ஞாயிறு, 3 நவம்பர், 2013

இடுக்கி கோல்ட் மலையாளத் திரைப்படம் விமர்சனம்


இடுக்கி கோல்ட் - மலையாளத் திரைப்படம் - 

சில திரைப்படங்களைப் பார்க்கும் போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சுகமான அனுபவம் ஏற்படும். நீண்ட நாட்கள் அந்தத் திரைப்படத்தில் வந்த சம்பவங்கள், கதா பாத்திரங்கள், அவர்கள் பேசிய வசனங்கள் எல்லாம் நம் மனதில் தங்கி, நாம் மறந்தேபோன இனிமையான நம் பள்ளிப்பருவ, கல்லூரி நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிடும். அவற்றை, அந்நாட்களில், நம்முடன் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள நம் மனம் துடிக்கும்.  ஆனால, அவர்கள் எல்லாம் வெகு தொலைவில் இருந்தால் இது போல் அதிகமாக யாருமே கவனிக்காத நம் வலைப்பூவில்/வலைத்தளத்தில் எழுதி “கழுதை கத்தித் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ளுமாமே அதுபோல் தீர்த்துக் கொள்ளத்தானே முடியும்.  ஆனால், ஒன்றுமட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  உங்கள் வயது 40 க்கு மேல் என்றால், இந்த மலையாளத் திரைப்படம் உங்களை, உங்களுடைய இனிய பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.  சந்தேகமே வேண்டாம்.

“இடுக்கி கோல்ட் என்பது படத்தின் பெயர்.  மலையாளத் திரை உலகில் நிலை நின்றிருந்த, புளித்துப் புரையோடிப்போன, இப்போது எங்குமே காணமுடியாத இல்லங்கள், தரவாடுகள், மேற்பர்வையாளரான ராமன் நாயர் அல்லது க்ருஷ்ணன் வாரியர், முந்தைய கள்ளு இறக்கும் தொழில் செய்த கோபாலன் மகன், இன்றைய பார் ஹோட்டல் முதலாளியுமான சிவன் குட்டி, மீன்களைத் தலையிலேற்றி விற்று வாழ்ந்த காசிம்மின் மகன், அரபு நாடு சென்றுத் திரும்பிய கோடீஸ்வரன் சித்திக், வறுமையில் வாடும் இல்லத்துப் பருவப் பெண்ணை சொந்தமாக்க இவர்கள் செய்யும் சதி, இப்படிப்பட்டக் கதாபாத்திரங்களின் இடையே நடக்கின்ற சம்பவங்கள் இப்படிப், பல படங்களில் பல முறை வந்தவற்றை மீண்டும் மீண்டும் கண்டு, துவண்டு போன நமக்கு ஒரு வித்தியாசமான கதையுடன் வரும் வித்தியாசமான படம்தான் இந்த “இடுக்கி கோல்ட்.  இயக்கியவர்-ஆஷிக் அபு.
மலையாள சூப்பர் ஸ்டார்களின் காலடியில் மிதிபட்டு சாக இருந்த மலையாளத் திரை உலகைக் காப்பாற்றி கரையேற்றிக் கொண்டிருக்கும் சில இளம் திரையுலக இயக்குனர்களில் இவரும் ஒருவர்.  தான் இதுவரை உருவாக்கிய திரைப்படங்களில் தன் திறனை நிலை நாட்டியவர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸெக்கோஸ்லோவேக்கியா, ஐரோப்பாவிலிருந்து, குடும்பத்துடன் சிறிய சண்டையிட்டு, கொச்சி ஏர்போர்ட்டில் வந்து இறங்கும் மைக்கேல் (மூடுபனி ப்ரதாப் போத்தன்)
செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து  (படித்த வருடம் மற்றும் பெயர்கள் சகிதம் உள்ள விளம்பரம்), தன்னுடன் இடுக்கி பைனாவு ரெசிடென்ஷியல் ஸ்கூலில் படித்த நண்பர்களைக் காண விரும்புவதாகவும், தொடர்பு கொள்ள வேண்டிய ஃபோன் நம்பர் மற்றும் விலாசம் கொடுக்க,
சொந்தமாக ஸ்டுடியோ நடத்தும் ரவியும் (ஒருதலை ராகம் ரவீந்தர்), நர்ஸரி/ஃபார்ம் மற்றும் எஸ்டேட் ஓனர் மதனும் (மணியம்பிள்ளை ராஜு)
விளம்பரத்தைப் படித்து மைக்கேலை நேரில் கண்ட பின், கூடப் படித்த கராத்தே ஆண்டனி(பாபு ஆண்டனி,
இவரது மனைவியாக படத்தில் வருபவர் இவரது நிஜ வாழ்க்கை மனைவியேதான்.  அவர் குழந்தையாக தோன்றுபவரும் அவரது குழந்தையேதான்) மற்றும் ராஜனையும் (விஜயராகவன்) கண்டுபிடிக்கிறார்கள். 
அதன் பின், இடுக்கி பைனாவுவில் தாங்கள் படித்த பள்ளிக்கும், தங்கிய விடுதிக்கும் வருகிறார்கள்.  நிகழ்காலமும், கடந்த காலமும், காப்பியில் பாலும் சர்க்கரையும் சேர்வனபோல் சேர்க்கும்போது சொல்லத் தோன்றுமே, ‘ருசியான காபி என, அது போல் கலக்கப்பட்டிருப்பது படத்தைச் சிறப்பிக்கிறது. 
பள்ளிப் பருவத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, முதிர்ந்தவர்களாக இருக்கும் நாயகர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் இப்படித்தான் இருந்திருப்பார்கள், “அப்பனை உரித்து வைத்தது போல் என்று சொல்லத் தோன்றுகிறது.  கதா பாத்திரங்களின் தேர்வு “Casting” அவ்வளவு அருமை. அதில் ரவீந்தரின் மகன் ப்ரதாப் போத்தனின் இளமைப் பருவத்தைச் செய்வதாக ரவீந்தரே ஒரு பேட்டியில் சொன்னபோதுதான் தெரிய வந்தது. (நிஜ வாழ்கையில் பையன் அப்பன் ரவீந்திரனைத்தான் உரித்து வைக்க வேண்டுமா?  அம்மாவை உரித்து வைத்தது போல் இருக்கக் கூடாதா என்ன?. திருச்சூரில் கடந்தவருடம் குழந்தைகளுக்கானத் திரைப்படவிழாவில் (Children's Film Festival)
நான் இயக்கியக் குறும்படம் “பரோல் (Parole) திரையிடப்பட்டது.  அப்போது நல்லத் திரைப்படம் எடுப்பது எப்படி என்று மிக அருமையாக வகுப்பெடுத்து விளக்கிய போதுதான் ரவீந்தரைப் போன்ற நல்ல நடிகர்களுக்கு சினிமா என்பது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்று புரிந்தது. ரவீந்தர், மலப்புரத்தில் ஒரு திரைப்படக் கல்லூரி (Film Institute) நடத்துகிறார்.  எல்லாத் திரைப்பட விழாக்களிலும் பங்கெடுக்கவும் செய்கிறார்.)

படத்தில் புகைப்பிடிக்கும், ம்து அருந்தும், ஏன் கஞ்சாவே புகைக்கும் காட்சிகள் (அதுவும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்!) இருந்தாலும், திரைக்கதையும், வசனமும், நடிப்பும் இணைந்தக் காட்சிகள் படத்துக்கு இன்றியமையாதது என்று நம்மை நம்பச் செய்வதாகவே இருக்கிறது.  சில படங்களில் வரும் இது போன்ற சம்பவங்கள் அவற்றைச் செய்யத் தூண்டுபவையாக அமைவதுண்டு. கதாநாயகியே இல்லாத படம் இது.  கதாநாயகர்களோ 50 வயதுக்கு மேற்பட்ட தொப்பையோ, சொட்டையோ விழுந்த நாயகர்கள்.  நகைச்சுவைக்காக இதில் எந்த கதாபாத்திரம்களும் இல்லை. “ஏய் சொட்டைத்தலை அப்பா, பேசாம இரு, என்றெல்லாம் சொல்லி நம்மைச் சிரிக்கவைக்கும் இக்காலத்தில், நகைச்சுவையாக மாறும் சம்பவங்கள் மட்டுமே இப்படத்தில் உள்ளன.  கராத்தே ஆண்டனியைத் தேடி போகும் நண்பர்கள் சரியான விலாசம் இல்லாததால் வழியில் நின்ற ஒருவரிடம் “உயரமுள்ள கராத்தே மாஸ்டர் (ஆண்டனியும் கராத்தே கற்றதால், கராத்தே மாஸ்டராகி இருப்பான் என்ற ஊகத்தில்) வீடு எங்கே இருக்கிறது என்று விசாரிக்க, “ஐயோ! காலையில் இறந்து போனார்.  உடல் பக்கத்தில் உள்ள சிமெட்ரியில் அடக்கக் கொண்டுபோய் இருக்கிறார்கள். வாருங்கள் ஒருவேளைப் பார்க்க முடியும், என அவர்களை அழைத்துச் சென்று, குழியில் இறக்கி வைக்கப்பட்ட சவப் பெட்டியை, ஃபாதருடன் பேசி வெளியே எடுத்துத் திறந்து பார்க்க அது 65 வயது முதியவராக ஏதோ ஒரு ஆண்டனி என்று தெரிந்ததும், அனைவரும் சமாளிக்கும் காட்சி அழகு.

ஏதோ கஞ்சா விற்கும் ஜான் எப்போதோ விவரித்த “இடுக்கி கோல்ட் எனும், அதிகாலையில் பொன் கதிர்கள் ஏந்திய கஞ்சா செடிகள் வளர்ந்து நிற்கும் கஞ்சா தோட்டத்தைக் காண, ஏதோ ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டத்தைப் பார்க்கப் போவது போல 35 வருடங்களுக்குப் பிறகு போகும் அவர்களுக்குக் காத்திருப்பது என்னவோ அவர்கள் அறியாப் பருவத்தில் செய்த ஒரு தவறுக்கானத் தண்டனை.  எப்படியோ, “இடுக்கி கோல்ட் அதிலிருந்தெல்லாம் காப்பாற்றி அவர்கள் திரும்பிச் செல்ல வழி காண்பிக்கின்ற க்ளைமாக்ஸ் மிக நன்றாக உள்ளது.  15ஆம் வயதில் தனக்கு நடந்தக் கொடுமைக்கு, 55 வயது வரை காத்திருந்து பழிவாங்கும் கதாபாத்திரங்கள் உள்ள படங்களைக் கண்ட நமக்கு, 55ஆம் வயதில் வரும் பக்குவம், எப்படி தனக்கு வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து மன்னிக்க வைக்கிறது, என்பதை மிக அழகாக விளக்கும் இப்படம் எல்லாவகையிலும் பாராட்டுப் பெறுவதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக