சனி, 31 ஆகஸ்ட், 2013

வெற்றிப் பிள்ளையார்


நான் வேலைக்குச் செல்கின்ற வழியில் உள்ள நடை பாதைப் பிள்ளையாருக்கு எல்லா நாளும் ஒரு வணக்கம் போடாமல் செல்வது கிடையாது.  நடைபாதைப் பிள்ளையார் என்றதும், மிகவும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.   மிகப் பெரிய பணக்காரர்.  சிறிய கோவில் தான் ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறும் அளவு வளர்ந்து விட்டார்.  
அதன் பிறகு அவரது மவுசும் கூடிப்போனது. காரில் வந்து இறங்கும் பக்தகோடிகள் காரை நிறுத்தக் கூட இடம் இல்லாத அளவு பிள்ளையார் ப்ரகாசிக்கத் தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  கூட்டம் அலை மோதத் தொடங்கியது.  தேங்காய் உடைப்பு, சந்தனக் காப்பு, அபிஷேகம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஒருவாரத் திருவிழா, தேர்வு சமயங்களில் கேட்கவே வேண்டாம், கூடும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கூட்டம் என்று ஜெகத்ஜோதியாகவும், ஜெகத்ரக்ஷகனாகவும் பிரபலாமாகி விட்டார்.  வெற்றி வினாயகர் என்ற பெயர் கூட அவருக்குச் சூட்டியாகி விட்டது. 
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சிக் கழகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்து, இங்கு தேங்காய் உடைப்பதும், பக்தர்கள் கூடுவதும் நடைபாதையில் நடப்பவர்களுக்கு நடக்க முடியாமல் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக உள்ளதால், அந்தப் பிரதான சாலையை அகலப் படுத்தப் போவதாகக் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி நடவடிக்கை எடுத்தபோது மக்கள் திரளாகக் கூடி எதிர்த்து ஆர்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, ஒரு சில மதவாத அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கூட்டி எப்படியோ பிள்ளயாரை அங்கிருந்து அப்புறப்படுத்தாதபடி பார்த்துக் கொண்டனர்.  அவருக்குண்டான ஆதரவைப் பார்க்கவேண்டுமே நீங்கள். ஒரு அரசியல்வாதிக்குக் கூட இந்த அளவுக்கு ஆதரவுக் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. பல சாதிக்காரர்கள் ஒற்றுமையாக அங்கு கூடி போரடியபோது எனக்கு மிகவும் சந்தொஷமாக இருந்தது. நானும் வேண்டிக் கொண்டேன்.  ‘தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாத இந்த சாதி அரசியலை தமிழகத்திலிருந்து வேரோடு அழித்தால், 101 தேங்காய் உடைக்கிறேன் என்று’.
என்ன சிரிப்பு? நடக்காத விஷயத்துக்கு 101 தேங்காய்னாநீங்க நினைக்கற மாதிரி இவரு சாதாரண பிள்ளையார் இல்லீங்க. வெற்றிப் பிள்ளையார்என்னைய 101 தேங்காய் உடைக்க வைப்பாருஅவர மட்டுமில்ல என் தமிழகத்தயும் நான் நம்பறேன்.  ஏன்னு கேட்டிங்கனா இது சாதி, மதம் பாக்காம வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
அதனால தானே இங்க புரட்சித் தலைவர் முதல்வராக அவரு இறுதிக் காலம் வரை இருந்தாருஅதனால தமிழ் இதயங்களுக்கு சாதி அரசியல் தற்சமயம் வந்த ஒரு மோசமான நோய்வெற்றிப் பிள்ளையார் அந்த நோய உறுதியா குணப்படுத்துவாரு.
ஒருவேளை, கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடியே இவரு இந்த மாதிரி சாதாரண பிள்ளையாரா இல்லாம வெற்றிப் பிள்ளையாரா இருந்திருந்தார்னா, அன்னைக்கே நம்ம தலைவர் ரஜனிய அரசியலுக்கு கொண்டு வந்து இந்த சாதி அரசியல தடுத்திருந்திருப்பாரோம்ம்ம்ம் இனி அது நடக்காதுதமிழ் இதயங்கள்ள அந்த அளவுக்கு கவரக் கூடிய ஒருத்தரு வரணும்பிள்ளையார் யாரையாவது கண்டுபிடிச்சு அனுப்புவாருனு நம்பணும்அவருக்கும் 101 தேங்காய் கமிஷன் கிடைக்கும்ல.”
அங்கு வந்த இரு அதிகாரிகளின் மகள்களுக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததற்குக் காரணம் அவர்கள் இந்தக் கோவிலை அப்புறப்படுத்த வேண்டி வந்ததால்தான் என்றும், அந்த சாமிக் குற்றத்தை உணர்ந்த அவர்கள் இப்போது இந்தப் பிள்ளையாரின் பக்தகோடிகளில், ஸாரி, பக்த பதினாயிரங்களில் எல்லாவற்றிற்கும் முன் பந்தியில் நிற்கும் இருவர்களாக மாறியதாக அங்கு பூ விற்கும் பெண்களும், பிச்சைக்கார்களும் கூடப் பேசிக் கொண்டார்கள்.  இதை எல்லாம் பிள்ளையார், வெற்றிப் பிள்ளையார் என்ற பெயருக்கேற்றபடி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
எது எப்படியோ, எனக்கும் இந்தப் பிள்ளையாருக்கும் உள்ள உறவு இன்று நேற்றல்ல.  பல வருடங்களாக.  அவர் அந்த நடைபாதையில் உள்ள மரத்தடியில் சிறிய கல்லின் மீது எளிமையாக, சாதாரணமாக யாரோ கட்டிவிட்ட ஒரு அழுக்குத் துணியில் வீற்றிருந்த காலம் தொட்டுப் பழக்கம்.  எனக்கு அவர் என்றுமே அதே பிள்ளையார்தான்.  என் ரகசியங்களைக் கூட அவரிடம் தினமும் பகிர்ந்து கொள்வேன்.  இவ்வளவு ஏன், அவர் மணமாகாதவராக இருந்தாலும், எத்தனை வருடங்களாகியும் இதுவரை மாறாமல் என் மனதில் இருக்கும் என் காதலைப் பற்றிக் கூட அவரிடம் பேசிப் பகிர்ந்து கொள்வதுண்டு.  அத்தனைக்கு என் உற்ற நண்பர் அவர்.  அவரைச் சுற்றி பக்தர்களும், பிச்சைக்காரர்களும் அதிகமாயினர்
நான் இதுவரை இந்த பிச்சைக் காரர்களுக்கு ஒரு  ரூபாய் கூடப் போட்டதில்லைஅதனால், எனக்குக் கருணையே கிடையாது என்று நினைத்து வட வேண்டாம். பத்திரமறிந்துப் பிச்சையிடு. காசிட்டு இவர்களை உழைத்து சம்பாதிக்க விடாமல் சோம்பேறிகளாக்கி விடுகிறோம் என்ற எண்ணம்தான் காரணம்.   இவர்கள் யாரும் வேலை செய்து பிழைக்கக் கூட முடியாதபடி உடல் ஊனமுற்றவர்களோ, மனம் ஊனமுற்றவர்களோ கிடையாது.. 
 இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் பிள்ளயாரைப் பார்க்கப் போனேன்.  இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள். 
கோவில் இன்னும் சிறிது விரிவாக்கப்படுவதால் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.  தேங்காய் உடைப்பதற்கு என்று ஒரு பெரிய தொட்டி, திருவனந்தப்புரத்திலுள்ள பழவங்காடிப் பிள்ளையார் கோவிலில் உள்ளது போன்று, கட்டப்பட்டிருந்தது.  பிச்சைகாரர்களில், பழையன கழிதலும், புதியன புகுதலும் போல ஒரு சிலர் காணாமல் போயிருந்தனர். 
ஒரு சிலர் புதியவர்களாக இருந்தனர்.  அதில் ஒருவர் மட்டும் இந்தத் தொழிலுக்கே புதியவர் போன்று இருந்தார். அவர் யாரிடமும் யாசிக்காமல் எதையோ பறிகொடுத்தது போன்று விட்டத்தையே வெறித்தபடி இருந்தார்.  பூக்காரியிடம் அருகம்புல் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றேன்.  அர்ச்சகர் என்னை இரண்டு மாதம் காணாததைப் பற்றி விசாரித்தார்.  நான் இரண்டு மாதங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதற்கான பணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு வாசலுக்கு வந்தேன்.  அப்போதும் யாசிக்கும் கூட்டத்தில் இருந்த அந்தப் புதியவர்  ஏனோ என் மனதை நெருடினார்.  பூக்காரியின் அருகில் வந்து என் செருப்பை அணியும் போது என் நலம் பற்றி விசாரித்து விட்டு, என் கண்கள் அந்தப் புதியவரை நோக்கிப் போவதைப் பார்த்து அவளே அவரைப் பற்றிக் கூறத் தொடங்கினாள். 
பக்கத்தில இரண்டு தெரு தள்ளித்தான் குடியிருந்தாரு. சொந்த வீடுதான்.  அவரு நல்ல பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சவரும்மா.  பெரிய்ய வேலைல இருந்தாரு. அதான்மா இந்தக் காரெல்லாம் வீட்டுக்கு கூட வந்துக் கூட்டிட்டுப் போவுமே, அதென்னவோ பேரு வாயில நுழயல, அத்த வுடு, அந்தக் கம்பனி கவுந்துருச்சு.  அதான் எல்லா பேப்பர்லயும் வந்துச்சே.  இவரு செய்யாத தப்பு இவரு பெரிய்ய பொறுப்புல இருந்ததுனால இவரு மேல பழி வந்துருச்சு.  இவரு நிறைய லட்சம் லட்சமா ரூபா கட்டும்படியா ஆயிடுச்சு.  போலிசு கேசு ஆயிப்போச்சு.  பொண்டாட்டிக்காரி அவங்க வீட்டுல நல்லப் பணம். நல்லப் பணக்காரி.  அவ இவர அம்போனு வுட்டுட்டு, புள்ளங்கள இட்டுகிட்டு பொறந்தவூட்டுக்குப் போயிட்டா.  என்னப் பொம்பள அவ.  இப்படியா கட்டினவர நடுத்தெருல வுட்டுட்டுப் போவா? இவலாம் பொம்பள ப்பு.  இவரு இங்க நாதியத்துக் கெடக்காரு.  என்னத்த சொல்ல.  கோயிலு ஐயருதான் இரக்கப்பட்டு அவருக்கு கோயில்ல செய்ற ப்ரசாதம் கொடுப்பாரு.  அவரு செல சமயம் வாங்கிக்குவாரு.  செல சமயம் இந்தா இப்ப உக்காந்துருக்காரு பாரு இப்படித்தான்.  அப்புறம் இங்க இருந்த சிலதுங்கள ஏதொ கூட்டர வேலை, தோட்ட வேலை வாங்கிக் கொடுத்து இட்டுட்டுப் போய்ட்டாங்க.  இவருக்கும் அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்.  என்று இரண்டு மாதக் கதையை சொல்லி முடித்தாள்
எனக்கு மனது வேதனையாக இருந்தது. உண்டியலில் போட்டப் பணத்தை இவருக்குக் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.  பிள்ளையாரும் சந்தோஷப்பட்டிருப்பார்.  கோவிலில் இடுவது நல்ல விஷயம்தான்.  ஆனால் அதைவிட உண்மையாக நலிந்த ஒருவருக்குக் கொடுத்து இருக்கலாம் என யோசித்துக் கொண்டே நடந்தேன். அப்போது அந்தப் பூக்காரி சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தது. “அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்”. அந்த மனிதருக்கு நிரந்தரமான வருமானம் கிடைப்பதற்கு அவருக்கு எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு வழி செய்யலாமே என்றுத் தோன்றியது. பிள்ளையார் என் மனதில் வேறு ஒரு சிந்தனை தோன்றக் காரணமாகி விட்டார். திரும்பிப் பார்த்தேன் அவரை. 

"இங்கு வருபவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுதானே என் ஸ்டைல். அதனால் தானே வெற்றிப் பிள்ளையாராக நான் இங்கு வீற்றிருக்கிறேன்.  குறைகளுடனும், குறைகளைத் தீர்க்கும் திறமை உடையவர்களும் இங்கு வருகிறார்கள். என்னிடம் சொல்லிவிட்டாய் இல்லையா நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ போய் ஆகவேண்டியதைப் பார்" என்று என்னைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது. 
ஒரு நம்பிக்கைத் தோன்ற என் குற்ற உணர்வு மறைந்து, அவருக்கு உதவும் எண்ணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று யோசித்தேன், யாருக்காவது உதவும் எண்ணம் வந்து விட்டால் நமது மனதில் எப்படி ஒரு இனம் புரியாத மகிழ்வுணர்வு வருகிறது என்று  நினைத்தபடியே பிள்ளையாரைத் திரும்பிப் பார்த்துவிட்டு என் அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அப்போதும் வெற்றிப் பிள்ளையார் அவர் பெயருக்கேற்றபடி ஒர் மர்மப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.



சனி, 17 ஆகஸ்ட், 2013

காக்கா கூட்டத்தப் பாருங்க.....

காக்கா கூட்டத்தப் பாருங்க.........



இன்று நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் சமயம் ஏதோ ஒன்று  தொப்பென்று  என் முன்பு விழுந்ததுஎன்னவென்று பார்த்தால் அது ஒரு இறந்த சுண்டெலி.  
ஒரு காகம் என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்ததுஅதன் வாயிலிருந்து விழுந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது என் தலையையே சுற்றிக் கொண்டு இருந்தது, தரையிறங்கும் விமானம் சில சமயம் இறங்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருக்குமே அது போல அதுகா காஎன்று எதற்குக் கத்தியதோ தெரியாது.
ஆனால் அங்கு பல காகங்கள் கூடி விட்டனஉடனே, “ஆஹா இதுதான் காகத்தோட குணமேதனக்குக் கிடைச்சத மத்த காக்காய்களுடன் பகிர்ந்துக்கத்தான் கத்தியிருக்கும்னு நினைச்சு புல்லரிச்சுடாதீங்கஅது ஒரு வேளை,இவன் இங்க நின்னுகிட்டே இருக்கானே நாம தவறவிட்ட சுண்டெலியை எப்படி எடுக்கறதுமத்த காக்கா சனியங்கள்ளாம் வேற வந்து தொலைச்சுடுமேஎன்று எனக்கு ஒரு அறிவிப்பாகக் கூட கத்தியிருக்கலாம். (ஆஹா! என்ன டைமிங்க்நம்ம மக்கள் எல்லாரும் காக்காயை சனி பகவானாகத்தானே நினைக்கிறாங்க!) அதுக்காக நான் நகர முடியுமா? அங்கு இருக்கும் பெட்டிக் கடையின் பக்கத்தில் சுவரில் தொங்கிக் கொண்டு இருந்த பேப்பர்களில்,


நடிகர் சிவக்குமாரின் ரீமேக்கில், அவரது மகன் நடிகர் சூர்யா”. (சூர்யாவைப் பற்றிய செய்திகள் என் கண்ணில் படாமல் போகாது)

பவர் ஸ்டார், ராஜகுமாரன்லாம் ஜெயிச்சுட்டுப் போகட்டுமே”- அதாங்க, நம்மசெண்பகமே செண்பகமேலிப்ஸ்டிக் நாயகன் ராமராஜனின் பேட்டி.

"ஹன்சிகாவைக் காதலிக்கிறேன்...எங்கள் திருமணம் நிச்சயம்"...இது சிம்பு சிக்ஸர்.

"சந்தானம் ஆவது எப்படி?  சந்தானத்தையே கேட்டுருவோம்"

ஹாலிவுட் நீலாம்பரிகள்.....வில்லன்களின் அழகிய அல்லக்கைகளாக வரும் வில்லிகள்....”

இப்படிப்பட்ட, ரொம்ப முக்கியமான, பரபரப்பான, காரசாரமான, சூடான செய்திகள்,  பளிச்சுடும் போது வாசிக்காமல் வர முடியுமா? சொல்லுங்கள்.  இது அந்தக் காகத்திற்கு எப்படித் தெரியப் போகிறது?

நான் சுவரொட்டிகளில் என்னை மறந்து இருந்தபோது திடீரென்று என்னைச் சுற்றி ஏகப்பட்டக் காக்கைகள். எல்லாம் நம் தமிழ் படங்களில் வரும் வில்லன் கோஷ்டிகள்ஏய், ஏய்என்று டாட்டா சுமொ காரில் கத்திக் கொண்டு வருவது போல, கா கா என்றுக் கத்திக் கொண்டு பறந்து பறந்து வட்டமடித்தன, அந்த சுண்டெலிக்காகஇனியும் அங்கு இருந்தால் என்னையும் கொத்தி கொத்துப் பரோட்டா ஆக்கி விடும் என்று நகரத் தொடங்கினேன்அங்கு நடந்த சண்டையைப் பார்க்க வேண்டுமேயாரைய்யா சொன்னது காகங்கள் ரொம்ப ஒற்றுமையானவை, தங்கள் உணவைப் பகிர்ந்துண்ணும் என்று
ஒரு காகம் மட்டும் மற்றக் காகங்களை அருகில் வர விடாமல் துரத்தியதை இந்த இரண்டு கண்களால் பார்த்தேன்வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தபொழுது,
ஜன்னலில் ஒரு காகம் வந்து உட்கார்ந்து கா கா என்று கரையத் தொடங்கியதுஇது என்ன அதே காகம், சுண்டெலியைத் தவறவிட்ட அதே காகம்! “அதெப்படி உனக்குத் தெரியும்? அதே காக்கைதான்னுஎல்லா காக்கைங்களும் ஒரே மாதிரி கறுப்பு நிறமாத்தானே இருக்குவித்தியாசம் தெரியுமா என்ன? நீ என்ன பெரிய நிபுணனா இல்ல நீ உட்டான்ஸ் விடரியாஎன்று நீங்கள் என்னை நக்கலடிப்பது கேட்கிறதுஆனால், என்னை நம்புங்கள் அதே காக்கை தான்அதன் காலில் ஒரு நூல் தொங்கியதை அது எலிக்காக சுற்றும்போதே நான் கவனித்திருந்தேனே! அதை வைத்துத்தான் அதே காகம் என்று சொல்கிறேன்.

உன்னால்தானே எனக்குக் கிடைக்க வேண்டிய இன்றைய சாப்பாடு கிடைக்காமப் போச்சுஅதனால எனக்கு ஏதாவது கொடுனுமுறையிட்டுக் கேட்கிறதோ? இருக்கலாம் என்று ஜன்னல் விளிம்பில் சாதம் வைத்தேன். ‘ஹும் உன் சாதம் யாருக்கு வேண்டும்என்பது போன்று அதைக் கண்டு கொள்ளாமல் கரைந்து கொண்டே இருந்ததுஉங்களுக்குத் தெரியுமாஒரு சிலர் வீடுகளில் காக்கையை சனிபகவானின் உருவில் நினைத்து சாதம் வைக்கும் வழக்கம் உண்டுஇப்போதெல்லாம் காகங்கள்  சாதத்தைக் கண்டு கொள்வதில்லைஇந்தியா நீரிழிவு நோயின் தலைநகரமாக இருப்பதால் காக்கைகளுக்கும் சர்க்கரை நோய் இருக்கிறதோ? ஏனென்றால் காகங்கள் இப்பொழுதெல்லாம், ரொட்டி, தோசை, இட்லி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவற்றைத்தான் சாப்பிடுகின்றனபின்னர் தோசைத் துண்டு வைத்தேன். அதை உடன் கொத்திக் கொண்டு பறந்து விட்டதுஇதையும் எங்கும் தவற விடாமல் இருந்தால் சரிஏனேன்றால் அந்தக் காகம் திரும்பி வந்தால் என்னிடம் போடுவதற்குக் காய்ந்த ரொட்டித் துண்டுகள் தான் இருந்தன. அதை ஏன் கேட்கிறீர்கள், இப்போதெல்லாம் காக்கைகள் காய்ந்து போனவற்றைத் தொடுவதில்லைஒருவேளை நமக்குக் கடிக்க முடியாமல் பல் பிரச்சினை வருவது போல காகங்களுக்கும் அலகுப் பிரச்சினை இருக்குமோகாக்கைகளின் அலகுகளைப் பற்றி நிபுணத்துவம் பெற்ற, சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க உதவும் கால்நடை மருத்துவர் யாராவது இருக்கிறாரா என்று என்  மகனைத்தான் கேட்க வேண்டும். நகர வாழ்க்கைக்குப் பழகி விட்டனவோ இந்தக் காகங்கள்


   
 என் நண்பர் கேரளாவில் சற்று அமைதியான, நகர வாழ்க்கைக்கு அடிமையாகாத இடத்தில் வசிக்கிறார்சமீபத்தில் தான், தன் பெற்றோர்களின் நினைவு நாளை அனுஷ்டித்தார்
அவர் கண்டிப்பாகக் காக்கைக்குச் சாதம் படைத்திருந்திருப்பார்காக்கை அதை உண்டதா, என்ன செய்தது என்று கேட்டுப் பார்த்தால். நகரத்துக் காக்கைகளுக்கும், நகர வாழ்க்கைக்கு அடிமையாகாத அவரது பகுதிகளில் வசிக்கும் காக்கைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்பது தெரிந்து விடும் என்று நினைத்து, நண்பரிடமே அதைக் கேட்டும் விட்டேன். அவர் கூறியது எனக்கு இன்னும் வியப்பைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள காக்கைகளும் கூட இப்போது சாதம் படைத்தால் சாப்பிடுவது இல்லையாம். கை தட்டிக் கூப்பிடும் பழக்கம் உண்டல்லவா? அப்படிக்  கூப்பிட்டாலும் அவை வருவதில்லையாம். கிராமப்புறங்களிலும்  இறைச்சிக் கடைகள் மிகுந்து விட்டதால் காக்கைகள் அங்குதான் மதி மயங்கிக் கிடக்கின்றனவாம். அப்படியென்றால் பொதுவாகவே காக்கைகளுக்கு வந்த இந்த மாற்றம் காக்கையையே தன் வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் இருக்கும் சனிபகவானுக்குத் தெரியாமல் போய்விட்டதோ?  மற்றப் பிரச்சினகளைச் சொல்வது போல் இந்தக் காக்கைகளைப் பற்றியும் சொல்லிக் காக்கைகளுக்கு ஒரு மாற்றம் வர அவரையே வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.  அவர் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று நம்புவோம்.  அவரால் மட்டுமே முடியும்.  

