செவ்வாய், 28 ஜனவரி, 2014

அருணாச்சலம் முதியோர் விடுதி


கண்களில் நிறைந்த கண்ணீர் சற்றுக் கூடியதால் காரோட்ட முடியாமல் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். என் அருகே, முன் பக்க இருக்கையில், அம்மாவின் கைப்பை, துணிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டி, பேனா, மூக்குக் கண்ணாடி, புத்தகங்கள், மடிக்கணினி அதில் அம்மா இறுதி வரை தமிழில் எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள், எழுதுவதற்கான குறிப்பேடும் அதில் அம்மாவின் எழுத்துப் படைப்புகளும், டையரி, அம்மா வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை வியாதிக்கான (அது மட்டும்தான் வேறு எந்த உடல் நலக் குறைவும் இல்லை) மீந்து போன மாத்திரைகள் இவ்வளவும் இருந்ததாலோ என்னவோ, அம்மா அருகில் இருப்பதுபோல அம்மாவின் வாசனை. நரைத்த பாப் தலைமுடியுடன், பேன்ட்/சல்வார்/லெக்கிங்க்ஸ், டாப்புடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனக்கு சிறு வயது முதலே அம்மா சாரி கட்டினால் பிடிக்காது என்பதால் தன் உடை அணியும் முறையையே மாற்றிக் கொண்டவர். எனக்காகவே வாழ்ந்தவர்!


நான் காரோட்டினால் அம்மா முன் இருக்கையில்தான் அமர்வார். பின் இருக்கை பிடிக்காது! அம்மா காரோட்டினால், நான்தான் முன் இருக்கையில் அமர்வேன், அம்மாவும் அதைத்தான் விரும்புவார். இது கார் வாங்கியதிலிருந்து பல வருடப் பழக்கம்.  இதுதான் முதல் தடவை இந்தியாவில் அம்மா என் அருகில் இல்லாமல் நான் காரோட்டுவது.  அவர் இறந்து 3 நாட்களே ஆகின்றது.  வயது 85. என் வயது 60. இதோ, விடுதியிலிருந்து அவரது உடைமைகளை எடுத்து வருகின்றேன். நான் உலகறியும் மருத்துவராக இன்று அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாதான் முழு முதற் காரணம். இருந்தாலும், அம்மா என்னுடன் இருக்க மறுத்து இந்தியாவில் வசிப்பதில் பிடிவாதமாக இருந்தார்.  இந்தியாவில் எங்கள் வீடு, தோட்டம் என்று இருந்தும், தனிமையில் இருக்க விரும்பாமல் முதியோர் விடுதியில், அதுவும், அருணாச்சலம் முதியோர் விடுதியில் தான் இருப்பேன் என்ற பிடிவாதம்.  என்னுடன் இருக்க வந்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் 2 மாதம்தான்.  அதற்கு மேல் அவருக்கு அங்கு இருக்க முடியாமல் தவித்து விடுவார். இத்தனைக்கும் அவர் என்னை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய மனமில்லாதவர், அப்பா இருந்த போது, நாங்கள் அமெரிக்காவில் சில காலம் இருக்க நேர்ந்த போது, அமெரிக்க வாழ்க்கையை மிகவும் ரசித்தவர். திருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, அப்பா அடிப்படையில் நல்லவர்தான் என்றாலும், அம்மா பல மன வேதனைகளுக்கு உள்ளானார்.  அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, எனக்கு அம்மாவின் இந்த முடிவு, இந்தியாவில் இருந்தது மிகவும் வருத்தம். மட்டுமல்ல முதியோர் விடுதியில், அதுவும் மேற்சொன்ன விடுதியில்.  அப்படி என்ன பிடிவாதம் என்று தெரியவில்லை!  புரியாத புதிர்!


 எனக்கு அம்மாவின் இந்த முடிவில் மிகவும் வேதனையும் வருத்தமும் இருந்தாலும், அம்மாவின் விருப்பதிற்கு நான் தடை சொல்லவில்லை.  காரணம், அம்மா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார்.  நான் அடிக்கடி இந்தியா வந்து அவருடன் 10 நாட்களாவது தங்கிவிட்டுச் செல்லுவது வழக்கம். அப்போது அம்மாவின் உற்ற நண்பர் சிவானந்தம் அங்கிள் வீட்டில் குறைந்தது 5 நாட்களாவது அம்மாவும் நானும் தங்குவது வழக்கம். அம்மாவிற்கும், அங்கிளுக்கும் அத்தனை ஒரு ஆழமான, உண்மையான அன்பும், நட்பும்.  எனக்குப் பல சமயங்களில் இதைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு! அம்மாவிற்கும், சிவானந்தம் அங்கிளுக்கும் மிகுந்த ஒத்த சிந்தனைகள், ஆர்வங்கள், எண்ணங்கள், கனவுகள், வாழ்க்கைக் குறிக்கோள்கள். அவரும், அம்மாவும் சேர்ந்து எழுதி தமிழில் பல படைப்புகள் படைத்து வந்தார்கள். அவர்தான், இந்தியாவில் அம்மாவைக் கவனித்துக் கொண்டவர். என்னுடன் தினமும் தொடர்பில் இருப்பவர்.  நான் அம்மாவுடன் தினமும் குறைந்தது 5, 6 தடவை காமரா உதவியுடன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே பேசி விடுவேன் என்றாலும், அம்மாவைப் பற்றிய தகவல் எல்லாம் என்னுடன் தவறாது பகிர்ந்து கொண்டவர் அங்கிள்தான். இத்தனைக்கும் அங்கிளுக்கு ஒன்றும் சிறிய வயது கிடையாது. அவருக்கும் 88 வயதாகிறது. அம்மாவின் உடல் நிலை சற்றுச் சரியில்லை என்று சிவானந்தம் அங்கிள் ஃபோன் செய்த உடன் நான் வந்து அம்மாவை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். சரியாக 2 வாரம் நானும், அம்மாவும் சந்தோஷமாகச் சேர்ந்து இருந்து இறுதியில் என் மடியில் உயிர் நீத்தார்.  அங்கிளும் அன்று உடன் இருந்தார்.  இந்த வயதிலும், சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவரைத் தேற்றுவது எனக்கு மிகவும் கடினமாகி விட்டது. அவர் தான் எனக்கு முன் நின்று அம்மாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற உதவினார்.  அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மிகவும் மலைத்து விட்டேன்! 


 மாலை நேரம் ஆகியதால், நான் நின்ற ரோட்டோரத்தில், அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவைகளின் கீச் கீச் சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது.  கூடு திரும்பிய பறவைகள், தங்கள் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன போலும்?! இது போல் தான், நான் வீடு திரும்பியவுடன், அம்மாவுடன் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இன்பமானத் தருணங்கள் என் நினைவுக்கு வந்தன. அம்மாவுக்கு இயற்கை, விலங்குகள், கலைகள், எழுதுதல், வாசித்தல் எல்லாவற்றிலும் ஆர்வம், ரசிக்கும் தன்மை இருந்தது மட்டுமல்ல அவை எல்லாமே எனக்கும் அப்படியே வந்து விட்டது. நானும் அம்மாவும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். சிறு வயது முதலே எனக்கு மிக நெருங்கிய தோழி. அம்மாவிற்குச் சடங்குகள், சம்பிரதாயங்கள், சாதி, மூட நம்பிக்கைகள் இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. அதுவே எனக்கும். ஆனால், இருவருமே மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். அம்மாவின் விருப்பம் போல் அவரது அஸ்தியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு எல்லாம் தூவியதாலோ என்னவோ, எங்கள் வீட்டில் ஒவ்வொரு மரத்திலும் அம்மா இருப்பது போன்ற ஒரு உணர்வு. இப்போது இந்தப் பறவைகளின் சத்தத்திலும் அம்மாவின் குரல் கேட்பது போன்ற ஒரு உணர்வு. 

மாலை மங்கியதால், வீடு திரும்பினேன். வீடு திரும்பியதும் அம்மாவின் உடைமைகளை எடுத்து வைக்கும் போது அவரின் டையரி!  எனக்கு ஆச்சரியம்! ஓ! அம்மாவுக்கு டையரி எழுதும் பழக்கம் இருந்ததா?! எனக்குத் தெரிந்து அந்தப் பழக்கம் கிடையாது. இங்கு தங்கிய பிறகுதான் எழுதியிருக்க வேண்டும்! வாசிக்கலாமா கூடாதா என்ற என் மனப் பட்டி மன்றத்தின் முடிவில், அம்மா ஏதாவது என்னோடு பேசியிருக்கலாம் என்ற எண்ணத்தில் வாசிக்கலாம் என்று திறந்தேன். அப்படியே உட்கார்ந்து விட்டேன்.  ஆச்சரியத்தில்! ஆம், அம்மாவும், அங்கிளும் சேர்ந்து எழுத்துப் படைப்புகள் மட்டுமின்றி பல நல்ல சமூக சேவைகளும், விஷயங்களும் செய்திருந்திருக்கின்றார்கள். பல நல்ல படங்களைப் பற்றியும், புத்தகங்களைப் பற்றியும் எழுதி வைத்திருந்தார்.  சிலவற்றைப் பற்றி என்னிடம் பேசும் போது சொல்லியிருக்கிறார். டையரியில் அம்மா எனக்கும் செய்தி சொல்லியிருந்தார். எப்படி இது என்னிடம் பேசும் போது விட்டுப் போனது என்று தெரியவில்லை.

சிறிய வயதிலிருந்தே அம்மா எனக்கு நிறைய நல்ல தமிழ், ஆங்கிலப் படங்களையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இருவரும் சேர்ந்து பல படங்கள் பார்த்திருக்கிறோம். விமர்சிப்போம்! அவருக்கு ஏனோ காதல் படங்கள் பிடிக்காது! ஏதாவது காரணம் இருந்திருக்கும். ஆனால், ஏனோ தெரியவில்லை அவரும் சொன்னதில்லை, நானும் அதைப் பற்றிக் கேட்டதில்லை!

“குட்டிப்பூ (குட்டிமா, குட்டிப்பூ, செல்லமே, குட்டிச்செல்லம், செல்லக்குட்டி என்று என்னுடைய இந்த 60 வது வயதிலும் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்) மனம் சிதறாமல் உன் படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டும்! உன்னைக் காதலிக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன்.  ஒருவேளை நீ காதல் வயப்பட்டால், நீ காதலிக்கும் பெண்ணைக் கைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே காதலிக்க வேண்டும்! இல்லையென்றால் காதலிக்காதே! அம்மாவின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!  எதற்காக இதை என்னிடம் சொன்னார் என்று தெரியவில்லை! ஆனால், நான் எந்த பந்தத்திலும் இல்லை.

டையரியைப் படித்தேன்! அங்கிளும் அம்மாவும் சேர்ந்து, பல முதியோர்களுக்கு மருத்துவ முகாம்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி, மூளை வளர்ச்சிக் குறைந்த, குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உதவி, உழவர்களுக்கு இயற்கை உர விவசாயம் பற்றிய விழிப்புணர்வு, அவர்களுக்கு உதவுதல், பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவுதல், ஏழைக் குழந்தைகளுக்குத் தமிழில் பல நல்ல பாடல்கள் கற்றுக் கொடுத்தல், ஆங்கிலத்தில் உரையாடல் பயிற்சி அளித்தல், என்று இன்னும் பல விஷயங்களைச் செய்திருக்கின்றார்கள். டையரியில் எனக்கு அம்மா சொல்லியிருந்த செய்தியைப் பற்றி என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்திருக்கின்றார் ஆனால் பேசாமலேயே போய்விட்டார். அங்கிளிடம் கேட்டால் அவர் கண்டிப்பாகச் சொல்லுவார்.  அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை!


அம்மா இறந்த பிறகு, அங்கிள் மிகவும் சோர்ந்து, தளர்ந்து போய்விட்டார்! அவரை அவரது ஃபோனில் அழைத்தேன்.  இரு முறை அழைத்தும் பதில் இல்லை! நேரே சென்று பார்க்கலாம் என்று, அவரைப் பார்க்கக் கிளம்பினேன்! ¾ மணி நேரப் பயணம்தான். அவரது வீட்டை அடைந்தால் கதவு திறந்தே இருந்தது! அவரது குடும்பத்தாரும், வேலைக்காரர்களும் பற பறத்துக் கொண்டிருந்தார்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!  யாரோ ஒருவர் அவர் மகனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்! அவர் மகனும் என்னுடன் அமெரிக்காவில், புகழ் பெற்ற மருத்துவராக இருக்கிறான்.  நான் மெதுவாக அங்கிளின் அறைக்குச் சென்றேன்! எனக்கு அதிர்ச்சி! அங்கிள் சலனமற்றுப் படுத்திருந்தார்! மருத்துவன் என்பதால் அருகில் சென்று சோதித்தேன்! கையைப் பிடித்தேன்! எல்லாமும் முடிந்திருந்தது!


அங்கு கூடியிருந்தவர்களில் இரண்டுபேர் பேசுவது காதில் விழுந்தது. “ஐயாவுக்கு உடம்புல எத்தனையோ நோய்கள்! ஏராளமான நோய்கள் இருந்தும் எப்படி இத்தனை நாள் உயிர் வாழ்ந்தார்னே தெரிலனு டாக்டர்கள் சொல்லி அதிசயப்பட்டாங்க!  அதுவும் அந்த அம்மாவோடு சேர்ந்து இந்த வயசுலயும், உடம்புல பிரச்சினைகளோட எவ்வளவு எழுதிருக்காரு....மக்களுக்கு நல்ல விஷயம் நிறைய செஞ்சுருக்காரு!  டாக்டருங்க கூட, “அவரு மனசுல ஏதோ ஒரு லட்சியம், வேகம், ஏதோ ஒரு சக்தி இருக்கு! அந்த மனசு, அதுதான் அவரை இப்படி வழி நடத்துது! அப்படினு ஆச்சரியப்பட்டாங்க! இப்ப கூட பாருங்க அந்த அம்மா 3 நாள் முன்னாடிதான் இறந்தாங்க! அதுக்கு அப்புறம் மனுஷன் ஆடிப் போயிட்டாரு! தளர்ந்து, சோர்ந்தே போயிட்டாரு. ஒரு வேளை இன்னும் என்னென்ன செய்ய நினைச்சாங்களோ அதெல்லாம் அவங்க இல்லாம எப்படி செய்யறதுனு மலைச்சுப் போயிருப்பாரோ என்னமோ!? அந்த அம்மா இல்லாம இவரு எதுவுமே செய்ய மாட்டாரே!  இந்த வயசுலயும் அப்படி ஒரு நல்ல தோழமை உறவோடு இல்ல இருந்தாங்க ரெண்டு பேரும்! மனசுக்குள்ள ஒரு டென்ஷனும், ஏக்கமும் இருந்துருக்கும் போல, அதான் இப்ப மூச்சே நின்னு போச்சு!  இனி, இவங்க ரெண்டு பேரும் நமக்கெல்லாம் செஞ்சத யாரு தொடர்ந்து செய்யப் போறாங்களோ?! ஒருவேளை நமக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போல!


அவர்களது பேச்சு எனக்கு எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்தது!  ஒருவேளை, அம்மாவும், அங்கிளும் சிறு வயது நண்பர்கள் ஆனதால், இந்த ஆழமான நட்பிற்கும், அன்பிற்கும் மேலாக, ஏதோ ஒன்று இருந்திருக்குமோ?!!! அந்த சக்திதான் அவர்களை சேர்ந்து எழுதவும், இத்தனை நல்ல விஷயங்களையும் செய்ய வைத்ததோ?!! இருக்கலாம்!  ஆனால், அந்த இரு நல்ல உள்ளங்களும் இப்போது மறைந்து விட்டன! என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை!

என் கை பேசி அழைத்தது! என் உதவியாளர்தான். “சார், உங்கள் ஆய்வுக் கட்டுரைப் பேப்பருக்கு அவார்டும், உங்களுக்குச் சிறந்த டாக்டர் விருதும் கிடைத்துள்ளது.  அதற்கான விழா அடுத்த வாரம்! உங்கள் வருகையைத் தெரிவித்தீர்கள் என்றால், அவர்களுடன் பேச உதவியாக இருக்கும்!

