திங்கள், 21 அக்டோபர், 2013

சதன் சேட்டன்


நேற்று மதிய உணவு உண்ணும் போது ஒரு தொலைபேசி அழைப்பு. எனது நண்பர் பிஜுவிடமிருந்து.  எடுத்த எனக்கு, பிஜு சொன்ன வார்த்தைகளை நம்ப முடியவில்லை. கடந்த ஞாயிறு அன்று கூட அவரது பலசரக்குக் கடையில் நான் கண்டு அளவளாவிய சதன் சேட்டன் என்று அழைக்கப்படும் சதானந்தன் சேட்டன் இறைவனடி சேர்ந்தாராம்.  கொஞ்ச நாட்களாகவே திடீரென அவருக்கு வயதான ஒரு தோற்றம் வந்திருந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது,
“என்ன சொல்ல.....டாக்டர் சொல்றதெல்லாம் செஞ்சாலும் ஒரு வித்தியாசமும் இல்ல.....ம்ம்...அது போகட்டும், குழந்தைகள் ந்ன்றாகப் படிக்கிறாங்களா?” என்று விஷயத்தை மாற்றினார்.
இனி அவருடன் பேசமுடியாது.  அவரைப் பார்க்கவும் முடியாது.  பார்த்ததும், பேசியதும், நினைத்துப் பார்க்கத்தான் முடியும்.  மரணம் இப்படித்தான் திடீரென வந்து நமக்கு வேண்டப்பட்டவர்களை, நண்பர்களை அபகரித்துச் செல்லும்.
சதன் சேட்டன், நீண்டகாலம் அரேபிய நாடுகளில் வேலை செய்தவர்.  15 வருடங்களுக்கு முன்பு தன் சம்பாத்தியத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்ய முடிவு செய்து அரேபிய நாட்டுக்கு ‘குட்பை சொல்லி தான் பிறந்த நாட்டிற்கு வந்தவர்.  யாரோ சொன்னார்கள் என்று ஒரு பேருந்து வாங்கி (ரூட் பெர்மிட் அடக்கம்) ஓரிரு லட்சங்கள் ந்ஷ்டமாகும் வரை கஷ்டப்பட்டு அப்பேருந்தை சாலைகளில் ஓடச் செய்தவர்.
மீண்டும், யாரோ சொன்னார்கள் என்று எங்கள் கிராமத்தில் நவீன ரீதியிலான ஒரு ப்ரொவிஷனரி ஸ்டோர் தொடங்கியவர்.  இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடக்கரை டவுண்.  கிராமத்திலுள்ள பெரும்பான்மையான ஆட்கள் அங்குதான் ஷாப்பிங்க் போவர்கள்.  போதாதற்கு கிராமத்தில் ஹமீது என்பவரும், ஜோன் என்பவரும் பல வருடங்களாகப் பலசரக்குக் கடை ந்டத்தி வருகிறார்கள்.  எப்படியோ, சதன் சேட்டனின் கடையில் பொருட்களை வாங்கியவர்கள், தங்களது சர்ச்சிலும், பள்ளி வாசலிலும் அவரவர் மதத்தைச் சேர்தவர்கள் கடைகளில் பொருட்களை வாங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், தங்களுடைய வருகையை நிறுத்தியே விட்டார்கள்.
அப்படி, அந்தப் ப்ரொவிஷனரி ஸ்டோர் நாளடைவில் நலிந்து ஒரு சின்னப் பலசரக்குக் கடையானது.  இருப்பினும், அவர் கடையை நிறுத்தவில்லை.  நான் அவரை சந்திக்கும் போதெல்லாம், அவர் தன்னுடைய அரேபிய நாட்டு துயரங்களைப் பற்றிச் சொல்லுவார்.  இந்தியாவில் எல்லா மதத்தவரும் துயரமின்றி வாழும் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி வருந்துவார்.
“நம் நாடு ‘ secular India’.  எல்லா மதத்திற்கும் சம உரிமை உண்டு.  மட்டுமல்ல, இங்குள்ள பிற மதத்தவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.  அவர்களது முன்னோர்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். எப்போதோ, ஏதோ காரணங்களுக்காக மற்ற மதங்களை ஏற்றுக் கொண்டவர்கள்  என்று நான் சொல்லும்போது பதிலளிக்க முடியாமல் வருந்துவார்.
“எல்லோரும் இப்படித்தான்.  கண்கள் உள்ளபோது கண்களின் முக்கியத்துவத்தை உணரமாட்டார்கள்.  ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல்.  அந்நிய நாடுகளுக்குச் செல்லும் போதுதான் நம் நாட்டின் சிறப்பை உணர்வார்கள். இந்தியர்களாக பிறப்பதென்பது புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் வாய்க்கும்.  அதிலும் தென்னகத்தில் பிறப்பதென்பது பெரும் புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் அமையும்.  அதை  நான் இப்போதுதான் உணர்கிறேன்  என்பார்.  எல்லோருக்கும் தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்ய சதன் சேட்டன் தயங்கியதே கிடையாது.
கேரளாவில் பெரும்பான்மையானவர்களுக்கு உள்ள, தவிர்க்கமுடியாத ஒரு பலவீனம் அவருக்கும் இருந்தது.  மதுப்பழக்கம். ஆனால், அந்தப் பழக்கத்தால் இதுவரை எவருக்கும் அவரால் ஒரு பிரச்சினையும் உண்டானதில்லை.  எல்லா பிரச்சினைகளும் அவர் உடல் உறுப்புகளுக்குத்தான் உண்டாகியிருக்க வேண்டும். 
இது அவருக்கு மட்டுமல்ல, கேரளாவிலுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட, ஏறத்தாழ 40 சதவிகித ஆட்களுக்கும் உள்ளப் பிரச்சினைதான். பாழாய்ப்போன மதுப் பழக்கம் மட்டும் இல்லாதிருந்திருந்தால் சதன் சேட்டன் இருபதோ, இருபத்தைந்தோ வருடங்கள் கூடுதலாக வாழ்ந்திருப்பார்.  தன் குழந்தைகளின் கல்யாணம் மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளில் ஏதேனும் ஒருவரது கல்யாணமேனும் காண அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். என்ன செய்ய?
மது அருந்துபவர்களை சீக்கிரமே மரணம் அருந்திவிடுகிறது.  நேற்று, 20.10.2013 மதியம் அவரது உடல் எரிக்கப்பட்டபோது எல்லோரது மனமும் ஏங்கியது.  ‘இறைவா, இவ்வளவு சீக்கிரம் அவரை உன்னிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமா என்று.


குறிப்பு: உடல் எரிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த பெரும்பான்மையானவர்கள் மது அருந்தியவர்களோ, அல்லது சடங்குகள் முடிந்தபின் மது அருந்தப் போகிறவர்களோதான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக