வியாழன், 23 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்........அபஸ்வரமாகியதே! - 2

(பாட்டியிடம் தைரியமாகப் பேசும் ஒரே நபர் நான், அவர்கள் முன்னால் சென்று “எனக்குப் பாட்டுக் கற்க வேண்டும். அதுவும் திரு. சேஷகோபாலனிடம்” என்றேன். பாட்டியின் பதில் என்னவாக இருந்திருக்கும்?.....தொடரும்.....
 அபஸ்வரமாகிப் போன எனது அபூர்வ ராகம்)  தொடர்ச்சி


"என்ன?  அடேங்கப்பா ஆசையைப் பாரு!  சேஷகோபாலனாமே! நல்ல ஆசை! அதுவும் ஞானசூன்யமான உனக்கு! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டானாம்! நல்லா கோட்டை  கட்டற" என்று உங்களுக்குத் தோன்றியதா?!  உங்களுக்குத் தோன்றியதோ இல்லையோ ஆனால் அப்படித்தான், என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொன்னார்கள் அன்று! ஆனால் பாட்டியோ....

“பாட்டு ஒண்ணும் சோறு போடாது!  ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கற வழியப் பாரு! வேலை இல்லைனா வரதட்சணை நிறைய கொடுத்துக் கல்யாணம் பண்ணனும்! அதுக்கெல்லாம் வழி இல்ல. இந்த வீட்டுல இனிமே யாராவது பாட்டு, கூத்துனு வந்தேள்னா...நடக்கறதே வேற.  பாட்டு, கூத்துனு சொல்லறவா வீட்டை விட்டு வெளிலதான் போணும்”

பாட்டி, மாமாக்களில் மூன்றாவது மாமாவைத் தவிர மற்றவர்கள், என் அம்மா இவர்களுக்குச் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டார்கள்! சங்கீதம் எல்லாம் வெறும் வெத்து வேட்டு!  வேலைக்காகாது என்ற எண்ணம்!


இப்போது, “பாட்டு சோறு போடாது” என்று அன்று மொழியப்பட்ட அந்த வார்த்தைகளை நினைக்கும் போது, இப்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் தான் நினைவிற்கு வருகின்றது! அற்றைத் திங்களில் பிறந்த நான் இற்றைத் திங்களில் பிறந்திருக்க மாட்டேனோ என்று தோன்றியது உண்டு! சுதாரகுநாதன், நித்யஸ்ரீ, அனுராதா ஸ்ரீராம் ஏன் இப்போது வந்த மதுமிதாவிற்கும் பாட்டுதான் சோறு போடுகின்றது! என் பாட்டுக் கனவுகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு சிறைக் கைதியானது!  ஆனால், யாருக்குமே தெரியாமல் எனக்குச் சங்கீதம் கற்றுக் கொடுத்தவர்கள், யாருக்குமே கிடைத்தற்கரிய பெரிய பெரிய இசையுலக ஜாம்பவான்கள்! டி.கே.ஜெ. (டி.கே.ஜெயராமன்), டி.கே.பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, மகாரஜபுரம் சந்தானம், மதுரை மணி ஐயர், சேஷகோபாலன், வயலின் மேதைகள், எம் எஸ் கோபாலகிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், வீணை சிட்டிபாபு, பாலசந்தர், போன்றோர், மற்றும் பலர்.  நன்றி எனது மூன்றாவது மாமாவிற்கு. இந்த நன்றி அவர் காதில் விழுமோ தெரியவில்லை!  அவர் இருக்கும் உலகம் சுஜாதா சொல்லியது போல் நித்ய அகண்டநாம சங்கீர்த்தனம் பாடும் உலகம்! அவர் வாங்கி வைத்தக் காசெட்டுகளை அவருக்குத் தெரியாமல், மற்றவர்களுக்கும் தெரியாமல், போட்டுக் கேட்டுக் கற்றதுதான்.  ஏகலைவனுக்குத் துரோணாச்சாரியார் மட்டும்தான் குரு என்றால், இந்த ஏகலைவிக்கு நேரில் தெரியாத சங்கீத துரோணாச்சாரியார்கள் பலர்!

எனக்கு விவரமறிந்து எனது முதல் குரு என்றால் எனது மூன்றாவது மாமாவின் மனைவி லக்ஷ்மி மாமி. மாமா திருவனந்தபுரத்தில் கணித ஆசிரியராக வேலை செய்துவந்தார்.  மாமி பள்ளியில் பாட்டு டீச்சர்.  திருவனந்தபுரத்தில் ம்யூசிக் அகடமியில் 7 வருடங்கள் பாட்டு பயின்றவர். துணைப்பாடமாக வீணை பயின்றவர்.  இவரது காலத்தில்தான் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் அந்த அகடாமியின் முதல்வராக இருந்தவர். கேரளத் திரையுலகில் இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி ராதாகிருஷ்ணன் அவர்கள் மாமியின் கூடப் பயின்றவர். ஏசுதாஸ் அவர்கள் ஜூனியர் இன்னும் பல அன்றைய விஐபிக்கள்! மாமியின் கனவும் கூண்டுக் கிளியானது எங்கள் வீட்டிற்கு மருமகள் ஆனதால்.

பாட்டி கோயிலுக்குச் செல்லும் சமயம்தான் மாமியின் சாதகம் வீட்டின் பூஜை அறையின் முன். மாமி கோயிலில் ஸ்வாமி சன்னிதியில் பாடி யாராவது வீட்டிற்கு வருபவர் மாமியைப் புகழ்ந்தால், பாட்டியிடமிருந்து வேறு வகையான ஸ்வரங்கள் வருமாதலால் அதற்கும் அவ்வப்போது பூட்டு போடப்படும்.  நான் பள்ளி மாணவியாக இருந்த போது மாமியிடம் கற்றுக் கொள்ளவில்லை. மாமி மாதத்தில் ஒரு முறைதான் அதுவும் சனி ஞாயிறில்தான் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வந்ததால். இப்படி வார விடுமுறை, கோடை விருமுறைகளில் வரும் போது, மாமி பாடினால் ராகம் கண்டுபிடித்து ஆலாபனை செய்வதுண்டு.  அப்போது மாமி சொல்லுவார்,

“கீதா உனக்கு அபார சங்கீத ஞானம்டி. நீ வேற ஆத்துல பொறந்திருக்கணும்டி....பகவான் ஏனோ உன்னை இந்த ஆத்துல பொறக்க வைச்சுட்டார். என்னையும் இந்த ஆத்துல வாக்கப்பட வைச்சுட்டார்” என்று ஆதங்கப் படுவார்.  அவர் மேடை ஏறியிருந்தால் இன்று சங்கீத உலகில் அருணாசாயிராம் போன்று (லேட் என்ட்ரி) கொடி கட்டிப் பறந்திருப்பார். மாமிக்கும் கனமான குரல்!  ஒலிபெருக்கி வேண்டவே வேண்டாம்.

எனது பாடாந்திரம் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் போதுதான் ஆரம்பித்தது.  அதுவும் பாட்டி வீட்டில் இல்லாத நேரம் பார்த்துதான்.  மாமி என்னை அடிப்படை ஸ்வர வரிசகளை மனம் செய்து, பயிற்சி செய்யச் சொல்லுவார்.  ஆனால், ஏனோ என்னைத் தாட்டு வரிசை மட்டும் போட்டு வாங்கியது! மனனம் செய்யவும், பயிற்சி செய்யவும் பிடிவாதம் பிடித்தது! நானும் நைசாக அதை விட்டுவிட்டு மாமியிடம் சின்ன சின்ன பாட்டுகள் கற்றுத் தரும்படி சொல்லுவேன். சின்ன வயதில் கொலுவில் பாடிச் சுண்டல் வாங்கிப் பழக்கம் ஆனதாலோ என்னவோ!  மாமியும் என் குரங்காட்டி வித்தைக்கு ஆடுவார்!  சரி என்று பாட்டு சொல்லித் தருவார். ஆனால், அதிலும் எனக்குக் கொஞ்சம் கஷ்டம்.



அவர் பாடுவதைக் கேட்டு மனதில் ரெக்கார்ட் செய்து நிறுத்தி, அதைத் திரும்பவும் நான் மனதில் அவர் பாடுவதைப் போல ஓடவிட்டு, நான் அசை போட்டுவிட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரைத் திரும்பவும் பாடச் சொல்லிக் கற்பேனே தவிர, அவர் பாடப் பாட நான் அதைத் திரும்பப் பாடிக் கற்றது இல்லை!  ஏனோ எனக்கு அதுவும் வரவில்லை! காசெட் கேட்டு, கேட்டுக் கற்றது பழக்கமானதினாலோ என்னவோ, இந்த மாதிரியானக் கற்றல் வரவில்லை!  காசெட்டைப் போட்டுப் போட்டுத் தேய்ந்து போன ரெக்கார்ட் ஆக்கிக் கற்கலாம் ஆனால் மாமியின் தொண்டையை அப்படி வருத்த முடியுமா?! ஆனால் மாமியின் தொண்டையையும் அப்படித் தேய்ந்த ரெக்கார்டாக ஆக்கியது உண்டு!  எனது தொண்டையும் ஆனது உண்டு!  ஒரு சங்கதி சரியாக வரும் வரை! ஞான சூன்யம் என்று என்னையயே நான் திட்டிக் கொண்டு என் தலையில் குட்டிக் கொண்டதும் உண்டு!  நான் சொல்லிக் கொண்டது எனக்குச் சங்கதி வருவதற்குத் தாமதம் ஆகும் போது! தொண்டையை ஒழுங்காகக் காப்பாற்றி, பல தியாகங்கள் செய்தால் தானே! ஆனால், என்னை சங்கீதம் அறிந்த உறவினர்கள் பலர் “ஞான சூன்யம்” என்று சொல்லிப் பாட்டுக் கற்றுத் தர தயங்கினர்! என்னை ஏன் ஞான சூன்யம்? நாளை தொடரும்! 

படங்கள்:  நன்றி கூகுள்!

17 கருத்துகள்:

  1. ஞான சூன்யம் என்று சொன்னது ஏன் ஏன் ஏன் ?அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! பகவான் ஜி! சுடச் சுட பின்னூட்டம்! ஏன் என்ற கேள்வி! அடுத்த பதிவில் வரும்....ம்ம்ம்

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜி! ஓட்டிற்கும் சேர்த்து!

      நீக்கு
  2. தங்களுக்கு இருக்கும் இசை ஞானத்தை
    சூனியம் வைத்து கெடுத்தவர்கள் யார்?
    அந்த ஞான சூனியக்காரர்(ரி)களை அறிந்து கொள்ள நாளை வரை காத்திருக்க வேண்டுமே????
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னரி ஐயா தங்கள் கருத்திற்கு! ....நாளை முடித்திடலாம் என்றிருக்கின்றோம் பார்க்கலாம்.....

      நீக்கு
  3. தங்களுடைய மலரும் நினைவுகளை மிகவும் சுவராசியமாக சொல்கிறீர்கள் அதுவும் தகுந்த உதாரணங்களோடு (ஏகலவைவன்...) .

    ஏன் என்ற கேள்விக்கான பதிலை படிப்பதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரரே! ஏன் என்ற கேள்வி.....நாளைய பதிவில்.....

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஞான சூன்யம் என்பது பலவிதங்களில் இருக்கலாமே நண்பரே! இது ஒருவகையாக இருக்கலாம்...நாளையப் பதிவைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் சரியா இல்லையா என்று! ஹஹ்ஹ் மிக்க நன்றி!

      நீக்கு
  5. ஞான சூனியமா!..
    ஞானத்திற்கே சூனியமா!.. அநியாயம்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வார்த்தை விளையாட்டு! எனது ஞான சூன்யம் எதைக் குறித்தது என்று நாளைய பதிவில். அப்புறம் நீங்கள் சொல்லுங்கள் அது சரியா இல்லையா என்று! மிக்க நன்றி ஐயா !

      நீக்கு
  6. எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று தோன்றுகிறது நமக்குத் தான் அதற்கு பிராப்தம் இல்லையே என்று கூட சொல்லலாம். கீதாம்மா நான் தங்களை சொல்லவில்லை. தங்கள்பதிவு என் கவலையை தூண்டிவிட்டிருகிறது. அது தான் சொன்னேன். என் மகளுக்கு பாடகியாக வர விருப்பம் இருந்தது. நல்ல குரல் வளமும் இருந்தது. அவருக்கு கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் ஒரு இந்தியப் பெண்மணி அவர் சொன்னார் அவருக்கு 6, 7 வயது தான் இருக்கும் போது இவருக்கு இந்தக் குரல் வரப்பிரசாதம் அவரை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது எந்தப் பாடல் என்றாலும் பாட விடுங்கள் என்று சொல்லியே அனுப்பினார். தாரமும் குருவும் தலை விதியல்லவா அது அவருக்கு சரியாக அமையவில்லை உயர் தர வகுப்புக்கு வந்தவுடன் வேலை பளுவும் வர ஆசிரியர்கள் ஒவொருவரும் ஆரம்பத்தில் இருந்து துவங்குவார்கள். நாமும் குழந்தைகளோடு வைத்து போரடிக்க பாட்டை நிறுத்திவிட்டோம். அவரும் இனி போகமாட்டேன் என்று நின்று விட்டார். அவருக்கு அந்த தாகம் தீரவில்லை இருந்தும். உயர் கல்வி முடிய தொடர வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் முடியாமல் போயிற்று ஏனெனில் தொடர்ந்து அவர் டாக்டர் க்கு படித்தமையால் அந்த ஆசை நிராசையாகவே போய்விட்டது இருந்தும் ஏதாவது அதிசயம் நடந்து அவர் தொடரமா ட்டரா என்று ஆசை இன்னும் இருக்கிறது எனக்கு.
    இவ்வளவு ஆர்வம் உள்ள கீதா நிச்சயமாக ஞானசூனியமாக இருக்க சந்தர்ப்பமே இல்லையே,ம்..ம்..ம்..ம் நன்றாகவே போய்க்கொண்டிருகிறது நல்ல என்டிங்க ஐ யே ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்மா. வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தாங்க சகோதரி! பாட்டு கற்பது அந்த வயதில் நின்று விட்டால் பின்னர் பல சூழல்கள் நம்மை முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாமல் பின் தள்ளி விடுகின்றன. நமக்கு குரு நல்லபடியாக அமைவது வரம் தான் நீங்கள் சொல்லியிருபது சரியே! குரு அமைந்தாலும் அது தொடர்வதும் பல சமயங்களில் தொடராமல் நின்று விடுகின்றது! அதே போல் வேறு வேறு இடங்கள் நாம் மாறிக் கொண்டே இருந்தால் குரு அமைவது கடினமாகி அதுவும் மாறிக் கொண்டே வருகின்றது. மட்டுமல்ல நீங்கள் சொல்லியிருப்பது போல் மீண்டும் ஆதியிலிருந்து ஆரம்பிப்பார்கள்! அது ஒரு கட்டத்திற்கு மேல் போரடித்துவிடும். உண்மையே!

      தங்கள் மகள் டாக்டருக்குப் படித்து அவரது சங்கீத ஆசை நிராசையாகப் போனது என்று நினைக்க வேண்டாம். சகோதரி. டாக்டர் படிப்பு அத்தனை எளிதல்ல. என் மகனும் மிகவும் சங்கீத ஞானம் உள்ளவன். வீணை கற்றுக் கொண்டார். நன்றாக வாசிப்பார். வர்ணம் கற்றுக் கொள்ளும் சமயம் கால்நடை மருத்துவம் சேர்ந்த காரணத்தினால் தொடர முடியாமல் போய்விட்டது படிப்பின் சுமை காரணத்தினால். ஆனால் இப்போதும் தொடர்ந்து சங்கீதம் கேட்டு வருகின்றார். பல திரைப் பாடல்களை ச்வரப்படுத்தி வீணையில் வாசித்துவிடுவார். இப்போது கேட்பது மட்டுமே. கேட்டுக் கொண்டேதான் படிக்கவும் செய்வார். தற்போது கல்ஃப்,அன்டேரியோ, கானடாவில் க்ளினிக்கல் ட்ரெயினிங்கில் இருப்பதால் வீணை எடுத்துச் செல்ல முடியவில்லை.

      தங்கள் மகளுக்கும் கற்கும் காலம் நிச்சயமாக வரும் சகோதரி. நிறைய கேட்கச் சொல்லுங்கள்! அந்த ஞானம் அப்படியே நிலைத்திருக்கும்! தொடரும் சமயம் வரும்பொது தொடரலாமே! தங்கள் மகள் கற்கும் சமயம் நிச்சயமாக வரும்! வாழ்த்துக்கள் அவருக்கு!

      நீக்கு
  7. நினைவுகள்......

    ஏன் என்ற கேள்வியின் பதில் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் நானும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வந்து விடும் வெங்கட்ஜி! நீண்டதாக இருந்தாலும் இன்றோடு முடித்துவிடலாம் என்று நினைக்கின்றோம்....பார்க்கலாம்....மிக்க நன்றி தொடர்வதற்கு!

      நீக்கு
  8. இனிய இசை பற்றிய
    சிறந்த கண்ணோட்டம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. ஒரு பிரபல பாடகியை இந்த உலகுக்கு கிடைக்காமல் செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது! சுவாரஸ்யமாக செல்கிறது உங்கள் நினைவுகள்! தொடருங்கள்! ந்ன்றி!

    பதிலளிநீக்கு