சிறிது நேரம் கழித்து நான் கடைக்குச் சென்ற போது அந்தச் சுண்டெலி அதே இடத்தில் இருந்ததைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு. சண்டை போட்டதென்னவோ இதற்காகத்தான்ஆனால் எந்தக் காக்கையுமே அதைக் கொண்டு போகாமல் இங்கேயே கிடக்கிறதேசுண்டெலி ருசியாக இல்லையோ?!  அப்படியென்றால் எந்தக் காகம் தவறவிட்டதோ அதற்கும் கிடைக்கவில்லை போலும்அதனால்தான் ஜன்னலில் வருகைஎல்லா காகங்களும் சண்டை போட்டுச், சலிப்படைந்துசீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று இதை விட்டு விட்டன போலும்அப்படியென்றால் காகங்கள் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நல்லத் தோட்டிகள் என்று நாம் படித்ததை என்னவென்று சொல்வது
நல்லத் தோட்டிகள் என்றால் சென்னை மாநாகரத் தெருக்கள் எல்லாம் ஏன் குப்பையாக இருக்கின்றன? இப்பொழுதெல்லாம் மாடுகளும் இந்தக் குப்பையைத் தின்னும் நிலை வந்து விட்டது.  இப்படியும் இருக்கலாம். சென்னை மாநகராட்சி காகங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்நகரில் உள்ள மரங்களையெல்லாம், மாநகராட்சி, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரோடு போடுகிறோம், மேம்பாலம் கட்டுகிறோம் என்றும், மெட்ரோ ரயில் பாலம் கட்டுவதாலும், வெட்டிச் சாய்த்து விட்டதால் காகங்களுக்குத் தங்குவதற்கும், ஓய்வு எடுக்கவும் கூட இடம் இல்லை
அதனால் அவை கோபம் அடைந்திருக்கலாம். மக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டாமல் தெருக்களில் கொட்டுவதாலும், காக்கைகள் கூட்டம் குறைந்து குப்பைகள் அதிகமாக இருப்பதாலோ இல்லையென்றால் காக்கைகளும் தின்னுத் தீர்க்கமுடியாத அளவு குப்பைகள் அதிகமாக இருப்பது கூடக் காரணங்களாக இருக்கலாம்.

இவ்வாறு சிந்தித்தபடி வீட்டிற்கு வந்து அன்றைய செய்தித் தாளை, வீட்டின் முகப்பில் உட்கார்ந்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். ஆந்திர மாநிலத்தில் இருந்த தெலுங்கானா பகுதி தனி மாநிலமாகப் பிரிக்கப் பட்டதாகவும், அதைச் சாதகமாக வைத்துக் கொண்டு மற்ற சில மாநிலங்களும் தங்கள் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடுவதாகவும் செய்தி
திடீரென்று காக்கைக் கூட்டம். கா கா என்று ஒரே கத்தல். முகப்பின் கைபிடிச் சுவர்களிலும், மின்சாரக் கம்பிகளிலும், பக்கத்து வீடுகளில் உள்ள மதில்களிலும் குழுமி கத்திக் கொண்டிருந்தன.
  ஏதாவது இரையா? அல்லது காக்கை ஏதாவது இறந்து கிடக்கின்றதாஎன்று எட்டிப் பார்த்தேன்.
இரண்டு காகங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மற்ற காகங்கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து, பறந்தும், இடையில் புகுந்தும் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் காட்ட,
ஆதிக்கமுடைய காகம் மற்ற காகத்தை விரட்டி விரட்டி துரத்திவிட அந்தக் காகமும் அதன் ஆதரவாளர்களும் பறந்தே போய்விட்டனஉடன், நான் அப்போது வாசித்த மாநிலப் பிரிவுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்ததுஇந்தக் காக்கை கூட்டமும் தங்கள் பகுதியைப் பிரித்துக் கொண்டிருக்குமோ என்று

நாம் காகங்களைப் பற்றிப்  படித்தவையும் இப்போது அவைகளின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம், காகங்களுக்கிடையில் மனிதன் வாழ்ந்த காலம் போய், மனிதர்களுக்கிடையில் காகங்கள் வாழ்வதால், மனிதர்களின் குணாதிசயங்கள் காகங்களுக்கும் வந்து விட்டதோ?! என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதுகா கா கா காக்கா கூட்டத்தப் பாருங்க  இந்த மோசமான விஷயங்களைக் கத்துக் கொடுத்தது யாருங்க?