சனி, 8 பிப்ரவரி, 2014

தெய்வம் தந்த பூவே.............மரணம் மீண்ட ஜனனம் நீயே!





பாலேட்டன் - ஆஷா சேச்சி

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தின் பாகமாக திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் பாலேட்டன் மற்றும் ஆஷா சேச்சி வாசிக்கும் கடிதங்கள் எனும் நிகழ்ச்சியில் இன்று மனதை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம்.


ஃபௌசியாவுக்குச் செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறு, அவரைத் தன் கை, கால்களை முன்பு போல் எளிதாக இயக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளிவிட்ட்து.  பல மருத்துவர்களிடம் மாறி, மாறி மருத்துவம் செய்து வரும் அவருக்குத் திருப்தி அளிக்கத் தக்க ஒரு மாற்றமும் உண்டாக வில்லை. வயநாடு மாவட்டத்தில், மாநந்தவாடி எனும் இடத்திலுள்ள ஒரு மருத்துவமனை பற்றி யாரோ சொல்லிக் கேட்ட அவர், தன் கணவன், அண்ணன், மற்றும் அண்ணியுடன் திருச்சூரிலிருந்து பஸ் ஏறி கோழிக்கோடு KSRTC பேருந்து நிலையத்தை அடைந்த போது நேரம் இரவு 11.30.  மாநந்தவாடிக்கு இனி அடுத்தப் பேருந்து 12.30 க்குத்தான்.  1 மணி நேரம் அங்கு பயணியர் அமரும் இடத்தில் உட்கார முடிவு செய்து, ஆண்கள், ஆண்கள் பகுதியிலும், பெண்கள், பெண்களுக்கானப் பகுதியிலும் உட்கார்ந்தனர். 


பெண்களுக்கான இருப்பிட அறை ஒரு நான்கு அடி சுவரால் சுற்றிலும் கட்டப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்தது.  அதன் ஒரு மூலையில், ஒரு வேட்டியால் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்தது. நல்ல வெளிச்சமில்லை என்றாலும், யாரோ அந்த மறைவில் படுத்திருப்பது போல் தோன்றியது.  ஒரு சிறு குழந்தையின் சிணுங்கலும் கேட்டது.  சிறிது நேரத்திற்குப் பின், சற்றுத் தொலைவிலிருந்தக் கழிப்பறையிலிருந்து ஒரு பெண் மிகவும் தளர்ந்த நிலையில் மெதுவாக சிரமத்துடன் நடந்து, ஃபௌசியாவையும், அவரது அண்ணியையும் தாண்டி அவர்கள் அருகில் இடம் இருந்தும் உட்காராமல், துணியால் மறைத்த அந்த இடத்தை நோக்கி நடந்தார்.  உடனே அந்த மறைவிலிருந்து யாரோ எழுந்ததும் தெரிந்தது.  பார்த்த போது ஃபௌசியாவிற்கு அதிர்ச்சி! 


பெண்கள் மட்டுமே இருக்க வேண்டிய பகுதியில் ஒரு ஆண்!  என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த போது, அம் மனிதன், சிரமத்துடன் நடந்து வரும் பெண்ணைத் தாங்கிப் பிடித்துக் கீழே உட்கார உதவினார்உட்கார்ந்த அந்தப் பெண் அப்படியே தரையில் படுத்தார்.  மீண்டும் குழந்தையின் சிணுங்கல்கள். இப்போதுதான் புரிந்தது அந்த சிணுங்கல்களுக்குச் சொந்தக்காரரான குழந்தை இவ்வுலகிற்கு வந்து ஒரு சில மணி நேரங்களே ஆகியிருக்கிறது என்று.  எவ்வளவோ வசதிகள் உள்ள மருத்துவமனைகளில், உடன் பிறப்புகள், உறவினர்கள் ஆவலுடன் பிறந்த குழந்தையைக் கையில் வாங்கக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்ட, அதைப் பற்றிக் கேட்ட, வாசித்த நமக்கு, வேறு வழியின்றிப் பயணம் செய்து கொண்டிருக்கும் ட்ரெயினில், காரில், ஏன் ஆட்டோவில் கூட பிறந்த குழந்தைகளைப் பற்றிக் கேட்ட நமக்கு, இதோ, இப்போது இரவில் வேறு வழியின்றி, பயணத்திடையே ஒரு பேருந்து நிலையத்தில் தன் கணவனின் உதவி மட்டும் கிடைக்கப் பெற்ற நிலையில் தன் குழந்தையை ஈன்றெடுத்த ஒரு தாயைப் பற்றிக் கேட்கக் கூடிய வாய்ப்பு. தாய்க்கும், சேய்க்கும் எந்த வித தொற்றும் பற்றாது இருக்க எல்லாம் வல்ல இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்!

இதையெல்லாம், கண்டும் வாயடைத்து நின்ற ஃபௌசியாவை, அவள் கணவனும், அண்ணனும் வந்து “பஸ் வந்து விட்ட்து என்று கூறி கூப்பிட, எல்லாம் மறந்து நால்வரும் ஓடி பஸ் ஏற, உடனே பஸ்ஸும் புறப்பட்டும் விட்டது.  சற்று முன் தான் கண்ட காட்சிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த ஃபௌசியா, தன் அருகே இருந்த கணவனிடம் விவரிக்க, அவர், “அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவி ஏதாவது செய்திருக்கலாமே என்றதும் தான், ஃபௌசியாவுக்கு “ஐயோ! தவறு செய்து விட்டோமே என்று தோன்றியிருக்கிறது.!

கடிதத்தை முடித்த ஃபௌசியா, அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் சொல்லாததால், நமக்கு ஒன்றும் ஊகித்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? பயணிகளா?  நாடோடிகளா?  எப்படியோ, KSRTC  ஊழியர்கள், காவலர்கள், நல்ல மனம் படைத்த மனிதர்கள் யாரேனும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கலாம்.  இறையருளால் தாய்க்கும், சேய்க்கும், பிரச்சினை இல்லாமல் பிரசவம் நடந்தது போல, இறையருளால் தாயும், சேயும் நோயற்ற வாழ்வு பெற்று, எங்கிருந்தாலும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை நாம் வேண்டுவதைத் தவிர, நமக்கு இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை.  இருந்தாலும், இந்தச் சம்பவம் மனதிற்கு இனம் புரியாத ஒரு வலியை ஏற்படுத்துகிறது. அந்தக் கணவனும், மனைவியும் அனுபவித்த வேதனையையும். அல்லல்களையும், மன உளைச்சல்களையும் எண்ணிப் பார்க்கும் போது, இது போன்ற வலிகள் நம்மை நல்ல ஒரு மனிதனாகச் சிந்திக்க வைத்து, செயல்பட்டு வாழ உதவுகிறது.  மட்டுமல்ல “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கண்ணதாசனின் வரிகளை நினைக்க வைத்து, நமக்கு கிடைக்கப் பெற்ற நல்ல வாழ்க்கைக்கும், வாழ்க்கைச் சூழல்களுக்கும், இறைவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது!


15 கருத்துகள்:

  1. ஒருவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் இருந்துவிட்டு அதன் பின் அதைபற்றி கவலைபடுவதில் பேசுவதில் பயனில்லை ஒருவருக்கு உதவி தேவைபடும் நேரத்தில் நாம் அதை செய்யவில்லையென்றால் அதன்பின் அதைப்பற்றி நாம் பேச நமகு தகுதியில்லைங்க...

    இது போல நம் சமுகத்தில் நமது நண்பர்களோ உறவினர்களோ கஷ்டப்ப்டும் நேரத்தில் உதவி செய்ய முன்வாராமல் அந்த உறவினர் அல்லது நண்பர் தற்கொலை செய்து கொண்டால் அந்த நேரத்தி போய் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் உதவி இருப்பேனே. என்று கூறுபவர்கள்தான் நமது சமுகத்தில் அதிகம் பேர்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    நண்பரே.

    பதிவை படித்தபோது... மனம் கலங்கியது.....அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்....த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. படிக்கவே அதிர்ச்சியாய் இருந்தது
    இப்படியும் எத்தனைப் பெரிய விஷயத்தையும்
    மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு
    வாழவேண்டிய நிலையில் இருக்கிற அடித்தட்டு
    மக்களுக்கிடையில் நாம் தேடிக் கொள்கிற
    கூடுதல் சுகங்களும் வசதிகளும்
    கொஞ்சம் அருவருப்பேற்றித்தான் போகிறது
    மனம் சுட்டப் பதிவு
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை இன்னும் கற்காலத்திலேயேதான் இருக்கிறது நமது புறக்கனிப்பினூடே...! அறியத்தந்த விதம் மிக நெகிழ்ச்சி...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
  5. இந்தியாவில் இதுபோன்ற அவலங்கள் நடந்தாலும் அரசு அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.நிறைமாத கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி பேருந்து பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் அல்லது உடன் உதவிக்கு பெண்களையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. மனதை கலங்க வைத்தது... கோபமும் இப்படித்தான் - பிறகு வருந்துவது... பாடலில் உள்ளது போல் "நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்பது சரி தான்... "நேரில் பார்த்து நிம்மதி நாடு" இல்லையே... ஆனாலும் ஃபௌசியா அவர்கள் கண்டிப்பாக கண்டிப்பாக உதவி செய்திருப்பார் என்று நம்புகிறேன்...

    Reader-ல் சொடுக்கினால் முதலில் கீழே உள்ள இணைப்பிற்கு செல்கிறது... (பல பதிவுகளில்) பிறகு BLOG ARCHIVE சென்று புதிய பதிவை சொடுக்குவேன்... பலர் புதிய பதிவு இல்லை என்று சென்று விடுவார்கள்...

    http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/blog-post.html

    சிலர் பதிவின் தலைப்பில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்து, பதிவை வெளியிட்டு, பிறகு உடனடியாக ஆங்கில வார்த்தைகளை நீக்குவார்கள்...

    இப்படித் தானே செய்கிறீர்கள்... :

    பதிவை Publish செய்யும் முன் : பதிவு எழுதும் பக்கத்தில் Post settings கீழுள்ள Perma Link-யை சொடுக்கி, அங்கு TrichurRadioStation-Joyalukkasprogram-Readingletters-womandelivered-kozhikodubusstand என்று (யம்மாடி எவ்வளவு நீளம்...! ஹிஹி) டைப் செய்து விட்டு, done-யை சொடுக்கி விட்டு, Publish செய்தால் இந்தப் பிரச்சனை வராது...

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி! டிடி அவர்களே! தங்கள் கருத்திற்கும், யோசனைக்கும்!

    Perma linkil கொடுத்து விட்டுத்தான் புப்லிஷ் செய்கிறோம்! பல சமயங்களில் நெட் தகராறு ஆகிவிடுகின்றது. பப்லிஷ் செய்துவிட்டு தமிழ் மனத்தில் இணைக்க வேண்டி லிங்க் க்ளிக் செய்யும் போதுதான் perma link சரியாக பதிவாக வில்லை என்றுத் தெரியவருகின்றது. திரும்பவும் கொடுக்கும் போது முன்பு கொடுத்தது பல சமயம் மறந்து புதிதாக அடித்து விடுவதால் இந்தப்பிரச்சினை வருகிறது போலும்.

    இனி, கவனமாகச் செய்கிறோம். இத்தனை அக்கறையுடன் சொல்லும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கவியாழி! தாங்கள் சொல்லுவது போல் பேருந்துப் பயணத்தைத் தவிர்க்கலாம்தான்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி நைனா! தங்கள் அருமையான, உண்மையான கருத்திற்கு! இது இன்னும் மலைகளில் வாழும் மக்களிடமும், பல சிறிய எந்த வித வசதியும் இல்லாமல் வாழும் கிராமங்களிலும் கூட அதிகம்தான்! அரசு? சொல்லிப் பிரயோசனமில்லை! அவர்களுக்குப் பல கிராம்ங்கள் இருக்கின்றதா என்று கூடத் தெரியாதே! அவலம்!

    பதிலளிநீக்கு
  10. அடித்தட்டு மக்கள் எல்லாவற்றையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள்! நாம் தான் பல வசதிகளை அடைந்தும், ஒரு சிரிய விஷயத்திற்கும் கூட அல்ட்டிக் கொள்கின்றோம்!

    தங்கள் அருமையான, அழகான பதிலுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஆம்! நண்பரே எனக்கும் அதை வானொலியில் கேட்ட பொது மனம் கலங்கிவிட்டது. அதனால் தான் இந்தப் பகிர்வு!

    மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  12. மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி! தெரிந்திருந்தும், தானாக முன்வந்து உதவும் குணம் தற்போது குறைந்து வரத்தான் செய்கின்றது! "ஹெல்ப் கேட்டாதான் செய்வேன். கேக்கலனா செய்ய மாட்டேன். ஒரு வார்த்தை சொல்லியிருந்தா செஞ்சிருப்பேன்ல" இதுதான் இப்போது டயலாக்! இது தான் சரியாம்! கேட்காமல் உதவக் கூடாதாம்! மேல்நாட்டு நல்ல நடைமுறையாம்.....இது எப்படி இருக்கு?!

    பதிலளிநீக்கு
  13. படிக்கும்போதே அதிர்ச்சி.... இன்னமும் நமது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தபடியே......:(

    பதிலளிநீக்கு