹஹ்...தெரியும் நீங்கள் குஈபிட்டிருந்தீர்கள் அவர் உங்களுக்குப் பாடம் எடுத்தவர் என்று.....

   தமிழா உங்கள் வகுப்பறை எது என்று தெரிந்திருந்தால் அதையும் சேர்த்து....உங்கள் இருக்கையைக் கூட போட்டு இங்குதான் தமிழன் ஒருகாலத்தில் அமர்ந்திருந்தார்.....அமர்ந்து.....சம்த்தாக (?!!!) நல்ல பிள்ளையாக (??!!!!!) ஆசிரியர் நடத்துவதைக் கவனித்தார் என்றும் போட்டிருக்கலாம்.....விடுபட்டுவிட்டது....அடுத்த முறை போட்டுவிட்ட்டால் போச்சு.....என்ன ஓகேதானே!!!

   நீக்கு
 6. தா. கு அவர்களின் நிறைய பேச்சை கேட்டு மகிழ்ந்துள்ளேன். ஏன், என்னுடைய மேடை பேச்சிலேயும் அவர் சாயல் இர்கின்றது என்ற குற்ற சாட்டை கேட்டு மகிந்துள்ளேன். அவரை பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய கற்று கொண்டேன். நீங்களும் சரி, மதுரை தமிழனும் சரி, மோதிர கையால் குட்டு பெற்றவர்கள். அதனால் தான் பதிவுலகத்தில் வெற்றி கோடி நாட்டி சுற்றி வருகின்றீர்கள். பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க விசு நண்பரே! ஓ! அந்த அளவிற்கு பேராசிரியரின் தாக்க்கம் உள்ளதா!! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! உண்மைதான் நண்பரே! மதுரைத் தமிழன் நிச்சயமாக பதிவுலகில் கொடி நாட்டுகின்றார். நாங்கள் கொடி எல்லாம் நாட்டவில்லை.....இப்போதுதான் தவழ ஆரம்பித்துள்ளோம்....கொடிக் கம்பு எதுவாவது கிடைத்தல் பிடித்துக் கொள்ளலாம் என்று .......ஹஹ

   நீக்கு
  2. விசு சார் மதுரைக்கல்லூரியில் படித்த நாங்கள் (மதுரைத்தமிழன் & துளசி )இன்னும் பந்தல் கொடிதான் நாட்டி வருகிறோம் ஆனால் அமெரிக்கன் கல்லூரியில் படித்த நீங்களும் ஆல்பிரட்(பரதேசியும்) அமெரிக்காவையே கலக்கி வருகிறீர்கள் ஆல்பிரட் ஈஸ்ட் கோஸ்ட் என்றால் நீங்கள் வெஸ்ட்கோஸில் கலக்குகீறீர்கள் அதுமட்டும் இல்லாமல் ப்ளாக் பக்கமும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க

   நீக்கு
  3. நண்பரே நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவில்லை. என் தாயார் அங்கே படித்து பட்டம் பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய விஷயமே. நான் டாக்டர் ராதாகிரிஷ்ணன் மற்றும் பெரியவர் மால்கம் படித்த Voorhees (வேலூர்) கல்லூரியில் படித்தவன். உங்களுடைய மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 7. பேராசிரியரை தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் பார்த்து இருக்கிறேன்! அவரது பேச்சை ரசித்தும் இருக்கிறேன்! நேரில் ரசிக்க வாய்ப்பு இருந்தும் சந்தர்ப்பம் சரியில்லை! மதுரைக்கு வரவில்லை! பார்ப்போம்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! எங்கள் பேராசிரியரின் பேச்சை ரசித்ததற்கும், தங்கள் கருத்திற்கும். நாங்களும் மதுரை போகவில்லை அதனால் அவரை சந்திக்க முடியாததால் தான் இந்தப் பதிவு! எங்களுக்கும் சந்தர்ப்பம் சரியாக இல்லைதான் நண்பரே!

   நீக்கு
 8. இனிய நினைவலைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

   நீக்கு
 9. மலரும் நினைவுகள் மணக்க பதிவிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் பேச்சாற்றலைக் கண்டு நானும் பலமுறை மகிழ்ந்து இருக்கிறேன் !
  மதுரைக்கு வர உங்களுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோ அதைப் போன்றே பேராசிரியர் அவர்களுக்கும் ஏற்பட்டதால் இன்று கலந்து கொள்ளவில்லை ,அவர் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்த எனக்கும் ஏமாற்றம் தான் !
  த ம +1

  பதிலளிநீக்கு
 11. மலரும் நினைவுகள் அருமை. தங்களுடையதை படிக்க படிக்க, என்னுடைய கல்லூரிக்காலமும் மனத்திரையில் வந்து வந்து சென்றது.
  உங்களின் அடுத்த குறும்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஆசானே
  முன்பு இந்தப் பதிவை அலைபேசியில் படித்ததால் அப்போது கருத்திட முடியவில்லை.
  சென்ற பதிவும் அப்படித்தான் கருத்துரைக்கும் முன்பே கடந்தது.
  நம்மைக் கவர்ந்தஆசிரியரின் பாதிப்பு நம் எல்லார்க்குள்ளும் இருக்கிறது அல்லவா? ஏதேனும் ஒரு வடிவில் நாம் அவர்களாக உருமாறிப் பாவனை செய்யும் சில தருணங்கள் நம்முடைய தொழில் சார்ந்தது என்றாலும் அப்பொழுது நாம் கொள்ளும் பெருமிதம் இருக்கிறதே..அப்பப்பா...!
  உங்களைப்போலத்தான் பள்ளியில் நிறையத் தயாரிப்போடு பேச்சுப்போட்டியில் கலந்து கோள்ளப்போய் பேச்சுவராமல் நெஞ்சடைத்து கண்ணீர் விட்டு நின்று மாணவர் கைதட்டிப் பரிகசிக்க ஓடி ஒளிந்து அழுத கணம் எனக்கும் வாய்த்திருக்கிறது. அதன் பின் அந்த மேடை பயம் நீங்கியதில்லை. இப்பொழுதும் கூட!
  கல்லூரி அரசியல், தலைமைப்பொறுப்பு இதெல்லாம் உங்களால் கூடுகிறது. அத்திறன் வாய்த்தோர் சிலர்தான். பெரும்பாலோர் தொண்டராக இருந்து விட வேண்டியதுதான். என்னைப்போல!
  உங்களின் கல்லூரிப் பருவத்திலேயே நீ்ங்கள் அதற்கான அடையாளத்தோடு உங்கள் ஆளுமையை மீட்டெடுத்திருக்கிறீர்கள்.
  எனக்கோ என்னைச் சும்மா விட்டாப் போதும் என்ற எண்ணம்தான்!
  உங்களின் அனுபவ வரிகள் ஒவ்வொன்றிலும் இப்படி உங்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது மனது!
  நிச்சயம் தங்கள் திறமைகள் மிளிர்ந்து நீங்கள் அறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
  இளையவன் என்றாலும் கூட நானும் ஓர் ஆசிரியன்தான்!
  உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல ஆசிரியர் வாக்குப் பொய்யாகாதுதானே?
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஆசானே! உங்களைப் போன்றோர் வந்து கருத்திடலும், நல்கும் பாராட்டுகள் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது! உங்களைப் போன்றோ ஒரு வார்த்தை சொன்னால் அது நூறு வார்த்தைகளுக்கும், நூறு பேர் சொன்னது போல ஆசானே! உங்கள் வாக்கு பலித்தால் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அதை ஒன்றுமே எதிர்பார்ப்பதில்லை. அப்போது சின்ன வயது...அந்த வயதிற்குரிய துடிப்பு....நீங்கள் தொண்டர் என்று சொல்ல அவசியம் இல்லை. நீங்களும் ஆளுமைத் திறன் உள்ளவர்தான். இதோ வலை உலகில் எத்தனை பேர்களை எங்களையும் உட்பட கட்டிப் போட்டு உள்ளீர்களே! அது எதனால்? உங்கள் எழுத்து ஆளுமையால்...சொல்லும் விதத்தின் ஆளுமையால்....மொழி ஆளுமையால், அறிவுத் திறன் ஆளுமையால்....அறிவின் ஆளுமை என்றுமே தளும்பாது...அதனால் தான் நீங்கள் நிறை குடம் தளும்பாது என்பதற்கிணங்க இருக்கின்றீர்கள்! தொண்டரல்ல......நீங்களூம் ஆளுநரே!

   மிக்க நன்றி!

   நீக்கு
 13. அப்பாடா ஒரு மாதிரி வாசித்து முடித்துவிட்டேன் சகோ தங்கள் நினைவலைகள் தங்கள் மீது மிகுந்த மரியாதையை உண்டு பண்ணுகிறது சகோ . தேர்தலில் எல்லாம் போட்டிபோட்டு தலைமைப் பொறுப்பு ஏற்று ம்..ம்..ம்.. மிகுந்த ஆற்றல் உள்ளவர் மேலும் தங்கள் திறமைகள் வெளிவரவும் பல குறும்படம் எடுக்க வேண்டும் ஏன்றும் வாழ்த்துகிறேன். தங்கள் பேராசிரியருடைய பாசம் கண் கலங்க வைத்தது. அவர் பட்டிமன்றமும் பார்த்தேன் அவர் கண்கலங்க குழந்தை பருவத்தை பற்றி சொன்னதும் நெகிழ வைத்தது சகோ பதிவுக்கு நன்றி ! மேலும் நிறைய சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  அண்ணா.

  தங்களின் அனுபவங்களை நினைவுபடுத்தி சொல்லியமைக்கு நன்றிகள் பல...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு