செவ்வாய், 1 ஜூலை, 2014

அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி.......நான் பிறந்த மண்ணில் தோண்டப் போகிறார்களாம்!


     தேனி மாவட்டம், போடி என்று அழைக்கப்படும் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்கபுரம் எனும் கிராமம்தான் நான் பிறந்த ஊர்.  ஊருக்கு மேற்கே உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை.  ஊருக்குக் கிழக்கே பாறை உச்சியில் தொப்பி வைத்தது போல் இருக்கும் மல்லிங்கேஸ்வரர் கோவிலைக் கொண்ட மல்லிங்கேஸ்வரர் கரடு (உயரமில்லாத கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கும் குன்றுகள்). ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கே கரியப்பன்பட்டி, கிழக்கே கீழப்பட்டி, தெற்கே தெற்குப்பட்டி, இதன் நடுவே சாலையின் இரு புறத்திலும் இராசிங்கபுரமாக, ஏறத்தாழ 100 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம்.  கிராமத்தில் 70% மக்களும் கன்னட மொழி பேசுபவர்கள். அவர்களில் பெரும்பான்மையோர் குரும்பர்கள், அதற்கு அடுத்தார்போல் ஒக்கலிகர்கள், பின் தேவாங்கர்கள்.  மீதமுள்ளவர்களில் தெலுங்கு பேசும் சக்கிலியர்களும், குயவர்களும், ஆசாரிகளும், கொத்தனார்களும் பின் தமிழ் பேசும் அகமுடையார்களும், சைவப்பிள்ளைமார்களும், வணிகச் செட்டியார்களும், வள்ளுவர்களும் (சோதிடர்கள்), பறையர்களும், இப்படி ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு பகுதிகளிலாக எல்லோரும் மிக ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்த ஊர்.  ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன், ஜமீன் போடைய நாயக்கரின் ஆதிக்கத்திலிருந்த இப்பகுதியிலுள்ள எல்லொரும், கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழகத்தில், ஏழுமலை, வருச நாடு போன்ற பகுதியிலிருந்து வந்து தங்கியவர்கள்.  எனவே எல்லோரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்து வந்த சிற்றூர்!  கால்நடை வளர்த்தலும், விவசாயமும்தான் கிராம மக்களுக்கு வருமானம் தேடித்தந்தவை.

     கேரள மாநிலத்தைச் சேர்ந்த என் பெற்றோர்கள், 1957 ஆம் ஆண்டு அங்கு ஒரு மருத்துவமனை தொடங்கி அவர்களும் அக்கிராமத்தினர் ஆனார்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கிராமத்தில் பிறந்த நான், வளர்ந்து பள்ளி செல்லத் தொடங்கிய போது, கட்டாயப் பள்ளிக் கூடம் என்று அழைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, மல்லிங்கேஸ்வரர் இந்து உயர் துவக்கப்பள்ளி எனும் இரண்டு பள்ளிகள் உள்ள சற்று விரிவடைந்த கிராமமாக மாறியது. இராசிங்கபுரம், சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரது அறிவையும் மிளிரச் செய்ய அருமையான ஒரு கிளை நூலகமும் தொடங்கப்பட்டது

.

அந்த நாட்களில் ஊரைச் சுற்றி இருந்த விளை நிலங்களில் எல்லாம் நீர் நிரம்பிய கிணறுகள் இருந்தன.  கிணற்றிலிருந்து நீர் இறைத்து விவசாயம் செய்ய, காளைகள் உதவியுடன் வடத்தில் (பெரிய கயிறு) இணைந்த "நீர்ச்சால்" (ஏறத்தாழ நூறு லிட்டர் கொள்ளளவு உள்ள, தகரத் தகடுகளை இணைத்துச் செய்யப்பட்ட பெரிய பூசணிக்காய் போன்றது.  நீர் இறைக்கும் கலம்.) உபயோகிக்கப்பட்டது.  பானையில் மேற்புறம் மட்டும்தான் திறந்திருக்கும்.  ஆனால், சாலில் மேல்பாகமும், அடிபாகமும் திறந்தே இருக்கும்.  சற்று கூடுதல் சுற்றளவுள்ள வட்ட வடிவான மேல்பகம் வழியாகத்தான் கிணற்றிலிருந்து தண்ணீர் சாலுக்குள் நிரப்பப்படும். சுற்றளவு குறைவான வட்ட வடிவுள்ள கீழ்பாகத்தை தோலால் செய்த, பேருந்து சக்கரங்களின் உள்ளே உள்ள ட்யூப் போன்ற ஒன்றால் இணைத்திருப்பார்கள். அதன் மறு பகுதியை சுருக்கவும், விரிக்கவும் உதவும் ஒரு கயிற்றுடன் இணைத்து, அதை நீர் இறைப்பவர் கையில் பிடித்திருப்பார்.  

பலமான வடம்தான் நீர் இறைக்கவும், சால் மற்றும் காளைகளின் கழுத்தில் வைக்கப்பட்டிருக்கும் "மேக்கால்" எனப்படும் கம்பில் இணைக்கப்பட்டிருக்கும்.  கிணற்றின் விளிம்பில் நீர் நிறைந்த சாலைத் தாங்கி நிறுத்தவும், மேல்பாகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வடமும், கீழ்பாகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறும் சுலபமாக மேலும், கீழும் போய்வர உதவும் ஒரு சக்கரத்துடன் கூடிய, கிணற்றிற்கு மேல் சற்று உள் நோக்கி சரிந்த நிலையில் நிற்கும் மரக்கால்கள் நாட்டப்பட்டிருக்கும்.  நீர் நிறைந்த சாலை மேலே இழுக்க இரு காளைகளும் உபயோகப்படுத்துவர். காளைகளை மரக்கால்களின் அருகே பின்னோக்கி நிற்கையில் "சாலை" கிணற்றிலுள்ள தண்னீருக்குள் மூழ்க வைத்து நீர் இறைப்பவர் தண்ணீரால் நிரப்புவார். "சாலை" தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து அதில் கிணற்று நீரை நிரப்ப அவர் தன் கையிலுள்ள வடம் மற்றும் கயிற்றை உபயோகிப்பார்.  நீர் நிறைந்த சாலை மேலே கொண்டு வர வடத்தில் தானும் அமர்ந்து காளைகளை முன்னோக்கி ஓட்டுவார்.  அப்படி காலைகள் நீர் நிறைந்த "சாலை" இழுத்து மேலே கொண்டுவரும்.  மரக்கால்களில் தட்டி நிற்கும் நீர் நிறைந்த "சாலை" தன் கையிலுள்ள தோல் பையுடன் இணைக்கப்பட்ட  கயிற்றைத் தளர்த்தி, தோல்பையின் வாய்ப் பகுதியை விரிவடையச் செய்து, நீரை கிணற்றின் விளிம்பிலிருந்து,  வாய்கால்களில் விழச் செய்வார்.  வாய்க்கால் வழியே ஓடும் நீர் பயிர்கள் வளர்ந்து நிற்கும் காலியான பகுதியை அடையும். "சாலை" கிணற்றில் அடிபாகத்திற்குக் கொண்டு செல்ல காளைகள் மீண்டும் பின்னோக்கி நடக்கும்.  கூடவே நீர் நிரப்புபவரும் நடப்பார்.  சாலில்  நீர் நிறைத்தபின், அவர் வடத்தில் அமர்ந்து காளைகளை மீண்டும் முன்னோக்கி ஓட்டுவார்.  இப்படி நீர் இரைத்து, கேழ்வரகு, சோளம் போன்றவைகள் தான் அன்று அவ்விளை நிலங்களில் அதிகமாகப் பயிரடப்பட்டன. மட்டுமல்ல ஊரைச் சுற்றி எப்போதும் வற்றாத ஐந்து குளங்களும் இருந்தன. மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சிப்பவர்கள், அப்போதெல்லாம் இந்த நீர் நிறைந்த கிணற்றில்தான் குதிப்பார்கள்.  எனவே சிறுவர்களான நாங்கள் அன்றெல்லாம் கிணற்றுப்பக்கம் செல்லவே பயப்படுவோம்.

என் அப்பாவின் நண்பர்களான பாப்புத் தேவர், குருசாமி போன்றவர்கள், அவர்களது சிறுவயதில், வீடுகளும், சாலையும் தோட்டங்களுமாக மாறியிருந்த இடங்களிலெல்லாம், மூங்கில் மரங்கள் வளர்ந்து நின்றிருந்தன என்று சொல்லியபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.  காரணம், என் சிறுவயதில் அப்பகுதியில் எங்குமே நான் ஒரு மூங்கில் மரத்தைக் கூடப் பார்த்தது கிடையாது.  மூங்கில் காடுகளை நாங்கள் காண முடியாமற் போனது போல், காளைகளின் உதவியால் நீர் இறைக்கப்படுவதை இப்போதைய தலைமுறையினர் காண முடியாமற் போய்விட்டது.


    மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டதாலோ என்னவோ, நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை, ஆடிமாதமானால், அப்பகுதியில் அதி வேகமான சக்தி வாய்ந்த மணல் காற்று வீசும்.  ஆகாயம் முழுக்க, சிவந்த மண் மற்றும் தூசிப் படலங்களால் நிறைந்திருக்கும்.  பல நேரங்களில் அதைக் காணும் எனக்கு, உலகமே அழியப் போகிறதோ என்ற பயம் ஏற்படும்.  எங்கள் கிராமத்துக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட இடத்தில், ஒரு காலத்தில் வளர்ந்து நின்ற மரங்களும், மூங்கில் காடுகளும் அழிக்கப்பட்டுத் தரிசு நிலமாக்கப்பட்டப் பகுதியில், பலவருடங்கள் வீசிய மணல் காற்று, நாளடைவில் ஒரு மணல் குன்றையே (திப்பம்) உண்டாக்கிவிட்டது.


 அரசும், வனத்துறையும், இந்த மணல் காற்றைத் தடுக்க, மரங்கள் இன்றியமையாதவை என உணர்ந்து, கிராமத்திற்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே ஏராளமான காற்றுத் தடுப்புச் சாலைகளை நிறுவியது. அதாவது, வரிசையாய், இடைவெளி விட்டு, வறண்ட பிரதேசங்களிலும் வளரும் நல்ல வலுவுள்ள சீமைக் கருவேல மரங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நடப்பட்டன. அப்படி நாளடைவில், காற்றின் வீரியம் குறைந்து, மணல் காற்று வீசுவதும் நின்றது.  ஆனால், இவை, மெல்ல மெல்ல, நல்ல விளை நிலங்களின் எமனாக மாறத் தொடங்கின என்றால் அது மிகையாகாது. ஆம், நிலத்தடி நீரை உறிஞ்சத் தொடங்கின!


இதற்கிடையில், பருத்தி எனும் பணப்பயிர், கிராமத்து மக்களை உசுப்பிவிட்டிருந்தது.  மேலை நாடுகளில் இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து உபயோகத்தால் விளைந்த ஆபத்தை உணர்ந்து அவர்கள் அதன் உபயோகத்தை ஒழிக்க முடிவு செய்த நேரம். அவற்றையெல்லாம் உபயோகிக்க ஏற்ற கீழை நாடுகளில் நம் நாடும் உட்பட்டதால், என் கிராமமும் அதற்கு பலியானது.  மழை நீரை மட்டும் நம்பி வருடம் ஒரு முறை பயிரிடப்பட்டு வந்த நிலக்கடலை மற்றும் இரும்புச் (இருங்கு) சோளம் போன்றவைகளுக்குப் பதிலாக அவ்விடங்களில் எல்லாம், கிணறுகள் வெட்டப்பட்டு பருத்தி விவசாயம் வளர்ந்தது.  கிணறுகளின் எண்ணிக்கை கூடியது.  எல்லாக் கிணறுகளிலும் மின்சாரத்தால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் இடம்பிடித்தன.  நாளடைவில், நிலத்து நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்பட்டதாலும், சீமைக் கருவேலமரங்களின் நீர் உறிஞ்சும் தன்மையாலும், நிலத்தடி நீர் குறைந்து, எல்லாக் கிணறுகளும் வற்றி வறண்டன.  குளங்கள் காணாமற் போயின.  தண்ணீருக்காக பூமிக்கடியில் இரும்புக் குழாய்களை இறக்கி பாறைகளுக்கு இடையே, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தேங்கி நின்ற நிலத்தடி நீரை இரவு பகல் பாராது உறிஞ்சத் தொடங்கினர் மக்கள்.  பருத்திச் செடிகள் செழித்து வளர்ந்து எல்லோரது பணப்பற்றாக் குறையைத் தீர்த்தது.  விளைவோ, அந்த நிலத்தடி நீரும் வற்றி, எல்லா நிலங்களும் மிக விரைவில் தரிசு நிலங்களாக மாறியே விட்டன. மறுபடியும் பணப்பற்றாக் குறை நீரின் வடிவில் வந்தது! (இதைத்தான் நம் முன்னோர்கள் "நீர் தங்கம் போன்றது.  அளவாகச், சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்.  இல்லையேன்றால் தண்ணீரும் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும்" என்றனர்! இதோ இப்போது அதுதான் நடக்கின்றது!) வறுமை காரணமாக விவசாய வேலை செய்தவர்கள் வேலை இல்லாததால், திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களுக்கு வேறு வேலை தேடி புலம் பெயர்ந்தனர்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் நான் என் கிராமத்திற்கு சென்ற பொது, அது ஒரு சிறிய டவுனாகவே மாறியிருந்தது!  காலியிடங்களிலும், தோட்டங்களாக இருந்த இடங்களில் எல்லாம் வீடுகளும், கடைகளும் முளைத்திருந்தன!  எத்திசையில் பார்த்தாலும், மெதுவாகப், பனை மரமளவு உயரத்துடன் தன் கைகளை அசைத்துச் சுற்றிக் கொண்டிருக்கும், மின்சார உற்பத்திக்காக நிறுவப்பட்ட இராட்சசக் காற்றாடிகள்!  தண்ணீர் இல்லாத காரணத்தால், விவசாயம் நின்று போன அவ்விடங்களில் எல்லாம், காற்றாலைகளை நிறுவ உதவி/ நிறுவி, அதில் கிடைக்கும் வருமானத்தைப் பெற்று வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறதாம்!  நிலத்தடி நீரை உறிஞ்சியதால்தான் மணல் காற்றைத் தடுக்க வேண்டி வளர்த்தப்பட்டு வளர்ந்து நின்ற "காற்றுத் தடுப்புச் சாலைகள் - சீமைக் கருவேலமரங்கள், எல்லாம் காணாமற் போயிருந்தன!  இப்போது தமிழ் நாட்டில் கருவேலமரங்கள் ஒழிப்பு-பசுமை விடியல் - என்று மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும், மற்ற இடங்களிலும் இம்மரங்களை ஒழிக்க விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.  பட்ட பிறகுதான் நமக்கு மூளையே வேலை செய்யும் போல!  நமது விவசாயப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், விவசாய விஞ்ஞானிகளும், அரசின் விவசாயத் திட்டங்களும் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தன என்பது சற்றே ஆச்சரியமாகவும், வேதனையாகவும்தான் இருக்கின்றது!

இராசிங்கபுரத்திற்கு மேற்கே நாயக்கன்மார்பட்டி, பொட்டிப்புரம், புதூர், புதுக்கோட்டை எனும் நான்கு சிற்றூர்கள் உள்ளன.  அவற்றில் புதூர் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத் துரையின் சேவகர்களாம்.  சுதந்திரப் போராட்டத்தின் போது ஊமைத்துரை ரகசியமாக தங்கியிருந்த மணப்பாறைக் குகை புதுக் கோட்டைக்கு மேற்கே இருப்பதாக என் சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கின்றேன்! ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமைதியாக, இயற்கையுடன் ஒன்றி, அதன் பாகமாக இருந்த இராசிங்கபுரம் உள்ளிட்ட அப்பகுதி, கடந்த இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இயற்கையை மதிக்கத் தெரியாத, பணத்தாசைப் பிடித்தவர்கள், தங்களுக்குப் பின் இப்புவியில் வாழவிருக்கும் அடுத்த தலைமுறையினரைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல் செய்த தவறுகளால் (மரம் வெட்டுதல், தண்ணீரை அளவுக்கு மீறி உபயோகித்தல் இன்ன பிற இயற்கைக்கு எதிரான செயல்கள்) நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையில் இறக்கும் தருவாயிலிருக்கும் அந்த, நான் பிறந்த மண்ணில் இப்பொது ஒரு குழி தோண்டப் போகிறார்களாம்.....அகில உலக ஆராய்ச்சிக்குத் தேவைக்கான ஆழமான குழி.  இராசிங்கபுரத்திற்கு மேற்கே, பொட்டிப்புரம் அருகேயுள்ள மலையடிவாரத்தில்!


உலகில், நான்காவது இந்தியா பேஸ்டு நியூட்ரினோ ஆப்சர்வேட்டரியை -INIDA BASED NEUTRINO OBSERVATORY (INO) - அங்கு நிறுவப் போகின்றார்களாம்.  2011-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசு அதற்கான அனுமதி வழங்கிவிட்டது. ஓரிரு மாதங்களில் தொடங்க இருக்கின்றதாம்.
The project, expected to be completed in 2015 at an estimated cost of $250 million, has been cleared by the Ministry of Environment (India) for construction in the Bodi West Hills Reserved Forest in the Theni district of Tamil Nadu. When completed, the INO will house the world's most massive magnet, four times larger than the 12,500-tonne magnet in the Compact Muon Solenoid detector at CERN in Geneva, Switzerland


  அதற்கான பணி 800 நாட்களில் 1000 டன் ஜலாட்டின் (வெடிமருந்து) உபயோகித்து எட்டுலட்சம் டன் பாறைகளை உடைத்து 2 1/2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 30 அடி நீளமும், 15 அடி அகலத்திலும் குழி தோண்டி அங்கு நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையத்தை நிறுவப்போகிறார்களாம்.  பகலில் சூரியனிடமிருந்து பூமியை வந்தடையும் நியூட்ரினோக்கள், இரவில் பூமியின் ஒரு பகுதியிலிருந்து, பூமியைத் துளைத்து மறு பகுதிக்குச் செல்லும் திறனுடையவைகளாம்.  அத்தகைய நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யத்தான் இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படுகிறதாம்.  முதலில் இந்த நிலையம் ஊட்டியில், முதுமலைக் காட்டிற்கு அருகில் மசினகுடிக்கு அருகில் தொடங்கப்படுவதாக இருந்தது.  சுற்றுப்புற ஆர்வலர்களும், மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அது முடக்கப்பட்டது. ஆபத்தான அணு ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது இதோ அதைவிட ஆபத்தான நியூட்ரினோ ஆராய்ச்சி!
உலகிலேயே இவ்வாராய்ச்சியில் நான்காமிடம் நமக்கு என்று மகிழ மனம் ஏனோ மறுக்கின்றது!  செர்னோபில் (ரஷ்யா) விபத்து முதல் 2014 பிப்ரவரியில் அமெரிக்கா, நியூமெக்சிக்கோவிலுள்ள கால்ஸ்பாட் உள்ளிட்ட அணு ஆராய்ச்சி நிலையங்களில் ஏற்பட்ட அணுக்கதிரியக்கக் கசிவால் நேர்ந்த விபத்துக்களை எண்ணிப் பார்க்கும் பொது மனம் பதறுகிறது.  கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் நிறுவப்படுவதை எதிர்த்து நடந்த, நாம் கண்ட போராட்டங்கள், தோல்வி கண்டதும் அவ்வணு மின் நிலையத்திலிருந்து உருவாக்கப்பட்ட மின்சாரம் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கப் போவதையும் காணப்போகும் நாம், கூடங்குளம் அணு உலையில் கசிவுகளேதும் உண்டாகாதிருக்க இறைவனை வேண்டுவது போல், இராசிங்கபுரத்திற்கு மேற்கே பொட்டிப்புரம் அருகே நிறுவப்படும் இந்த நியூட்ரினோ ஆப்சர்வேட்டரியில், இத்தாலியில், அப்ரூசியோவிலுள்ள், கிரான்சாசோ நியூட்ரினோ லபாரட்டரி நிறுவப்பட்ட போது ஏற்பட்டது போல பிரச்சனைகள் ஏதும் நிகழாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.  அவனன்றி ஓரணுவும் அசையாதுதானே!  நடக்கவிருப்பது நடந்தே தீரும் என்பதுதானே வலாற்று உண்மை!  வரவிருப்பது வழியில் தங்காதுதானே!  காத்திருப்போம்! பிரார்த்தனைகளுடன்!

பின் குறிப்பு: நான் சிறு வயதில் சிவந்த மண் மற்றும் தூசியால் நிறைந்த ஆகாயத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியது போல் வருடங்களுக்குப் பின் அது பொன்ற இயற்கை அன்னையின் சீற்றம் கண்டு அஞ்சி நடுங்கி நிற்கவிருக்கும், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, முகம் தெரியாத அந்தச் சிறுவர்களுக்கு ஒரு கடிதம்....

குழந்தைகளே...!

மன்னிக்க!  உங்களைப் போல் கடந்த நூற்றாண்டில் என் முன்னோர்கள் செய்த தவறுக்காக சினம் கொண்டு சீறிய இயற்கை அன்னையைக் கண்டு கலங்கி நின்ற நான், இப்பொது என் தலைமுறையினர் செய்யும் அதை விடப் பெரிய தவறுகளுக்காக சினம் கொண்டு கொந்தளிக்கப் போகும் இயற்கை அன்னையைக் கண்டு ஒரு நாள் நீயும் கதிகலங்கி நிற்பாய் என்று தெரிந்த பின்னும், அதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாததற்கும், அதைத் தடுத்து நிறுத்த முடியாததற்கும் வெட்கித் தலை குனிகின்றேன்!  இப்படி எழுதி வருந்துவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத, உன் முன்னோர்களில் ஒருவனான இந்தக் கோழையை, கையாலாகாதவனை மன்னித்து விடுங்கள்!....குழந்தைகளே! மன்னித்து விடுங்கள்.....!! 

22 கருத்துகள்:

 1. தங்களின் கிராமத்தின் எழிலார்ந்த தோற்றத்தைத் தங்களின் எழுத்துக்களில் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே.
  நியூட்ரினோ ஆய்வகம் பற்றி பல்வேறு தகவல்கள் வருகின்றன.
  அரசு மக்களின் அச்சத்தினைப் போக்குவதற்கு முன்வரவேண்டும்
  தம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியூட்ரினோ ஆய்வகம் பற்றி பல தகவல்கள் வரத்தான் செய்கின்றன! எழுத்தாளர் ஞானியும் இதைப் பற்றி எழுதியிருந்தார்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

   நீக்கு
 2. அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி......என்று ஆரம்பித்த இந்த பதிவில் அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி என்ற விஷயம் பதிவின் கிழே பல உங்க ஊர் புராணத்திரற்கு கிழே மறைந்துள்ளது வழக்கம் போல சொல்லவந்த செய்தியை டக்கென்று சொல்லாமல் வேறு பல விஷயங்களை சொல்லி சென்று இருக்கிறீர்கள் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்,,, நான் சொவது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எனது கருத்தை நீங்கள் நீக்கி கொள்ளலாம். நான் தவறாக எடுத்து கொள்ளமாட்டேன்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "மஞ்சப்பை" யாக இருக்கின்றோம்!? பல சமயங்களில்! எப்படி நாம் உயிருடன் உள்ள வரை நம் பெற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களை விட்டு பல மைல்கள் தள்ளி இருந்தாலும் அவர்களை நினைத்து வாழ்கின்றோமோ, அவர்கள் இறந்த பிறகும் அவர்களை நினைத்து அவர்களுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து, நினைவுகளுடன் வாழ்கின்றோமோ அது போலத்தான் பிறந்த தாய் மண்ணும்! நான் எனது பிறந்த மண்ணையும், தமிழ்நாட்டையும் பிரிந்து புலம் பெயர்ந்துதான் வாழ்கின்றேன்! நான் இங்கு கேரளாவில் வாழ்ந்தாலும், என் பெற்றோர்கள் வழியில் கேரளத்துக்காரனாக, மொழி மலையாளமாக இருந்தாலும், என் உள்ளமும், உணர்வுகளும், நான் பிறந்து வளர்ந்து என்னைத் தாலாட்டி, ஒரு மனிதானாக ஆக்கிய, முதுகலைக் கல்வி வரை புகட்டிய, நான் பிறந்த தாய் மண்ணையும், தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றது! அவை என் உள்ளத்திலும் உணர்விலும் இரண்டறக் கலந்து உள்ளன! அந்த இனிய நினைவுகளுடன் தான் இப்போதும் வாழ்கின்றேன்! அதுவும் மிகவும் பசுமையாக!

   என் பிறந்த மண்ணை சமீபத்தில் கண்ட போது..."எப்படி இருந்த நம் கிராமம் இப்படி ஆகிப் போனதே.".....என்று வேதனையுடன் நினைத்த போது அந்த பழைய உணர்வுகள், வாழ்வியல் எல்லாம் கரை புரண்டு வெள்ளம் வருவது போல வந்து விட்டது! என்ன செய்ய.....

   தாங்கள் சொல்லியதில் தவறு ஒன்றும் இல்லையே தமிழா! எங்களுக்கு நல்லது சொல்லும் போது அதைக் கேட்பதில் தவறு இல்லையே! நீங்களும் ஒவ்வொரு தடவையும் இது போன்று நல்ல விஷயங்கள் சொல்லி நாய் வாலை நிமிர்த்த முயற்சிப்பது போல முயற்சிக்கின்றீர்கள்......எங்கள் வால் (எழுத்து) நிமிர மாட்டேன் என்கின்றதோ?!!!! நாங்கள் கண்டிப்பாக நிமிர்த்த முயற்சி எடுக்கின்றோம்! தமிழா....தாங்கள் அக்கறையுடன் தானே சொல்கின்றீர்கள்! அதனால் நாங்கள் எங்களுக்கு வரும் எந்தக் கருத்தையும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை! அதில் இருக்கும் நல்லதை மட்டுமே நாங்கள் பார்க்கின்றோம். தாங்கள் கூகுள் + ல் பரிந்துரைத்திருக்கின்றீர்கள்! மிக்க நன்றி!

   மிக்க நன்றி தமிழா! தங்கள் கருத்திற்கு! இது போன்று தாங்கள் எப்போதும் நாங்கள் தவறும் போது இடித்துரைத்தலை வரவேற்கின்றோம்! "இடித்துரைத்தல் நல்ல நண்பர்க்கு அழகு"!

   நீக்கு
 3. இதுவரையிலும் உங்கள் ஊர் அடைந்த மாற்றத்தையும் ,இனி காணப் போகும் மாற்றத்தையும் சொல்லி இருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கிறது !
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. மினி தெற்கு இந்தியாவையே தன்னுள் கொண்டிருக்கும் உங்கள் ஊர் இதுவரை ,இனிமேல் காணப்போகும் மாற்றங்களையும் விவரித்த விதம் சுவாரசியமாய் இருக்கிறது !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மினி தெற்கு இந்தியாவா?!!!!!!!ஹாஹா...இன்னுமென்ன மாற்றங்கள் வரப் போகின்றதோ?! பார்ப்போம்! மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 5. இந்த இடத்திற்கு சென்று இருந்தேன். ஆனால் மக்கள் நிலத்தின் விலை உயர்வதையும், எப்படி மற்றவர்கள் தலையில் கட்டி காசு பார்க்கலாம் என்பதில் தான் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

  http://deviyar-illam.blogspot.com/2013/07/blog-post_8574.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜோதிஜி சார்! ஆமாம், இப்போது அந்த ஆராய்சி நிலையம் வருவதாலோ என்னவோ, நிலத்தின் விலை உயர்ந்துள்ளது! இன்னும் கொஞ்ச நாள் போனால் இது மிகவும் தாழ்ந்து போய்விடும்! இப்படித்தான் மேற்குத் தொடர்ச்சிமலையில் தற்போது விலங்குகள் சரணாலயம் அறிவிப்பு வந்ததிலிருந்து அங்கு நிலம் வாங்க தயங்குகின்றார்கள் மக்கள், அந்த நிலம் அதன் எல்லைக்குள் வராவிட்டாலும் கூட! அது போன்றுதான் இதுவும். விளைவுகள் எதிர்மறையாக ஊடகங்களில் பேசப்பட்டால், யாரும் அங்கு நிலம் வாங்க தயங்குவார்கள்தான்!

   மிக்க நன்றி சார்!

   நீக்கு
 6. கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.

  பதிலளிநீக்கு
 7. கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. ஆமாம் கில்லர் ஜி முதலில் வெளியிட ப்ளாகர் மிகவும் தொல்லை செய்தது! பாருங்கள் தற்போது இரண்டுமுறையாக வந்துள்ளது! எங்களுக்கும் பல தளங்களில் பின்னூட்டம் இட முடியவில்லை!

   ராயசெல்லப்பா சார் பின்னூட்டம் இட்டு அது வரவே இல்லை! பின்னர் அவர் எங்கள் மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். இரண்டு நாட்களாக தங்கள் தளத்திற்கு முஅற்சி செய்கின்றோம்! தளம் வருவதற்கே முரண்டு! ஸ்கூல் பையனின் தளத்திற்கு செல்லவே முடியவில்லை! ப்ளாகரிலா, இல்லை எங்கள் கணினி பிரச்சியனையாக இருப்பதால் அதனாலா என்று தெரியவில்லை

   மிக்க நன்றி கில்லர் ஜி!

   நீக்கு
 9. மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "
  மஞ்சப்பை" யாக இருக்கின்றோம்!?

  நானும் மஞ்சப்பைக்காரன் என்கிற முறையில்
  தங்கள் ஆதங்கத்தை முழுமையாக உணர முடிகிறது
  நானும் தங்களோடு சேர்ந்து அடுத்த தலமுறையினரிடம்
  மண்டி இடுகிறேன்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! ரமணி ஜி! மிக்க நன்றி சார் தங்கள் ஆதங்கத்திற்கு! எங்களுடன் சேர்ந்து! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 10. நானும் மஞ்சப்பைக்காரன் என்கிற முறையில்
  தங்கள் ஆதங்கத்தை முழுமையாக உணர முடிகிறது
  நானும் தங்களோடு சேர்ந்து அடுத்த தலமுறையினரிடம்
  மண்டி இடுகிறேன்

  பதிலளிநீக்கு
 11. அப்ப்ப்ப்பா..... எவ்வளவு பெரிய பதிவு....!!!!!!!!!

  இருந்தாலும் படிக்கப் படிக்க அலுக்கவில்லை.
  மனத்தில் பசுமையான காட்சிகள் எல்லாம் நேரில் மூங்கில் காடுகளாய்....

  நாம் என்ன செய்ய முடியும்.... என்பதையும் கடைசி பத்தியில்.
  என்னமோ நடக்குதுங்க.
  ஆமா... அடுத்த ஜென்மம் என்பது பொய் தானே....
  இப்பவே எனக்குப் பயமாக இருக்கிறது துளசிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! அடுத்த ஜென்மம் என்பது பொய்யோ, நிஜமோ....நம் கன்சர்ன் அடுத்த தலைமுறை பற்றியே......அதனால் பயம் வேண்டாம்......சரி அப்படியே ஒரு ஜென்மம் இருந்து நாம் பிறக்கின்றோம் என்றாலும், நமக்குத் தெரிய போவதில்லை!

   மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!

   நீக்கு
 12. மஞ்சப்பைக்காரன் என்பதற்கு உள் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? எனக்கு புரியவில்லை என்னை திட்டுவதனால் நேராகவே திட்டலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹ.......மதுரைத் தமிழா சும்மாதானே...தெரியாதது போல கேட்கின்றீர்கள்?!!!!! "அவர்கள் உண்மைகள்" !!! உள் அர்த்தம் ஏதுமில்லை! நீங்கள் "மஞ்சப்பை" படம் பார்க்கலையா?!!!!! மஞ்சப்பை என்றால் கிராமத்துக்காரன்/பட்டிக்காட்டான்..... அந்த உணர்வுகள் கொஞ்சம் கூடுதலாக இதில் வெளிப்பட்டதைத்தான் .......நாங்கள் எங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டது!! உங்களை எதற்குத் திட்ட வேண்டும்?!! சொல்லுங்கள்?

   நீக்கு