வெள்ளி, 8 நவம்பர், 2013

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ; அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!.


இந்த சம்பவத்தைப் படியுங்கள்.  இந்தத் தலைப்பின் அர்த்தம் புரியும் உங்களுக்கு.  பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை!!  ஆண்களுக்கும்தான், உங்கள் வீட்டுப் பெண்களை ஜவுளிக் கடைக்கோ, தையல் கடைக்கோ அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் எச்சரிக்கை மணி அடிப்பதற்கு.

திருச்சூரின் அருகே உள்ள ஒரு தையல் கடை.  அதை ஒரு பெண்மணி நடத்தி வந்தார்.  பெண்களால் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கடை.  அந்தப் பெண்மணியின் மகன் இப்போது போலீஸ் பிடியில்.  எதற்கு?  அந்தப் பையன் பெயர் சிஜேஷ்.  வயது 27.  சாஃப்ட்வேர் இஞ்சினியர் (Software Engineer).  ஆனால், செய்த குற்றமோ மகாக் கேவலமான ஒரு குற்றம்.  நீங்கள் புத்திசாலிகள்!! ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அங்கு தைக்கக் கொடுக்கும் பெண்கள், தைத்ததை வாங்க வரும் போது தைத்த அளவு சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. (இப்போது இது புதிய பழக்கம் போல.  பண்டெல்லாம், பெண்கள் வீட்டுக்கு வந்துதான், தைத்ததைப் போட்டுப் பார்ப்பது வழக்கம், என் அறிவுக்கு எட்டிய வரை).  அப்படி அவர்கள் துணி மாற்றும் இடத்தில், இந்தக் கேடு கெட்டப் புண்ணியவான், அதுவும் தொழில் நுட்பம் தெரிந்தவன் ஆகையால், தனது மூளையை வக்ரபுத்திக்கு அடிமையாக்கி அங்கு ஒரு கேமராவை, அம்மா உட்பட, யாருக்கும் தெரியாமல் ஃபிக்ஸ் செய்திருக்கிறான்.  இத்தனை நாட்களும் அதன் வழியாக பதிவாகும் படங்களைக் கண்டு களித்திருக்கிறான். எப்படி இப்படிச் செய்யத் தோன்றியது அவனுக்கு?  அவனுக்குக் கூடப் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையா?  ஏன் அவன் அம்மாவே ஒரு பெண்தானே!  அங்கு தைத்த ட்ரெஸ்ஸை வாங்க வந்த ஒரு பெண், தைத்த அளவு சரியாக உள்ளதா என்று அணிந்து பார்ப்பதற்கு உள்ளே உள்ள ரூமில் சென்று துணி மாற்றி அணிந்து பார்க்கும் சமயம் சந்தேகம் எழ, செக் செய்ய, அங்கு கேமரா இருப்பது தெரியவர, அவள் போலீஸுக்குத் தகவல் கொடுத்து தெரியப்படுத்த, இப்போது அவன் அம்மாவை விட்டு, விய்யூரில் மாமியார் வீட்டில் (விய்யூர் போலீஸாரின் பிடியில்).

பெண்களே!  ஜாக்கிரதை!.  இது போல, தைத்தத் துணிகளை அளவு சரியா என்று கடையிலேயே போட்டுப் பார்க்க நேர்ந்தால், சுற்றும் முற்றும் ஏதாவது சந்தேகப்படும்படி உள்ளதா என்று நன்றாகச் சோதித்து விடுங்கள்.  எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்கோ! பாம்புதானே படம் எடுக்கும்...அதான்......இது தையல் கடைகளுக்கு மட்டுமல்ல, பெண்களாகிய நீங்கள் ஜவுளிக் கடைகளுக்கும் அடிக்கடி போகக் கூடியவர்கள் தானே!  அங்கும் இப்போதெல்லாம் “Trial Room” என்று ஒன்று இருக்கிறதே.! அங்கும், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்காக இந்தப் பதிவு. பொது இடங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆண்களுக்கு எந்தப் பாம்பைப் பற்றியும் கவலை இல்லை.  எந்தப் பாம்பும் அவர்களைப் படமும் பிடிக்காது.

இந்தச் சம்பவம், தையல் கடை நடத்தும் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான்.  பெண்களே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்.  உங்கள் வீட்டிலுள்ள எந்த ஆண் வேண்டுமென்றாலும் பாம்பாக இருக்கலாம். ‘புத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொளுத்திப் போட்டுவிட்டேனோ?!! பரவாயில்லை நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். பெண்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் இல்லையா?! Trial Rooms உள்ள ஜவுளிக் கடைகளை நடத்தும் ஆண்களுக்கும் இது ஓர் எச்சரிக்கைதான். இந்த லோகத்துல எதையுமே, யாரையுமே நம்ப முடியலையேப்பா!! ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது.  டெக்னாலஜி வளர வளர, தனி மனித சுதந்திரம் பறி போகிறது!


3 கருத்துகள்:

 1. கால மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகிறது ,நல்ல பதிவு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பகவான்ஜி ! உங்கள் பாராட்டிற்கு! என்ன செய்ய? காலத்தின் கோலம்!

   நீக்கு
 2. ஆமாங்க எல்லாம் நாகரீகம் முன்பெல்லாம் இப்படியா எடுத்த உடனே போட்டுபார்க்கும் பழக்கம் இருந்தது? ஏன் வீட்டிற்கு வந்து சரிபார்த்து சரியில்லை என்றாலும் மாற்ற முடிகிறதே பிறகேன் இப்படி? எல்லாம் அவரவர் தேடிக்கொள்ளும் அழிவு. வேறென்ன சொல்ல?

  பதிலளிநீக்கு