புதன், 21 மே, 2014

ஒரு மனிதன் (ஒரு ஓட்டு)?!......இரு கால்கள்.........இரு தோணிகள்....!!!?????



திரு.N.R./ N. ரங்கசாமி         திரு நாராயணசாமி

 சாமிகள் தான் வரம் கொடுக்கும்.  ஆனால் இங்கு, பாண்டிச்சேரியில் எந்த சாமிக்கு தாங்கள் கொடுத்த வரம் கிடைக்கப் போகின்றது என்று மே 16ஆம் தேதி, பாண்டிச்சேரி மக்கள் அனைவரும் டி.வி. முன், பரபரப்புடன் அமர்ந்திருந்ததைக் கண்டோம்.  
  
 நாம் சமீபத்தில் எடுத்த "பரோட்டா கார்த்திக்கின் ப்ரிவியூ ஷோவை, பாண்டிச்சேரியில், அரசாங்கப் பள்ளியில் திரையிடும் முன், அதற்கு முன் எடுக்கப்பட்ட பரோல் குறும்படத்தை ஒரு முன்னோட்டமாகத் திரையிட்டு, மாணவர்களுடன் ஒரு உரையாடல் நிகழ்த்திப் பார்க்கலாமே என்ற எண்ணத்துடன், பாண்டிச்சேரி கல்வித் துறையின் இணை இயக்குனர் அவர்களைச் சந்தித்து அனுமதி பெற வேண்டி, (அது ஒரு பெரிய Procedure. அதாவது, படம் திரையிடும் நோக்கம், என்ன செய்ய விழைகின்றோம் என்பதை எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்து, அத்துடன் சிடி யைக் கொடுத்து, சென்சார் போர்ட் அதைப் பார்த்து படம் திரையிடத் தகுதி பெற்றதா என்ற No objection” சான்றிதழ் பெற்ற பிறகே, அனுமதி வழங்கப்படும்) சென்றிருந்த போது, அன்று நாம் கண்ட பாண்டிச்சேரி மக்களின் உணர்வு பூர்வம் தான் இந்தப் பதிவு.

திரு. ராதாகிருஷ்ணன்
 புதுவை என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எங்களுக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது, எந்த சாமிக்கு மக்கள் வரம் அருளியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ள.  விஷ்ணுவின் பெயர்களில் இரண்டைத் தாங்கி நிற்கும் இரண்டு சாமிகளுக்கும் அதாங்க N.R என்று அழைக்கப்படும் ரங்க", “நாராயண" "சாமிகளுக்கு மக்கள் அருளியது யாது என்று!  பாண்டி முதல்வர் ரங்கசாமியா நின்றார் என்று நீங்கள் வியப்பது புரிகின்றது!  அவர் நிற்கவில்லைதான். அவரது கட்சியான N.R. காங்கிரஸைச் சேர்ந்த, முதல்வருக்கு நெருக்கமான,  பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த, மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் திரு. ராதாகிருஷ்ணன் தான் நின்றார்.  ஆனால், ராதாகிருஷ்ணனை அன்று தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை! மக்களும் அவரைப் பற்றிப் பேசவில்லை!  எல்லாமே N.R. மயம்தான்.


 

ஊடக நண்பரிடமிருந்து 11 மணியளவில் ஒரு செய்தி வந்தது.  திரு நாராயணசாமிதான் முன்னிலையில் இருப்பதாக. ஊடகச் செய்தியாயிற்றே! அதுவும் நண்பரிடமிருந்து! அடுத்த 45 நிமிடத்தில் சரவெடி காதைப் பிளந்தது.  எங்களுக்கு ஆச்சரியம்!  ஏனென்றால், நாங்கள் இருந்த முத்தரையர்பாளையம் ஏரியா, முதல்வர் ரங்கசாமியின் ஏரியா.  அவர் இருப்பது அதே பகுதியில் திலாசுப்பேட்டை என்ற ஏரியாவில், அதாவது ராஜீவ் காந்தி சிலையிலிருந்து பிரிந்து செல்லும் வழுதாவூர் ரோடில். அவர் சர்வ சாதாரணமாக அருகே உள்ள சிறிய டீ கடையில், பெஞ்சில் அமர்ந்து டீ குடிப்பதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்!  அப்படி இருக்க, நாராயணசாமிக்குச் சரவெடியா? இங்கு? சந்தேகம் தலைக்கேறியது! அதை நிவர்த்தி செய்து கொள்ள -இல்லையென்றால் சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் ஜனகராஜின் தலை வெடித்துவிடுவது போல காண்பிக்கப்படுமே அது போன்று எங்கள் தலையும் சூடாகியது -  வீட்டை விட்டு வெளியில் வந்து ரோட்டில் நடந்தோம்.  ரோட்டில் போவோர், வருவோர், வாகனங்கள், பேருந்து, லாரி முதற்கொண்டு நிறுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதற்குள் முழு முடிவுகள் வெளியாகிவிட்டதா என்ற அடுத்த ஆச்சரியத்தில் எங்கள் புருவங்கள் உயர்ந்தன!  எனவே அங்கு பாதுகாப்பிற்காக நின்ற போலீசாரிடம் விசாரித்தோம்! 

என்னது?! நாராயணசாமியா?...இல்ல....இல்ல......ரங்கசாமிதான் ஜெயிச்சுகிட்டுருக்காரு....

இல்லைங்க இப்பதான் கொஞ்ச முன்னாடி ஊடக நண்பர் சொன்னாரு நாராயணசாமி முன்னிலைலனு...அதாங்க

அதெல்லாம் சும்மா.....அப்படித்தான் சொல்லுவாங்க....


நின்றது திரு. ராதாகிருஷ்ணன்.  ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து அறிவிக்கப்படும் முன்னரேயே தொண்டர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி, ரங்கசாமியின் உருவப்படத்தைத்தான் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தனர்.  இனிப்புகள் பல ஏரியாக்களிலும் வழங்கி, மேளதாளத்துடன், சினிமாப் பாடல்களுக்கு நடனம் புரிந்து, ட்ராஃபிக் ஜாம் உருவாக்கி மகிழ்ந்தனர்!


அப்பா பைத்தியம் சாமி” (இதுவும் சாமி) சித்தரின் பக்தராகிய ரங்கசாமி (இதுவும் சாமிதான்) பாண்டியில், கோரிமேட்டில், இந்த சித்தருக்காகக் கட்டியிருக்கும் கோவிலுக்குத் தினமும் இரவு 9 மணிக்கு மேல் வருகை புரிந்து, பூஜை செய்து, அன்னதானம் செய்வது வழக்கமாம்.  அந்த சாமிதான் இந்த சாமிக்கு வரம் கிடைக்க அருளப் பெற்றாரோ?!!! அப்படித்தான் இந்த சாமி சொல்கின்றார்.


   தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, பணம் நிறைய கொடுக்கப்பட்டதாக அறிந்தோம்! எப்படியோ, ரங்கசாமி/ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மக்களிடமிருந்து வரம் கிடைத்துவிட்டது! மக்களுக்கு ரங்கசாமி மேல் மிகுந்த நம்பிக்கை போலும்!  ஒரு தனி மனிதருக்கு, அதுவும் ஒரு அரசியல்வாதிக்கு இத்தனை ஆதரவா என்று! எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம்! அப்படித்தான் தெரிந்தது! சென்ற பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு தொண்டர்களால் வைக்கப்பட்ட கட்-அவுட்களும், இப்போது மக்களிடம் பேசிய போது, ரங்கசாமி பல நன்மைகள் செய்திருப்பதாகவும், அவர் தவறே செய்திருந்தாலும், மக்களுக்கு நல்லதும் செய்கின்றார் என்றும் அதனால்தான், திரு ராதாகிருஷ்ணன் அவரது கட்சி என்பதால் தான் ஓட்டுப் போட்டோம் என்றும் பெரும்பான்மையான மக்கள் திரு. ரங்கசாமிக்கான ஆதரவை வெளிப்படையாகவே பேசுகின்றனர், சாதாரண மக்களும் சரி, படித்தவர்களும் சரி! இந்த சாமி, இப்படித் தன் மீது மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கும் பாண்டிமக்களுக்காக, மத்தியில் தனது M.P. ராதாகிருஷ்ணனைப் பேசவைத்து, மக்கள் அருளிய வரத்தை இருமடங்காக/பலமடங்காகத் திருப்பிக் கொடுப்பாரா?! பார்ப்போம் பொறுத்திருந்து!


இதில் ஒரு வேடிக்கை! பாண்டிச்சேரி வரைபடத்தைப் பார்த்தவர்களுக்கும், பாண்டியில் இருந்தவர்களுக்கும் இந்த வேடிக்கைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு! நாம் பேருந்தில் பயணித்தால், நேர் ரோடிலேயே, பாண்டிச்சேரி நெருங்கும் சமயம் பாண்டிச்சேரி எல்லை வரவேற்கின்றது என்ற வாசகத்தைக் காணலாம்.  சிறிது தூரம் சென்றதும், “தமிழ்நாட்டு எல்லை, காஞ்சிபுரம் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் வரவேற்கின்றது என்ற வாசகத்தைக் காணலாம். சற்று தூரம் சென்றதும், “தமிழ் நாட்டின் நன்றி உரையைக் காணலாம். சற்றுத் தூரம் கடந்ததும், உங்களை விழுப்புரம் மாவட்டம் வரவேற்கும். 2 கி.மீ. தூரம் கூட கடந்திருக்கமாட்டீர்கள், விழுப்புரம் நன்றி சொல்லும்.....பாண்டி எல்லை வரவேற்கும். இப்படித் தமிழ்நாடும், பாண்டியும் மாறி, மாறி வரவேற்கும் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும்!

பல இடங்களில், மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளிலேயே ஒரு தெரு தமிழ் நாட்டு எல்லைக்குள்ளும், அடுத்த தெரு பாண்டிச்சேரி எல்லைக்குள்ளும் இருக்கும்!  இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், கோரிமேட்டில் உள்ள ஒரு பகுதியில், ஒரு வீடு இரண்டு திண்ணைகளைக் கொண்டது.  அந்த வீட்டை இரண்டாகப் பிரித்தால் ஒரு பகுதி, ஒரு திண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்தது.  மற்றொரு பகுதி பாண்டியைச் சேர்ந்தது! அது சரி, தெருவில் தண்ணீர் குழாய் இது போன்று இருக்கின்றது.....தண்ணீர் பிரச்சினை?!!!  அதில் வசிக்கும் அந்தக் குடும்பம் ஒரு கால் தமிழ்நாட்டிலும், மற்றொரு கால் பாண்டியிலுமாக, இரண்டு ரேஷன் கார்டுகளுடன் வாழ்கின்றார்கள்! அப்படியென்றால் ஓட்டு? அதுவும் அப்படித்தான் இருக்குமோஅங்கு ஏதோ ஒரு சாமிக்கும், இங்கு தமிழ் நாட்டிலும் போட்டிருப்பார்களோஅப்படித்தான் கேள்விப்பட்டோம்!  இது எப்படி இருக்கு??!  அது சரி...ஒரு பெரிய சந்தேகம்!  இந்தப் பகுதிக்கு வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வந்திருப்பார்களா? வந்திருந்தால் எப்படிக் கேட்டிருப்பார்கள்?! தமிழ்நாட்டு வேட்பாளரும், பாண்டிச்சேரி வேட்பாளரும் குழம்பித் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருப்பார்களோ?!!!!! ஒரு குடும்பத்தின் ஓட்டு என்றால் சும்மாவா?!!
                                                                        
பாண்டிச்சேரி முதல்வர் திரு.ரங்கசாமியோ, அம்மாவோ இதைக் கவனித்தார்களா/கவனிப்பார்களா? இல்லை இது தங்களுக்கு ஆதாயம்தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களோஅப்படி என்றால் தேர்தல் ஆணையம் இதற்குப் பொறுப்புதானே? இது போன்ற இரு மாநில எல்லை வாசிகளின் குழப்பத்தைப் போக்கத்தான் Smart Card என்று ஒன்று வந்ததே!  என்னாயிற்று?  என்ன பிரயோசனம்? பதில் யாரிடம் உள்ளது?!


வெள்ளி, 16 மே, 2014

“இதோ ஒரு முருகன்”, காக்கும் கடவுளாக அன்பே சிவமான எரணாகுளத்தப்பனின் மண்ணில்....!!




MURUGAN S THERUVORAM


வேலவனின் திரு உருவப் படங்களில் “ஓம் சரவணபவ எனும் ப்ரணவ மந்திரத்தை விட கூடுதலாகக் காணப்படுவது, “யாமிருக்கப் பயமென் எனும் அருள் வாக்கே.  அப்படி எல்லோரையும் எப்போதும் காக்கும் அறுபடை அப்பனை நேரில் காண வேண்டுமா?...... கேரளாவில் உள்ள எர்ணாகுளம் வரை பயணம் செய்ய நீங்கள் தயாரா?  எனில், ஐயாயிரத்திற்கும் மேலாக அனாதைகளாகிப் போனவர்களைக் காத்த கடவுள், இப்போதும் காத்துக் கொண்டிருக்கும் கடவுளான, “தெருவோர முருகனை தரிசித்து, அவர் குடியிருக்கும் எர்ணாகுளம், காக்க நாடு, கலெக்டரேட் அருகே உள்ளக் கோவிலான “தெருவு வெளிச்சம் எனும் புண்ணிய பூமியைக் கண் குளிரக் கண்டு காணிக்கை செலுத்தி புண்ணியம் சேர்த்து வரலாம்.  இன்று மே 16, “தெருவு வெளிச்சத்தின் ஒறாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.



    
 திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம் மற்றும், செங்கோட்டையைச் சேர்ந்த வள்ளியம்மையின் மகனான முருகன், இடுக்கி பீருமேட்டில் உள்ள சிதம்பரம் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவர்.  சண்முகம் குடும்பத்தை உதறித் தள்ளிப் போனதால், 1990ல் தன் தாயுடன் எர்ணாகுளம் வந்து, காந்தி நகர் அருகே உள்ள சேரியில் குடியேறியவர். பிச்சை எடுப்பதும், பழைய பொருட்களை பொறுக்கி விற்றும் பசியைப் போக்கி வந்த முருகன், ஒரு திருடனோ, ஒரு பிக்பாக்கெட்டோ ஆகாமல் போனதற்குக் காரணம் தேவதூதனான, “மிட்டாய் அச்சன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் “ப்ரதர் மாவூரூஸ் என்பவர்தான்.  அவர் முருகனை, டான்பாஸ்கோ “ஸ்னேக பவனுக்கு அழைத்துச் சென்றார்.  எட்டாண்டுகள் அங்கு வளர்ந்த முருகன், அன்பு, கருணை, சேவை போன்ற மனிதனுக்கு அவசியமான குணங்களைக் கற்று, தன் சொந்தக் காலில் நிற்க தகுதி பெற்றார்.  ப்ரதர் மாவூரூஸ் முருகனுக்கு ஒரு ஆட்டோ வாங்கவும், சொந்தமாக ஒரு அறை மட்டும் கொண்ட வீடு கட்டவும் உதவினார். 


    
்அப்படி முருகனின் ஆசை நிறைவேறியது!.....சொந்தக் காலில் நிற்கும் முருகனால், இனி யாரையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவ முடியும்.  அந்த சிறிய வீடு அப்படி ஆனதைகளின் காப்பகமானது.  பகல் முழுவ6தும் அனாதைகளுடன் தன் நேரத்தைச் செலவிடும் முருகன், இரவு ஆட்டோ ஓட்டி, பணம் ஈட்டி அவர்களைக் காத்து வரத் தொடங்கினார்.  ஆம்! அன்று அல்லல்படுவோரின் கண்ணீரைத் துடைக்க எர்ணாகுளத்திலிருந்து நீண்ட முருகனின் காக்கும் கரங்கள்தான், கேரளத்தின் தென் கோடியிலிருந்து வட கோடிவரை நீண்டு, கதி கலங்கி நிற்கும் அனாதைகளை – அவர்கள் குழந்தைகளாகலாம், முதியோர்கள் ஆகலாம், நோயாளிகள் ஆகலாம், மன நிலை குன்றியவர்கள் ஆகலாம், உடல் ஊனமுற்றோர் ஆகலாம் – இப்படி யாராக இருந்தாலும அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.  இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாவைத் தேடி, ஒரு தேவதையும் வந்து சேர்ந்தாள்,  ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற ஊழியரான, பள்ளுறுத்தியைச் சேர்ந்த ரமேசன் மற்றும் ஆசிரியை ஆன சிந்துவின் ஒரே மகள் இந்து.  MBA வரை படித்த இந்து எடுத்த இந்த முடிவுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இல்லை. 2010 ஆகஸ்ட் 18 ஆம் தேதி, எர்ணாகுளத்தப்பனின் சன்னிதியில் இவர்களது திருமணம் நடந்தது.  4ஆம் வகுப்பு வரை படித்த, மலையாளம் ஓரளவு எழுத, வாசிக்கத் தெரிந்த முருகன், “மனிதருள் மாணிக்கம் என்பதை MBA படித்த இந்து மிக எளிதாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.  இப்போது காக்கும் துணைக் கரங்களாக இந்துவின் கரங்களும் முருகனுடன், முருகனுக்குத் துணையாக கேரளமெங்கும் உலா வருகின்றது.

     இதற்கிடையே ரௌடிகளும், கஞ்சா விற்பனையாளர்களும் முருகனின் ஆட்டோவைத் தகர்த்து எறிந்து விட்டார்கள்.  அனாதைக் குழந்தைகளைக் கஞ்சா விற்க வைத்ததை அறிந்த முருகன் அவர்களைக் காப்பாற்றி, குழந்தைகள் நல விடுதியில் சேர்த்ததற்கான பழிவாங்கும் படலம்தான் அது.  ஆனால், காவல் துறையினரிடம் அவர்களைப் பற்றிப் புகார் கொடுக்காமல், அந்தக் கல்நெஞ்சக்காரர்களின் மனதிற்குள்ளும் ஈரத்தைக் கசிய வைத்து, தான் சாதாரண மனிதன் அல்ல என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தி விட்டார் முருகன்.

Chief Minister Oommen Chandy watching the miniature of a model anganwadi during the official inauguration of the model anganwadi project in Kochi on Thursday | T P Sooraj
    
கொஞ்சம் தாமதமாக என்றாலும் முருகனுக்குக் கிடைக்க வேண்டிய பரிசுகளும், பாராட்டுகளும், உதவிகளும் வந்து சேரத் தொடங்கியது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின், குழந்தைகள் நலனுக்கான 2011-12 வருடத்திற்கான விருதும், பரிசுத் தொகையான ஒரு இலட்சம் ரூபாயும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியிடமிருந்து முருகன் பெற்றார்.  மாநில அரசும் அவரது சேவையைக் கௌரவிக்கும் வகையில், எர்ணாகுளம், காக்க நாடு கலெக்டரேட் அருகே 16 சென்ட் இடத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தை அனாதைகளைக் காக்க முருகனுக்கு அளித்தது.  2013 மே 16 ஆம் தேதி, மாண்புமிகு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் அதன் திறப்பு விழாவை நடத்தினார்.  காப்பகத்தை நடத்த ஒரு சிறு தொகை மாநில அரசு கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.


 மட்டுமல்ல, “எர்த் ஃபௌண்டேஷனும் முருகனுக்கு சிறந்த சமூக சேவகனுக்கான “ஹோப் விருது வழங்கி இருக்கிறது.  இப்படி இந்தக் “காக்கும் கடவுளான முருகனுக்கு உதவ, ஏராளமான உதவிக் கரங்கள் பல பாகங்களிலிருந்தும் நீண்டு வருகின்றன.  முருகனுக்கு இச்சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் தொடர்ந்து தேவையான எல்லா உதவிகளும் அருள நாம் எல்லோரும் வேண்டுவோம். இப்படிப்பட்ட ஆதர்ஷ புருஷர்களை வாழ்த்துவோம், வணங்குவோம்.  அவர்களுக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் வேண்டுவோம்.  

https://www.youtube.com/watch?v=rKPpBM-GHvc