வியாழன், 31 அக்டோபர், 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

நான் சரியாக பதிவேற்றம் செய்யாமல் போனதால் இந்த லிங்க் தமிழ்மணத்தில் சரியாக பதிவேற்றம் ஆகவில்லை என்று நண்பர்கள் சொல்ல அறிந்தேன். அதனால் மறுபதிவு.

ஓநாயும் ஆட்டுக் குட்டியும்

      
      ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அதுல உள்ளவங்க எல்லாரும் ஒவ்வொரு டி.வி. சானலிலும் பேசுவாங்க பாருங்க, உலக மகா படம் எடுத்த மாதிரியும், உலகத்துலேயே யாரும் எடுக்காத படம் எடுத்தா மாதிரியும், இது ரொம்ப வித்தியாசமான கதை அப்படிம்பாங்க.  ஆமாங்க, ரொம்பச் சரிதாங்க....நமக்குத்தானேங்கத் தெரியும்.  இது வரை யாருமே பார்க்காத இடங்கள்ல எல்லாம் ஷூட் பண்ணிருக்கோம் அப்படிம்பாங்க.  ஏதோ வாயில நுழையாத மாதிரி ஒரு வார்த்தையப் போட்டு ஒரு காமேரா டெக்னாலஜி யூஸ் பண்ணிருக்கோம் அப்படிம்பாங்க.  ஆடியன்ஸ் ரொம்ப யோசிக்கற அளவுக்குக் கதைய கோண்டு போயிருக்கோம்பாங்க.  அதாவது படம் பார்க்கறவங்க வெளிய போகும்போது ‘ஆமாம் இதுல கதை என்ன அப்படினு ரூம் போட்டு யோசிக்க வைக்கிற மாதிரியா இருக்கும்.  கதைய யோசிக்கறதிலேயே டைம் போயிடும்போது அவங்க எங்கேங்க டைரக்ஷன் பத்தியோ, காமெரா பத்தியோ, எடிட்டிங்க் பத்தியோ, ஸ்க்ரீன் ப்ளே பத்தியோ, டயலாக் பத்தியோ யோசிக்கப் போறாங்க?
     ஒரு காதல், பஞ்ச் டயலாக்கு, அதையும் ஹீரோ, நாம அடுத்த நாளு ஒரு டாக்டரப் போயி பார்க்கற அளவு கத்தணும், மரத்தச் சுத்தியோ, இல்ல வெளிநாட்டுல போயி கண்டிப்பா  ஒரு 3, 4, பாட்டு, அப்பத்தானே நம்ம மக்கள் பார்க்காத இடம்னு சொல்ல முடியும், ப்ரொட்யூசர் தலைல துண்டப் போட்டுக்கிட முடியும்....ஹீரோயினுக்கு கொஞ்சமாவது வேலை வேணும்ல....அப்புறம் ஒரு 2, 3, ஸீன் செண்டிமென்ட்....கதைல சேராத ஒரு காமெடி ட்ராக், வில்லன்...வில்லனோட அல்லக்கைக்கு ஒரு குத்துப்பாட்டு, ஹீரோ ஒரு சோகமா சென்டிமெண்டா ஒரு பாட்டு, அப்புறம் ஹீரோ வில்லனைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லன் ஹீரோவைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லனின் ஆட்கள் ‘ஏய். ஏய் நு கத்திக்கிட்டே, அறுவா, செயினு, கத்தினு தூக்கிக்கிட்டு கார்லயே கூட ஃபுட்போர்ட் தொங்கிகிட்டு சுத்தணும், அப்புறம் ஹீரோவோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒண்ணு மொக்கை போட்டுகிட்டு, ஹீரோவோட காதலுக்கு ஹெல்ப் பண்ணுறோமுனு ரவுசு விட்டுகிட்டு......இப்படிப் போனாத்தானேயா ஒரு 2¼ மணி நேரத்த ஓட்ட முடியும்.  அதுக்கு அப்புறம் ஒரு ¼ மணி நேரம்தானேங்க.  பெரிய்ய்ய்ய கஷ்டம் பாருங்க.....கதை சொல்ல......ஒரு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கற புள்ளையே சொல்லிடும்க....இதத்தானேயா இத்தன நாளு பொறுத்துக்கிட்டு பார்த்துக்கிட்டுருக்கோம்.  ஆனா, இடையில நல்ல மனசு உள்ள டைரெக்டர்ஸ் கொஞ்சம் நல்ல படமா எடுக்கத்தான் செய்றாங்க......இருந்தாலும்...

     இப்படி நம்ம தமிழ் நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்த வேளைல, இல்லனா பழக்கப்பட்டு வேறவழி இல்லாம இப்படிப்பட்ட படங்களப் பார்த்துப் பழகி இருக்கும் வேளைல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்னு ஒரு படம் வந்தா எப்படி இருக்கும் நம்ம மக்களுக்கு? அதுவும் கால்சட்டை போட்டு, மேல்சட்டை பாதியாவும், தொப்புளும் காட்டற ஹீரோயின் இல்ல, பாட்டே இல்ல அப்படின்னா......ஓ! ஏதோ குழந்தைங்க படம் போல, அம்புலிமாமா படம் போலனுதானே நினைப்பாங்க?  போஸ்டர பார்த்துட்டு, ஏதோ இங்கிலீசு படம், தமிழ்ல போலனு நினைச்சுட்டாங்க போல......நம்ம மக்களுக்கு இப்படி எல்லாம் பேரு போட்டா என்னங்க புரியும்?  அதான் முதல்ல படம் பார்க்க ஒரு 10, 15 பேரு இருந்தாலே பெரிய விஷயம் மாதிரி கூட்டமே இல்லாம இருந்துச்சு. ஆனா இப்ப பிக்கப் ஆயிருக்கும்னு வைச்சுக்கங்க......

     நம்ம மக்கள் இன்னும் இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் மனதளவில் தயாராகவில்லைனுதாங்க சொல்லணும். இந்த மாதிரியான் ஒரு சூழ்நிலையிலும் இப்படி ஒரு படம் எடுக்கத் துணிந்த டைரக்டர் மிஷ்கின் அவர்களுக்கு சல்யூட் அடித்துப் பாராட்டலாம்.  அசாத்திய துணிச்சல், மன தைரியம்.
     திரு மிஷ்கின் அவர்களுக்கு,

     இத இதத்தான்யா நாங்க இவ்வளவு நாளும் எதிர்பார்த்தோம் அப்படினு சொல்ற மாதிரி ஒரு படம் கொடுத்துருக்கீங்க.  மிஷ்கின் அவர்களே எப்படிய்யா இப்படி ஒரு வினோதமான, வித்தியாசமான ஒரு பேரு சிந்திக்கத் தோன்றியது உங்களுக்கு? சபாஷ்.!

     கதை சொன்ன விதம் மிக அழகு,  மட்டுமல்ல தமிழுக்குப் புதிது.  ஆரம்பமே நம்மை நிமிர வைக்கிறது. தொய்வில்லாத ஸ்க்ரீன் ப்ளே, அடுத்து என்ன என்றுத் தோன்றும் அளவு, மிக அற்புதம்.  முழு கதையும் இரவில்தான்.  ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. 
ஆட்டுக்குட்டி ஓநாயிடம் சிக்கிவிட்டதோ என்று நினைக்கும் தருவாயில், ஓநாய் ஆட்டுக்குட்டியை ஒன்றும் செய்யாதிருக்க,
அந்த ஆட்டுக்குட்டியே ஓநாயைச் சிக்கவைக்க முயலும்போதும் ஓநாய் ஒன்றும் செய்யாது இருக்க, ஆச்சரியம்.  இது வழக்கமானது இல்லையே.  ஓநாய் எதற்காக ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து ஆட்டுக் குட்டியையும் சேர்த்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது? ஒரு வேளை, ஃப்ளாஷ் பாக்காக அந்தக் கதையில் ஹீரோயின், ஹீரோவுடன் ஒரு பாட்டு என்று கொண்டு வந்துருப்பீங்களோனு பயந்து போய் பார்த்தா, நல்ல வேளை அப்படி அதுவும் இல்லை. ஃப்ளாஷ் பாக் என்பதே இல்லாமல் நேரான கதை அமைப்பு. எதற்காக இந்த ஓட்டம் என்பதற்கானக் கதையை அந்தச் சிறு பெண் கதை சொல்லக் கேட்கும் போது ஓநாய்,  குழந்தைக்குச் சொல்வது போல பார்வையாளர்களுக்குப் படத்தின் கதையை சொல்லும் இடம் அருமை. கதை, சின்னக் குழந்தைக்குச் சொல்லும் கதைதான் என்றாலும் அதில் இப்படி பெரியவர்க்குப் பொருந்தும் வகையில் ஒரு கதையாக, படமாக எடுத்த விதம் வித்தியாசம்தான். படத்தில் பல காட்சிகளின் அமைப்பு இன்றைய வாழ்வின் யதார்த்தத்தைப் பிளந்து வைக்கிறது.  அது நக்கல் நகைச்சுவையாகவும் வெளிப்படுகிறது.  வசனங்கள் மிகக் குறைவாக, அளவாக இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.  இசைஞானி இளயராஜாவின் BGM பற்றிச் சொல்லி மாள்வதற்கில்லை.  அப்படிப்பட்ட உயிர்த் துடிப்பு இந்தப் படத்திற்கு.  அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு.
     இந்தக் காட்டில், ஓநாய், ஆட்டுக்குட்டி, செந்நாய், புலி எல்லாமே சிறந்த, இயல்பான நடிப்பு.  சண்டைக் காட்சிகள் எல்லாமே சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் இறுதியில் வரும் அந்தச் சண்டைக் காட்சி மட்டும் கொஞ்சம் மிகையாக உள்ளது. லைட்டிங்க் சூப்பர்.  அதுவும் இரவில் நடக்கும் கதை என்பதால் பல காட்சிகள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. அதுவும் இறுதியில், பங்களித்தவர்களின் பெயர்கள் வருகிறது பாருங்கள் அதுவும் புதுமை ஏதோ காட்டில் மிருகங்கள் நடித்தது போல, கரடி, செந்நாய், ஓநாய், ஆட்டுக்குட்டி, நீர்யானை, இலைகள் நாம், என்று வித்தியாசமான அறிமுகம். 
     நீங்கள் இதுவரை எடுத்தப் படங்களில் முகமூடியைத் தவிர மற்ற படங்கள் நன்றாக இருந்தாலும், இந்தப் படம் உங்களை உலகத் திரையரங்குகளுக்கு உயர்த்தி உள்ளது.  உங்களை நோக்கித் திரும்பவும் வாய்ப்புள்ளது.  உலகப் படங்களுக்கு இணையாகவும் நிறுத்தி உள்ளது எனலாம்.
     எனக்குத் தெரிந்தவரை, பெண்களை அதிகம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை.  ஒருவேளை இந்தப் படத்தில் பெண் காரெக்டர்கள் அதிகம் இல்லாததால் அவர்களை இப்படம் அதிகம் ஈர்க்கவில்லையோ என்றும் தோன்றுகிறது.  இல்லை, பெண்களுக்கு இந்தப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லையோ?  ஆனால், இந்தப் பதிவை என்னுடன் சேர்ந்து எழுதுவது என் நண்பர், ஒரு பெண்தான், அவர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் பதிவு.

     எதுவானாலும், இப்படம் தமிழ் திரையுலகிற்கு ஒரு மைல் கல்.  நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு, காதைப் பஞ்சினால் அடைத்துக் கொண்டு, சில சமயம் படம் தொடங்கும் போதே கொட்டாவி விட்டுத் தூங்கி, கொடுத்தக் காசிற்காக உட்கார்ந்து, மூளையைக் கசக்கி கதை என்ன என்று யோசித்து அல்லல் பட்டது போதும்.  எனவே, மிஷ்கின் அவர்களே, தமிழ்த் திரையுலகின் பழைய பஞ்சாங்கப் பாதையில் செல்லாமல் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவாவது இது போன்ற வித்தியாசமான. நேர்த்தியுடன் நல்லத் திரைப்படங்களைத் தருமாறு, நல்ல திரைப்படம் காண விரும்பும் ரசிகர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக