செவ்வாய், 28 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்.....அபஸ்வரமாகியதே! - 3 (முற்றும்)


ஏன் ஞான சூன்யம்!? மொழிப் பிரச்சினைதான் காரணம்! நல்ல உச்சரிப்புத் திறமை எனக்கு இருந்தாலும், மொழிப் பிரச்சினை! மேள தாளத்தோடு, வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துப் பார்த்தும், சுட்டுப் போட்டு ப்ளாக் மெயில் பண்ணிப்பார்த்தும், மும்மூர்த்திகளும் எனதுள் குடியேற மறுத்தனர்! விவேக் ஒரு படத்தில் சொல்லுவது போல், எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும்.  ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியவில்லையே!! மாறாக, பாரதியும், பெரியசாமிதூரனும், பாபநாசம் சிவனும், அம்புஜம் கிருஷ்ணாவும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், திருநாவுக்கரசரும், அருணகிரிநாதரும், ஆழ்வார்களும் குடியேறினார்கள்! எனக்குத் தமிழ் கீர்த்தனைகள் எளிதாக வந்ததால் தமிழ் கீர்த்தனைகள் அவ்வளவாகத் தெரியாதவர்களிடமிருந்து என்னால் கற்க முடியாமல் போனது! தமிழ் கீர்த்தனைகளுக்குள் சென்று, லயித்து, உணர்ந்து, அர்த்தம் புரிந்து என்னால் பாடமுடிந்தது போல், தியாகபிரம்மமும், தீக்ஷிதரும் எனக்கு மனனம் ஆக மறுத்ததால், அந்தக் கீர்த்தனைகளைப் பாட முடியவில்லை!  அதனால் ஞான சூன்யம் ஆனேன்! இது அன்றைய காலகட்டம். இப்போது திருக்குறள் கூட கச்சேரிகளில் ராகபாவத்துடன் பாடப்படுகின்றதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

எனவே, என் மாமியிடமும், பக்கத்து வீட்டு ராதை அக்காவிடமும், தேவைப்படும் சமயத்தில் 2 நிமிட இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல தமிழ் கீர்த்தனைகளை 2 மணி நேரத்தில் கற்று, ஓபி அடித்து, ஒப்பேற்றினேன்.  அப்படித்தான் தியாகபிரம்மமும், தீட்சிதரும், ச்யாமா ஸாஸ்திரியும் கொஞ்சம் கருணை காட்டி என்னுள் புகுந்தனர்.  ஆனால், முழுமையாக இல்லை.

“நீ எதத்தான் முழுசா செஞ்ச?”  இது வேறு யாரும் இல்லை என் உள் மனதின் குரல்!  ம்ம்ம் என்ன செய்ய....இப்படி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் கல்லூரியில் நடந்த கர்நாடக சங்கீதப் போட்டியில் நானும் பெரிய பாடகி போல் பங்கெடுத்துக் கொண்டு ஹம்சானந்தி ராகத்தில் உள்ள ஸ்ரீனிவாஸ திருவேங்கடமுடையான் எனும் தமிழ் கீர்த்தனையை ராதை அக்காவிடம் ஜெட் வேகத்தில் கற்றுக் கொண்டு, எனது இடைச் செருகலாக, குலம்தரும் செல்வம் தந்திடும் எனும் திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு கீர்த்தனையைப் பாட 3 வது பரிசு கிடைத்தது!!! ஆலாபனை பண்ணாததாலும், ஸ்வரம் போடாததாலும்!  உடனே நீங்கள் எல்லோரும் என்னை வாழ்த்துவீர்கள்! வாழ்த்த வேண்டாம்.  3 ஆம் பரிசு கிடைத்த ரகசியம் இதுதான் குலாப்ஜாமூன் விளம்பரத்தில் அந்தக் குட்டிப்பையன் சொல்லுவானே அது போன்று மொத்தமே மூன்று பேர்தான் கலந்து கொண்டோம்! இது இளம்கலை கற்ற போது!

எங்கள் கஸின்ஸ் நாங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது லொள்ளு சபா போல நாங்கள் அடித்த லொள்ளு பல! திரைப்படப் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடிக் கலாய்ப்பது! இந்திராகாந்திப் பாட்டி இறைவனடி சேர்ந்த போது, அது பொங்கல் சமயமாதலால், வாங்கிய கரும்பு அப்படியே இருந்தது, யாரும் சீண்டுவார் இல்லாமல். அப்போது எங்களில் ஒருவன் அதை ரகசியாமாகக் கடித்துச் சாப்பிட, அதை எனது மாமா மகனும், நானும் (என்னுடன் சங்கீதம் ரசிப்பவன், என்னைக் கலாய்ப்பவன்) பார்க்க உடனே “கரும்பு  தின்னும் அத்தை மகனே! நீ கை வலிக்க கரும்பொடித்து, பல் வலிக்க தோலுரித்து, தின்னும் போது பல் ஒடையலையா” (அரிசி குத்தும் அக்கா மகளே-பாண்டியன்-ரேவதி பாடல்) என்று சத்தமாகப், ஏதோ பாடுவது போல் பாட அவன் பெரியவர்களிடம் மாட்டிக் கொள்ள....அதன் பின் எங்களுக்குள் பல போக்குவரத்துக்கள், சமாதான்ங்கள் அந்தக் கதை தனி! இது ஒரு உதாரணம் தான். 

பாட்டி இறந்து விட்டதால், நான் கொஞ்சம் தைரியம் வந்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்த மீனா டீச்சரிடம் (நல்ல தமிழ் ஆசிரியையும் கூட! இவர் பாரதிராஜா படத்தில் பாட்டு சொல்லித்தரும் ஆசிரியையாகவே ஒரு காட்சியில் வருவார்) நானும், எனது அத்தை மகளும் பாட்டு கற்கச் செல்ல, அவரு ஸ ப ஸ விலிருந்து ஆரம்பிக்க போனால் போகிறதென்று, வர்ணம் வரை வந்தாலும் இடையில் ஓரிரு தியாகராஜக் கீர்த்தனையும், தமிழ் கீர்த்தனையும் கற்றுக் கொடுத்தார்.  என்றாலும் அங்கும் வேகத்தடை வந்து முற்றுப் புள்ளி வைத்தது.  வீட்டில் பாடும் போது எனது அத்தை மகன்

“கீதா ரொம்ப நன்னா ஸ்வர பேதம் பண்ணர” என்பான்.  அதாவது, நான் ஸ்வரங்களை அதன் இடத்தை விட்டு மாற்றி மாற்றிப் பாடுவதாகச் சொல்லி என்னைக் கலாய்ப்பான்! 

“கீதா நீ ரொம்ப நன்னாதான் பாடற...ஆனா என்ன, பல ராகம் தெரியறது நீ பாடும் போது....அதனால நீ என்ன பாடறனு கொஞ்சம் சொல்லிட்டுப் பாடு...இல்ல ராகமாலிகை பாடினாலும் சொல்லிடு...ம்ம்ம்ம் ராக மாலிகைனும் சொல்லிக் கூடத் தப்பிச்சுடலாம்”  என்றும் கலாய்ப்பான். மாமிதான் எனக்கு ஆதரவு தெரிவிப்பார். 

“என்னடா அப்படிச் சொல்லற.  ஸ்வர பேதம் இல்ல...ஸ்ருதி பேதம் பண்ணிக் கூட பல ராகங்கள் கொண்டு வரலாம். கீதா நீ பாடும்மா...” என்று சொல்லி என்னைக் காலாய்த்தாரா இல்லை அவனுக்கு பதிலா என்று இப்போது வரை விடை இல்லை!  எனக்கு அப்போது இந்த ஸ்ருதி பேதம் ஓரளவு புரிந்தாலும், பின்னர்தான் அதன் முழுமையான டெக்னிக்கல் அர்த்தம் புரிந்தது. இதைப் பற்றி இறுதியில்.

இப்படியாக எனது சங்கீத்த்திற்கு வேகத்தடை வந்து வந்து, திருமணத்திற்குப் பிறகு திருவனந்தபுரத்தில் வாழ்க்கை என்றாலும் புகுந்த வீடு சென்னை என்பதால் திரும்பவும் நவராத்திரி கொலுவில் பாடுவதற்காக மட்டும் வேண்டி மாமியார் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பாட்டு மாமியிடம் துக்கடாக்கள் கற்க வற்புறுத்த,

“ஆஹா!  திரும்பவும், சுண்டல் பாட்டா! என்ற ஒரு சோர்வு வர, அந்த மாமி என்னை “என்ன ஒரு குரல்!  சபைக்கு ஏத்த மாதிரி கம்பீரமான குரல்.  நல்ல ஞானம்” என்று சொல்லி கற்றுத் தந்தார் ஒரு துக்கடா! அதன் பின்னர் என் சங்கீதமோ தூள் பக்கோடா ஆனது! திருவனந்தபுரம், சென்னை என்று மாறி மாறி ரயிலில் தான் என் வாழ்க்கை என்று ஓடிய போது, டீச்சர் என்னுடனேயே ரயிலிலும் வந்து கற்றுத் தர நான் என்ன டாட்டா, பிர்லா விட்டுப் பெண்ணா இல்லை அரச குலத்துப் பெண்ணா! 

பின்னர், ஒரு நல்ல நாள் வந்தது! அப்படி நான் நினைத்துக் கொண்டேன்!  கணவர் இருந்தால் தானே பாடக் கூடாது! அவர் இல்லாத போது?! என்று திருவனந்தபுரத்தில் அப்போது பிரபலமான, அந்த ஊரின் எம் எஸ் என்று அழைக்கப்பட்ட திருமதி சீதாலக்ஷ்மி மாமியிடம் பாட்டுக் கற்க சென்ற போது, மீண்டும் ஸ ப ஸ.  தாட்டு வரிசை ரொம்பவே என்னைப் புரளி பண்ணியது! எப்படியோ வர்ணம் வரை வந்தேன்.  5 வர்ணம் வரை.  பின்னர், அம்மா என்ற ப்ரமோஷனுக்குத் தகுதி வந்ததால், 3 மாதம் ஆகும் போது, மாமி

“குழந்தே!  உனக்கு இனிமே மாடி ஏறி வரது கஷ்டம்.  மூச்சு வேற வாங்கும்.  அதனால சிரமப்பட வேண்டாம்” என்றார். அங்கு விழுந்தது, பாட்டிற்கு வேட்டு!

ஆனால், நான் வீட்டில் யாரும் இல்லாத போது பாடி சாதகம் செய்ய, அது கருவில் வளர்ந்த மகனின் காதில் விழுந்திருக்கும் போல, மஹாபாரதத்து அபிமன்யு போல! மகன் பிறக்க, அவனுக்காக நிறைய பாடியதாலும், அவனுக்கு சங்கீதத்தில் மிகுந்த நாட்டம்! ஆனால் என்னைப் போல அவனுக்கும் எங்கேயோ சங்கீதம் அடிபட்டது!  அவன் வளர்ந்து வந்த போது, நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து, கோயம்பத்தூர், பின்னர் சென்னை என்று இடம் பெயர, சென்னை வந்ததும், அவனுக்கும், அவன் அம்மாவை போன்று திரு சேஷகோபானிடம் சங்கீதம் கற்க ஆசை வந்துவிட்டது! ஏற்கனவே கற்றல் குறைப்பாடு உடைய பையன், இவன் எப்படி  பாட்டுக் கற்றுக் கொள்ளப் போகின்றான்? என்று நினைத்தாலும் நானும் அவனும், சேஷகோபாலனின் வீடு அருகில் இருந்ததால் படையெடுத்தோம்!

அவர் முதலில் கேட்ட கேள்வி “எப்படி என் மீது இவனுக்கு ஆர்வம் வந்தது?”

“உங்கள் காக்கைச் சிறகினிலே! அதை அவன் கேட்டதாலும், நான் அதைக் கற்றுக் கொண்டு அவனுக்காகப் பாடியதாலும்”

ச ரி க ம என்று பாடிக் காட்டச் சொன்னார்.  அவனுக்கு த பிசகியதால், அவர்

“நீங்க முதல்ல கீழ மாமிகிட்டக் அவனக் கத்துக்க வையுங்கோ.  அவன் நன்னா வந்தா இங்க மேல எங்கிட்ட கத்துக்கலாம்”

அப்படியாக, அவனுக்காக நானும் கீழே மாமியிடம், சேர்ந்தேன்/தோம்.  தரை டிக்கெட்.  பெரிய கூட்டம்!  20 பேரில் நாங்கள் இருவரும்.  சேர்ந்து மீண்டும் எனக்கு...ம்ம்ம் அதைச் சொல்லவில்லை நான்.  புரிந்து இருக்கும் உங்களுக்கு! பயின்று வந்த போது, ஜண்டை வரிசை வந்த போது ஒரு நாள் மாமி, ஒவ்வொரு வரிசையையும் ஒவ்வொருவர் பாட வேண்டும் என்று சொல்ல, எனக்குத் திகில். இன்று வந்தது ஆப்பு என்று!  அதுவரை மகன் தப்பித்து வந்தவன் இன்று மாட்டிக் கொண்டான் என்று.  அப்போது அவனுக்குப் 10வயதுதான். மாமி என்னைப் பாடச் சொல்ல...இது எல்லாம் நமக்கு ஜுஜூபி என்று பாட, அவன் திணற

“பாரு, உங்கம்மா எப்படிப் பாடறா.  நீ என்ன பாடற” என்று அவனைசக் கொஞ்சம் வசை பாட, அவன் அங்கிருந்து கிளம்பியதும், கண்ணில் நீருடன்

“அம்மா! பாட்டு வேண்டாம்!  நீ சொல்லித் தா!” என்றான்.  எதிர் பார்த்ததுதான். அவனது குறைபாட்டை அவர்களிடம் சொல்லிப் புரியவைக்க நான் முயலவில்லை.  என்றாலும் சேஷ கோபாலன் என் வீட்டிற்கே வந்து கற்றுக் கொடுத்தார், காசெட் வடிவில்!

வருடங்கள் உருண்டோடியது.  என் மகனின் சங்கீத ஞானமும் பெருகியது! அவன் வீணைக் கற்றுக் கொண்டான். அந்தக் கதையைச் சொல்ல தனி இடுகை வேண்டும். எனவே இங்கு அதற்கு சென்சார். இது என்னுடைய கதை!

எங்கள் வீட்டின் அருகில் தான் முதன் முதலில் ஜலதரங்கம் வாசித்த ஒரே பெண் என்ற பெருமை பெற்ற சீதாலஷ்மி துரைசாமி மாமி இருந்ததாலும் அவர் என் கணவரின் தங்கைக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் அவரிடம் சென்றோம். மாமிக்கு ஜலதரங்கம் மட்டுமல்ல, வீணை, கோட்டுவாத்தியம், வயலின் என்று பன்முகக் கலைஞர்!

மீண்டும் பாலபாடம்! இங்கும் வர்ணம் வரை வந்து 10 வர்ணம் அதில் ஒன்றாகக்,  கொஞ்சம் கஷ்டமான அட தாள பைரவி வர்ணமான விரிபோணி வரை கற்றேன்.  மாமி இதைக் கொஞ்சம் வித்தியாசமான ஸடைலில் அவரது குரு அவருக்குக் கற்றுக் கொடுத்தது போலக் கற்றுத் தர நான் அதை மிக நன்றாகக் கற்றுப் பாடுவதாக அவர் சொல்லுவார்.  மாமிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது! மிக மிக அன்பானவர்.  ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டார்.  நல்ல மனதுடைய மனித நேயமுடையப் பெண்மணி! என் மனதிற்குகந்தவர்! எனக்கு அமைந்த மிகச் சிறந்த குரு! இடையில் மாமியிடம் கெஞ்சிக் கேட்டுத் தமிழில் இருந்த வர்ணங்களையும் கற்று,  மாமிக்குத் தமிழ் கீர்த்தனைகள் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை என்றாலும் எனக்குக் கற்றுத் தருவதாகச் சொன்ன நேரத்தில், மாமியின் கணவரும், எனது ரசிகரும்?! ஆன துரைசாமி மாமாவின் மரணம்! சங்கீத்த்திற்குத் தோன்றியிருக்கும்! “என்னடா இது கீதாவிடம் இவ்வளவு நாள் தங்கிவிட்டோமே! அது சரியல்லவே” என்று!  எனவே எனக்கு டாட்டா, பைபை என்றது! பின்னர் நான் என் மகனுக்கு வேண்டி பாண்டிச்சேரி வாசம்.  பின்னர், மாமியின் வீட்டுப் பக்கம் போனால், அங்கு மாமி இல்லை! வீடு இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  அடையாருக்கு அருகில் இருப்பதால், பெரும்பாலும் தினமும் செல்ல வேண்டி இருக்கும் அதுவும் அந்த வழியாகத்தான்! இன்று கூட அந்த வழியாகத்தான் வந்தேன்! அவரை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், எங்கிருகின்றார் என்று தெரியாவிட்டாலும், சமீபத்தில் வந்த “திருமணம் என்னு நிக்காஹ்” படத்தில் வரும் மிக அருமையான பாடலான “கண்ணுக்குள் பொத்தி வைப்பாய்” அதில் எனது குரு மாமி ஜலதரங்கம் வாசித்தக் காட்சி அமைந்திருப்பது ஒரு சில துளிகளே ஆனாலும் அதைக் கண்ட போது மகிழ்ச்சியில் துள்ளிவிட்டேன்! இதோ அதன் காணொளி!  நான் மிகவும் ரசிக்கும் பாட்டு!  முகாரியில் ஆரம்பித்து, ஹமீர்கல்யாணி ராகத்தில் தொடரும்....பாடல்.....




இதோ, நான் முன்னர் சொன்ன ஸ்ருதி பேதம்/ஸ்வர பேதம் குறித்த காணொளி! சரத் என்னும் ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர்!  கேரளத்து நாட்டினராயினும், தமிழ் நாட்டில்தான் அவரது குரு!  பாலமுரளிக் கிருஷ்ணாதான்! திரு சரத் தனது குருவைப் போல!  எதில்?  குரு எப்படி மூன்றே மூன்று ஸரங்களைக் கொண்டு பல மணி நேரம் பாடுவாரோ, ஸ்வர பேதம், ஸ்ருதி பேதம் செய்து புதுப்புது சோதனை முயற்சிகள் செய்வாரோ அதைப் போல சிஷ்யனும் ஸ்ருதி பேதம் செய்வதில் வல்லவர்! 16 அடி பாய்பவர்! ஒரு உபரித் தகவல்!  சேட்டன் தமிழிலும் நன்றாக சம்சாரிப்பார்! எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.
 
பாவையாமி பாடுமென்டே...திரு .ஷரத் இசையமைத்துப் பாடியது! ஸ்ருதி பேதம் செய்து! 13 நிமிடம்....படம் மேகதீர்த்தம். இந்தப் பாட்டு அவார்ட் வாங்கியது!  ராயல் சல்யூட் திரு சரத்!  உங்கள் அபார சங்கீத ஞானத்திற்கு! இந்தக் காணொளி இது நேரடியாக ஐடியா ஸ்டார் சிங்கரில் பாடியது! மிகவும் காம்ப்ளிகேட்டட் பாட்டு!  நேரடியாகப் பாடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று! இதோ அவரது சங்கீத ஞானத்திற்கு ஒரு உதாரணம். என்னுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்!






இந்தக் காணொளியைப் பாருங்கள்!  இதுவம் ஐடியா ஸ்டார் சிங்க்ரில் தீபாவளிச் சிறப்பு நிகழ்வாக, முருகனையும், தமிழ் பற்றியுமான வரிகள்! சுத்ததன்யாசியில்.....இதுவும் சரத் அவர்களின் இசைவண்ணம் தான்! நான் மிகவும் ரசிக்கும் பாடல்.  நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்!



https://www.youtube.com/watch?v=n8H8MoZ04vM  சரத் உன்னிகிருஷ்ணன்

எனது சங்கீதக் கனவு அபஸ்வராமாகிப் போனாலும், எனது ஆர்வமோ, கேட்பதோ குறையவில்லை! இங்கு பகிர்ந்துள்ளது போன்ற பாட்டுகளும், சங்கீதக் கச்சேரிகளும்! வலைத்தளத்தில் கலக்கும் சுப்புத்தாத்தா அவரது வலைத்தளத்தில் மிக நல்ல பாடல்களைப் பகிர்ந்தும், அவரே பாடியும், எனது சங்கீத ஆசையை அவ்வப்போது தூபம் போட்டு கமழச் செய்வார்! 

துளசி எடுக்கப் போகும் அடுத்த படத்தில், அவருக்கு நான் ஆஸ்தான உதவியாளராக இருந்தாலும், நான் பாட வேண்டும் என்று சொல்லி முடிவு செய்துவிட்டார்! எனவே இத்தனை சங்கதிகள் இருக்கும் போது, அபஸ்வரமான  என் சங்கீத சங்கதிகள் உயிர்ப்படையுமோ! பார்ப்போம்! இப்போது எனக்குத் தான் டென்ஷன்! நான் நன்றாகப் பாட வேண்டுமே!  ஆம்! துளசி என்னைப் பயிற்சி செய்யச் சொல்ல ஜுரம் வேகம் பிடித்துள்ளது! அதுதான் நான் முதல் பகுதியில் சொன்ன சங்கீத வைரல் ஜுரம்!  இந்த ஜுரத்திற்கு நான் பயப்படவில்லை! என் ஆனந்த ராகம் அபஸ்வரம் ஆகாது என்ற நம்பிக்கையில்! இந்த அரை செஞ்சுரி அடித்த காலகட்டத்தில் ஏதோ இப்படியாவது, வரும் தடைகளை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு செய்ய முடிகின்றதே! அதற்கு வீட்டாருக்கும் நன்றிகள் பல!

என்னை எல்லா விதத்திலும் ஊக்குவிக்கும் நண்பர் துளசிக்கு நன்றிகள் பல! நன்றி துளசி!

(ஹப்பாடா! ஒரு வழியா முடிச்சிட்டேன்பா!)

படங்கள்: கூகுள்!  காணொளிகள்: யுட்யூப்

29 கருத்துகள்:

  1. #சங்கீத வைரல் ஜுரம்!#
    உங்கள் குரலை கேட்கப் போகும் எங்களுக்கு தொற்றாது என்று நம்புகிறேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! ஜி! இப்படிச் சூடாக பின்னூட்டம் வந்ததைப் பார்க்கும் போது ஜுரம் தொற்றிக் கொண்டுவிட்டதோனு!...அஹஹ்ஹ...

      கண்டிப்பாகத் தொற்றாது! தொற்றினாலும் தேஞ்ச ரெக்கார்ட் போல பாடிப் பாடி குறைச்சுருவோம்ல!

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  2. கல்யாண சமையல் சாதம்
    காய்கறிகளும் பிரமாதம்
    இந்த Thillaiakathu Chronicles பிரசாதம்
    இதுவே எனக்கு போதும்!

    ஹாஹ.... ஹாஹ- ஹாஹா
    ஹாஹ.... ஹாஹ- ஹாஹா
    ஹாஹ.... ஹாஹா-

    கல்யாணப் பிரசாதம் தீர்ந்து விட்டதே!
    ஹி... ஹீ... ஹி.

    (மன்னிக்கவும் இது ஒரு நகைச் சுவை கருத்தாக மட்டுமே பார்க்கவும்)
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹஹஹ அழ்கான பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி! கல்யாணப் பிரசாதம் தீரவில்லை. பிறிதொரு தருணத்தில் தொடரலாம்..ஐஅய!

      மிக்க நன்றி!

      நீக்கு
  3. இசையை விரும்பும் ஒருவரின்
    இசை பற்றிய கருத்து
    என் உள்ளத்தே நிறைவடைய
    தங்கள் பதிவு
    சிறப்பாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  4. எனக்கு சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையே என்ற குறை உண்டு. அதன் ஆழ அகலங்கள் புரியக் கூட வேண்டாம். அட்லீஸ்ட் குரல் கொஞ்சம் ஒத்துழைக்கும். ராக, தாளங்கள் பிடிபடும், புரிபடும். ஸ்டார் ஜூனியர் சிங்கரில் சிறு சிறு வாண்டுகள், அதுவும் அந்த ஸ்பூர்த்தி, ஜெஸ்ஸிகா போன்றோர் அசத்துவதைப் பார்க்கும்போது சற்றுப் பொறாமையுடன்தான் ரசிப்பேன்.

    நகைச்சுவையாக சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாலும் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள். கலக்குங்கள்.

    சரத் அவர்களும், ஹரிஹரன் அவர்களும் பங்கு பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்ததுண்டு. அதில் ஹரிஹரன் குரலில், சரத் இசையில் ஜூன் 6 படத்தில் மழை பற்றிய பாடலொன்றை போட்டியில் பங்கு பெற்ற கலைஞர், ஹரிஹரன், அப்புறம் சரத் மூவருமே பாடினார்கள். என் விருப்பப் பாடலாகவும் அது மாறியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரல் ஒத்துழைக்கும், ராக தாளங்கள் பிடிபடும். புரிபடும்// பின்னர் என்ன கவலை?!!!! நன்றாகக் கேட்டு ரசித்துப் பாடியும் பார்க்கலாமே!

      வாண்டுகள் பாடி அசத்தும் போது ம்ம்ம்ம் சற்றுப் பொறாமையுடன் தான் ரசிப்பது இங்கும்....

      சரத் அவர்களும், ஹரிஹரன் அவர்களும் பங்கு பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்ததுண்டு.//


      அந்தக் காணொளியைத் தேடினேன் கிடைக்கவில்லையே! லிங்க் தர முடியுமா....இப்படி கூகுள் பண்ணினால் ஏர்டெல் க்ராண்ட் ஃபினாலே அந்த சரத் பாடியதுதான் வருகின்றது...இதே பாட்டு...எந்த லிங்கு என்று தர முடியுமா?!

      நான் அவ்வளவாகக் கர்றுக் கொல்ளவில்லை என்பது உண்மைதான்!

      மிக்க நன்றி!

      நீக்கு
    2. நான் அந்த நிகழ்ச்சியை 'லைவா'கத்தான் பார்த்தேன். யூ டியூபில் தேடியதில்லை.

      நான் சொன்ன பாடலின் யூ டியூப் லிங்க் :
      https://www.youtube.com/watch?v=iOfbqSZs_UU

      அந்நிகழ்ச்சியைத் தேடப்போய் சுவாரஸ்யமான இந்த ஜுகல்பந்தி கிடைத்தது!
      https://www.youtube.com/watch?v=mvtiOUEdrQw

      நீக்கு
    3. மிக்க நன்றி! நண்பரே! மழையே பாட்டுக் கேட்டிருக்கின்றேன்....படமே பார்த்திருக்கின்றேன் அந்த இரண்டாவது காணொளி ஜுகல் பந்தியும் பார்தததுண்டே.....!!! என்றாலும் திரும்பப் பார்த்தும் கேட்டும் விட்டேன்...ரசித்தும்...மிக்க நன்றி!

      ..நீங்கள் லைவ்வாகக் கேட்ட அந்த சரத் அவர்களும், ஹரிஹரன் அவர்களும், போட்டியாளரும் பாடிய வீடியோதான் தேடிக்கொண்டிருக்கின்றோம்....பார்ப்போம் கிடைக்கிறதா என்று....

      நீக்கு
    4. நண்பரே இந்த மழையே பாடலை ஹரிஹரன் பாடியதும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்......அதன் லிங்க் இது லைவ் அல்ல.....

      https://www.youtube.com/watch?v=nAm-g-7Y5Jo

      நீக்கு
    5. ஹரிஹரனின் இந்தக் குரலை, இந்தப் பாடலை ரொம்ப நாள் என் அலைபேசியில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

      நீக்கு
  5. எனக்கும் இசையின் இலக்கணம் சற்று தெரியுமே தவிர
    குரலுக்கும் எனக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் உள்ள தூரம்.

    இருப்பினும் நான் பாடத்தான் செய்கிறேன்.
    கர்நாடக இசையில் மெட்டு அமைத்து கொண்டு தான் இருக்கிறேன்.

    இதுவரை 1500 பாடல்களுக்கு மேல் தமிழ் வலைப் பதிவாளர்கள் கவிதைகளுக்கு மெட்டு அமைத்து இருக்கிறேன்.

    நான் சொல்வதற்கு காரணம், நமது குரல் இசை தனை ரசிப்பதற்கு ஒரு தடை ஆக இருக்கக் கூடாது.

    உங்கள் பதிவும் இசை அறிவும் என்னை பிரமிக்கச் செய்கின்றன.

    நான் மெட்டு அமைக்கும் சில பாடல்களுக்காவது நீங்கள் பாடுங்களேன்.

    சுப்பு தாத்தா.
    www.movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபுத்தாத்தா தாங்கள் பாடுவதைக் கேட்டுள்ளோம்....மிக நன்றாக த்தான் உள்ளது. இசையின் இலக்கணம் தெரியவேண்டும் என்பது கூட இல்லையஏ ரசிப்பதற்கு! தங்களுக்கு நல்ல ஞானம் உள்ளது தாத்தா.....

      யம்மாடியோவ்.....1500 பாடல்களுக்கு மேலா....ஆஹா! நிச்சய்மாக குரல் தடையில்லை தாத்தா இசையை ரசிப்பதற்கு!

      எனக்கு அத்தனை ஞானம்எல்லாம் இல்லை தாத்தா...இடுகையைப் பார்த்துத் தவறாக கணித்து விடாதீர்கள்.

      நீங்கள் மெட்டு அமைக்கும் பாடல்களுக்குப் பாடிட்டா போச்சு தாத்தா....ரொம்ப சந்தோஷமாக இருக்கு தாத்தா....உங்களின் இந்த வலைப்பகுதியைப் பார்த்திருக்கின்றோம்...தாத்தா....மிகவும் ரசிக்கும் ஒன்று....ஆம் ஏன் இப்போது இதில் பதிவிடுவதில்லை? பதி\யுங்கள் தாத்தா.....

      மிக்க ந்னரி தாத்தா...

      நீக்கு
  6. சீக்கிரம் தங்களுடைய குரலை கேட்கப்போகிறோம் போல. அதனால நிறைய பயிற்சி எடுத்து இந்த பதிவுல சொன்ன மாதிரி எல்லாம் இல்லாம நல்லா பாடுங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.

    என்னுடைய பதிவில் தங்களின் கருத்துக்கு பதில் அளித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹஹ் நிச்சயமாகப் பாடிட்டாப்போச்சு நண்பரே! நண்பர் துளசி இருக்கப் பயமென்?!!!!


      தங்கள் பதிலைக் கண்டோம்...இன்று பதிவு ஏற்றப்படுகின்றது!

      நீக்கு
  7. அருமையான காணொளிகள்... அனுபவப்பகிர்வுகளை நகைச்சுவையாக பதிந்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா! தங்களின் பாராட்டுகளுக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  8. இணைய வேகம் குறைவாக இருப்பதால் காணொளிகள் பார்க்கவில்லை! உங்களுடைய சங்கீத ஜுரம் நல்லபடியாக விரைவில் குணமாகட்டும்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு! மிகவும் அருமையான காணொளிகள் நண்பரே! தங்களுக்கு இணையம் சரியாக இருக்கும் போது யுட்யூபில் காணலாம் இவற்றை....

      நீக்கு
  9. சந்தர்ப்பம் வாய்க்கும் போது ஒரு நாள் பாட்டு கச்சேரி வைப்போம். :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ்ஹஹ ஐயோ! ஆவி கச்சேரி எல்லாம் வராது! ஏதோ போனாப் போகுதுனு பாடலாம்...அவ்வளவுதான்.....என்ன ஆவி! இப்படி என் சங்கீத மானத்தைக் காற்றில் பறக்க விட முடிவு பண்ணிட்டீங்க! ம்ம்ம்ம் வைச்சுக்குவோம்...அயோ ப்ராக்ட்டீஸ் பண்ணனுமே....ஏஏஏஏஏஏஏஏ...

      நீக்கு
  10. ஆசானே,
    வணக்கம் . அடியேனுக்குத் துளியும் சங்கீத ஞானமில்லை. ஆனாலும் ரசிப்பதற்கு ஞானம் தேவையில்லையே!
    அதனால் தான் பின்னூட்டம் இடத் தயங்கினேன்.
    தமிழில் இசை பற்றிய நுணுக்கங்களை நுணுக்கமாய்ச் சித்தரிக்கும் நாவல்கள் இரண்டு.
    ஒன்று தி.ஜா. வின் மோகமுள். பின் திரைப்படமாக வந்து தோற்றது.( படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படம் தோற்றது தி.ஜா. வின் எழுத்தின் வலிமையை காட்சிப்படுத்த முடியாததே என்பது என் தனிப்பட்ட கருத்து)
    இரண்டாவது,ந.சுப்ரமணியத்தின் இதயநாதம்.
    மோகமுள்ளில் ஒரு பாபு என்றால் இதயநாதத்தில் கிட்டு.
    என் வரையான ஒப்பீட்டில் இதயநாதம் சங்கீதத்தை முன்னிறுத்தி நாவலில் தோற்றுவிடுகிறது. ஆசிரியர் என்னமோ தன் சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காக நாவலைப் பண்ணிப் பண்ணிச் செய்திருக்கிறாப் போலத்தான்.
    அதே நேரம் “மோகமுள்“ தி.ஜா என்கிற இசை சிருஷ்டியின் அற்புதம். செவிப்புலன் சார்ந்த ஒரு இன்பத்தைக் ““கண்களால் கேட்க முடிகின்ற ““அற்புதத்தை அவனால் நிகழ்த்த முடிந்தது.““““ புலன் பிறழ மயக்குதல் “““ படைப்பாளி மட்டுமே செய்து காட்டக் கூடிய மாயாஜாலம் என்பதை நான் உணர்ந்தது மோகமுள்ளில்தான்.
    பதினொன்றாம் வகுப்புவரை பாலகுமாரனில் மதிமயங்கிக் கிடந்த என் வாசிப்பு, மோகமுள் வழியாகத் தி.ஜா என்கிற பிரமாண்டத்தின்
    நடுவில் எனை நிறுத்த அதிர்ந்து மருண்டு போன என் பேதைமை.
    ஒரு தடத்தில் நடந்து கொண்டிருந்த கால்களை எப்புறமும் போகலாம் என எல்லை விரித்துக் காட்டிய ஆளுமை அவன்.
    இசை பற்றிய அரிச்சுவடியை அறியாத என்னைப் போன்ற அநேகம்பேர் அவன் மீட்டிய தந்திகளில், அவன் ஊதிய மகுடிகளில் கட்டுண்டு கிடந்தார்கள்.
    ஒரு தூலவடிவை இதோ பார் என்று எழுத்தில் காட்டமுடியுமா?
    அது உணர்ச்சியாய் இருக்கலாம்...இசையாய் இருக்கலாம்..ஏன் கடவுளாகக் கூட இருக்கலாம்...!
    அப்படிக் காட்டுபவன் படைப்பாளி!
    இதைச் சொல்வதற்குக் காரணம், மோகமுள்ளைப் படித்தபோது நான் அடைந்த அனுபவத்தை நினைவூட்டுகின்றன தங்களின் இந்தப் பதிவுகள் என்பதற்காகத்தான்,
    என்னைப்போன்ற இசை அறிவிலிகளும் ரசிக்கும் படியாக!
    நன்றி ஆசானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசானே! மிக்க நன்றி தங்களது விரிவான பின்னூட்டத்திற்கு! மோகமுள் படித்து மோகித்தது உண்டு தி ஜ -ஜானகிராமனின் எழுத்தில்.....மற்றொன்று வாசித்தது இல்லை. படமும் பார்த்திருக்கின்றோம். ஆம்! படம் தோற்றுத்தான் போனது. எழுத்தில் வாசிக்கும் போது மனதில் விரிந்த காட்சிகளை, திரைப்படத்தின் காட்சியில் காண முடியவில்லைதான். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நறாகச் செய்திருக்கலாம்.....இருந்தாலும் முடிந்தவரை இயக்குனர் செய்திருக்கின்ரார் என்று சொல்லலாம் தான்..

      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  11. புதிதாக நான் கற்றுக்கொள்ள விரும்பிவை இந்தப் பதிவில் இருந்து எழுந்து வந்து என்னை கிலியூட்டின.

    மலர்த்தரு
    தம நான்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ! அப்படி என்ன அது கிலியூட்டியது உங்களை நண்பரே! கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் கிலியாவது எலியாவது...கறுக்கொண்டுதான் பாருங்களேன்....

      நீக்கு
  12. வீணை கற்றுக்கொண்டதை அடுத்த பதிவில் முழுமையாக் சொல்க அருள் கூர்ந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகச் சொல்கின்றேன்...முழுமையாக!? அப்போ சரி...பதிவு நீளம்தான்...ஹஹஹஹ் ......ஆனால் அடுத்த பதிவில் அல்ல....சில இடுகைகள் க்யூவில் உள்ளன.....அவை உள்ளே சென்றதும்......

      நீக்கு