“எனது பயணம் இப்போது இல்லை! சில முடிவுகள் எடுக்க உள்ளேன்!. அதைப் பற்றி பின்பு பேசுகின்றேன்! என் வாழ்வு இனி இந்தியாவில்தான்!

நான் அருணாச்சலம் முதியோர் விடுதியைத் தொடர்பு கொள்ள ஃபோன் பட்டனை அழுத்தினேன்! அங்கிளும், அம்மாவும் செய்த நல்ல விஷயங்களைத் தொடர நினைத்து, அம்மா இருந்த அதே அறை வேண்டும் என்று கேட்க!



18 கருத்துகள்:

  1. படிக்க ஆரம்பித்த போது இது உண்மையான நிகழ்வோ நீங்கள் உங்கள் அம்மாவை பற்றிதான் எழுதி இருக்கிறீர்கள் என நினைத்துவிட்டேன் மன்னிக்கவும்...உண்மை சம்பவம் போல எழுதி மன் நெகிழ வைத்த உங்கள் எழுதுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழனின் வருகைக்கும், கருத்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி!!! தங்கள் மூளைக்குள் இருக்கும் நகைச் சுவை ஊற்றுக்களை விட்வா?!!!!

      நீக்கு
  2. மிக மிக அருமை... ஆரம்பித்தது முதல் முடியும் வரை தொய்வில்லாத ஒரு நடை... இடையிடையே படங்கள் மிகப் பொருத்தம்...

    //படிக்க ஆரம்பித்த போது இது உண்மையான நிகழ்வோ நீங்கள் உங்கள் அம்மாவை பற்றிதான் எழுதி இருக்கிறீர்கள் என நினைத்துவிட்டேன்//

    இதுதான் உங்கள் எழுத்தின் வெற்றி...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா மிக்க நன்றி! உங்கள் பாராட்டிற்கும், வருகைக்கும், கருத்திற்கும்! தங்கள் கற்பனையும், எழுத்ததையும் விடவா?! நைனா!!!

      நீக்கு
  3. நானும் முதலில் தங்களின் சொந்தக் கதை என்றே எண்ணினேன்.
    தங்களின் எழுத்து அபாரம்.
    மனதை நெகிழ வைத்த பதிவு இது
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு
    2. நண்பரே தங்களது ஒவ்வொரு பதிவும் எத்தனை நுணுக்கமான, விளக்கமான, அருமையான தகவல்களுடன் வருகின்றன!

      நீக்கு
  4. தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.

    மனம் நெகிழ்ந்த, கவர்ந்த பகிர்வு... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இதுதான் DD! குறளோடு குரல் கொடுத்து கருத்துரைத்ததற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  5. அற்புதமான கரு
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    ஒத்த கருத்துடைய நட்பின் அருமை
    பெருமையை இதைவிட அழுத்தமாய்
    ஆழமாய்ச் சொல்வது கடினமே
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நல்லதொரு விமர்சனம் எழுதி பரிசு வாங்கிய, சிறந்த எழுத்தாளரிடமிருந்து எங்கள் கதைக்கு ஒரு விமர்சனம் வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது!

      மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்!! ஊக்கத்திற்கும்!!!

      நீக்கு
  6. சிறப்பாக எழுதி இருக்கீங்க நண்பரே..... மனதை நெகிழ வைத்த புனைவு.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க் நன்றி நண்பரே! சிறப்பாக எழுதும் தங்களைப் போன்றோரது வருகையும், கருத்துக்களும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்துகின்றது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வாங்க நம்பள்கி! மிக்க நன்றி! நந கதைகள் படிப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது! வருகைக்கு ம் கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    நண்பரே.
    கதையின் ஒவ்வொரு படிமங்களும் மனதை நெருடும் வகையில் உள்ளது.... தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பாக உள்ளது தொடர எனது வாழ்த்துக்கள்.த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-




    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி நண்பரே தங்களு கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும்!!! நாங்களும் தங்களைத் தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு